காலச்சுவடு வெளியீடான “வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு”
எனும் ரேமண்ட் கார்வரின் சிறுகதைகளின் மொழியாக்க தொகுப்பில் “ஒரு சிறிய நல்ல காரியம்”
கதை படித்தேன். அருமையான கதை. எம்.கோபாலகிருஷ்ணனின் நல்ல சரளமான மொழியாக்கம். ஒரே
பிரச்சனை சில idiomகளை நேரடியாக மொழிபெயர்ப்பது.
உதாரணமாய் ” There's all the rolls in the world in here." என்றொரு வாக்கியம். அதை “இங்கு உலகிலுள்ள அத்தனை ரோல்களும் உண்டு”
என்று மொழியாக்குகிறார். ஆனால் “all the..in the world” என்றால்
நிறைய என்று பொருள். உலகிலுள்ள அத்தனையும் என்றல்ல. இங்கு நிறைய ரோல்கள் உள்ளன என
எளிமையாக இருக்க வேண்டும். இந்த தவறை நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் செய்கிறார்கள்.
அறுபதுகளில் யாரோ மொழியாக்கிய தல்ஸ்தாயின் “போரும் வாழ்வும்” படித்தேன். அதில் it is time என்கிற எளிமையான வாக்கியத்தை “இது தான் நேரம்” என
மொழியாக்கியிருந்தார். அதன் பொருள் நேரம் ஆகி விட்டது என இன்று நமக்கு சாதாரணமாக தெரியும். அது தவிர அது மிக நல்ல மொழிபெயர்ப்பே. மொழிபெயர்க்கையில்
ஓரளவுக்கு idioms,
phrases குறித்த அறிவு நல்லது
என நினைக்கிறேன்.
அப்புறம் நான் முதலில் சொன்ன கார்வரின் கதையில் இப்படி ஒரு வரி:"I'd like to shoot him and watch
him kick," she said”.
அதாவது நான் அவனை சுட அவன் கால்களை உதைத்து துடிப்பதை பார்க்க வேண்டும் என பொருள்.
இதை நான் அவனை சுட்டு, பின் அவனை உதைத்து, அதை பார்ப்பேன் என மொழியாக்கி இருக்கிறார்.
இது படிக்கும் போதே இடறலாக உள்ளது. ஏன் ஒருத்தரை சுட்டு விட்டு பின் உதைக்க வேறு
செய்ய வேண்டும் என தோன்றுகிறது. இது ஒரு கவனப்பிழை தான். நான் ஹைக்கூ
மொழிபெயர்க்கும் போது இது போல் சில பிழைகளை செய்து பின்னர் திருத்தியிருக்கிறேன்.
ஒரு வேடிக்கைக்காக இங்கே சுட்டிக் காட்டினேன். மற்றபடி இப்படியான சறுக்கல் எந்த
மொழிபெயர்ப்பாளனுக்கும் நிகழும்.
மேற்சொன்ன அபாரமான கதை பற்றி தனியே பிறகு எழுதுகிறேன். பிரமாதம்.