Skip to main content

மிக்கி ஆர்தரின் நீக்கம் ஒரு முக்கியமான மாற்றம்




மிக்கி ஆர்தர் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது ஒரு மிக நல்ல முடிவு. ஏன் என்று பார்ப்போம்.

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் கட்டுப்பாடு, ஒழுக்கம், கராறான திட்டமிடலை முன்னிறுத்துபவை. அதாவது வெற்றிக்கு திறமையை விட இவை தான் முக்கியம் என நினைப்பவை. இது ஒரு இங்கிலாந்து பாணி. இங்கிலாந்து பயிற்சியாளர்களின் தாக்கத்தினால் தென்னாப்பிரிக்காவும் இலங்கையும் இவ்வாறு ஒழுக்கத்துக்கு மிகுதியான முக்கியத்துவம் குடுக்க துவங்கின என சொல்லப்படுகிறது. ஆனால் இலங்கை ஒரு மிகச்சிறிய நாடு என்பதாலும் அங்குள்ள உள்ளூர் பயிற்சியாளர்களின் தூண்டுதலாலும் வித்தியாசமான மரபை மீறிய வீரர்களை ஊக்குவித்தனர். ஜெயசூரியா, முரளிதரன், மெண்டிஸ், மலிங்கா என அவர்களின் சாதனையாளர்கள் மரபை எதிர்த்தவர்கள் தாம். அவர்களால் தான் இலங்கை கிரிக்கெட் பெரும் உயரங்களை தொட்டது. தென்னாப்பிரிக்காவும் இலங்கையும் நல்ல வீரர்களை கொண்டிருந்தாலும் கற்பனையற்ற எந்திரத்தனமான கிரிக்கெட்டை பின்பற்றியதால் அவர்களால் ஒரு சராசரித்தனத்தை கடந்து சாதனைகள் படைக்க முடியவில்லை. எதிர்பாராத சூழல்களில் எப்போது பதற்றமுற்று விழி பிதுங்கி துவண்டனர். தொன்ணூறுகளில் தென்னாப்பிரிக்காவுக்கு இதுவே முக்கிய பிரச்சனையாக இருந்தது. பரீட்சையில் ஒரு கேள்வியை கொஞ்சம் வேறு மாதிரி கேட்டால் பதில் கூற தெரியாத மனப்பாட மாணவர்களைப் போல் இருந்தனர். பின்னர் ரெண்டாயிரத்தின் பின்பகுதியில் ஹஷிம் ஆம்லா, டுமினி ஆகிய மாற்று இனத்தவரின் வருகையும் கற்பனையுடன் ஆடக்கூடிய டூப்பிளசி ஆகியோரின் சேர்க்கையும் அணியை கொஞ்சம் ஆஸ்திரேலியா, இந்தியா போல் தடைகளை திறமை மூலம் தாண்ட முயலும் அணியாக மாற்றியது. தென்னாப்பிரிக்காவின் இந்த பரிணாமம் முக்கியமானது. அந்த கட்டத்தில் தான் மிக்கி ஆர்தரும் அதன் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீங்கினார். அதாவது தென்னாப்பிரிக்கா கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா போல் மாறி வரும் ஒரு கட்டத்தில்.
பின்னர் ஆர்தர் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளர் ஆனார். ஆஸ்திரேலியா தனது மூத்த வீரர்களை இழந்து புது வீரர்களை கண்டடையும் எத்தனத்தில் இருந்தது. புது வீரர்களும் அத்தனை திறமையானவர்கள் அல்ல. அவர்கள் கொஞ்சம் இங்கிலாந்தைப் போல் இருந்தனர். பொதுவாக அணி பலவீனமாக இருக்கும் போது வாரியங்கள் சர்வாதிகாரத் தன்மை கொண்ட ஒரு பயிற்சியாளருக்கு முழு அதிகாரத்தை வழங்குவார்கள். இது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளில் உள்ள வழமை. அங்கு அணித்தலைவரை விட பயிற்சியாளர் அதிக அதிகாரம் கொண்டவராக இருப்பார். வீரர்கள் எப்போதும் ஊடகங்களிடம் பேசினாலும் ”எங்க பயிற்சியாளர் அப்படி சொன்னார்; அது படி பண்ணினோம்” என பள்ளி மாணவன் போல் பணிவு காட்டுவார்கள். அணித்தலைவர் வகுப்புத்தலைவர் போலவும் பயிற்சியாளர் தலைமை ஆசிரியர் போலவும் செயல்படுவார்கள். பயிற்சியாளர் தன்னிடம் பணிவாக உள்ள விசுவாசம் காட்டுகிறவர்களை தொடர்ந்து ஆதரித்து பிறரை பல வழிகளில் ஒழுக்கத்தின் பெயரில் ஒடுக்கப் பார்ப்பார்.
மிக்கி ஆர்தர் இதைத் தான் ஆஸ்திரேலியாவில் செய்யப் பார்த்தார். ஆனால் ஆஸ்திரேலியா மூத்த வீரர்களை இழந்த நிலையிலும் முழுக்க தென்னாப்பிரிக்கா போல் அதிகாரத்திடம் மண்டியிடும் அணி அல்ல என அவர் உணரவில்லை. ஆஸிகள் இயல்பிலேயே தன்னிச்சையாக அபாயகரமாக செயல்படுவதை விரும்புவார்கள். பாதுகாப்பை பணயம் வைத்து சாகசம் செய்வது அவர்களின் மரபில் உள்ளது. ஆர்தர் அடக்க முயன்றது இந்த உள்விழைவைத் தான். அவர் அணியை கிட்டத்தட்ட காயடிக்க பார்த்தார் என சொல்லலாம். அணித்தலைவரான கிளார்க்குக்கு இணையான ஆளுமை கொண்ட வீரராக வாட்சன் இருந்தார். வாட்சன் நம்மூர் யுவ்ராஜ், சேவாக் போன்றவர். அவரை தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் ஆட்டத்தின் போது தன்னந்தனியாக மூன்று வீரர்களின் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆனால் ஒற்றைப் புள்ளியில் அதிகாரத்தை குவிக்க முயன்ற ஆர்தர் மற்றும் கிளார்க்குக்கு வாட்சன் ஒரு தலைவலியாக இருந்தார். சமீபமாக நடந்த இந்திய டெஸ்டு தொடரின் போது வாட்சன் உள்ளிட்ட சில வீரர்களின் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்கிற அற்ப காரணம் காட்டி அணியில் இருந்து தடை செய்தது, மிக முக்கியமான கட்டத்தில் இவர்கள் இல்லாமல் அணி இந்தியாவிடம் தோல்வியை தழுவியது ஆகியவை ஆர்தர் எந்தளவுக்கு அணியின் வெற்றியை விட தன் அதிகார தக்க வைப்புக்கு முக்கியத்துவம் அளித்தார் என்பதற்கு உதாரணம். இந்த செயல் பல முன்னாள் வீரர்களின் கண்டனத்தை பெற்றுத் தந்தது. மிக சமீபமாக சேம்பியன்ஸ் கோப்பையின் போது ஆஸி அணியின் வார்னர் ஒரு பாரில் போதையில் இங்கிலாந்து அணி வீரர் ரூட்டின் மூக்கில் குத்தினார். விளைவாக அவர் தடை செய்யப்பட்டார். ஆனால் ஆர்தர் இந்த நேரத்தில் வார்னரை ஆதரிக்க துவங்கினார். ஏனென்றால் வார்னர் அவருக்கும் கிளார்க்குக்கும் அடங்கி நடக்கும் இளைய வீரர். நியாயப்படி அவர் வார்னரை கடுமையாக கண்டித்து இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றி இருக்க வேண்டும். ஆனால் வார்னரை அணியில் கூட தங்க அனுமதித்தனர். இது பொதுவாக சர்வாதிகார அதிகாரிகளிடம் காணும் போக்கு. கீழே உள்ளவர்கள் தமக்கு ஜால்ரா அடித்தால் அவர்கள் குற்றம் பண்ணினாலும் பாதுகாப்பார்கள். ஆனால் தன்னம்பிக்கையுடன் தன்னிச்சையாக செயல்படுகிறவர்களை அற்ப விசயத்தின் பேரில் தண்டிப்பார்கள். ஆர்தரின் இந்த பாரபட்சம் அவர் எந்தளவுக்கு மோசமான ஒரு தலைவர் என்பதை காட்டியது. மோசமான நிர்வாகத்தின் உச்சபட்ச உதாரணம் அணியை பிளவுபடுத்தி அதன் மூலம் அதிகாரத்தை கைப்பட்ட பார்ப்பது.
மேலும் ஆர்தர் ஆஸ்திரேலியாவின் பண்பாட்டை உணராமல் அதை தென்னாப்பிரிக்க போல் கட்டுப்பெட்டியானதாக மாற்ற முயன்று கொண்டிருந்தார்.
ஒரு ஆட்டம் தோற்றால் அது குறித்த கருத்துக்களை ஒரு அறிக்கையாக வீரர்கள் பயிற்சியாளர்களிடம் கொடுப்பது அந்த அணியை முன்னேற்ற அல்ல. பள்ளிக்கூடத்தில் மாணவர்களை தண்டனையின் பேரில் அவமானப்படுத்தி அவர்களுக்குள் அச்சத்தை தூண்டி அடிமையாக நடத்தும் ஆசிரியர்களின் அசட்டு ஒழுக்கவாதத்தை பார்த்திருக்கிறோம். மிக்கி ஆர்தருக்கு தேவை வீரர்கள் அவர் முன் மண்டியிட்டு குற்றமன்னிப்பு கேட்டு அப்படியே அ.தி.மு.க அமைச்சர்கள் போல் நடந்து கொள்வது. மிக்கி ஆர்தரை போன்ற ஒழுக்கவெறியர்கள் நம் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக, நிறுவனங்களில் அதிகாரிகளாக பல மட்டங்களில் நிறைந்திருக்கிறார்கள். முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய தடைக்கற்கள் இவர்கள் தாம்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...