ரிஸர்வ்
வங்கி நாட்டிலுள்ள கோயில்களின் தங்கத்தின் கணக்கை அறிய முயன்று வருகிறதை ஒட்டி கோயில்
தங்கத்தை விற்று பணவீக்கத்தை குறைக்கலாமா என்கிற விவாதம் எழுந்துள்ளது. கோயில் பணம்
குறித்த ஒரு தெளிவை எட்டுவதற்கு இச்சந்தர்ப்பம் உதவும்.
கோயில்
சொத்து என்பது இந்துக்களின் சொத்து, மக்கள் அளித்த பணம் என்கிற ரீதியில் பா.ஜ.கவின்
ராஜா போன்றோர் வாதிட்டு வருகிறார்கள். ஆனால் இது உண்மையா என்றால் அல்ல. கோயிலில் உள்ள
தங்கம், குறிப்பாய் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள பல ஆயிரம் கிலோ தங்க
நகைகள் மற்றும் கட்டிகள், அரசர்களால் அளிக்கப்பட்டது. ஒரு காலத்தில் நாட்டின் பொக்கிஷ
சேமிப்பாக கோயில் இருந்த போது அங்கு இந்த பணம் சேர்ந்தது. ஆக, ஒருவிதத்தில் கோயிலில்
உள்ளது மக்களின், இந்த தேசத்தின் தங்கம் தான். இந்த மக்கள் என்பவர் இந்து, இஸ்லாமியர்
என்ற பாகுபாடின்றி முன்னர் இங்கு உழைத்து நாட்டை வளப்படுத்திய அனைத்து இந்தியர்களின்
பணமும் தான்.
கிறித்துவ
திருச்சபைகளும், இஸ்லாமிய அறக்கட்டளைகளும் சமீபமாய் தோன்றியவை. அவற்றின் சொத்தை நாம்
இந்துக் கோயிலின் பூர்வீக தேச சொத்தோடு ஒப்பிடல் ஆகாது. ஆக, ஏன் இந்துக் கோயிலில் மட்டும்
கை வைக்கிறீர் என கேட்பது அபத்தமாகும். மேலும் ரோமில் உள்ள கத்தோலிக்க திருச்சபை அளவுக்கு
இந்திய கிறித்துவ திருச்சபைகளில் சொத்து குவிந்திருந்தால் நாம் ஒருவேளை அவர்களை நோக்கியும்
இக்கேள்வியை கேட்கலாம். ஆனால் இவ்வேளையில் சிறுபான்மையினரை இந்துக்களோடு ஒப்பிடுவது
திசைதிருப்பும் உத்தியாகும்.
கோயிலில்
சொத்து சேர்வது என்பது முன்னர் இருந்த நிலவுடைமை சூழலில் ஒரு நியாயம் இருந்திருக்கலாம்.
ஆனால் இன்றைய நவ முதலாளித்துவ சூழலில் பணத்தை எந்த வடிவிலும் முடக்கி வைப்பது நாட்டின்
பொருளாதாரத்தை சீரழிப்பதாகும். அது ஸ்விஸ் வங்கியில் கறுப்புப்பணம் வைத்திருப்பதற்கு சமம் ஆகும். கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் ஆயிரமாயிரம் கோடி
மதிப்பிலான பணம் இங்கு முதலீடிலும் கட்டமைப்பிலும் செலவிடப்பட்டால் நாட்டிற்கு நிச்சயம்
நலம் பயக்கும். இப்பணத்தை யாரிடமோ அள்ளிக் கொடுக்க அல்ல, ஒரு பொது நிதியாக மாற்றி கட்டமைப்பு
மற்றும் தொழில் உற்பத்திக்காக செலவழிக்கவே நான் வழிமொழிகிறேன். உதாரணமாய் இப்பணம் கொடுத்து
இந்தியா முழுக்க பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் கட்டி குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கலாம்.
அல்லது பாலங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் அமைக்க பயன்படலாம். மேலும் பல சேவைகளுக்கும் பயன்படுத்துவதுடன் அரசே சில தொழில் அமைப்புகளை நிறுவி நடத்தவும்
முயலலாம். அல்லது கோயில் நிர்வாகங்கள் இப்பணத்தை நேரடியாக தொழிலில் முதலீடு செய்து
லாபத்தில் ஐம்பது சதவீதத்தை அரசாங்கத்துக்கும் இன்னும் ஒரு பகுதியை மக்கள் சேவைக்கும்
தந்து விட்டு ஒரு பகுதியை பராமரிப்புக்கும் சேமிப்புக்குமாய் வைத்துக் கொள்ளலாம். வெறுமனே
சாமி சிலைகளை அலங்கரிப்பதற்காக தங்கத்தை முடக்கி வைத்திருப்பது ஒரு பக்திபூர்வ ரசனை
மனதுக்கு சரியாக படலாம்; ஆனால் நடைமுறைவாதிகள் இதை ஒரு குற்றமாகவே பார்ப்பர்.
மேலும்,
அனைத்து மத கோயில்களையும் நோக்கி ஒரு கேள்வியை எழுப்ப வேண்டி உள்ளது. கோயில் என்பது
பக்தி நெறியை வளர்ப்பதற்கானது. பக்தி என்பது பொருள் ஈட்டலுக்கும் லௌகீகத்தும் எதிரானது.
மத அறக்கட்டளை ஒன்று தங்கத்தை வைத்திருப்பது என்பது ஒரு முரண்பாடான காரியம். இவ்வளவு
பணம் வைத்திருக்க கோயில் என்ன வங்கியா? இன்றைய நவீன சமூகத்தில் கோயிலில் அல்ல பொருளாதாரம்
மற்றும் தொழில் சம்மந்தப்பட்ட அமைப்புகளிடம் தான் பணம் இருக்க வேண்டும். பராமரிப்புக்கு
போக மீதம் எந்தவொரு பணமோ சொத்தோ ஒரு கோயிலுக்கு இருக்க கூடாது.
இறுதியாக,
இவ்வாறு கோயில் சொத்தை வெளியே தரக் கூடாது என எதிர்ப்பவர்களில் கணிசமானோர் பிராமணர் உள்ளிட்ட மேல்சாதியினர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் தேசத்துக்கான பொது
நிதியாக கோயில் சொத்தை மாற்றுவதை எதிர்ப்பதன் காரணம் கோயில் பணம் தம் பணம் என நினைப்பதும்,
அது கீழ் சாதியினரின் முன்னேற்றத்துக்கு பயன்பட்டு விடக் கூடாது என எண்ணுவதும் தான்.
காக்கா வடையை பாட்டிக்கும் தராது நரிக்கும் கொடுக்காது. தன்னால் தின்ன முடியாவிட்டால்
அது சாக்கடையில் போடுமே ஒழிய இன்னொருவருக்கு தராது. கோயில் சொத்து, தங்கம் விவகாரத்திலும்
இது தான் நடக்கிற்து.
