சென்னை மாநகராட்சி நாய்களுக்கான
புகலிடம் அமைக்கப் போவதாய் கூறி மறைமுகமாய் மொத்த தெருநாய்களையும் ஒழித்துக்கட்ட திட்டமிட்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் வரவேற்பையும் இன்னொரு பக்கம் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
நாய், பூனை போன்ற பிராணிகளுக்கு
வளர்ந்த சமூகங்களில் வளர்ப்பு பிராணி என்கிற அளவில் மட்டுமே இனி இடம் இருக்கும். “லண்டனில்
சிலுவைராஜ்” நாவலில் ராஜ்கௌதமன் லண்டனில் ஒரு காகம் கூட காணக் கிடைக்கவில்லையே என புலம்பியிருப்பார்.
அமெரிக்காவில் கூட பிராணிகளை நகரத்தில் இருந்து துப்புரவாக அகற்றி உள்ளார்கள். இந்த
பிராணிகள் நகரங்களுக்கு அப்பால் உணவுக்காக மைல் கணக்கில் அலைந்து படாதுபாடு பட்டு வாழ்ந்து
சாகின்றன. மாநகரங்கள் உச்ச வளர்ச்சியை அடைகிற நிலையில் மக்களுக்கு அச்சம் அதிகமாகிறது.
கிருமிகள், மிருகங்கள், பிற மனிதர்கள் என யாரைப் பார்த்தாலும் பயம். இதன் விளைவு தான்
சுத்தமான மிருகங்கள் இல்லாத தெருக்களும், அந்நியர்கள் நுழைய முடியாத gated சமூகங்களும்.
இன்னொரு விளைவு மிகையான தீவிரவாத பயம். சின்னதாய் குண்டு வெடித்தால் அமெரிக்கா பதறி
விடும். இங்கு இந்தியாவில் அதைவிட பத்து மடங்கு பாதிப்புடன் தாக்குதல் நடந்தாலும் மக்கள்
ஒன்றுமே நடக்காதது போல் பையைத் தூக்கி வேலைக்கு கிளம்பி விடுவார்கள்.
இந்தியா வளர்ச்சியடையாத நிலையில்
இருப்பதற்கும் தெருப்பிராணிகளின் சுகஜீவிதத்திற்கும் ஒரு தொடர்பு உள்ளது. அதனால் தான்
சென்னை மாநகராட்சி தெருநாய்களை முழுக்க அழித்து விடாது என ஒரு நாய் பிரியன் என்கிற
நிலையில் எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது. நம்முடைய மாநகராட்சி எதையும் முழுமையாக உருப்படியாக
செய்யாதது என்பதில் அனுகூலங்களும் இது போல் இருக்கிறதே.
மக்கள் நாய்களை வெறுப்பதற்கும்
நேசிப்பதற்கும் அவர்களின் வர்க்க நிலை மற்றும் இளவயது அனுபவங்களுக்கும் தொடர்புள்ளது.
அதே போல் நாய் ஒருவரை கடிக்குமா இல்லையா என்பதற்கும் இதற்கும் கூட தொடர்புள்ளது.
பொதுவாக உயர்வர்க்கத்தினரும் கீழ்த்தட்டினரும்
நாய்களை நேசிக்கிறார்கள். மத்திய வர்க்கத்தினர் வெறுக்கிறார்கள். இன்று சென்னையிலும்
பொதுவாக எல்லா உலக நகரங்களிலும் நாய் பூனை பாதுகாப்புக்காக உரிமைக்காக செயல்படுபவர்கள்
கணிசமாக உயர்தட்டினர் தாம். இவர்களுக்கு உள்ள நேசம் இந்த பிராணிகளை வளர்த்து அவற்றுக்கு
அணுக்கம் பாராட்ட இள வயது முதலே உள்ள வாய்ப்புகளின் விளைவு.
நாய் அல்லது பூனை வளர்க்க செலவாகும்.
மேலும் அது ஒரு பொழுதுபோக்கும் தான். ஒரு மனவிரிவும் அதற்கு வேண்டும். மேல்தட்டில்
உள்ளோருக்கு இதெல்லாம் எளிதில் சாத்தியமாகிறது. அன்றாட நடப்பியல் அவஸ்தைகள் பதற்றங்கள்
அதிகம் இல்லாவிட்டால் பிறர் மீது அல்லது பிற உயிரினங்கள் மீது பிரியம் காட்டுவது எளிதாகும்
தானே.
இதே தினசரி நடப்பியல் பதற்றங்கள்
மத்தியதர வாழ்வை சூழ்ந்து அரிக்கின்றன. இதன் விளைவாய் ஒரு குறுகின மனப்பான்மை அவர்களுக்குள்
தோன்றுகிறது. நான்கு சுவர்களுக்கு வெளியே உள்ள அத்தனை பேரும் தமக்கு எதிரி, போட்டியாளர்
எனும் எண்ணம் வலுவாக தோன்றுகிறது. தமக்குள்ளே சதா முடங்கிப் போவது ஒரு மத்திய வர்க்க
நோய்மை. வெளிநபர்களை வெறுக்கும் மத்திய வர்க்கம் ஒரு பிராணியை நேசிப்பது நடக்குமா என்ன?
பிராணிகளை வளர்ப்பதை கடுமையாக எதிர்ப்பவர்கள் மத்திய வர்க்கத்தினர். இந்த நாட்டில்
உள்ள மிச்ச சொச்சமுள்ள வளங்களை பிற வர்க்கத்தினர் சுரண்டி தம்மை தவிக்க விடுகிறார்கள்
என்கிற அச்சம் சதா அவர்களுக்கு. அப்படி இருக்க நாய் கூட அவர்களுக்கு ஒரு நடப்பியல்
போட்டியாகத் தான் தோன்றும். இது நாய் மீதான அச்சமாக வெளிப்படும்.
கணிசமான மாநகர மத்திய வர்க்கத்தினர்
சின்ன வயதில் நாயுடன் பழகி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு நாய் மீதுள்ள பயம் அறியாததன்
பால் உள்ள பயம் தான். சில கட்டுப்பெட்டியான குடும்ப பையன்களுக்கு பெண்கள் மீது அச்சம்
ஏற்படுவது போல. இவர்கள் நாயைப் பார்த்தாலே ஸ்பைடர் மேன் போல் பத்தடி தாவுவார்கள். இந்த
எதிர்வினை கண்டு நாய் தன்னை இவர்கள் தாக்கப் போகிறார்களோ என பயந்து குரைக்கும். அது
மட்டுமல்ல நாய்களால் அச்சத்தின் வாசனையை உடல் மொழியை சுலபமாய் உணர முடியும். அதனால்
பயப்படுகிறவர்களை தான் முதலில் துரத்தும். கடிக்கும். பொதுவாக நாய் வளர்த்து பழக்கமில்லாதவர்கள்
தாம் தெருநாய்களிடம் அதிகம் கடி வாங்கியோ துரத்தப்பட்டோ இருப்பார்கள். நாய்ப்பிரியர்களைப்
பார்த்தால் புது நாய் கூட வாலைக் குழைத்துக் கொண்டு வரும்.
மாநகரத்தின் சின்ன வீடுகளில் ஒடுங்கின
வெளிகளில் நாய் வளர்ப்பதும் எளிதல்ல. வளர்க்கலாம் என்றாலும் வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்க
மாட்டார்கள். அவர்களுக்கு மேற்சொன்ன பீதியிருக்கும். மேலும் குடியிருப்பில் வசிக்கும்
பிற மத்திய வர்க்க குடும்பங்களும் பரம்பரை பரம்பரையாக நாய் வளர்ப்பை கடுமையாக எதிர்ப்பவர்களாக
இருப்பார்கள். அவர்களும் அனுமதிக்க மாட்டார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் போல செல்லும்.
வளர்க்க முடியாததனால் பயம், பயத்தினால்
நாயால் கடிக்கப்பட்டு, இன்னும் பயமும் வெறுப்பும் ஏற்பட்டு தாம் வசிக்கும் பிரதேசத்தில்
இருந்து நாய்களையே அழித்தொழிக்க முயற்சி எடுக்க வைக்கும். ஆனாலும் இவர்கள் எங்காவது
ஏதாவது ஒரு இடத்தில் வைத்து நாய்க்கடி மீண்டும் வாங்குவது உறுதி. நோய் வராமல் இருக்க
தற்காப்பு சக்தி அதிகமாக வேண்டும் – நாய் கடிக்காமல் இருக்க பயம் அகல வேண்டும். நோய்
வந்தால் அரோக்கியம் குன்றி தற்காப்பு சக்தி குறையும். நாய் கடித்தால் பயம் கூடி மீண்டும்
கடி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாகும். இது ஒரு (மத்திய வர்க்க) சுழல்.
கீழ்த்தட்டினர் பொதுவாகவே நாய்
மீது அதிக பிரியம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ரோட்டோர தற்காலிக குடிசைகளில், சேரிகளில்
மிக இயல்பாக பல பிராணிகள் வளர்க்கப்படுவதை காணலாம். நாய் வளர்க்கும் செலவில் குழந்தைக்கு
பால் பௌடர் வாங்கலாம் அல்லது கோயிலுக்கு நன்கொடை வழங்கலாம் அல்லது சேர்த்து வைத்து
பழனிக்கு மொட்டை போடலாம் என்றெல்லாம் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். நான் டீக்கடை, மீன்கடை
போன்ற இடங்களில் என் நாயை அழைத்து செல்வேன். அது என் கூட வந்து காலருகே அமர்ந்து கொள்ளும்.
அங்கிருப்பவர்கள் புகார் சொல்ல மாட்டார்கள். மாறாக ஆர்வமாக நாயின் இனம் குணம் குறித்து
விசாரிப்பார்கள். என்னுடைய நாய் மிக குள்ளம். அதனால் தன் உயரத்தில் உள்ள குழந்தைகளைப்
பார்த்தால் பயத்தில் குரைக்கும். கணிசமான மத்திய வர்க்க அம்மாக்கள் இந்த நாய்க்கு குழந்தைகளைப்
பார்த்தால் ஏதோ கொலைவெறி என நினைத்து அய்யோ குய்யோவென்று ஏதோ புலியை பார்த்தது போல
குதிப்பார்கள். நேற்று ஒரு மீன்கடைக்கு கொண்டு போயிருந்தேன். அங்கே ஒரு குழந்தை அருகே
வந்து சீண்ட என் நாயும் உறுமியது. குழந்தை பயந்து அழ அந்த மீன்கடைக்கார அம்மா குழந்தையை
முதலில் துரத்தி விட்டார். அடுத்து அவர் சொன்னது தான் ஆச்சரியம்: “ரெண்டும் ஒரே ஒசரமா,
அதான் நாய் அந்த குழந்தை தன்னை அடிச்சிடுமோன்னு பயப்பட்டு குலைச்சது”. இது போன்ற ஒரு
புரிதலை ஒரு மத்திய வர்க்க பெண்ணிடம் இருந்து நான் எதிர்பார்க்க முடியாது. மத்திய வர்க்கத்தினர்
இந்த உலகில் தம்முடைய குடும்ப உறுப்பினர்களான மூவர் தவிர மிச்ச அத்தனை பேரும் தம்மை
கொல்லவோ பணம் பிடுங்கவோ தொந்தரவு செய்யவோ திரியும் குற்றவாளிகள் எனும் எண்ணத்தோடு இருப்பவர்கள்.
அடுத்த மனிதனை நம்பாத அவர்கள் நாயை எப்படி புரிந்து கொள்வார்கள்? அதனால் தான் என்னால்
ஒரு மத்திய வர்க்க சூப்பர் மார்க்கெட்டுக்குள்ளோ அதன் வாசல் வரையிலோ கூட நாயை கொண்டு
போக முடியாது.
பெசண்ட் நகர் போன்ற பகுதிகளில்
நாயை அழைத்து செல்லும் போது கிட்டத்தட்ட அத்தனை பேரும் நாயிடம் ஆர்வம் காட்டி கொஞ்ச
பழக வருவார்கள். இது போன்ற மேற்தட்டு பகுதிகளில் அழகான பெண்களின் கவனத்தை உங்கள் பால்
திருப்ப ஒரு சுட்டியான நாயை கையில் வைத்திருந்தால் போதும். நாயை ஒட்டி நிறைய பரிச்சயங்கள்
வாய்க்கும். இவர்கள் செல்லப்பிராணிகளை வளர்த்து பழகியவர்கள். அதனாலே அதன் மீது அதிகம்
அச்சம் இல்லாதவர்கள்.
இந்தியா மாநகரங்களில் எதிர்காலத்தில்
தெருநாய்க்களின் பாதுகாப்பு கீழ்/மேல் தட்டினரை நம்பித் தான் உள்ளது. உணவு இல்லாமல்
போகும் போது தான் நாய்கள் வெறி பிடித்து மனிதர்களை வேட்டையாடும். ஒன்று நாட்களின் எண்ணிக்கையை
கட்டுப்படுத்த வேண்டும். அடுத்து, அவற்றை முழுக்க அழிக்காமல் கீழ்/மேல் தட்டினர் தத்தெடுத்து
வளர்க்க வேண்டும். வேளாவேளைக்கு உணவு கிடைக்கும் நாய்கள் அமைதியாக தூங்குமே அன்றி தெருவில்
யாரையும் விரட்டாது. வீட்டிலும் உணவகங்களில் ஏகப்பட்ட சாப்பாடு வீணாகிறது. அதை இந்த
நாய்களுக்கு கொடுத்தால் போதும். கசாப்புக்கு போகும் மாடுகள், திருடிப் பிடுங்கும் குரங்குகள்
மேல் உள்ள பரிவில் கொஞ்சம் நாய்கள் மீதும் காட்டுவதில் தீங்கில்லை. இந்த உலகில் எல்லா
ஜீவராசிகளுக்கும் இடமுண்டு.
![]() |
| என்னுடைய நாய் ஜீனோ |
ஜாதி நாய்களை வளர்ப்பதற்கும் தெருநாய்களை
கவனிப்பதற்கும் சம்மந்தமில்லை. அவரவர் தேவை தான் முக்கியம். உதாரணமாக் பக், டாக்ஷ்ஹண்டு
போன்ற குட்டி நாய்களை வீட்டுக்குள் வைத்துக் கொள்வது குளிப்பாட்டுவது கவனிப்பது எளிது
(மருத்துவ செலவு அதிகம் என்றாலும்). இன்று சென்னையில் வீடுகளுக்குள் பல முதிய ஜோடிகள்,
தனித்திருக்கும் பெண்கள் பணத்துக்காக அல்லது சொத்துக்காக கொல்லப்படுவதை பார்க்கிறோம்.
இவர்கள் ரெண்டு ராட்வீலர் நாய்களை வைத்திருந்தால் அவை தனியே நாலு கொலைகாரர்களை சமாளிக்கும்.
மேலும் அவை படு ஆபத்தான கொலைகார நாய்கள். ஆனால் தனித்திருக்கும் முதியவர், பெண்களுக்கு
மிகச்சிறந்த பாதுகாப்பு இவை.
என்னுடைய நாய் சின்னது. ஆனால்
என் நாயின் முன்னிலையில் உங்களது சுண்டு விரல் என் மீது படக்கூட அனுமதிக்காது. ஒருமுறை
நான் ஜுரமாக கிடக்கையில் என் மாமியார் ஒரு கிளாஸ் பால் கொடுத்தார். என் மாமியாரிடம்
அதிகம் பழகவில்லை என்பதாலும் எனக்கு உடல் நலமில்லை என்பதை உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டதாலும்
என் நாய் அவரை என்னை அண்டவே விடவில்லை. பால் கோப்பை நீட்டிய கையை கவ்வி தடுத்து விட்டது.
நாய் இருப்பதால் நான் பல சமயம் வீட்டுக்கதவை சாத்துவதில் கூட அக்கறை காட்டுவதில்லை.
![]() |
இந்த
நாயைப் பாருங்கள். பெயர் கபாங். பிலிப்பைன்ஸில் தன் எஜமானனை ஒரு வாகன
ஆபத்தில் இருந்து காப்பாற்ற குறுக்கே பாய்ந்து தன் மேல்வாயை உடைத்துக்
கொண்டது
|
இப்போது நான் இதை எழுதுகையில்
அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் கணினியை மூடி எழுந்து நிற்கும் முன் நொடியில்
அது எழுந்து என் கூட வர தயாராகி விடும். எங்கு போனாலும் கூட ஒரு நிழலாக தொடரும். நான்
எங்காவது பயணம் போனாலும் நான் முதலில் என் நாயைத் தான் மிஸ் பண்ணுவேன். அதற்குக் காரணம்
மனிதர்களோடு இருந்தால் தோன்றுகிற ஒன்று எனக்கு நாயிடம் தோன்றுவதில்லை: தனிமை.


