உதவியாளர்: “ஐயா உங்க
பொறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வந்த தொண்டர் ஒருவர் இந்த வாழ்த்தட்டையை
கொடுத்திட்டு போயிருக்கிறாரு”
தலைவர்: “என்னைப் பத்தி
எதனாச்சும் புகழ்ந்து எழுதியிருக்குதா?”
உதவியாளர்: “ஒரு கேள்வி
கேட்டிருக்காருங்க. எப்படி நீங்க மட்டும் இத்தன நாள் உயிரோட ஆரோக்கியமா திடமா
இருக்கீங்கன்னு?
தலைவர்: ம்ம்ம் (பெருமூச்சு
விடுகிறார்): அண்ணா போயிட்டார். ராமசந்திரன் போயிட்டான். ம்ம்ம் ... நான் இன்னும்
இருக்கேன்.”
சின்னதம்பி கையில்
பூச்செண்டுடன் வருகிறார்.
தலைவர்: “இவன் கிட்ட கேட்போம்.
யோவ், நம்ம தொண்டர் ஒரு கேள்வி கேட்டிருக்கார். அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறெ?”
சின்ன தம்பி அட்டையை
வாங்கி பார்க்கிறார்.
சின்னதம்பி: “தெரியல.
எனக்கு ஒவ்வொரு பொறந்த நாள் வரும் போதும் கோவமா வருது, ஆனா நீங்க சந்தோசமா இருக்கீங்க.”
தலைவர்: “நீ கடவுளை
நம்புறியா?”
சின்னதம்பி: “கொஞ்ச நாள்
முன்னாடி வரைக்கும். ஆனா இப்போ கடவுள் நம்பிக்கையும் போச்சு.”
தலைவர்: “கடவுளை அதிகமா
திட்டுறவன் அதிக நாள் இருப்பான். ஹா ஹா”
உதவியாளர்: “அதையே பதிலா
எழுதட்டுமாங்க?”
தலைவர்: “எழுது எழுது.
கூடவே கொஞ்சம் அடைமொழி எல்லாம் போட்டு பாட்டு மாதிரி எழுது” (சின்னதம்பியை
பார்த்து) “தொண்டர் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலியே. என்ன நினைக்கிறே?”
எங்கிருந்தோ ஒரு குரல்
கேட்கிறது. பெரிய தம்பி: “நல்லவங்கள ஆண்டவன் சீக்கிரமா கூப்பிட்டிருவான். ஆனா
கெட்டவங்கள...?”
தலைவர்: “யாருய்யா அது?
என்ன சவுண்டு அது?”
உதவியாளர்: “எனக்கு
ஒண்ணும் கேட்கலியே”
தலைவர் சின்னதம்பியிடம்:
“உனக்கு கேட்டுச்சா?”
சின்னதம்பி: “நான் ஏதும்
சொல்ல விரும்பல”
தலைவர்: “எல்லா
ஓட்டையையும் மூடணும் சொன்னேன் இல்லியா. பண்ணுனியா நீ ?...” (சில கெட்டவார்த்தைகளை
உதிர்க்கிறார்)
உதவியாளர்: “ஒரு ஜன்னல்
விடாம மூடிட்டேன். காத்தே வர மாட்டேங்குது. ஏஸியை கூட மூடிட்டேன்”
பெரியதம்பி: “காது கூட
ஓட்டை தான்”
தலைவர்: “யோவ் என்னய்யா
சவுண்டு இது, நல்ல நாள் அதுவுமா.” (உதவியாளரை நோக்கி மேலும் சில கெட்டவார்த்தைகள்
சொல்லுகிறார்)
பெரியதம்பி: “டி.வி,
ரேடியோ, மக்களோட வாய்...”
தலைவர்: (சின்னதம்பியை
நோக்கி): “அவனை கட்சியை விட்டு தூக்கிடு. அப்ப தான் அடங்குவான்”
சின்னதம்பி: “ஏற்கனவே
தூக்கிட்டோமுங்க”
தலைவர்: “அப்பிடீன்னா நீ
கட்சியே விட்டு போயிடு. அவன் கொஞ்ச நாள் உள்ளே வரட்டும். அப்போ தான் இந்த சத்தம்
கேட்காம இருக்கும். எனக்கும் பொழுது போவும்” (பிறகு தனக்குள்ளே) “ராமசந்திரனுக்கு
இந்த டெக்னிக்கெல்லாம் தெரியாது. தெரிஞ்சிருந்தா இன்னும் உயிரோட இருந்திருப்பான்”
