Skip to main content

அப்பா




மத்தியவர்க்க அப்பாக்களுக்கே உள்ள குணமோ என்னவோ அல்லது ஏதாவது ஒரு கட்டத்தில் மனதின் ஒரு பகுதி இறுகிப் போனதனால் இருக்கலாம், என் அப்பா என்னிடம் வெளிப்படையாக அன்பு காட்டி பாராட்டிய தருணங்கள் மிக மிக குறைவு. அல்லது என் நினைவில் இருந்து அகன்று போயினவா? நிறைய பேருக்கு பெற்றோர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளதை கண்டிருக்கிறேன். எனக்கும் அப்பா மீது உண்டு. எவ்வளவோ.


சின்ன வயதில் நான் பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கும் போதும் எப்படியாவது அதை மட்டம் தட்டி தான் பேசுவார். பிறகு கல்லூரியில் ஐந்து வருடங்களும் ஒவ்வொரு செமஸ்டரும் முதல் மதிப்பெண் வாங்கினேன். அவர் கண்டு கொள்ளவில்லை. முதுகலையில் தங்கப்பதக்கம் கிடைத்த போதும் அவர் பொருட்படுத்தவில்லை. எப்போதும் நான் எழுதியதை புறக்கணிப்பார்; பரிகாசம் செய்வார். என்னுடைய முதல் நூலை கொண்டு வருவதில் நான் ரொம்ப ஆசை கொண்டிருந்ததற்கு காரணம் அப்போதாவது அவர் முன் என்னை பொருட்படுத்தத்தக்கவனாய் காட்ட வேண்டும் எனும் எண்ணம் தான். ஆனால் என் முதல் நூல் வரும் முன் இறந்து விட்டார். அதை நினைத்தால் கூட எனக்கு கோபம் தான் வந்தது.
இப்போது நினைக்க சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. ஏன் அவரது பாராட்டுக்காக அவ்வளவு ஏங்கினேன்? ஏதோ ஒரு விதத்தில் குறைபட்டவனாக என்னை எண்ணினேனா அல்லது அவரது அன்பின் போதாமையை உணர்ந்ததனால் ஈடு கட்ட ஏங்கினேனா?
எல்லா அப்பாக்களையும் போல் என் அப்பாவும் எனக்காக என்னன்னமோ பண்ணியிருக்கலாம். ஆனால் அவை எதுவுமே நினைவில் இல்லை. அப்பா குறித்து மனதில் உள்ளவை கணிசமாக அவரைப் பற்றி அம்மாவோ பாட்டியோ சொன்னவை. ஒன்று என்னை சிறுவயதில் அவர் தூக்கிப் போட்டு விளையாடும் போதும் டப்பென்று கீழே போட்டு விட்டதும் நான் தென்னை ஓலைகள் மீது விழுந்ததும். இன்னொன்று நான் சின்ன வயதில் ஒரு ஆயுர்வேத நிலையத்தில் காலில் போலியோவுக்காக தென்னமடல்களால் கட்டப்பட்டு கடும் வலியில் அழும் போது அங்கு அருகாமையில் உள்ள வாதாம் மரங்களில் இருந்து பருப்பு கேட்பேனாம். அப்பா ஏறி பறித்து தந்ததாய் ஒரு கதை சொன்னார்கள். ஆனால் அவர் நிஜத்தில் மரமேறி பார்த்ததில்லை.
அவருக்கு புற்றுநோய் முற்றியிருந்த நாட்கள். நான் ஊருக்கு போயிருந்தேன். அவருடன் நிறைய நேரம் செலவழித்தேன். மிக மிக தளர்ந்திருந்தார். எந்தளவுக்கு என்றால் அவருக்கு கிரிக்கெட் சுத்தமாய் பிடிக்காது. ஆனால் அதைக் கூட டி.வியில் ஓட மாற்ற ஆர்வமின்றி பார்த்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒருமுறை கூட என்னிடம் ஒன்றும் அன்பாக விசாரிக்கவில்லை என ரொம்ப வருத்தமாக இருந்தது. அதனாலே நான் இனி அங்கு இருக்க மாட்டேன் என அம்மாவிடம் கோபமாக சொல்லிவிட்டு கிளம்பினேன். அப்பா அப்போதும் ஒன்றும் சொல்லவில்லை. மாலை போகும் முன் என் கையை ஒருமுறை பற்றிக் கொண்டார். அவ்வளவு தான். பிறகு சில மணிநேரங்களில் போய் சேர்ந்து விட்டார். அப்போது நான் சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.
ஒரு நாள் டி.வியில் ஒரு படக்காட்சி பார்த்த போது சட்டென்று அதில் வருவது போல் அப்பா எனக்கு சிறுவயதில் பலமுறை சோறு ஊட்டினது நினைவு வந்தது. அந்த சோறின் வாசனை, அவரது உள்ளங்கையின் சுவை கூட மிக அணுக்கமாக மனதில் எழுந்தது. எனக்கு ஆச்சரியம் இது போல் எத்தனை அன்பான நினைவுகளை எங்கோ மீட்க முடியாதபடி புதைத்து வைத்திருக்கிறேன் என்று. எல்லோரிடமும் இப்படித் தான் இருக்கிறோம். கோபமும் வருத்தமும் ஒருவரது அன்பான செய்கைகளை முழுக்க மறக்க செய்கின்றன.
இப்படித் தான் என் நாவல் “கால்களில்” அப்பா பாத்திரத்தை என் அப்பாவை ஒட்டி உருவாக்கினேன். நிறைய அங்கதம் பண்ணி கொஞ்சம் எதிர்மறையாக திட்டமிட்டே செய்தேன். மைய பாத்திரம் பெண் என்பதால் அப்பாவுடன் இயல்பாகவே நெகிழ்ச்சியான உறவு இருக்கும் என்பதால் அப்படியான சில காட்சிகளும் அமைத்தேன். ஆனால் பாருங்கள், வாசகர்கள் அப்பாவின் பாத்திரம் மிக நெகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன் பெண்ணின் மீது அவர் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றும் என்னிடம் கூறினர். நான் அதில் ஏற்றின எதிர்மறையான பல கூறுகளை அவர்கள் கவனிக்கவில்லை. இல்லை ஒருவேளை அப்பா மீதான என் அன்பு என்னை அறியாமல் அதில் இன்னும் காத்திரமாக வெளிப்பட்டதா தெரியவில்லை.
அப்பாவை விட அம்மாவிடம் தான் எனக்கு அதிக பிரியம். ஆனால் என் நாவலில் அம்மா பாத்திரம் அப்பாவை விட எதிர்மறையாக வந்திருந்தது. இப்படி நினைப்பது ஒன்று உண்மை வேறு ஒன்று.
நாவலில் இருந்து அப்பா பற்றின ஒரு சிறுபகுதி:
மதுவின் அப்பா கடுமையாக கோபத்துக்கும் கட்டுப்பாடற்ற வன்மத்துக்கும் ஊரில் வெகுவாக அறியப்பட்டவர். கார்த்திக்குக்கு பத்து வயதிருக்கும் போது அவர் பெரிய தேர் இருந்த கடைத்தெருவில் கட்டிபுரண்டு சண்டை போட்டதை பார்த்திருக்கிறான். ஏதோ ஒரு தூரத்து உறவினரோடு வாய்த்தகராறில் முளைத்த மோதல். அவர் குள்ளமானவர். மதுவின் அப்பா அன்றும் குச்சியாக உயரமாகத் தான் இருப்பார். நீண்ட தன் கால்களால் அந்த மனிதரை புரட்டி புரட்டி மிதித்தார். பின்னர் ஒரு காலால் மிதித்து அவரை தரையோடு அழுத்தி மறுகாலால் மார்பில் மிதிக்க ஆரம்பித்தார். ஊர்க்காரர்கள் வெகுஆர்வமாக சுற்றி நின்று வேடிக்கை பார்த்து குசுகுசுத்தனர். இக்கட்டம் கார்த்திக்குக்கு தத்ரூபமாக நினைவிருக்கிறது. அம்மனிதர் வேதனை பொறுக்காமல் முனகினார். திம் திம் என்ற மிதிபடும் ஓசை. அவர் மதுவின் அப்பாவை காலைப் பற்றி திருப்பி விட்டார். அப்பா உருக்குலைந்து தடுமாற அம்மனிதர் எழுந்து ஓடினார். சுற்றி நின்றவர்கள் விலகி வழிவிட்டனர். அப்பா எழுந்து துரத்திக் கொண்டு போனார். ஓடின குள்ள மனிதர் ஆவேசத்தில் ஒரு திண்ணையில் ஏறிக் கொண்டார். அது மதுவின் அப்பா பிரேமேந்திரனின் மச்சினர் வீடு. ஜன்ன்ல் வழி எட்டி நின்ற மச்சினனை பிரேமேந்திரன் உரிமையாக அழைத்தார். அவர் ஆரம்பத்தில் தயங்கினார். பிரேமேந்திரன் “டேய் கணேசா கதவைத் திறடா ஒரு உலக்கை எடுடா என்றார். அவர் உடனே சுறுசுறுப்பாக கதவைத் திறந்து கொண்டு உலக்கையுடன் வெளிப்பட்டார். கூட்டம் சுறுசுறுப்படைந்தது. ஒரு திட்டம் அங்கு சொல்லாமலேயே உருவானது. கணேசன் பிரேமேந்திரனிடம் உலக்கையை கொடுத்து விட்டு அந்த குள்ளமனிதரை சுற்றி வளைக்கப் பார்த்தார். ஏற்கனவே மிகவும் நடுங்கிப் போயிருந்த அவர் காற்று துரும்பில் அலைபாய்வது போல் தள்ளாடினார். யார் வேண்டுமானாலும் அவரை பிடித்து அடிக்கவும் சவுட்டவும் அங்கு தலைப்பட்டிருக்கக் கூடும். அந்த மனிதர் அவ்வளவு பலவீனமாய் பாவமாய் அப்போது தோன்றினார். அவர் திண்ணையில் இருந்து தாவி இறங்கினார். இருவரும் சுதாரித்து அவரை நெருங்கும் முன் அபார வேகத்துடம் ஒரு தேங்காய் அளவு கல்லை பொறுக்கிக் கொண்டார். பாக்கு இடிப்பதற்காய் அவ்வீட்டு கிழவி பயன்படுத்தும் கல் உரல் அது என்பதையும் கார்த்திக் அன்று அப்போது கவனித்தான். களேபரத்தில் அது உருண்டு தெருவுக்கு வந்திருந்தது. அவர் கல்லை தூக்கினதும் கூட்டத்தில் மனிதர்கள் பிடி பிடி என்று குரல் எழுப்பினர். யார் யாரை ஆதரிக்கின்றனர் என்று அவனுக்கு விளங்கவில்லை. கூட்டம் சிறுசிறு குழுவாக பிரிந்து சுற்றிக் கொண்டது. ஆண்கள் தங்கள் காவி லுங்கிகளை மடித்துக் கட்டிக் கொண்டனர். கிழவர்கள் முண்டாசை முறுக்கிக் கொண்டு உன்னிப்பாக தலையை நீட்டிக் கொண்டனர். வயதானவர்களும் கிழவிகளும் விலகி நின்றனர். கணேசன் கிட்டத்திட்ட அவன் பின் சென்று இடுப்பை பிடிக்கும் பாவனையில் நிற்கிறான். பிரேமேந்திரன் கல்லை எல்லாம் பொருட்படுத்தினாற் போல் தெரியவில்லை. அவர் உலக்கையை ஓங்கி முன் பின்னாக அடவு வைத்து தயாராகிறார். அம்மனிதரை தரையோடு பிடித்து அழுத்திய பின் உலக்கையால் குத்தப் போகின்றனர் என்று கூட்டத்தில் சிலர் சொல்லிக் கொண்டனர். முன்னர் இப்படி ஒரு உலக்கை இடி சம்பவம் நடந்துள்ளதாம். அப்போதும் ஒரு குள்ள மனிதர் தான் தாக்கப்பட்டாராம். அது கூட இது போல் சாதாரண வாய்த்துடுக்கினால் ஏற்பட்ட தகராறு தானாம். திடீரென எதிர்பாராமல் ஒன்று நடந்தது. குள்ளமனிதர் கல்லை கீழே எறிந்தார். பிரேமேந்திரன் தடுமாறி உலக்கையை சற்று தளர்த்தினார். குள்ளர் முன்னோக்கி பாய்ந்தார். அவரைப் பிடிக்க பாய்ந்த கணேசன் கீழே விழுந்தான். குள்ள மனிதர் பிரேமேந்திரனின் வேட்டியை உரிந்து கொண்டு ஓடினார். கூட்டம் சில கணங்கள் ஸ்தம்பித்து பின் இரைச்சலாய் சிரிக்க ஆரம்பித்தது. பின்னர் இந்த சம்பவம் ஒரு கிளாசிக் வேடிக்கையாக நெடுங்காலம் கடைத்தெரு அரட்டையில் நினைவுகூரப்பட்டது. பிரேமேந்திரனின் வீரமும் வன்மமும் மூர்க்கமும் பலருக்கும் மறந்து போனது. அன்று அவ்வாறு வேட்டி உரியப்பட்ட போது அவர் ஜட்டி அணிந்திருக்க இல்லை. அதனால் சட்டையை இழுத்துப் பிடித்த படி மச்சினனின் வீட்டுக்குள் ஓடி விட்டார். கணேசன் சற்று நேரத்தில் சுதாரித்துக் கொண்டு பின்னால் ஓடினான். வேட்டியோடு ஓடின அந்த குள்ளமனிதர் அன்றோடு தலைமறைவானார். பிரேமேந்திரனின் பராக்கிரமங்களும் அன்றோடு கிட்டத்தட்ட நிறைவுற்றன. ஏனென்றால் அதற்கு பிறகு தான் மது பிறந்தாள். அவளுக்கு போலியோ வந்தது. ஊர்க்காரர்கள் பிரேமேந்திரனை இரக்கத்துடன் பார்த்து அவரது துயரத்தை கசப்பான விதியை அசைபோட்டனர். அவர் ஏதோ அதற்கு பின் தான் குடிக்க ஆரம்பித்து ஷீணித்து விட்டதாய் பேசிக் கொண்டனர். உண்மையில் பிரேமேந்திரன் மதுவிற்கு பிறகு தான் வெளிப்படையாய் குடிக்க ஆரம்பித்தார். குடித்து கடும் போதையில் தன் வீட்டுத் திண்ணையில் வேட்டி உரிந்தது கூட பிரக்ஞையில்லாமல் கிடந்து புரண்டார். ஜட்டி அணியாமல் அம்மணமாகும் பட்சத்திலும் கூட அவரது மனைவி தான் வந்து அவரது அந்தரங்கத்தை மூடி மறைக்க வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு சுரணை இல்லாத நிலைக்கு பிரேமேந்திரன் வந்து விட்டானே என்று ஊர்ர்க்காரர்கள் மேலும் பரிதாபப்பட்டனர். இப்படி பிரேமேந்திரன் வெவ்வேறு நிலைகளில் அம்மணப்பட்டதற்கு மதுவின் போலியோ கால் ஒரு திருப்புமுனையாக பேசப்பட்டது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...