Skip to main content

நவீன ஐ.டி பெண்ணும் சுழல் பந்து வீச்சாளர்களும்




கொஞ்ச காலத்துக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட களத்தடுப்பு விதிமுறை மாற்றங்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சாபமாய் மாறி வருகின்றன. முன்பு ஒருநாள் ஆட்டங்களில் ஒரு சுழல் பந்து வீச்சாளர் 15வது ஓவரில் ஆரம்பித்து முப்பதாவது ஓவர் வரை தொடர்ந்து 8 ஓவர்கள் வரை வீசலாம். விருப்பப்படி களத்தை அமைத்துக் கொள்ளலாம். அதிகம் பந்து சுழலாத ஆடுதளங்களில் கூட நீங்கள் பந்தை காற்றில் மிதக்க விட்டு பிளைட் செய்து எல்லைக்கோட்டில் கேட்ச் பெற்று தான் விக்கெட் எடுக்க முடியும். தொண்ணூறுகளில் ஆட்டம் பார்த்தவர்களுக்கு இப்படி வார்னெயும், முரளியும், சக்ளைனும் எத்தனையோ விக்கெட்டுகளை உயரக் கேட்சுகள் மூலம் பெற்றதை நினைத்துப் பார்க்கலாம்.

ஆனால் இன்று எல்லைக்கோட்டில் நிற்கும் தடுப்பாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு விட்டது. இதனால் நவீன சுழலர்கள் உள்வட்டத்தில் கேட்ச் பெறவோ அல்லது பெரும்பாலும் LBW / பவுல்ட் முறையில் விக்கெட் எடுக்க தான் முயல்கிறார்கள். அஜ்மல் மற்றும் நரைன் இம்முறையில் வெற்றிகரமாக உள்ளார்கள். இவர்கள் சம்பிரதாயமான சுழலர்கள் அல்ல. பிளைட் அல்லது தூஸ்ரா தான் இவர்களின் வலிமை. பந்தை காற்றில் மிதக்க விடாமல் நேராக வேகமாய் வீசுவதே இவர்களின் பாணி. ஆரம்பத்தில் ஹர்பஜன் மாதிரி இருந்த அஷ்வின் இப்போது அஜ்மல் மாதிரி ஆகி வருகிறார். அவருக்கு அஜ்மலின் திறமையையும் பூடகமும் இல்லாததால் ரொம்ப எதிர்மறையாய் பயந்து போய் ஆடுவதாய் தென்படுகிறார். உதாரணமாய் அவரது round the wicket பாணியை சொல்லலாம். இப்போதெல்லாம் அவர் ஆப் ஸ்பின் போட முயல்வதில்லை. நடுவரை சுற்றி வந்து கால் சுழல் பந்து போடுகிறார். அதுவும் பந்தை வைடாக விழ வைத்து கால் குச்சியில் படும் படி பார்த்துக் கொள்கிறார். ஓட்டங்களை தடுப்பதே அவரது பிரதான நோக்கம். இது மொட்டை மாடியில் வாக்கிங் போய் தொந்தி குறைக்கிற மாதிரி ஒரு சமாச்சாரம். அஷ்வின் தன் அடிப்படை வலிமையை மெல்ல மெல்ல இழந்து வருகிறார்.
இன்னொரு பிரச்சனை புது விதிமுறைப்படி ஆட்ட துவக்கத்தில் இருந்தே இரண்டு புது பந்துகள் பயன்படுத்தும் கட்டாயம். பந்து பழசானால் தான் ஆடுதளத்தில் சுழல் பந்து கிரிப் ஆகும். அதாவது முன்பெல்லாம் பழைய பந்து மண்ணில் பட்டு கொஞ்சம் தாமதமாக மட்டையாளனை அடையும். விளைவாக மட்டையாளர்களுக்கு டைமிங் சிரமமாகும். இப்போது பந்து புதுசாக இருப்பதால்; 25 ஓவருக்கு பிறகு கூட சுழல் பந்தை ஆடுவது இன்னும் வசதியாகி விட்டது.
இதோடு பவர் பிளே வேறு இரண்டு வந்து விட்டது. பந்து புதுசாகவே இருப்பதால், அதாவது 50வது ஓவரில் கூட 25 ஓவருக்கான வயசு தான் அதற்கு இருக்கும், இறுதி பத்து ஓவர்களில் அது ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது. புதுசாக உள்ள பந்தை கொண்டு யார்க்கர் வீசுவது சிரம்ம் என்கிறார் வக்கார் யூனிஸ். இந்த பந்தை பழைய பந்தை விட அடிப்பது எளிது.
புது விதிமுறைப்படி கடைசி பத்து ஓவர்கள் பவர் பிளே போலத் தான் இருக்கின்றன. இதனால் வேகவீச்சாளர்கள் அதிகம் ஓட்டங்கள் கொடுக்கிறார்கள். சராசரியாக ஒவ்வொரு ஒருநாள் ஆட்டத்திலும் இறுதி ஓவர்களில் 100 ஓட்டங்கள் கடைசி பத்து ஓவர்களில் கசிகின்றன. இதைக் குறைக்க அணித்தலைவர்கள் இறுதி பத்து ஓவர் பொறுப்பை சுழலர்களிடம் அதிகம் ஒப்படைக்கிறார்கள். இதே சுழலர்கள் தாம் 35-40 வரையிலான பவர் பிளேவின் போதும் வீச வேண்டும். இந்த நிலையில் இவர்களின் பத்து ஓவர்கள் மூன்றாக பிரிகின்றன. 4-3-3 என்றோ 3-5-2 என்றோ. இது அவர்களின் ரிதமை பாதிக்கிறது. முன்பு பத்து ஓவருக்கு 45 கொடுத்தவர்கள் இப்போது இந்த சிரம்மான கட்டங்களில் வீச நேர்வதால் 60க்கு அல்லது 70க்கு மேல் கொடுக்கிறார்கள். உதாரணமாய் பாகிஸ்தானின் தலைசிறந்த சுழலரான அஜ்மல் இப்போதெல்லாம் ஓவர்கள் 15இல் இருந்து 35க்குள் வீசுவதில்லை. கடைசி பத்து ஓவர்கள் தான் அவரது ஏரியா என்றாகி விட்ட பின் அவர் எதிர்மறையான ஒரு சுழலராகி விட்டார். விக்கெட்டும் எடுக்கிறார், ஆனால் சில நாட்களில் சிக்ஸர்களும் பறக்கின்றன. தொண்ணூறுகளில் முரளிதரன் பவர் பிளேவின் போது பந்து வீட மாட்டேன் என அடம்பிடித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது சுழலர்கள் அணித்தலைவரிடம் அப்படியான கோரிக்கைகள் வைக்க முடியாது. நிலைமை நேர்கீழாகி விட்டது.
இந்த மாற்றங்கள் வேகவீச்சாளர்களை ஊக்குவிக்க தான் ஐ.சி.சியில் உள்ள இங்கிலாந்தின் சில நிபுணர்களால் கொண்டு வரப் பட்டது. ஆனால் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை தவிர வேறு நாடுகளில் ஆடுதளங்கள் மட்டையாளர்களுக்கு சாதகமானவை (ஆஸ்திரேலியா, நியுசீலாந்து கூட). விளைவாக பந்து வீச்சாளர்களை ஊக்குவிக்க கொண்டு வரப் பட்டதாய் கூறப்பட்ட இந்த மாற்றங்க்ள் கணிசமாய் மட்டையாளர்களுக்கு வரமாகவும், பந்து வீச்சாளர்களுக்கு துர்கனவாகவும் ஆகி விட்டன. குறிப்பாய் ஆசியாவில் நடக்கிற ஒருநாள் ஆட்டங்களில் 350-400 என்பது ஒரு சராசரி ஸ்கோராகி விட்டன.
புதிய மாற்றங்களும் அதன் நெருக்கடிகளும் ஒரு அதிரடியான சுழல் பந்து வீச்சாளரை ஏந்தளவுக்கு உளவியல் பூர்வமாய் கலங்கடிக்க முடியும் என்பதற்கு சமீபத்திய T20 உலகக்கோப்பையில் அமித் மிஷ்ராவின் நிலை ஒரு உதாரணம். அந்த தொடரில் ஆடுதளம் சுழலுக்கு சாதகமாய் இருந்தது. அதனாலேயே மிஷ்ரா மிக சிறப்பாய் வீசினார். குறிப்பாய் அபாரமான லூப் மற்றும் டிப்புடன் வீசினார். சுழல் பந்து வீச்சில் லூப் மற்றும் டிப் ரொம்ப முக்கியம்.
லூப் என்றால் ஒரு நூல் கண்டை காற்றில் உதறினால் அது பிரிந்து நூல் வளைந்து நெளிந்து விழுமே அது தான். காற்றில் இந்த நூலின் பாதையை போல் ஒரு சுழற்றப்பட்ட பந்தின் பாதை இருக்க வேண்டும். பந்தின் சுழல் பாதை வீச்சாளரின் தலைக்கு மேல் இருந்தால் நல்லது. அப்போது மட்டையாளரின் பார்வை புள்ளியும் அதுவும் ஒரே நிலைக்கு வரும். மட்டையாளர் தான் சந்திக்கும் ஒரு பந்தை கீழ் நோக்கி கணிப்பதை விட மேல் நோக்கி கணிப்பது சிரமம். ஒவ்வொரு மட்டையாளனுக்கும் blind spot என்றொரு பலவீனும் உண்டு. அதாவது சுழல் பந்து காற்றில் பயணித்து மெல்ல வரும் போது அவனுக்கு சட்டென பார்வையில் இருந்து அது மறைந்து விடும். அதனால் தான் வார்னெ அல்லது ஹர்பஜன் பிளைட் (flight) செய்து வீசும் போது மட்டையாளன் பந்து வந்து சேரும் முன்னே இறங்கி வெகுதூரம் வந்து விடுவான். பந்து எங்கே எங்கே என அவன் தேடும் போது அது காற்றில் சுழன்று இறங்கி கொண்டிருக்கும். கீப்பர் பொறுமையாய் பிடித்து ஸ்டம்பிங் செய்வார். இது போல் இந்த ஐபிஎல்லில் பிரவீன் தாம்பேவின் பந்தில் மனீஷ் பாண்டே ரொம்ப கோமாளித்தனமாய் வெளியேறினார். முன்பு ஹர்பஜனின் பந்து வீச்சில் இந்த லூப் இயல்பாகவே இருந்தது. அஷ்வினிடம் லூப் இல்லை.
டிப் என்றால் பந்து சுழன்று வரும் பாதையில் கீழே இறங்குவது போல் பொய்த் தோற்றம் அளிப்பது. ஒரு பம்பரத்தை உள்ளங்கையில் சுழற்றி தரையில் விடுவது போல். மட்டையாளன் தன்னை நோக்கி கீழே இறங்கி வரும் பந்து உள்ளே தான் வருகிறது என நினைத்து ஆடத் தயாராகும் போது அது சட்டென வெளியே போகும் அல்லது நேராக மாறி வரும். முரளி, சக்ளைன், அஜ்மல் போன்று தூஸ்ரா இல்லாதவர்களுக்கு டிப் ரொம்ப முக்கியம். குறிப்பாய் இங்கிலாந்தின் கிரேம் ஸ்வேன் இந்த லூப் மற்றும் டிப்பை அபாரமாய் பயன்படுத்துபவர். இடதுகை மட்டையாளர்கள் பலரை இதைக் கொண்டு தான் அவர் LBW முறையில் விக்கெட் எடுப்பார்.
இந்த லூப் மற்றும் டிப்பை மிஷ்ரா பிரமாதமாக T20 உலகக்கோப்பையில் பயன்படுத்தினார். உதாரணமாய், நடுவரை சுற்றாமல் நேரடியாய் வந்து பந்து நடுக்குச்சி நோக்கி வீசுவார். அது அத்திசையில் தான் போகிறது என நினைத்து மட்டையாளர் கால்பக்கமாய் அடித்தால் பந்து ஆப் குச்சி நோக்கி திரும்பும். இந்த வகையான சூட்சுமம் அவருக்கு வெகுவாக கைகொடுத்தது. விளைவாக அவர் நாலு ஓவர்களில் 3 விக்கெட் எடுத்தால் 8 விக்கெட் வாய்ப்புகளை உருவாக்கினார். தொடர்ந்து பல கேட்சுகள் தடுப்பாளர்கள் இல்லாத வெற்று இடங்களில் சென்று விழுந்தன. உலகக் கோப்பையில் 6 ஆட்டங்களில் 10 விக்கெட்டுகள். அதிர்ஷ்டம் இருந்திருந்தால் அவர் 15 விக்கெட்டுகளாவது எடுத்திருப்பார். முக்கியமாய் அவர் பந்து வீசிய விதம் இந்திய அணிக்கு ஒரு உளவியல் ரீதியான கூர்மையை அளித்தது. அவரை ஆட முடியாது குழம்பின எதிரணி மட்டையாளர்களின் ஆட்ட ரிதம் குலைந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான மிஷ்ராவின் பந்து வீச்சை உதாரணம் காட்டலாம். மிஷ்ரா இரண்டு ஆட்ட நாயகன் விருதுகளை தொடர்ந்து பெற்றார். இப்படி ஒரு சிறப்பான ஆட்டநிலையில் இருக்கிற வீச்சாளர் இயல்பிலேயே மிகவும் தன்னம்பிக்கையுடன் தானே இருக்க வேண்டும். ஆனால் அப்படி அல்ல இறுதி ஆட்டம் நெருங்க நெருங்க மிஷ்ரா மேலும் மேலும் பதற்றமாகி வந்தார்.
குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டம். இந்த ஆட்டத்தை இந்தியா வென்றது. ஆனால் 3 ஓவர்களில் 36 ஓட்டங்கள் கொடுத்தார். அதுவரை அவர் பொதுவாக நான்கு ஓவர்களில் 20 ஓட்டங்களுக்குள் கொடுத்து வந்தார். அன்றைய ஆட்டத்தில் அவர் இரண்டு பந்துகளில் அவரது மொத்த ரிதமும் ஆட்டநிலையும் மாரடைப்பு வந்த வயதானவரைப் போல் ஆனது. முதல் பந்தை டூ பிளஸி கவருக்கு மேல் அடிக்க முயன்று தோற்றார். பந்து சுழன்று அவரை முறியடித்தது. முந்தைய ஆட்டங்களில் மிஷ்ரா தன்னை மேலும் அடித்தாடும்படி மட்டையாளர்களை தூண்டினார்; பந்தை அதிகமாய் பிளைட் செய்து மெல்ல வீசினார். ஆனால் இப்போது தோல்வி பயம் விநோதமாய் அவரை நெருக்கியது. வேகமாய் தட்டையாய் வீச முயன்றார். விளைவாய் ஒரு நோ பால் போட்டார். அந்த நோ பால் மொத்தத்தையும் மாற்றியது. அடுத்த பந்தில் டூ பிளஸி நான்கு ஓட்டங்கள் அடித்தார். மிஷ்ரா அதுவரை தான் சம்பாதித்து கொண்டு வந்த தன்னம்பிக்கை மொத்த்தையும் அந்த நோ பாலில் இழந்தார். வேகமாய் குறைநீளத்தில் அவர் வீசத் துவங்க வேறொரு பந்து வீச்சாளர் போல் தோன்றினார். அவரை அடிப்பது எளிதாகியது. பந்தை கால் பக்கமாய் வீச ஆரம்பித்தார். அதில் ஒரு பந்தை டி வில்லியர்ஸ் switch hit ஆக திரும்பி நின்று கால் பக்கமாய் அடித்த்து மிஷ்ராவின் முகத்தில் அடித்தது போல் ஆனது. இறுதி ஆட்ட்த்தின் போதோ மிஷ்ரா தன்னம்பிக்கையற்ற வேறு ஒரு வீச்சாளராக தோன்றினார். முக்கியமான கட்டத்தில் இலங்கையின் திஸரா பரேரா அவரை அடித்து துவைத்தார். ஏதோ குடிகார கணவனிடம் அடி வாங்கும் மனைவி போல் அவர் அத்தனையையும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டார். அதன் பின் இந்த ஐ.பி.எல்லிலும் மிஷ்ரா மிக தட்டையாகி மோசமான ஆட்டநிலையில் இருக்கிறார். எப்படி ஒரே பந்தில் மிஷ்ரா இப்படி மாறிப் போனார்? என்னதான் தன்னம்பிக்கையுடன் வீசினாலும் இன்றைய சுழலர்கள் இடுப்புக்கு கீழ் நடுங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். விதிமுறைகளும் T20 வடிவமும் அவர்களை அந்தளவுக்கு சீர்குலைத்து உள்ளது. பேஸ்மெண்டை வீக்காக்கி இருக்கிறது.
இன்றுள்ள சுழலர்களின் உளவியல் பலவீனம், அவர்கள் சந்திக்கும் தொடர் நெருக்கடி, அழுத்தம், அதனால் ஏற்படும் பாதுகாப்பின்மைக்கு மற்றுமொரு உதாரணம் அஷ்வின் மற்றும் அஜ்மல். இருவராலும் நிரந்தரமாக ஒரு திட்டப்படி ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அந்தந்த சூழலுக்கு தகுந்தாற் போல் வீசுகிறார்கள். ஒருநாள் ஆட்டங்களில் அஜ்மல் நன்றாக வீசுகிறார் என்றாலும் அவரால் முன்பு போல் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. அஷ்வின் ஒரு நாள் ஆப் குச்சிக்கு வெளியேயும் ஒரு நாள் லெக் குச்சிக்கு வெளியேயும் வீசுகிறார். முன்னர் கும்பிளே, முரளி, வார்னேவுக்கு ஒரு நிரந்தர லைன், லெங்த் இருந்த்து; ஆட்டமுறை இருந்தது. இப்போதுள்ள ஆட்ட சூழல் சுழலர்களை தொடர்ந்து வேட்டையாடப் படும் முயல்கள் ஆக்கி விட்டன. அவ்வப் போது திரும்பி நின்று உறுமலாம். அது வேட்டையாளிகளுக்கு வேடிக்கையாக தான் படும். தம் கூர்நகங்களால் அச்சுறுத்த பார்க்கலாம். மிஷ்ரா சமீபமாக வரை அதைத் தான் செய்தார். ஆனால் தனது வலிமை குறித்து அவருக்கே நம்பிக்கை இல்லாத போது நகத்தை வெளியிடவே அவர் தயங்குகிறார்.
ஒருநாள் ஆட்ட விதிமுறை மாற்றங்களும் T20 தொடர்களின் பெருக்கமும் சுழலர்களை எதிர்மறையாக தான அதிகம் பாதித்துள்ளது. அவர்கள் அதிகமாய் விக்கெட் பெற்றாலும் தமது அடிப்படை திறன்களை இழந்து நிறம் மங்கி சோரம் போய் வருகின்றனர். ஐ.பி.எல் போன்ற தொடர்களில் வேகமாய் தட்டையாய் வீசும் சுழலர்கள் தாம் ஊக்குவிக்கப்படுகின்றனர். தாம்பே, சாவல், நதீம், சாவ்லா என பல உதாரணங்களை கூறலாம். இவர்களால் ஒருநாள் அல்லது டெஸ்ட் ஆட்டங்களில் சோபிக்க முடியாது. அஜ்மல் மட்டுமே ஒரு விதிவிலக்கு என கூறலாம். ஆனால் அவர் தொண்ணூறுகளில் தோன்றி சம்பிரதாயமாய் மெருகேறி இன்றைய T20 சூழலுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்துக் கொண்டவர். இன்று உலகம் முழுக்க சுழலர்கள் ஒரு மறுவருகை நிகழ்த்துவதாய் ஒரு தோற்றம் சிலவேளை ஏற்படுகிறது. ஆனால் நரைன் போன்ற தூஸ்ரா சுழலர்களுக்கு தான் அது பொருந்தும். ஆனால் நரைனுக்கு மே.இ தீவுகள் அணியின் டெஸ்ட் அணியில் இடமில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். பந்தை வேக வேகமாய் வீசி எறியும் கட்டாய நிலைக்கு இன்றைய இளம் சுழலர்கள் தள்ளப்படுகின்றனர். அஷ்வின் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பந்தை நன்றாக சுழற்றி ஆவேசமாய் வீசினார். விக்கெட்கள் நிறைய எடுத்து தொடரை வென்றளித்தார். ஆனால் அடுத்து வந்த ஒருநாள் ஆட்டங்களில் அவர் தன்னை உடனே மாற்றிக் கொண்டு தட்டையாய் எதிர்மறையாய் வீச துவங்கினார். விளைவாக அவருக்கு விக்கெட் கிடைப்பது குறைந்தது. மேலும் அஷ்வின் போல் ஒரு சுழலர் தொடர்ந்து தன் ஆட்டமுறையை மாற்றிக் கொண்டிருப்பது அவரது வளர்ச்சிக்கு நல்லதல்ல.
சுழலர்கள் இன்றைய சூழலில் பிரதானம் பெறுவதாய் நினைப்பது நவீன ஆடை அணிந்த இளம்பெண்கள் ஐ.டியில் வேலை பார்ப்பதால் ஆண்களுக்கு சரிசமமாய் ஆகி விட்டதாய் கூறுவது போலத் தான். எப்படியும் வீட்டுக்கு போனால் அவர்கள் தாம் சமைத்து, பரிமாறி, வேலையில் இருந்து விடுப்பெடுத்து குழந்தை பெற்று வளர்க்க வேண்டும். சில நவீன மேற்தட்டு பெண்கள் விசேச நாட்களில் வடை தட்டி பூஜை செய்து கணவன் கால்களில் விழவும் கூட செய்கிறார்கள். T20யில் சுழல் பந்து வீச்சாளர்கள் இது போல் ஒரு சமரச முக்கியத்துவம் தான் பெறுகிறார்கள். ஒருநாள், டெஸ்ட் போன்ற வடிவங்களில் அவர்கள் காணாமல் ஆகி விடத் தான் வாய்ப்பு அதிகம். அடிப்படை விதிமுறைகளில் மாற்றம் வராவிட்டால் திருவிழாக் கூட்டங்களின் போது மூடப்படாத பாதாள சாக்கடைகளில் விழும் குழந்தைகளின் நிலைதான் இளம் சுழலர்களுக்கும் ஏற்படும்.

நன்றி: அமிர்தா, ஜூன் 2014

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...