(ஏப்ரல் மாத அந்திமழை சினிமா சிறப்பிதழில் வெளிவந்துள்ள கட்டுரை)
எல்லா சினிமாக்களையும்
போல தமிழ் சினிமாவில் துரோகத்தின் அடிப்படையில் நிறைய படங்கள் வந்துள்ளன. ஆனால் அரிதாகவே
ஆழமாக துரோகம் எனும் பிரச்சனையை சித்தரிக்கவோ அலசவோ செய்திருக்கிறோம்.
இங்கு எனக்குப்
பிடித்த தமிழ் துரோகப் படங்களில் சில.
“ரெட்டைவால் குருவி”
1987இல் வெளிவந்த
பாலுமகேந்திராவின் இந்த பிரபலப் படம் தாம்பத்திய துரோகம் பற்றினது.
மோகன், ராதிகா,
அர்ச்சனா நடித்திருப்பார்கள். நாயகான கோபி இரு பெண்களை மணமுடித்து இருவரும் ஒரே நேரத்தில்
கர்ப்பமாகி ஒரே ஆஸ்பத்திரியில் அவர்கள் பேறுக்கு வரும் போது நேரும் குழப்பமும் நகைச்சுவையும்
கதைக்கான ஒற்றைவரி. பாலுமகேந்திரா இங்கு மோகனின் கோபி பாத்திரம் மூலம் பாலியல் அத்துமீறல்
ஒரு மனிதனின் தவறா அல்லது அவனால் தவிர்க்க முடியாத இயல்பா என்கிற கேள்வியையும் மிக
நுட்பமாக அலசி இருப்பார். அது தான் இப்படத்தை முக்கியமானது ஆக்குகிறது.
கோபியின் முதல்
மனைவி வேலையில் முன்னேறுவதற்கு குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட்டபடி இருக்கிறாள். இதனால்
அவனுக்கு குழந்தை ஏக்கம் அதிகமாக ஒரு கட்டத்தில் ராதிகாவை சந்தித்து காதல் கொண்டு அவளை
ஏமாற்றி மணந்து கொண்டு கர்ப்பமாக்குகிறான். அப்போது தன் முதல் மனைவியும் கர்ப்பமாக
இருப்பது அவனுக்கு தெரிய வருகிறது. கோபிக்கு அதனால் ஒழுக்கச்சிக்கலோ குழப்பமோ இல்லை.
அவன் இரு மனைவிகளுடனும் இரவு பகல் என மாறி மாறி அவரவருக்கு தெரியாமல் வசிக்கிறான்.
இதில் சுவாரஸ்யமான விசயங்கள் இரண்டு. ஒன்று கோபி படம் முழுக்க காமத்தில் திளைப்பவனாக
இருக்கிறான். சம்போகம் அவனது மன இயல்பின் ஒரு பகுதி. ஒரு காட்சியில் கூட அவன் தன் மனைவிகளுக்கு
சற்று விலகி அமர்ந்து வீட்டுக் காரியங்களை செய்தித் தாள் மேய்ந்தபடி அல்லது ரிமோட்டை
அழுத்திய படி விவாதிப்பதில்லை. சின்ன சந்தர்ப்பம் கிடைத்தாலும் மனைவியை அணைத்து முத்திக்
கொண்டே இருக்கிறான். சல்லாபத்திற்காக சதா விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டு ஆனால் அதற்கு
கோபப்படாமல் செல்லமாய் முகம் சுளித்து கொஞ்சலாய் புகார் சொல்லுகிறான். கோபியின் மொத்த
ஆளுமையும் இதை நோக்கித் தான் குவிந்திருக்கிறது. மனைவி கர்ப்பமாகும் போதும் குழந்தை
பெற்ற பின்னரும் கூட அவனது காமம் அதே கொதி நிலையில் தான் இருக்கிறது.
முதல் மனைவி கர்ப்பமான
பின் இரண்டாமவளை விட்டு விட கோபிக்கு அலோசனை தரப்படுகிறது. ஆனால் அவன் இரண்டு மனைவிகளுடம்
இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருப்பதாகவே தெரிகிறது. சொல்லப் போனால் அவன் முதல் மனைவியிடம்
அவள் கர்ப்பமான பின் எரிச்சலுடன் நடந்து கொள்கிறான். கட்டற்ற பாலியலை ஏற்கும் இரண்டாம
மனைவியிடம் தான் அவன் அதிக சௌகரியமாக உணர்கிறான். கோபியின் ஒழுக்கமீறலுக்கு அவனது குழந்தை
ஆசை தான் காரணம் என்கிற வெளிப்படையான காரணத்துக்கு முரண்பாடாக அவனது இச்செயல்கள் உள்ளன.
படத்தின் இந்த உள்முரண் முக்கியம்.
இறுதியில் உண்மை
தெரிய வந்து இரு மனைவிகளும் அவனை விரட்டி பிறகு, அவன் முதல் மனைவியிடம் மீண்டும் ஒன்று
சேரும் காட்சி வருகிறது. அப்போது உடனே அவளை அணைத்து முத்தமிட்டு சம்போகிக்க துவங்குகிறான்.
கோபியின் காதலில் சொற்களுக்கு இடமே இல்லை.
“ரெட்டைவால் குருவி”
பாலியல் துரோகத்தின் காரணம் ஒழுக்கத்தவறு அல்ல என்கிறது. துரோகம் செய்வது கோபியை போன்றவர்களின்
மன இயல்பு. அவர்களால் வேறெப்படியும் இருக்க முடியாது.
இப்படியான ஆண்கள்
பார்க்க அழகாய் இருப்பது மட்டுமல்ல கொஞ்சம் மக்காகவும் இருப்பார்கள். ரொம்ப விவரமாக
சிக்கலாக யோசித்து நியாய அநியாயம் முன்வைக்க மாட்டார்கள். எளிய அழகான ஆண்களை பெண்களுக்கு
பிடிக்கும். படம் முழுக்க எதிர்மறையாக யோசிக்கத் தெரியாத இரு பெண்களுக்கு இடையே பேட்மிண்டன்
ஆடப்படும் ஆணாக, அதற்கு சுணங்காதவராக மோகன் நடித்திருப்பார். ராதிகாவின் பாத்திரமும்
அது போல் மிக வித்தியாசமானது; அவர் அற்புதமாக நடித்திருப்பார். கிருஷ்ண லீலையை நினைவுபடுத்தும்
படியாய் கோபி, ராதா பெயரிடல்களும் கவனிக்கத்தக்கது.
மகாநதி:
கமல் கதை எழுதி சந்தானபாரதியின் பெயரில்
இயக்கிய இப்படம் காலம் கடந்து நிற்கும் தகுதி பெற்ற அவரது ஒரே படைப்பு. ஒரு தனிமனிதனை
ஒரு சமூகம் எப்படி ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கிறது என்பதை கசப்பையும் வலியையும் மறைக்காமல்
ஒரு பிரம்மாண்ட சித்திரமாக தந்த படம். நாயகன் கிருஷ்ணசாமி தன் சொத்து, பணம், குடும்பம்,
சுதந்திரம் இவை அத்தனையையும் வெறுமனே தன் அப்பாவித்தனத்தால் மட்டும் இழப்பதில்லை. ஒரு
கட்டத்தில் அத்தனையும் அவன் கைமீறிப் போகிறது. அவனது பெண் விபச்சாரி ஆக்கப்படுகிறாள்.
மகன் தெருக்கூத்தாடி ஆகிறான். சிறையில் இருந்து திரும்பின நாயகன் கேட்பது “நான் என்ன
பாவம் செய்தேன்?” என்று. வாழ்வின் தீமை மனசாட்சியற்றவரின் ரூபத்தில் வந்து நம்மை சுழற்றி
அடிக்கக் கூடியது என அவனுக்கு புரிகிறது. இங்கு மனசாட்சி, அறம் ஆகியவற்றுக்கு கோமாளியின்
உலர்த்தப்படும் ஆடையைப் போலாகின்றன. தன் வாழ்வை மீட்டெடுக்க கிருஷ்ணசாமி மேற்கொள்ளும்
முயற்சிகள் நமது அடிப்படை வாழ்வியல் நம்பிக்கைகளை உலுக்க வைப்பது: குறிப்பாக கொல்கத்தா
விபச்சார வீதியில் அவன் போராடி மகளை மீட்டு வருவது, வந்த பிறகும் அப்பெண் தன்னை யாரோ
வன்புணர்வதாக எண்ணி சலிப்பில் “எத்தனை பேர் தாண்டா வருவீங்க” என துக்கத்தில் பேசுவது
ஆகிய காட்சிகள் நம்மால் ஒருக்காலும் மறக்க முடியாதவை.
கமலின் பெண் குழந்தைக்கு
காவேரி என்றும், காதலிக்கு யமுனா என்றும் பெயருள்ளது உருவகங்கள் தாம். பாவங்களை கரைக்கும்
நதியில் பயணித்து மகளை மீட்டுக்குக் கொண்டு வரும் நாயகன் காவேரியாகிய அவளாலும் யமுனாவாலும்
தான் தொடர்ந்து வாழ்வதற்கான நோக்கத்தையும் அர்த்தத்தையும் அடைகிறான். நதியில் மூழ்குவது
எனும் சடங்கு ஒரு புறம் நாம் எவ்வளவு தான் துரோகிக்கப்பட்டு சீரழிந்தாலும் இந்த பூமியில்
நமக்கென்று ஒரு அடைக்கலாம் எங்காவது இருக்கத் தான் செய்கிறது, எல்லாம் இழந்து விட்ட
பின்னரும் யாரும் எல்லாவற்றையும் இழந்து விடுவதில்லை என்கிறது. இந்த தீமையின் காலத்தில்
களங்கப்பட்ட கங்கையிலும் காவேரியிலும் தாம் ஒரு நவீன மனிதன் தன் குற்றங்களுக்கு மோட்சம்
தேட வேண்டும் என்கிறது “மகாநதி”. இப்படத்தில் நதி பற்றின காட்சிகள் முக்கியமானவை.
சுப்பிரமணியபுரம்:
சுப்பிரமணியபுரத்தைப் போல தமிழில் வேறெந்தப்
படமும் காதலன் காதலியால் காட்டிக் கொடுக்கப் பட்டு கொல்லப்படுவதை அதற்கான நியாயத்துடன்,
நம்பத்தகுந்த காரணத்துடன் பேசியதில்லை. அன்பு, விசுவாசம் ஆகியவைக்கு இன்னொரு கூர் முனை
உள்ளது: துரோகம். மிக மிக அணுக்கமானவர்கள் தாம் துரோகிக்கிறார்கள். சசிகுமாரின் “சுந்தரபாண்டியனிலும்”
உற்ற நண்பர்கள் தான் நாயகனை வஞ்சித்து கொல்ல முயல்கிறார்கள், அதுவும் காரணமற்ற காரணத்துக்காக.
அன்பு மிகும் போது அது எளிதில் வெறுப்பாகிறது. அன்பில் துளி விஷம் கலக்க ஒரு சின்ன
சந்தர்ப்பம், போதாமை உணர்வு, அச்சம் போதும்.
ஒரு உண்மைக் காதலியால்
துரோகம் பண்ண இயலுமா? “சுப்பிரமணியபுரம்” இதற்கு ஒரு பதில் தருகிறது. பெரும்பாலான பெண்கள்
குடும்பம் தரும் ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இப்படத்தின் நாயகி
நாயகனை உண்மையாகத் தான் காதலிக்கிறாள். ஆனால் குடும்பத்தின் பாதுகாப்பா காதலனின் உயிரா
எனும் தேர்வு வரும் போது அவள் சட்டென்று குடும்பத்தை தான் தேர்ந்தெடுக்கிறாள். பெண்களுக்கு
உயிரியல்ரீதியாகவே பாதுகாப்பு மிக முக்கியம். அத்தருணத்தில் அவளால் அப்படித் தான் செயல்பட
முடியும். ஒருவேளை தன் காதலனை மணந்து குடும்பமாகி ஸ்திரப்பட்ட பின் இப்படியான சிக்கல்
தோன்றியிருந்தால் வேறு முடிவெடுத்திருப்பாள். தன் கண்முன்னாடி காதலன் கூட்டமாக வெட்டிக்
கொல்லப்படுவதை பார்த்து அவள் அரற்றி அழும் காட்சி நம்மை மிகவும் தொந்தரவு செய்யக் கூடியது.
வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் நியாயத்தை மறந்து நடைமுறை தேவைக்காக ஒரு முடிவெடுக்க நேர்கிறது.
அது தான் துரோகம் என்கிறது “சுப்பிரமணியபுரம்”. துரோகிகள் மற்றபடி கெட்டவர்கள் அல்ல.
நம்மைப் போல் நல்லவராய் இருப்பதற்காக வசதியான சூழல் அவர்களுக்கு இருப்பதில்லை, அவ்வளவு
தான்.
காதல் என்பது தற்காலிகமான
மற்றொரு நினைவு மட்டும் தான் எனக் கூறிய “மூன்றாம் பிறை”, காதலின் துரோகத்தை பகடி பண்ணுகிற
“அட்டைக்கத்தி” இரண்டையும் கூட குறிப்பிட வேண்டும். “அட்டைக்கத்தியில்” நாயகனுக்கு
தன் காதலில் தோற்றபின்னரும் சரி வஞ்சிக்கப்பட்ட பின்னரும் சரி வருத்தமே வருவதில்லை.
தனக்கு வருத்தம் வரவில்லையே என எண்ணி அவன் வருந்தி புலம்புகிற காட்சிகள் பின்நவீனத்துவ
பண்பு கொண்டவை.
தமிழர்கள் எளிதில்
உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பதால் துரோகத்தை எளிதில் மன்னிப்பதில்லை; அதேவேளை துரோகத்தை
கண்டுகொள்ளும் கராறான அணுகுமுறையும் நம்மிடம் இல்லை. மலையாள ஆளுமையில் சந்தர்ப்பவாதம்
ஒரு முக்கிய பகுதி. ஆக, சதா ஒருவரை ஒருவர் சந்தேகிக்கும், பரஸ்பர துரோகங்களில் திளைக்கும்
மலையாளிகளின் படங்களில் துரோகம் உளவியல்பூர்வமாக மிக ஆழமான முறையில் அணுகப்பட்டுள்ளது
எதேச்சையானது அல்ல. லோகிததாஸின் “சக்கரம்”, எம்.டி வாசுதேவன் நாயர் எழுதின “சுகிர்தம்”,
”பரதம்”, பத்மராஜனின் “தேசாடன் கிளி கரயாறில்லா” மற்றும் “ஓரிடத்து ஒரு பயில்வான்”,
பிளஸ்ஸியின் “கல்கத்தா நியூஸ்” போன்ற முக்கிய மலையாள படங்களை இங்கு குறிப்பிடலாம்.
சிறந்த துரோகப்படங்களை எடுக்க தமிழர்கள் ஒருவேளை இன்னும் கொஞ்சம் கெட்டவர்களாக மாற
வேண்டுமோ என பாதி வேடிக்கையுடன் கேட்கலாம்.


