ஒரு நண்பர் சொன்னார்: “மனுஷ்யபுத்திரனை
ஒரு வாரம் பேஸ்புக் லாக் இன் பண்ணாமல் இருக்க சொல்லுங்க. அவதூறுகளில் நனையாமல் அப்ப
தான் அவர் நிம்மதியாக இருப்பார்”. நான் நினைத்தேன்: “மனுஷ்யபுத்திரன் பேஸ்புக் வராமல்
இருப்பதா? அது பேஸ்புக்கே ஷட்டரை இழுத்து மூடி விடுவது போல் அல்லவா? அதற்கு சூரியன்
கிழக்கே உதிக்காமல் இருக்ணும், நிலா தோன்றாமல் இருக்கணும், ஜெயலலிதா கலைஞர் மாதிரி
ஆகணும், கலைஞர் காமராஜர் மாதிரி ஆகணும்”.
மேலும் தமிழ் முகநூலில் அவ்வளவு சுவாரஸ்யமான
விவாதங்களை உருவாக்கிய நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அவர் ஏன் போகணும்? வசை
தூற்றிக் கொண்டிருப்பவர்கள் அவரை விட்டு போனால் போதுமே?
ஆனால் முன்பு ஒரு காலம் இருந்தது.
அப்போது மனுஷ்யபுத்திரன் முகநூலை எட்டி நின்று கவனித்துக் கொண்டிருந்தார். என்னிடம்
கேட்பார்: “நீங்க பேஸ்புக்கில இருக்கீங்களா?”
“ஆமா இருக்கேன். பேருக்கு. அதில
ஏதும் எழுத மாட்டேன்”
மனுஷ் சொல்வார்: “நானும் தான்
பேஸ்புக்கில எல்லாத்திலயும் இருக்கிறேன் ஆனால் ஒண்ணும் எழுதறதில்ல. எல்லாத்திலயும்
இருப்பேன். ஆனா இருக்க மாட்டேன்”.
அது வேறு ஒரு காலம்! அவர் அப்போது
இன்னும் அதிக நிம்மதியாக இருந்தாரா? தெரியாது. ஆனால் சதா ஒரு பக்கம் ஜனங்களோடு இருப்பதை
விரும்புகிறவர் என்பதால் பேஸ்புக் அவருக்கு நிறைய இணக்கமான பொழுதுகளை தந்திருக்கும்
என்பதில் சந்தேகமில்லை. ஒரே வித்தியாசம் கடந்த சில மாதங்களில் வேறு தலைவர்கள் மீதான
வெறுப்பை வெளியே கொட்ட இவரை ஒரு மென் இலக்காக பயன்படுத்துவது அதிகமாகி உள்ளது. எல்லாவற்றையும்
எல்லோரையும் வரவேற்கும் மனிதர் என்பதால் கலைஞரை, இஸ்லாமியரை, சிறுபான்மையினரை, இன்ன
பலரை நேரடியாக தாக்க முடியாதவர்கள் இவரை தங்களது அந்தரங்க வெறுப்புக் கிடங்காக பயன்படுத்துகிறார்கள்.
எல்லோருக்கும் அணுக்கமாக இருப்பதன் ஒரு சிக்கல் இது.
பேஸ்புக் நம் எல்லோருக்கும் போலவே
மனுஷ்யபுத்திரனுக்கும் பலதரப்பட்ட புதிய மனிதர்களை சந்தித்து அறிகிற வாய்ப்பை தந்திருக்கும்.
ஒரே வித்தியாசம் நூற்றுக்கணக்கான முகமற்ற எதிரிகளை முகவரி மாற்றி அவர் வீட்டுப் பக்கம்
அனுப்பிக் கொண்டிருக்கிறது. பொதுவாக எதிர்மறையான ஆட்கள் கசப்பானவர்களை பார்க்க பார்க்க
உற்சாகமாவார்கள். மனுஷ்யபுத்திரனை போன்ற நேர்மறையானவர்கள் வெறுப்பை கக்குபவர்களை பார்த்து பார்த்து
களைப்பாவார்கள். அவர் ரொம்ப களைத்துப் போயிருப்பார் என நினைக்கிறேன். முகமற்ற எதிரிகள்
அவருக்கு கொஞ்ச ஓய்வு கொடுக்கலாமே!
