சஹீர்
கான் ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் கங்குலியின் ராக்கெட் லாஞ்சராக இருந்தார். எப்போதெல்லாம்
விக்கெட் தேவையோ அவர் சஹீரை அழைப்பார். சஹீர் தன்னுடைய வேகம் மற்றும் ஆளுமையின் தாக்கம்
கொண்டே எதிரணியின் விலா எலும்புகளை ஓமப்பொடி போல் உருவுவார். ஒரு ஆட்டத்தில் சிம்பாப்வேயின்
அலிஸ்டெர் காம்பெலை அவர் பவுல்டாக்கினார். காம்பெல் மிக நல்ல மட்டையாளர். குச்சிகள்
சிதறியதும் அவர் முகத்தில் ஏற்பட்ட வியப்பு மிக சுவாரஸ்யமானது. பந்து இவ்வளவு வேகத்தில்
வரும் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தியர்களும் கூடத் தான். எந்த இந்தியனும்
இவ்வளவு மூர்க்கத்துடன் இதற்கு முன் வீசியதில்லை.
ரெண்டாயிரத்தின்
பிற்பகுதியில் காயங்களால் உடல் பலவீனமான பின் சஹீர் பத்து கிலோ மீட்டர் வேகத்தை குறைத்து
அதிக கூர்மை மற்றும் புத்திசாலித்தனத்துடன் மறுவரவு நிகழ்த்தினார். இக்காலகட்டம் அற்புதமானது.
ஒவ்வொரு ஓவரும் ஒரு பாடம். ஒரு பந்து கூட சும்மா பேச்சுக்கென அவர் வீசுவதில்லை. ஒரு
திட்டத்தின் துவக்கம், மையம், முடிவு போல் பந்துகளின் போக்கு இருக்கும். அதுவும் எந்த
ஆடுதளத்திலும் சஹீரால் பந்தை நினைத்த இடத்தில் வீழ்த்தி எப்பக்கமும் எந்த அளவுக்கும்
ஸ்விங் செய்ய வைக்க முடியும்.
இந்த கட்டுப்பாட்டையும் புத்திசாலித்தனத்தையும் வாசிம்
அக்ரமிடம் தான் முன்னர் பார்த்திருக்கிறேன். சஹீரின் பந்து வீச்சை இன்றைய அஜ்மல் அல்லது
முந்தைய வார்னுடன் ஒப்பிடலாம். திட்டமிடுவதும் அதை நிறைவேற்றுவதும் முற்றிலும் வேறுவேறானவை.
இரண்டையும் கச்சிதமாக செய்பவர்களை தான் பந்து வீச்சில் மேதை என கூற வேண்டும். சஹீர்
ஒரு மட்டையாளரை எல்.பி.டபிள்யோ முறையில் வெளியேற்றும் பட்சம் தொடர்ந்து வெளியேறும்
பந்துகளை போடுகிறார் என்றால் முதலில் அந்த பந்துகள் ஒவ்வொன்றையும் அவ்வளவு கூர்மையாக
உக்கிரமாக போடுவார். மட்டையாளர் இவர் நம்மை வெளியே போகும் பந்து மூலம் வெளியேற்றத்
தான் பார்க்கிறார் என நிஜமாகவே நம்பத் துவங்குவார். அப்போது சஹீர் உள்ளே வரும் பந்தை
நாலாவதாக போடுவார். அதுவும் மிக சரியாக அது நடுக்குச்சிக்கு வந்து நேராகும். பல வேகவீச்சாளர்கள்
உள்வரும் பந்தை ரொம்ப அதிகமாக ஸ்விங் செய்வார்கள். விளைவாக பந்து கால்பக்கம் போய் வீணாகும்.
நல்ல உதாரணமாக முன்னாள் வீச்சாளர் ஸ்ரீனாத்தை சொல்லலாம். அவருக்கு மட்டும் இந்த உள்வரும்
பந்தின் கட்டுப்பாடு இருந்திருந்தால் அவர் இன்னும் நூறு விக்கெட்டுகள் கூட எடுத்திருப்பார்.
இன்னொரு விசயம் கரார்தன்மை. இங்கிலாந்தின் ஆண்டெர்ஸன் இது போல் மட்டையாளரை பொறி வைக்கையில்
வெளியே போகும் பந்துகள் இவ்வளவு கராறாக இருக்காது. விளைவாக மட்டையாளரால் திட்டத்தை
ஊகிக்க முடியும். சஹீர் இவ்விசயத்தில் வார்னைப் போன்றவர்.
நம்மூரில்
பயிற்சியாளர்கள் உடற்பயிற்சிக்கு எதிரானவர்கள். சஹீர் போன்றவர்கள் எளிதில் காயமுறுவதற்கு
சரிசமமான உடல் வலுவில்லாதது காரணம். சஹீருக்கு மேலுடம்பு அளவுக்கு கீழுடம்பு வலு இல்லை.
இதே பிரச்சனை ஷோயப் அக்தருக்கும் இருந்தது. அவர் உடல் மட்டும் பந்து வீச்சளவுக்கு கச்சிதமாக
இருந்திருந்தால் மெக்ராத்தை மிஞ்சியிருப்பார்.
இஸ்லாமியர்கள்
வேகவீச்சாளர்கள் ஆகும் போது அதில் ஒரு தனி உக்கிரம் புத்திசாலித்தனம் விடாப்பிடித்தனம்
இருக்கிறது. ஷாமி அஹமதை எடுங்கள். அவருக்கு இயல்பான வேகம் இல்லை. ஆனால் புவனேஸ்வர்
போல் கட்டுப்பாட்டை நம்ப மாட்டார். ஒரு வேகவீச்சாளராக தன்னை எண்ணிக் கொண்டு தன்னையே
மீறி விச முயல்வார். பல சமயங்களில் சொதப்புவார், ஆனால் அவரது அணுகுமுறை கிளர்ச்சியானது.
இன்னொரு நல்ல உதாரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் அபு நச்சீமை சொல்லலாம். அந்த சராசரி
உடலில் இருந்து எப்படித் தான் தீ போன்ற 140 கிலோமீட்டர் வேகத்தை பெறுகிறாரோ! இயல்பான
உடலமைப்பும் வலுவும் அவர்களுக்கு துணை போகிறது. பஞ்சாபியர்களிடம் இந்த முரட்டுத்தனம்
உள்ளது. ஆனால் ரயில் முன்னே குதிப்பவர்கள் போல் ஒரு அசட்டு தைரியம் கொண்டவர்கள் சீக்கியர்கள்.
இஸ்லாமிய வீச்சாளர்களிடம் வேகத்துடன் ஒரு தந்திரமும் உள்ளது. இந்தியாவின் வேகப்பந்து
வீச்சு வறுமைக்கு நல்ல ஒரு தீர்வு அதிகமாக இஸ்லாமியர்களை தேர்ந்தெடுத்து வேகவீச்சை
எடுக்க ஊக்குவிப்பது.
இன்று
35 வயதாகும் சஹீர் கானுக்கு ஒரு எளிய தமிழ் மனதின் வாழ்த்துக்கள்!

