Skip to main content

பெண் மொழியும் ஆண் மொழியும் ஒன்றாகும் போது…



பெண்கள் சந்தித்துக் கொள்ளும் போது சுவிட்சு போட்டாற்போல பேச ஆரம்பிப்பார்கள். என்ன பேசலாம் என்கிற தயக்கமெல்லாம் அதிகம் இருப்பதில்லை. பெண்கள் தம்மிடையே ஒரு உணர்வுபூர்வ கனெக்‌ஷனை எளிதில் உருவாக்குவார்கள். அது அவர்களின் வலிமை.
ஒரு பெண் மனசை இன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும் என்று நம் சினிமாவில் அடிக்கடி ஒரு வசனம் வரும். ஆனால் நடைமுறையில் இது உண்மையா?
உணர்வுப் பகிர்தலுக்கு ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் தான் சரி. ஆனால் எண்ணங்களை பகிர, பிரச்சனைகளை அலச ஒரு ஆண் தான் நல்ல துணை என பல பெண்களே கூறுகிறார்கள். பிரச்சனை என வந்தால் பெண்கள் அதற்கு உணர்வு பூர்வமான ஆதரவைத் தேடுவார்கள், ஆனால் ஆண்களோ அதற்கு தீர்வைத் தர முயல்வார்கள் என உளவியல் கூறுகிறது. மனசை வெறும் இதயம் என நினைத்தால் அந்த சினிமா வசனம் சரி. மூளையையும் சேர்த்தால் தப்பு.
பெண்கள் சேர்ந்து நடக்கும் போது கைகளை பற்றி இருப்பதை கவனித்திருப்பீர்கள். அதே போல் சந்திக்கும் போதும் பேச்சின் இடையே ஆதரவை தெரிவுக்கும் பொருட்டும் அவர்கள் கைகளை பற்றி தோளை வருடி முதுகை தட்டிக் கொடுப்பார்கள். பெண்களின் பேச்சில் தொடுகைக்கு தனி இடம் உண்டு. இளம் பெண்கள் தோழியரின் கன்னத்தை கிள்ளி விடுவார்கள். கூந்தலை தொட்டுப் பார்ப்பார்கள். மிக முக்கியமாக இரு பெண்கள் சந்தித்ததும் ஆடை, அணிகலன் பற்றி பாராட்டாமல் இருப்பது அபூர்வம். ஆனால் ஒரு ஆண் என்னதான் அழகான புது சட்டை போட்டு வந்திருந்தாலும் அலுவலகத்தில் இன்னொரு ஆண் கவனித்ததாகவே காட்டிக் கொள்ள மாட்டான்.
இரண்டு ஆண்கள் சந்தித்தால் என்னவெல்லாம் பேசுவார்கள்? தம்முடைய வேலையை பற்றி, சினிமா, அரசியல் போன்ற புறவிசயங்கள் பற்றி அதிகம் அரட்டையடிப்பார்கள். அரிதாகவே ஒரு ஆண் இன்னொருவனின் விரலை பற்றி என்ன உன் முகம் சோர்ந்து போய் இருக்கிறது எனக் கேட்பான். அன்று காலை தான் ஒரு பெரிய தனிப்பட்ட நெருக்கடிக்காக மனம் வருந்தி கொஞ்சம் அழுதிருப்பார்கள். ஆனால் வெளியே வந்து நண்பர்களை சந்தித்ததும் ஒன்றுமே நடக்காதது போல அன்றாட அரசியல், உலக பிரச்சனை, சீதோஷ்ண நிலை, நகராட்சியின் செயல்பாடு என கருத்துக்களின் அளவிலேயே பேசி அதில் மூழ்கி விடுவார்கள். ஆண்களுக்கு தம் பிரச்சனைகளை பொதுவில் பேச பயம் மற்றும் கூச்சம். பெண்கள் அப்படி அல்ல. அன்று காலை அவசரமாக குளித்து இஸ்திரி போட்டது முதல் பேருந்தில் பயணித்து இறங்கினது வரையில் நடந்த சின்ன சின்ன விசயங்களை அலுவலகம் போய் முதல் வேலையாக விலாவரியாய் தோழியிடம் விவரிப்பார்கள். அவர் நிறுத்தினதும் தோழி தன்னுடைய காலைப்பொழுதின் அவஸ்தைகளை விவரிப்பார். அதற்கு முன் அவர்கள் ஒன்று பண்ணுவார்களே, அது என்ன?
ஆம், முதல் வேலையாக வாஷ்ரூம் போய் ஒப்பனை செய்து கொள்வார்கள். பெண்கள் தம் உடல் தோற்றம் மீது காட்டும் அக்கறை ஆரோக்கியமான மனநிலையை காட்டக் கூடியது என்கிறார்கள் உளவியலாளர்கள். ஆண்கள் அலுவலகம் வந்ததும் ஹெல்மட்டில் இருந்து கலைந்த தலையும் வியர்வை வீச்சமடிக்கும் உடையுமாக உட்காருவார்கள். உட்கார்ந்து சுற்றும் முற்றும் ஏதாவது குறையிருக்கிறதா என தேடுவார்கள்.
பெண்களின் உலகம் உணர்ச்சிகளால் ஆனது. உணர்ச்சி தான் அவர்களின் மொழி. மூன்று பெண்கள் பேசும் போது பாருங்கள். ஒரே சமயம் எல்லாரும் பேசுவார்கள். அவர்களுக்கு பேச அவ்வளவு பிடிக்கும். பொதுவாக பேச்சுத்திறன் தேவைப்படும் வேலைகளில் பெண்கள் முன்னணியில் இருப்பார்கள். உதாரணமாக, ஊடகம், ஆசிரியப் பணி, நிர்வாகம். இன்னும் முக்கியமாக குடும்பம். இந்திய குடும்பத்தில் ஆணிடம் தான் முடிவெடுக்கும் அதிகாரம். ஆனால் அவனை பேசி பேசி அந்த முடிவை எடுக்க வைக்கும் அதிகாரம் பெண்களுக்கு தான். அவர்கள் பேச ஆரம்பித்தால் மின் இணைப்புகள் பற்றிக் கொள்வது போல “அப்படி சொன்னால் இப்படியா, இப்படி என்றால் அப்படியா” என ஒவ்வொன்றையும் உணர்ச்சிகரமாக கண்டு ஒன்றில் இருந்து மற்றொன்றுக்கு தாவி போய்க் கொண்டே இருப்பார்கள். அதனால் தான் ஆண்களால் அவர்களிடம் பேசி ஜெயிக்க முடியாது. பெரும்பாலும் சரணடைந்து விடுவார்கள்.
ஆண்-பெண் பேச்சுக்கு இன்னொரு முக்கிய வித்தியாசமும் உண்டு. இது பல குடும்ப பிரச்சனைகளுக்கு, காதல் முறிவுகளுக்கு இட்டு செல்கிறது. பெண்கள் உணர்ச்சிகளை கொட்ட பேசுகிறார்கள். ஆண்கள் பிரச்சனைகளுக்கு முடிவை கண்டடைய பேசுகிறார்கள். ஆக ரெண்டு பேரும் பேசும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு ஒரு கருத்தை சொன்னால் ஆண்கள் அதை அபிப்ராயமாக நினைத்து கோபப்படுவார்கள். ஆண்கள் தர்க்கரீதியாக ஒன்றை சொன்னால் பெண்கள் அதை உணர்ச்சிநிலையாக எடுத்துக் கொண்டு காயப்படுவார்கள். பெண்களுக்கு மரியாதை, கண்ணியம் முக்கியம். ஒரு வார்த்தையின் சின்ன கீறலை கூட தாங்கிக் கொள்ள மாட்டார்கள். ”அப்பிடி சொல்லீட்ட இல்ல” என்று திரும்ப திரும்ப அழுது கொண்டிருப்பார்கள். இது பரவாயில்லை. பத்து வருடம் கழித்து ஏதோ ஒரு தருணத்தில் அச்சு பிசகாமல் அதை ஒப்பித்து “அப்ப அப்பிடி சொன்ன இல்ல” என்று மீண்டும் மெல்ல ஆரம்பிப்பார்கள்.

பெண்களிடம் சர்ச்சை வரும் போது ஆண்கள் ஊழல் புகாரில் மாட்டி மீடியா அமளி துமளி பண்ணும் போது சமாளிக்கும் மத்திய மந்திரி போல் நிதானமாக ஆனால் முகத்தில் வருத்தத்துடன் நாசூக்காக பேச வேண்டும். ஆண்களிடம் வாதம் வலுக்கும் போது பெண்கள் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆதாரபூர்வமாய் குற்றச்சாட்டுகளை அடுக்கி திணறடிக்கும் போது பிரதமர் செய்வது போல “விரைவில் குழுவை அமைத்து விசாரிப்போம்” என்கிற கணக்கில் ரியாக்ட் செய்ய வேண்டும். உணர்ச்சிக்கு உணர்ச்சி. தர்க்கத்துக்கு தர்க்கம்.
ஒரு ஆணை முதலில் சந்திக்கும் பெண் அவன் எப்படி பேசுகிறான், என்னமாதிரி ஆடை அணிந்திருக்கிறான் என இரண்டையும் உன்னிப்பாக பார்க்கிறார்கள். கண்ணியமாக ஆனால் சுவாரஸ்யமாக பேசுகிற, நேர்த்தியாக ஆனால் மிகையின்றி ஆடையணிகிற ஆண்களை அங்கீகரிக்கிறார்கள். பெண்களை எளிதில் கவர்கிற ஆண்கள் இவ்விசயத்தில் அதிகவனமாக இருப்பார்கள். நான் வேலை பார்த்த இடத்தில் ஒரு 58 வயதான பேராசிரியர். அவருக்கு ஒருநாள் திடீரென்று மாரடைப்பு வந்து விழுந்து விட்டார். ஆனால் பிழைத்து விட்டார். நாங்கள் எல்லாம் பரிதாபப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் பேராசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “அன்று அவர் அவ்வளவு அழகான சட்டை அணிந்திருந்தார். பார்க்க பளிச்சென்று அழகாக இருந்தார் என்று யோசிச்சேன். ஆனால் இப்படி ஆயிடுச்சே. ரொம்ப வருத்தமாக இருக்கு”. இதுவே ஒரு ஆண் என்றால் “பாவம் நல்ல மனுசன். பார்த்தா அன்பா பேசுவார். நல்ல ஆசிரியர் கூட.” என்று அவரது ஆளுமையை கணக்கிடுவார்.
கணவன் மனைவி நிறைய பேச வேண்டும், பேசிக் கொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் அந்த உறவு ஆழம் பெறும் என்றார் எழுத்தாளர் சுந்தரராமசாமி. பேசினாலே சண்டை வருகிறது என நிறைய குடும்பங்களில் கணவன் மனைவி பேசுவதே இல்லை. அல்லது ஒரு கட்டத்துக்கு மேல் பேச ஒன்றுமே இல்லை என தோன்றுகிறது. பெண்கள் கொஞ்சம் ஆண்களின் மொழியிலும் ஆண்கள் கொஞ்சம் பெண்களின் மொழியிலும் பேசினால் இந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்து போகும்.

(அமிர்தா இதழில் நான் எழுதி வரும் பத்தியான “அறிந்ததும் அறியாததும்”இல் இரண்டாவது கட்டுரை)

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...