Skip to main content

மாணவிகளின் ஆடைக் கட்டுப்பாடுகளும் அதன் அபத்தங்களும்



ஆடைக்கட்டுப்பாடு பற்றின இன்றைய சன் டி.வி விவாத மேடையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் சில சுவாரஸ்யமான (அத்தோடு கொஞ்சம் நகைச்சுவையான) கருத்துக்கள் சொன்னார். 


ஒன்று நவீன ஆடைகள் அணியாமல் இருந்தால் மாணவர்களின் மனக்கட்டுப்பாடு அதிகமாகும் என்றும் அதனால் படிப்பு மேம்பட்டு அதிக மதிப்பெண் பெற்று உயர்ந்த வேலை பெற்று இன்னபிற வளர்ச்சிகளும் அடைவார்கள்.
இரண்டு. அவர் கல்லூரி பேராசிரியராக இருந்த போதே கிளர்ச்சியான ஆடையணிந்த பெண்களால் கவனம் சிதறி சிரமப்பட்டாராம்.
முதல் கருத்து படு அபத்தம் என வாசித்தவுடனே புரியும். ஆடையின் சம்பிரதாயத்தன்மைக்கும் படிப்புக்கும் சம்மந்தமில்லை. இன்னும் சொல்லப் போனால் படிப்புக்கும் ஒழுக்கத்துக்கும் சம்மந்தமில்லை. படிப்பு முழுக்க முழுக்க தனிநபரின் உழைப்பு மற்றும் திறமை சம்மந்தப்பட்டது. இதை நான் மாணவனாக இருக்கையிலே பார்த்திருக்கிறேன். ஆசிரியனான பிறகும் பார்க்கிறேன். நவீனமாக ஆடை அணிகிற அதே வேளை கடுமையாக உழைக்கிற மிக திறமையான மாணவர்களை காண்கிறேன். உண்மையில் இவ்விசயம் இதை சொல்கிறவர்களுக்கும் தெரியும்.
இங்கு என்ன நடக்கிறது என்றால் நம் கல்வி நிறுவனங்களில் கல்வியை விட ஒழுக்கம், கட்டுப்பாடு, அதிகாரத்துக்கு அடங்குவதை கற்பித்தல் மிக முக்கியமாக இருக்கிறது. சில நேரங்களில் பெற்றோர்கள் கூட இதைத் தான் விரும்புகிறார்கள். நம்முடைய ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ சமூகம் கொடுக்கிற அழுத்தம் இவ்வாறான ஆடைக்கட்டுப்பாடாக கல்வி நிறுவங்களுக்குள் எதிரொலிக்கிறது என்பதும் ஒரு உண்மையே. நான் இதை ஆசிரியர்களின் குரலாக மட்டும் பார்க்கவில்லை.
பொதுவாக இந்தியா படைப்பூக்கத்தை ஆதரிக்கும் நாடல்ல. நவீனப்பட்ட நாடுகள் படைப்பூக்கத்தை முன்னேற்றத்துக்கான ஒரு அவசிய தேவையாக நினைக்கும். இந்தியா தக்க வைத்தலை முக்கியமாக நினைக்கும் ஒரு நாடு. நம்முடைய நவீன சுதந்திர ஆடைகள், அவை கையற்ற, இறுக்கமான மார்பும் இடுப்பும், துடைகளும் பின்புறமும் பிதுங்கித் தெரிகின்ற ஆடைகளையும் சேர்த்தே, ஒரு சுதந்திர கலாச்சாரத்தை முன் நிறுத்துபவை. மேற்குலகின் இந்த சுதந்திர கலாச்சாரம் வணிகம், கலை என பல தளங்களில் படைப்பூக்கத்தின், புதிய திறந்த சிந்தனைகளின் தேவையை கருதி சுதந்திரத்தை ஊக்குவிக்கிறது. நாம் இன்னும் முழுக்க நவீனப்படாத மெல்ல மெல்ல அத்திசை நோக்கி நகர்கிற ஒரு நாடு. மாணவர்கள் நவீன ஆடைகள் அணிகையில் அது ஒரு பேஷன் மட்டும் அல்ல; அவர்கள் ஒரு நவீன திறந்த சுதந்திரம் உள்ள கலாச்சாரத்தின் மீதான தங்கள் பிரேமையையும் மறைமுகமாக தங்களை அறியாமலே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் ஆசிரியர்களும், சட்டங்களை திணிக்கும் நிர்வாகிகளும், பழமைவாத சமூகமும் இந்த சுதந்திர கலாச்சாரத்தை எதிர்ப்பவர்கள். ஏனென்றால் அவர்கள் இன்னமும் ஒரு நிலச்சுவாந்தார பண்பாட்டில் இருந்து வெளிவருவதா என தீர்மானிக்காதவர்கள். இது உண்மையில் எந்திரமயமாக்கலுக்கும் நிலவுடைமை உற்பத்திக்கும் இடையிலான மோதல். இதில் ஒழுக்கம் என்பது ஒரு இரண்டாம் நிலை விசயம் மட்டும் தான். (அடிமைக்கு மட்டும் தானே ஒழுக்கம் தேவை என்பது இன்னொரு விவாதம்)
அடுத்து பெண்களின் கவர்ச்சியான ஆடை. பெண்கள் பொதுவிடத்தில் கிளர்ச்சியாய் ஆடையணிகையில் நாம் ரசிக்கலாம். வேலையிடத்திலும் கூட பெண்களை அரைக்கண் கொண்டு ரசிக்கலாம். இதனால் பெண்களுக்கும் ஆபத்தொன்றும் வந்து விடப் போவதில்லை. ஒரு சட்டக்கல்லூரி பேராசிரியர் நவீன ஆடையணிந்த பெண்கள் தாம் கற்பழிக்கப்படுகிறார்கள் எனக் கூறி அருள்மொழியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இது சரி. நான் மாணவனாக இருக்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவு வருகிறது. எம்.சி.சியில் படிக்கையில் என் வகுப்பில் வடகிழக்கை சேர்ந்த ஒரு பெண் இருந்தார். அவர் முதல் நாளின் இரண்டாவது வகுப்பிலேயே சல்லடையான கறுப்பு சட்டை அணிந்து வந்தார். அதன் வழி அவரது பிரா முழுக்க தெரிந்தது. மாணவர்கள் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. உற்சாகமாக பார்த்தோம். ஆனால் எங்கள் பேராசிரியர் தான் திகைத்து திக்குமுக்காடி விட்டார். அவரால் பார்க்கவும் முடியவில்லை; பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. பின்னர் அப்பெண்ணை ஒரு பெண் பேராசிரியர் கூப்பிட்டு கண்டித்து ஆடைக்கட்டுப்பாட்டை வலியுறுத்தினதில் அவள் பின்னர் கல்லூரிக்குள் வெறும் ஜீன்ஸ் டிஷர்ட்டோடு நிறுத்திக் கொண்டாள்.
இதை மாணவர் தரப்பில் இருந்து பார்ப்போம். இந்த பெண்ணை நாங்கள் யாரும் கற்பழிக்க முயலவில்லை. எல்லோருக்கும் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை தான். பின்னர் அவள் எனக்கு மிக நல்ல தோழியாக மாறினாள். அப்போது ஒரு விசயம் புரிந்து கொண்டேன். இவ்வளவு நவீனமாய் தோன்றுகிறதால் அவள் ஒன்றும் பிரெஞ்சுப் பெண் போன்றவள் அல்ல. ஆக்மார்க் இந்தியப் பெண். அதே மரபான மனப்பான்மை அவளிடமும் இருந்தது. கண்டவனோடெல்லாம் செல்லவில்லை. ஆத்மார்த்தமாக நம்பி ஒருவனை காதலித்தாள். அவன் கழற்றி விட்டதில் ரொம்ப மனம் துவண்டு பின்னர் இன்னொருவனை காதலித்தாள். அதுவும் ஏமாற்றத்தில் கொண்டு விட்டது. அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக மாத்திரை சாப்பிடும் நிலைமைக்கு வந்தாள். ரொம்ப சன்னமான மனம் கொண்ட நுண்ணுணர்வு மிக்க பெண். இப்படியான பெண்கள் திறந்த கலாச்சாரம் கொண்டவர்கள் என அர்த்தமில்லை. சில சமயம் சுடிதார் பெண்களை விட கட்டுப்பெட்டியாகவும் இருப்பார்கள்.
பெண்கள் ஒரு ஆணை தூண்டுவது என்பது வெறும் ஆடையளவில் நடப்பது இல்லை. பெண்களைப் பற்றியும் காதலைப் பற்றியும் அறியாதவர்கள் தாம் அப்படி கூறுகிறார்கள். அது இன்னொரு சிக்கலான நுட்பமான தளத்தில் நடக்கிற காரியம். அப்பெண் அதே சல்லடை ஆடையில் தொடர்ந்து வந்திருந்தாலும் நாங்கள் சகஜமாகத் தான் எடுத்திருந்திருப்போம். ஒரே நாளில் நடக்காத ஒன்று ஒரு வருடத்திலும் நடக்காது.
ஆனால் ஆசிரியர்களின் சிக்கல் வேறு. அவர்கள் எப்போதும் ஒரு முரண்பாட்டுக்குள் வாழ்கிறார்கள். வெளியே ஒரு பெண்ணை பார்க்கையில் அவள் எல்லா சாத்தியங்களுக்கும் உட்பட்ட ஒரு பெண். ஆனால் அதே பெண் வகுப்பறைக்குள் ஆசிரியரின் பார்வைக்கு ஒரு குழந்தையின் நிலைக்கு வந்து விடுகிறாள். பிறருக்கு எப்படியோ எவ்வளவு அழகான பெண்ணும் வகுப்பறையில் எனக்கு அக்கறைக்குரிய ஒரு குழந்தை தான். ஆனால் சில வேளை இப்பெண்ணை ரசிக்கவும் தொடங்கினால் உங்கள் மனதுக்குள் ஒரு போராட்டம் துவங்கி விடும். இது மிக சிக்கலானது. ஒரு மாணவி இப்படித் தான் என்னிடம் நல்ல வழிந்து பேச ஆரம்பித்தாள். என் தனிப்பட்ட விபரங்கள் கேட்பாள். வெளியே பார்த்தால் கொஞ்சலாய் பேசுவாள். ஒரு நாள் பைக்கில் உங்களோடு வரலாமா என்றும் கேட்டாள். அழகாக வேறு இருந்தாள். ஒருநாள் வகுப்பில் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேட்டுக் கொண்டிருந்த போது எல்லோர் முன்னிலையிலும் என்னைப் பற்றி தனிப்பட்ட ரீதியில் எதுவும் கேட்காதீர்கள். அதைச் சொல்வது என் வேலை அல்ல என பொதுவாக சொல்லி விட்டேன். அதோடு பிரச்சனை முடிவுக்கு வந்தது.
நான் அப்படி செய்ததற்கு ரெண்டு காரணங்கள். ஒன்று நான் அந்த பெண்ணிடம் ஆர்வம் காட்டினால் அது லகுவாக மாணவர்களுக்கு தெரிந்து விடும். மாணவிகள் குறிப்பாக இதனால் எரிச்சலாவார்கள். வகுப்புக்குள் எனக்கான மரியாதை குறையும். வகுப்பில் சிறு பிசிறையும் நான் சகிக்க மாட்டேன். மேலும் ஆசிரியர் மாணவி உறவு மிக சிக்கலான ஒன்று. எந்த நேரமும் நாம் அந்த கோட்டை தாண்டி விடக் கூடும். அது வேலைக்கே உலையாகும்.
இப்படியான தடுமாற்றங்கள் மனப்போராட்டங்கள் அழகான பெண்களால் பல பேராசிரியர்களுக்கு நேர்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதை ஒரு வேலைசார்ந்த ஆபத்தாக (occupational hazard) தான் எடுத்துக் கொள்ள வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் மீது பெரும் காங்கிரீட் பாளங்கள் விழவில்லையா. அதற்கென அவர்கள் ஆபத்தே இல்லாத சூழல் வேண்டுமென கேட்டால் வெட்ட வெளியில் பட்டம் பறக்க விடுகிற வேலை தான் கிடைக்கும். இதற்காக பெண்களை முழுக்க மூடி போர்த்தி வரச் சொல்வது ஒரு ஆதிக்க மனோபாவம், ஒரு அநியாயம்.
தொலைபேசியில் மனுஷ்யபுத்திரன் நடுவில் வந்து ஒரு கேள்வி கேட்டார்: ஆடைக்கட்டுப்பாடு கல்வி மேம்பாட்டுக்கு அவசியம் என்றால் இக்கட்டுப்பாடு இல்லாத ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் நம்மை விட எப்படி பல மடங்கு முன்னேறி இருக்கிறார்கள்? இதற்கு அண்ணா பல்கலை துணைவேந்தரால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. அவர் மனுஷ்யபுத்திரனை “இந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை” என அபத்தமாக விவரிப்பது காண தமாஷாக இருந்தது. இந்த நிகழ்ச்சி முழுக்க கல்வியாளர்கள் அபத்தமாகத் தான் பேசினார்கள். ஏன்? அவர்கள் என்ன முட்டாள்களா?
இல்லை பிரச்சனை அவர்கள் ஒரு காலாவதியான விசயத்தை ஓட்டையான லாஜிக் மூலம் நியாயப்படுத்த முயன்று கொண்டிருந்தார்கள். தம்மைத் தாமே கோமாளியாக்கிக் கொண்டார்கள்.
அவர்கள் சொல்ல வந்தது மேற்கத்திய பண்பாட்டை நாம் (சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகத்தன்மை போன்ற) விழுமியங்களின் அடைப்படையில் ஏற்க வேண்டியதில்லை. இப்போதைக்கு நவீனத்துவத்தை நாம் தொழில்நுட்பம் (கணினி, இணையம், குறும்பேசி, டி.வி, வீட்டு உபயோக எந்திரங்கள், கார், விமானம்) என்ற அளவிலும் வணிக பயன் (எம்.என்.ஸி வேலை, மென்பொருள் வேலை, உலகமயமாக்கல்) மட்டும் ஏற்றுக் கொண்டால் போதும். பண்பாட்டளவில் நாம் பழைய கட்டுப்பெட்டி நிலையிலே இருப்போம் என்கிறார்கள். ஆனால் இதை வெளிப்படையாக கூற அவர்களுக்கு குழறுகிறது. மறைமுகமாக இதை சொல்ல “நம் பண்பாடு நாகரிகம் என்பது வேறு, வெளிநாட்டு பழக்கமெல்லாம் இங்கு ஒத்துக் கொள்ளாது; இதனால் இளைஞர்கள் கெட்டு, பெண்கள் கெடுக்கப்பட்டு, விபத்துக்கள் அதிகமாகி நாடு சீரழிகிறது” என படு ஓட்டையான தர்க்கத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதைக் கேட்கவே நமக்கு சிரிப்பு வருகிறது.
இந்த விவாத நிகழ்ச்சியில் மாணவர் அமைப்பு தலைவியான அஜிதா முழுக்க பெரிசுகள் பேசுவதை கேட்டு சிரித்துக் கொண்டே இருந்தார். அது தான் பெரிசுகளின் அணுகுமுறை மீதான சரியான விமர்சனம். அருள்மொழி மிக அற்புதமாக பேசினார். நான் சின்னப் பையனாக இருக்கையில் இருந்தே அவர் தான் எனக்கு icon. இன்னமும் கூட டி.வியில் அவர் தெளிவாக பேசுவது பார்க்க இப்படியானவர்கள் நம் நாட்டில் குறைவாக இருக்கிறார்களே எனும் ஏக்கம் தோன்றுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்க தகுதி உள்ளவர்கள் அருள்மொழியை போன்றவர்கள் தாம். ஆனால் நாம் இருபத்தி ஏழாம் புலிகேசிகளை அமர்த்தி அழகு பார்க்கிறோம். அவர்கள் பூமாலையை பிய்த்து பிய்த்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும். ஒன்று நவீன மாற்றங்களை எதிர்க்கும் வலதுசாரிகள் இந்த சாதிய ஆணாதிக்க அமைப்பினால் பயன் பெற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பெண் உடலைத் தான் குறிவைக்கிறார்கள். பெண்களுக்கு அதிக சுதந்திரத்தை அளிப்பது தம் பழைய அமைப்பை சீர்குலைக்கும் என தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். பெண்களை நினைத்தால் பாவமாக இருக்கிறார்கள்.
இந்த விசயத்தில் பெண்களே பெண்களுக்கு முதல் எதிரி என்பதற்கு நிகழ்ச்சியில் பேசிய பர்வீன் சுல்தானா நல்ல உதாரணம். அவர் மட்டுமல்ல பொதுவாக பள்ளி கல்லூரிகளில் ஆண் பெண் காதலை பிரித்து வைப்பதில், பெண்களின் ஆடை சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதில் பெண் ஆசிரியர்கள் தான் முன்னிலையில் இருக்கிறார்கள். பெண் ஆசிரியர்கள் சேர்ந்து கொண்டாலே எந்த மாணவி எந்த மாணவனுடன் சுற்றுகிறாள் என்கிற ரீதியிலே ”சர்ச்சை” செய்வதை கவனித்திருக்கிறேன். பொதுவாக கட்டுப்பெட்டியான பெண்கள் சதா பிற பெண்களின் காதல், காம உறவுகள் குறித்து பதற்றம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆணாதிக்கவாதிகள் பெண்களைக் கொண்டு தான் பெண்களை ஒடுக்குகிறார்கள்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...