நேற்றைய மும்பை
இந்தியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் ஐ.பி.எல் வரலாற்றின் ஆக திரில்லிங்கான ஒன்று.
ஐ.பி.எல்லில் சரவெடி போல் நான்கும் ஆறும் பறப்பதால் முன்பு போல் அது நம்
இதயத்துடிப்பை எகிற வைப்பதில்லை. நேற்றைய ஆட்டத்தில் நெட் ரன்ரேட்டை
உயர்த்துவதற்காக மும்பையினர் 190 இலக்கை 14.3 ஓவர்களில் அடிக்க வேண்டி வந்தது.
அப்போது தான் அவர்கள் அரை இறுதிக்குள் போக முடியும். அசாத்தியம் என நாம் நினைத்த இலக்கை
அடைய முயன்றதனால் தான் இதுவரை இல்லாத சாகச உணர்வை நேற்றைய ஆட்டம் அளித்தது. எனக்கு
முன்னர் வங்கதேச டாக்காவில் இந்தியா பாக் இறுதிப் போட்டியில் இந்திய முண்ணூறுக்கு
மேல் விரட்டி சென்று, இறுதி ஓவரில் ஸ்ரீனாத் கேட்சை எதிரணியினர் டென்ஷனில்
தவறவிட்டு, இறுதி சக்லைன் பந்தில் கனிஷ்கர் நான்கு அடித்தது நினைவு வந்தது. அன்று
நான் கொண்டாடியது போல் பின்னெப்போதும் செய்ததில்லை. பின்னர் 300 என்ன 400ஐ
விரட்டுவது கூட கொசு அடிப்பது போல் ஆகி விட்டது. இது போன்ற அசாத்தியங்கள் தான்
இப்போது நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
மற்றொரு விசயம் 190ஐ
பதினைந்து ஓவருக்குள் அடிக்க முடியுமென்றால் இதே அணி 160ஐ 20 ஓவருக்குள் அடிக்க
ஏன் மூச்சு வாங்குகிறது என்ற கேள்வி. T20 ஆட்டத்தை
திட்டமிடாமல் ஒரு வேகத்தில் ஆடினால் தான் எடுபடும். அப்படித் தன் முதல் ஐ.பி.எல்
ஆட்டத்தில் பிரெண்டன் மக்கெல்லம் அடித்தார். ஆனால் பின்னர் இந்த ஆட்ட சுதந்திரம்
காணாமல் போய் விட்டது. 20 ஓவர்களை 4ஆக பிரித்துக் கொண்டு அதற்கு ஏற்ற வீரர்களைக்
கொண்டு தேவையான வேகத்தில் ஆடுவது இப்போதைய பாணி. அதாவது 5 முதல் 12வது ஓவர் வரை
அடித்தாட பந்துகள் இருந்தாலும் அணிகள் ஒற்றை ஓட்டம் எடுக்கவே பார்க்கும். இதனால்
தான் 160 வழக்கமான இலட்சிய ஸ்கோராய் மாறியது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இந்த ஏழு
ஓவர்களும் ரிஸ்க் எடுத்து அடித்தாடினார்கள். 7 ஓவர்களில் 40க்கு பதில் 70
அடித்தார்கள். கூடுதல் 30 ஓட்டங்கள் திட்டமிட்ட ஆட்டத்தினால் அணிகள் சராசரியாக
எவ்வளவு இழக்கிறார்கள் என்பதை காட்டியது. இன்னும் சுதந்திரமாக ஆடினால் அணிகளால்
எளிதில் 220-240 அடிக்க முடியும். நேற்றைய ஆட்டத்தை மும்பை முழு ஓவர்களும்
ஆடியிருந்தால் 250 அடித்திருப்பார்களே. அப்படியே விக்கெட்டுக்ள் விழுந்தால் 200இல்
முடியும். 160க்கு அது பரவாயில்லை தானே. மேலும் T20 ஆட்டத்தையும்
நம்மாட்கள் ரிஸ்க் எடுக்காமல் ஆட நினைப்பதால் அது கூட வளவளவென ஆகி வருகிறது.
நேற்றைய ஆட்டம் விதிவிலக்கு.
14.3 ஓவர்களில் ஒரு எண்
குறைவாக மும்பை அணி எடுத்தது. தோற்று விட்டோமே என அம்பத்தி ராயுடு முட்டியிட்டு
அழுதார். ராஜஸ்தான் அணியினர் கொண்டாடினர். ஆனால் அவர்கள் ஒரு நான்கோ ஆறோ அடித்தால்
அரை இறுதிக்கு செல்லலாம் என நடுவர்கள் கூற குழப்பம் ஏற்பட்டது. என்னவாயிற்று
என்றால் ஸ்கோர் டை ஆகி விட்டது. ஒருவேளை இறுதி பந்தில் ஒன்றுக்கு பதில் இரண்டு
ரன்கள் ஓடி இருந்தால் நெட் ரன்ரேட் ராஜஸ்தானை விட குறைந்திருக்கும். ஆனால் டை
ஆனதால் ஒரு நான்கு அல்லது ஆறு அடிக்கும் வாய்ப்பு மும்பைக்கு கிடைத்தது. அடுத்த
வந்த தாரே புல் டாஸ் பந்தை ஆறுக்கு அடித்து சவாலில் வென்றார். இந்த எதிர்பாராத
திருப்பம் ஒரு அபாரமான டிராமாவை தோற்றுவித்தது. இது போல் ஒருநாள் ஆட்டங்களிலும்
பண்ணினால் எப்படி இருக்கும் என தோன்றியது.
அதாவது ஒரு நாள் ஆட்டங்களில்
முக்கிய சிக்கல் என்ன நடக்க போகிறது என நம்மால் ஊகிக்க முடியும் என்பது. ஒரு அணி
ஆட ஆரம்பித்த 20 ஓவர்களுக்குள் அதன் தலைவிதி நமக்கு தெரியும். ஒரு 250 இலக்கை
விரட்டுகிறார்கள் என்றால அதிக ஆபத்தின்றி ஒற்றை ரெட்டை ஓட்டங்கள் ஓடி ஆட்டத்தை
சோர்வடைய வைப்பார்கள். 300ஐ கூட இன்று விரட்ட முடியும் என்பதால் நமக்கு
அலுப்பேற்படுகிறது. இதை சரி செய்ய ஒரு வழி ஆட்டத்தில் யார் வெல்ல போகிறார்கள்
என்பது இறுதி வரை நமக்கோ வீரர்களுக்கோ தெரியக் கூடாது. அதற்கு இலக்கை வெளிப்படையாக வைக்காமல் சிக்கலாக ஆக்க வேண்டும். நேற்றைய ஆட்டத்தில் போல இறுதி
ஓவரில் இவ்வளவு எடுத்தால் வெற்றி என கணக்கிட்டு பிரம்மாண்ட திரையில் காட்ட
வேண்டும். அப்போது தான் நமக்கும் வீரர்களுக்கும் இது தெரிய வேண்டும். இதற்கு ஒரு
வழி ஆட்டத்தை பகுதிகளாய் பிரித்து அவ்வப்போது ஒரு அணி எடுக்கும் ரன்ரேட்டை அடுத்த
அணி அதே கட்டத்தில் எடுக்கிறதா என பார்த்து அதற்கு ஏற்றாற் போல் பாயிண்ட்ஸ்
கொடுப்பது. உதாரணமாய் ஒரு அணி 280 அடிக்கிறது. இதற்கு முதல் 10 ஓவர்களில் 80 ஓட்டங்கள்
எடுக்கிறது. அதையே அடுத்து வரும் அணியும் அதே ஓவர்களில் அடிக்க வேண்டும்.
அல்லாவிட்டால் பாயிண்ட்ஸ் கிடைக்காது. அது போல் ஒவ்வொரு பத்து ஓவர்களுக்கும் ஒரு
தனி இலக்கு . 50வது ஓவரில் இதுவரையில் உள்ள பாயிண்ட்களை கணக்கிலெடுத்தும், இறுதி
ஓவரில் முந்தைய அணி அடித்த ஓட்டங்களைக் கொண்டும் ஒரு இலக்கை துரத்தும்
அணிக்கும் கொடுக்க வேண்டும். இம்முறையில் 50 ஓவர்களும் பார்க்க ஐந்து T20 போல் படுவேக திரில்லராக இருக்கும். முதலில் ஆடுகிற அணிக்கு
அனுகூலம் கிடைக்காமல் இருக்க 50 ஓவர்களை இரண்டாக பிரிக்க வேண்டும். ஒவ்வொரு அணி 25
ஓவர்களை பாதி பாதியாய் ஆடலாம். முதலில் மட்டையாடிய அணி இரண்டாவது முறை இரண்டாவது
ஆக தான் மட்டையாட முடியும். இதன் மூலம் டாஸின் குழப்படிகளையும் இல்லாமல் ஆக்கலாம்.
இப்போதுள்ள சர்வதேச
ஆட்டங்கள் பள்ளி ஆசிரியர் கரும்பலகையில் படம் வரைந்து பாலியல் பற்றி விளக்குவது
போல் பயங்கர கொட்டாவித்தனமாக உள்ளது. இதை மாற்ற நேற்றைய ஆட்டம் ஒரு நல்ல பாடம்.
