Skip to main content

கோயில் சொத்தும் கறுப்புப்பணமும்


திருப்பதியில் பச்சன்கள்


பத்மநாபசாமி கோயிலின் தங்க புதையல் பற்றின சர்ச்சை எழுந்த போது ஜெயமோகன் எழுதின கட்டுரை நினைவிருக்கும். இவ்வளவு தங்கமும் நிலைத்திருப்பதே ராஜகுடும்பத்தின் பொறுப்பில் இருப்பதால் தான், அரசின் வசம் சென்றிருந்தால் அரசியல்வாதிகள் முழுக்க கொள்ளையடித்திருப்பார்கள் என்றார். ஆனால் இப்போது உச்சநீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் கோயில் சொத்தை அதன் ராஜகுடும்ப பொறுப்பாளர்களே கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கின் மையம் கோயில் சொத்து யார் பொறுப்பில் இருந்தால் பாதுகாப்பு எனும் கேள்வி. தனியார் வசம் இருந்தால் இன்னும் ஆபத்தானது என இப்போது தெளிவாகி உள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் கீழுள்ள ஆயிரம் கோடி சொத்துக்களையும் சரியாக கணக்கு பார்த்து கட்டுப்படுத்த இச்சந்தர்பத்தை பயன்படுத்த வேண்டும்.

பொதுவாக கோயிலின் கீழ் சொத்தும் பணமும் அதிகாரமும் திரள்வது நிலப்பிரபுத்துவ, மன்னராட்சி காலகட்டத்தில் துவங்கிய ஒன்று. அப்போது மன்னராட்சியும் மத நம்பிக்கையும் பிணைந்திருந்தது. மேற்கில் போப்புக்கும் இந்தியாவில் பிராமணர்களுக்கும் ஆட்சியில் “நிர்வாகமற்ற” அதிகாரம் இருந்த காலம் அது. சாணக்யன் ஆட்சியை கவிழ்த்த கதைக்கு இங்கு ஒரு காவியத்தன்மையே உள்ளது. போப்புக்கும் ஆங்கில மன்னர்களுக்கும் இடையே நிகழ்ந்த அதிகார போட்டியின் விளைவாகத் தான் புரொட்டெஸ்டண்ட் மதம் தோன்றியது. ஆனால் நாம் இன்று ஒரு மதசார்பின்மை காலகட்டத்தில் வாழ்கிறோம். இயல்பாகவே தனது அன்றாட பரிபாலனத்துக்கு அன்றி கோயிலுக்கு மிகையான பணமும் சொத்தும் அவசியம் இல்லை. துரதிஷ்டவசமாக மக்களுக்கு கோயில் மீதுள்ள செண்டிமெண்ட் காரணமாக கணிசமான சொத்துக்களை கோயிலின் பெயரில் வைதிக நிர்வாகத்தினர் ஆட்சி செய்கின்றனர். இந்த பிடி வலுவானது; சமீபத்தில் இது விடுபடாது. இது முழுக்க பணமும் அதிகாரமும் மத செண்டிமண்டால் சில குறிப்பிட்ட சாதியினரிடம் தக்க வைக்கப்படும் விவகாரம்.
பொருளாதார ரீதியில் இந்த பிரச்சனையை அணுகுவது பொதுமக்களின் புரிதலுக்கு உதவும். பத்மநாபசாமி கோயிலில் நிகழ்வது போல் ஆயிரம் கோடி சொத்து ஓரிடத்தில் பயன்பாடின்றி பதுங்குவது கள்ளச்சந்தையில் பணம் பதுங்குவதற்கு சமானம். இன்னும் சொல்லப்போனால் ஸ்விஸ் வங்கியில் கறுப்புப்பணம் தூங்குவதற்கு சமானம். பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். அல்லாவிட்டால் அது பொருளாதாரத்தை மந்தமாக்கும். சமீபத்தில் பா.சிதம்பரம் மக்கள் பணத்தை தங்கத்தில் முதலீடு ஆக்குவதை விமர்சித்த்து நினைவிருக்கும். மக்களுக்கு அந்த உரிமை உண்டெனிலும் பணம் ஓரிட்த்தில் உறங்குவது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இன்றைய பொருளாதாரப்படி பொருட்களை மக்கள் வாங்குவதில அதிகமாக செலவழிப்பது தான் வியாபாரத்தை ஊக்குவிக்கும். விளைவாக நாட்டின் ஜி.டி.பி வளரும். வேலை வாய்ப்பும் சம்பளமும் உயரும். சம்பளம் உயர நாம் பணத்தை மேலும் பொருள் வாங்குவதில் செலவழிக்க வேண்டும். இந்த சக்கர ஓட்ட்த்தில் தான் நவீன பொருளாதாரத்தின் ஜீவன் உள்ளது. ஆக பத்மநாபசாமி கோயிலின் தங்கத்தை நாம் மெட்ரோ ரயில் உருவாக்கவோ மேம்பாலம், விமானநிலையம் கட்டவோ அல்லது ஐ.டி பார்க் உருவாக்கவோ பயன்படுத்தினால் அது கேரள பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க கணிசமாய் உதவும்.
கோயில் சொத்தை அடுத்தவன் பயன்படுத்த விடவா என இந்துக்கள் யோசிப்பது வெறும் தட்டையான கோஷங்களுக்கே இட்டு செல்லும். இஸ்லாமியரை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என பா.ஜ.க கோருவது போலத் தான் இது. நமது பொருளாதாரமும், சமூக கலாச்சார முன்னேற்றமும் இஸ்லாமியரின் பங்களிப்புடனும் தான் நடக்கிறது. குறிப்பாய் இந்திய வணிகத்தில் அவர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள் என்ன இந்த லாபத்தை பாகிஸ்தானுக்கா அளிக்கிறார்கள்? அரபிய நாடுகளில் இருந்து கொண்டு வரும் பணத்தை அவர்கள் இந்தியாவுக்கு தானே அளிக்கிறார்கள். ஒரு தாராளவாத, ஜனநாயக சூழலில் “மற்றவன்” என்கிற வாதத்துக்கே இடமில்லை. பணம் பரிமாற்றத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் நாடு வளரும்.
கோயில் எனும் ஒற்றை மையத்தில் சொத்தையும் பணத்தையும் குவிக்கும் பழைய முறை வழக்கொழிந்து விட்டது என்பதை நாம் உணர வேண்டும். அமிதாப் பச்சன் தங்கக் கட்டிகளை திருப்பதி வெங்கடாசலபதிக்கு நன்கொடை கொடுத்தால் அதனால் அவரது குற்றவுணர்வு குறையலாம், நிம்மதி கிடைக்கலாம், மனம் ஆறலாம். ஆனால் சமூகத்துக்கு எந்த பயனும் இல்லை. அவரைப் போன்றவர்கள் சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு இப்பணத்தை அளிக்கும்படியான நிர்பந்தத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். கோயில் நன்கொடைக்கு வரிவிலக்கு என்கிற சட்டத்தை மாற்ற வேண்டும். பதமநாதசாமி கோயில் பிரச்சனையை சரியாக கையாளும் நீதிமன்றம் அடுத்து இப்படியான அணுகுமுறையை அனைத்து கோயில் சொத்து விவகாரங்களுக்கும் எடுக்க வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...