Skip to main content

சாதி சங்கங்களை தடை செய்யலாமா?

பா.ம.கவை முன்வைத்து ஜெயா சாதி சங்கங்களை தேவைப்பட்டால் தடை செய்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மிரட்டல் இந்நாட்டில் உள்ள சாதி பிரச்சனைகளுக்கு சாதி சங்கங்கள் தாம் காரணம் என்கிற நிலைப்பாட்டை அடிப்படையாக கொண்டது. சாதி சங்கங்கள் தாம் தமிழ் நாட்டில் உள்ள சாதி வன்முறைக்கு காரணம் என நம்மை நம்ப சொல்கிறாரா ஜெயா?
அல்லது சாதி சங்கங்கள் தடை செய்யப்பட்டு விட்டால் பெரும் கட்சிகளில் உள்ள சாதி பிரிவுகள் செயல்படாமல் இருக்க போகின்றனவா? தேர்தலின் போது கட்சிகள் சாதி அடிப்படையில் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்க போகின்றனவா?

இந்தியாவில் மக்கள் சாதி அடிப்படையில் தான் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள், வாழ்கிறார்கள். சங்கங்களை தடை செய்தாலோ சாதியை பற்றி மூச்சு விடாமல் இருந்தாலோ அது அழியாது. யோசித்துப் பார்த்தால் இந்தியாவில் சாதி அடையாளமோ பிரிவினையோ அல்ல அதன் பெயரிலான ஒடுக்குமுறையும் பாரபட்சங்களும் தாம் பிரச்சனை என புரியும். இவ்வளவு மக்கள் தொகை உள்ள தேசத்தில் ஒவ்வொருவருக்கும் சம உரிமை கிடைப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம். அதற்கு மக்கள் பல்வேறு பிரிவுகளாக போராடிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. அது தான் சாதி சங்கங்களின் இருப்புக்கான நியாயம்.

பல்வேறு சாதி சங்கங்கள் இருக்கின்றன. சில சாதிகளின் பண்பாட்டில் உள்ள வன்முறை அவர்களின் அரசியலிலும் வெளிப்படுகிறது. பா.ம.கவினருக்கு நிக்ழ்வது அது தான். வன்னியர்கள் அடிப்படையில் சாத்வீகமானவர்கள் என்றும் ராமதாஸ் தான் அவர்களை வன்முறை நோக்கி தூண்டுகிறார் எனவும் கூற முடியாது. குறிப்பிட்ட சாதியினரின் தன்மைக்கு ஏற்ப தான் தலைவரும் இருப்பார். வன்முறையின் மொழி தான் அவர்களுக்கு புரியும், அவர்களை ஒருங்கிணைக்கும் என அவர் நம்பலாம். ராமதாஸ் போன்றொருவர் தான் அவர்களுக்கு தலைவராக இருக்க முடியும். மகாத்மா காந்தி அல்ல. எதிர்காலத்தில் கல்வியும் சமூக மேம்பாட்டும் இதே சாதியினரை ஜனநாயக முறைகளுக்கு திருப்பலாம். இதுவே நிதர்சனம். இந்தியா முழுக்க நாகரிகப்படாத ஒரு காட்டு தேசம். இங்கு மக்கள் இப்படித் தான் இருப்பார்கள். இங்கு ஜனநாயக முறைகள், சம உரிமை, நவீனம், அறவழி பற்றி பேசுபவர்கள் ஒரு சிறுபான்மை மத்திய, மேல்மத்திய வர்க்கம் மட்டும் தான்.

ராமதாஸ் ஒரு லட்சியபூர்வ தலைவர் அல்ல. காதல் திருமணங்களை முன்னிட்டு அவர் உருவாக்கி சர்ச்சை அருவருக்கத்தக்கது. ஒவ்வொரு முறை பிரச்சனை வரும் போதும் பொது சொத்தை அழித்து மக்களை காயப்படுத்துவதும் தவறானது. ஆனால் இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையே அன்றி, சாதி சங்கங்களின் பிரச்சனை அல்ல. சொல்லப்போனால் சாதி சங்கங்கள் தாம் நம்முடைய அடிப்படை சாதி முரண்களை, சிக்கல்களை பொது அரங்கிற்கு கொண்டு வந்து விவாதிக்கவும், நேரிடவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரித்தான உரிமைகளை பெற்றுத் தரவும் ஒரு தளத்தை உருவாக்குகின்றன.
இப்போது மட்டுமல்ல இனி எதிர்காலத்திலும் நாம் பல சாதிகளாக பிரிந்து தான் இருக்க போகிறோம். ஆனால் நம்மால் இந்த பிரிவுகளின் மத்தியில் சுமூகமாக வாழ முடியும். அதற்கு பிற சாதியினரின் இடத்தை ஏற்றுக் கொள்ளவும் ஜனநாயக பூர்வமாக அவர்களை மதிக்கவும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை போராட்டம், பேரணி, சர்ச்சை, வெட்டு குத்து அரசியல் மூலம் தான் சாதிகள் தத்தமது இருப்பை இங்கு பாதுகாத்து கொள்ள முடியும். இதுவே நிதர்சனம். வேறு வழி இல்லை.

சாதி சங்கங்கள் நம்மிடையே உள்ள பிரிவுகளை அதிகப்படுத்துவது இல்லை. சாதி சங்கங்கள் இல்லாவிட்டால் சாதி மறைந்து விடும் என்பது ஒரு பித்துக்குளி நம்பிக்கை. சாதி சங்கங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் பிரதிநுத்துவ அமைப்புகளாக நிறைய நேர்மறையான பணிகளை செய்ய முடியும். இங்கு சாதி சங்கங்கள் வரும் முன்னரே நம்மிடையே பரஸ்பர சாதி சார்ந்த வெறுப்பு கடுமையாக இருந்துள்ளது. அது தான் இப்போதும் வன்முறைக்கான ஊற்றாக இருந்து வருகிறது.

இன்னொரு சாதி வளரும் போது இந்தியர்களுக்கு அடிப்படையில் பதற்றமும் கோபமும் ஏற்படுகிறது. ஆனால் இந்த நவீன யுகத்தில் எல்லோருக்கும் வளர்வதற்கான வாய்ப்புகளும் சாத்தியங்களும் உள்ளன என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றும் நம்மால் பொருள் சேர்த்து செல்வந்தராய் வாழ முடியும். புவி மொத்தமும் ஒரே நாடு தான். பணமும் அதிகாரமும் தான் இன்றைய மனிதனின் அந்தஸ்தின் அடையாளம். நிலமும், அது சார்ந்த அதிகார சடங்குகளும் அல்ல. சாதி என்பது நமது நிலவுடைமை மனப்பான்மையோடு பின்னிப்பிணைந்த ஒன்று. சுருக்கமாக, இந்தியா முழுக்க நவீனபடும் போது தான் சாதி பிரச்சனைகள் மறையும். அல்லது ஒரு அபாரமான சகோதரத்துவமும் சகிப்புணர்வும் நமக்குள் உருவாக வேண்டும். இது தான் அடிப்படை பிரச்சனை.

சாதி வெறுப்பு என்றால் என்னவென்று தெரியாத விரல் சப்பும் பிள்ளைகளாய் நாம் இருந்தோம். ராமதாஸ் வந்து நம்மை கெடுத்து விட்டார் என்றால் அந்த விரல் சப்பும் குழந்தை கூட நம்பாது. இது போன்ற தடை செய்யும் திட்டங்கள் பா.ம.கவை மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகளுக்கும் பாதகமாகும். இவர்களுக்கு கீழ் இருக்கிற பல்வேறு சின்ன சின்ன சாதிகளுக்கும் தான். ஜெயாவின் இந்த பாஸிஸ சிந்தனைகளை நாம் முதலில் வலுவாக எதிர்க்க வேண்டும்.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...