![]() |
| நிஷி எனு முயல் மற்றும் ஷிக்கி எனும் பூனை |
முயல் நாயை துரத்துவதை பார்த்திருக்கிறீர்களா? என் வீட்டில் நடக்கிறது.
மனைவி கறிக்கடையில்
வைத்திருந்த ஒரு முயல்குட்டியை இரக்கத்தினால் வீட்டிற்கு வாங்கி வந்தாள். மூன்று
மாதம் வயதிருக்கும். வீட்டில் நாய் இருப்பதால் சின்னதாய் ஒரு பயம் எங்களுக்கு இருந்தது.
ஆனால் முயலுக்கு இல்லை. அது வந்த அடுத்த நாளே நாயை தன் தாயாக பாவிக்க துவங்கி
விட்டது.
நாய் எங்கு போனாலும் கூடவே போகும். நக்கிக் கொடுக்கும். மூக்கை
பின்புறத்தை முகரும். நாய்க்கும் அபார பொறுமை. பின்னர் ஒருமுறை நாய்க்கு பிஸ்கட்
கொடுத்தேன். முயல் போய் அதன் வாயில் இருந்து பிஸ்கட்டை பறித்தது. நாய்க்கு கடும்
கோபம். ஆனாலும் கடிப்பது போல் பாவனை செய்து துரத்தி விட்டது. பிறகு அது நாயை தூங்க
விடாமல் செய்தது. நாய் தூங்கினால் அங்கு போய் மூக்கை நுகரும். நாய் எழுந்து
வேறிடம் போகும். அங்கு போய் தொந்தரவு பண்ணும். நாலைந்து முறை தொடர்ந்து நடந்த பின்
நாய் ரொம்ப எரிச்சலாகி உறும ஆரம்பித்தது. ஆனாலும் கடிக்கவில்லை. நாங்கள் தான் அதன்
அவஸ்தை பொறுக்காமல் நாயைத் தூக்கி சோபாவில் தூங்க வைத்தோம்.
இந்த முயலுக்கு ரொம்ப
இடம் கொடுத்து விட்டோம் என நாய்க்கு புரிந்து விட்டது. இப்போதெல்லாம் முன்பு போல்
அது முயலிடம் குழைவதில்லை. கௌரவமாகத் தான் இருக்கிறது. முயலோ விடுவதில்லை. நாயின்
கால்களுக்கிடையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறது.
நான் காலை எழுந்ததும் நாய்
என்னை வரவேற்கும் விதமாக தன் கீக்கீ பொம்மையை எடுத்து வாயால் அழுத்தி ஆரவாரமாய்
சத்தம் எழுப்பும். இன்று நாய் அப்படி செய்து முடித்ததும் முயல் வெளியே வந்து
பார்த்தது. பிறகு ஓடிப் போய் கீக்கீ பொம்மை பக்கமாய் நின்று என்ன செய்வது என
முழித்தது. நாய் தன் சாப்பாட்டு பக்கமாய் பூனைகள் போனால் அப்படி ஆவேசம் வந்தது
போல் துரத்தும். ஆனால் முயலோ அசட்டையாய் நாய் சாப்பாட்டை உட்கார்ந்து மெல்லுகிறது.
நாயும் போகட்டும் போ என அமைதியாய் பார்க்கிறது.
ஏற்கனவே இரண்டு பூனைகள்
உண்டு. அவை முயலை ஜாதிபிரஷ்டம் செய்து விட்டன. பக்கத்தில் போனால் சீறுகின்றன.
இதைப் பார்த்தால் வேறு அறைக்குள் சென்று விடுகின்றன. இதனால் முயலும் நாயைத் தான்
எல்லாவற்றுக்கும் நம்பி இருக்கிறது. நாய் நடக்கும் போது கூடவே சென்று ஏதோ
புற்தரையில் இரை தேடுவது போல் அது நடப்பது காண தாய்க்கோழியுடன் நடக்கும்
கோழிக்குஞ்சைப் போல் உள்ளது.
நாய் முயலை வேட்டையாடும்
என யார் சொன்னது? இருக்கிற இடம் பொறுத்து தலைகீழாகவும் ஆகும்.
