கடந்த முறை உடல்நலமில்லாமல்
போன போது மருத்துவமனை செலவு லட்சங்களைத் தொட்டதால் இவ்வருடம் ஒரு உடல்நலக் காப்பீடு
எடுக்கலாம் என எல்.ஐ.சியை அணுகினேன். முப்பது வயதைத் தொட்டுள்ளதால் (நெஞ்சு எக்ஸ்ரே!
உள்ளிட்ட) பல பரிசோதனைகளை பண்ணிக் கொள்ள வேண்டும் என்றார்கள். பொறுமையாக ஒவ்வொன்றாக
முடித்து அத்தனை ஆவணங்களும் பணமும் செலுத்திய பின்னும் காப்பீடு அட்டை தாமதமாகி வந்தது.
ஒருநாள் முகவர் போனில் அழைத்து நீங்கள் வருடம் கூடுதலாக 12,000 செலுத்த வேண்டும் என்றார்கள்.
விசாரித்ததில் அவர் ஒரு விநோதமான காரணம் சொன்னார். எனக்கு கால் ஊனம் என்பதால் கூடுதல்
பிரீமியம் தொகை கட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது என்றார். எனக்கு இதன் பின்னுள்ள
தர்க்கமே புரியவில்லை.
நாளை எனக்கு வயிற்றுப்போக்கோ
காய்ச்சலோ வந்து அட்மிட் ஆனால் அதற்கும் என் கால் ஊனத்துக்கும் என்ன தொடர்பு இருக்கப்
போகிறது? கால் ஊனம் இல்லாதவர்களுக்கு இந்த நோயெல்லாம் வராதா? நான் ஆஸ்பத்திரியில் சேர்வதற்கு
உள்ள எல்லா சாத்தியக்கூறுகளும் ஊனமில்லாத பிறர்க்கும் உரித்தானதே! நான் முகவரிடம் காப்பீட்டை
திரும்பப் பெற்றுக் கொள்வதாய் கூறினேன். மூன்று காரணங்கள்.
ஒன்று இந்த விதிமுறை
அதர்க்கமாக உள்ளது. இதை எந்த படிப்பறிவுள்ள சுயசிந்தனை உள்ள மனிதனாலும் ஏற்றுக் கொள்ள
முடியாது. இது மிக ஆபத்தான தர்க்கமும் கூட. நாளை சேரியில் வசிக்கும் அல்லது குறைவான
பொருளாதார நிலையில் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்டவர் அவரது உடல்நலத்துக்கு சீர்கேடு வர
சாத்தியம் என்பதால் கூடுதல் கட்டணம் தேவை என்று கேட்கலாம். அதைப் போன்றே ஐடி போன்று
அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் வேலையில் இருப்பவர்களுக்கு மாரடைப்பு ரத்த அழுத்தம்
மற்றும் நீரழிவு வர சாத்தியம் அதிகம் என்று அவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்கலாம்.
என்னவொரு அபத்தம்!
இரண்டு, இது அநியாயமாக
உள்ளது. சம்மந்தமில்லாத ஒரு உடல் பிரச்சனைக்காக நான் 12,000 அதிகம் செலுத்த நிர்பந்திப்பது
ஒருவித மறைமுகக் கொள்ளை.
மூன்றாவதாக, இப்படி
ஊனக் கட்டணம் வசூலிப்பதன் வழியாக அரசாங்கம் என்னைச் சிறுமைப்படுத்தவும் உடற் குறைபாட்டை
என் அடையாளமாக ஸ்தாபிக்கவும் முயல்கிறது. நான் என்பவன் இந்த கால் ஊனத்தினால் ஆனவன்
அல்ல. அது எனக்கு தெளிவாகவே தெரியும். சொல்லப்போனால் இந்த சமூகத்தில் உள்ள 1% நுண்ணுணர்வுள்ள
படைப்பூக்கமும் அறிவும் கொண்ட மனிதர்களில் நானும் ஒருவன். என்னை இந்த பண்புகளால் அடையாளப்படுத்தவே
விரும்புவேன். அது தான் உண்மையும். அதில் நான் பெருமையும் அடைகிறேன். அதனால் தான் நிச்சயமாக
கூடுதல் பணத்தை செலுத்த முடியாது என மறுத்து விட்டேன். இது பணம் சம்மந்தமான பிரச்சனை
அல்ல; என் கொள்கைப் பிரச்சனை. நான் என் நம்பிக்கைகளின் படி நிற்கிறேன்.
கார்கில் நிதி,
பூகம்ப நிதி போன்ற ஏதாவது ஒரு நிதிக்காக அரசாங்கம் என்னிடம் மாதம் 12,000 கேட்கட்டும்.
கொடுத்து விட்டுப் போகிறேன். ஆனால் என் காலை முன்னிட்டு ஐந்து காசு கூட தர மாட்டேன்.
நான் ஒரு எழுத்தாளனாகவும் பேராசிரியனாகவும் இரட்டிப்பு வேலை செய்கிறவன். தினமும் நான்
எழுதுவதற்கு இந்த சமூகம் எனக்கு காலணா கூட தந்ததில்லை. சொல்லப்போனால் இந்த சமூகம் தான்
எனக்கு பணம் தர வேண்டும்; நான் சமூகத்துக்கு அல்ல.
இப்படியான அபத்த
சட்டங்களை இயற்றி வலியுறுத்துபவர்கள் எந்த வித பண்பாட்டு நடைமுறை சமூக அறிவோ அற்ற அரசு
அதிகாரிகள் என அறிவேன். இந்தியா போன்று அறிவியல் அறிவு வெறும் வேலைக்கான உபகரணமாக பயன்படுத்தப்படும்
ஒரு நாட்டில் இதற்கு மேல் மக்கள் தர்க்கரீதியாக சிந்திப்பார்கள் என எதிர்பார்க்கவும்
முடியாது. நாம் மனிதர்களாகப் பண்பட இன்னும் சில நூறு வருடங்கள் ஆகும் என்பதையே இது
காட்டுகிறது. ஏனென்று சொல்கிறேன்.
அமெரிக்காவில்
உள்ள நலக் காப்பீட்டு விதிகள் ஒருவருக்கு நீரிழிவு, மாரடைப்பு போன்ற வியாதிகள் இருந்தால்
கூட ஏற்றுக் கொண்டு பொருளாதார பாதுகாப்பு தரும். இந்தியாவில் எந்த நோயோ குறைபாடோ இல்லாதவர்களுக்கு
மட்டும் தான் காப்பீடு. அவர்களுக்கு எதற்கு காப்பீடு என்கிறேன். அமெரிக்காவில் இந்த
முற்போக்கான காப்பீட்டை கொண்டு வந்த ஒபாமாவை பாராட்டும் படியாக Obama Care என்று இதை
சிலாகித்த மக்கள் அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கினார்கள். நம்மூர் மக்களுக்கு அரசியல்வாதிகளிடம்
இருந்து என்ன தேவை என்கிற தெளிவே இல்லை. தேர்தலுக்கு முந்தின சில மாதங்களில் அவர்களின்
மனநிலை விலைவாசி நிலையை பொறுத்து எப்படி அமைகிறதோ அதுவும், சாதி மத ஓட்டுக்களின் விகிதமும்
மாநில-தேசியக் கட்சிகளின் பணப் பேரங்களின் வீச்சும் வெற்றியை தீர்மானிக்கின்றன. முக்கியமாக,
அமெரிக்காவில் சிரமப்படும் பிற்படுத்தப்படும் மக்களின் நலனை முன்னோக்கி சட்டங்கள் இயற்றப்படுவதை
கவனியுங்கள். நம்மூரில் என்றால் ஒருவன் சிரமப்படுகிறான் என்றால் அது அவன் விதி; போன
ஜன்மத்தில் பாவம் பண்ணியிருப்பான். அதனால் நலமாக இருப்பவர்களை மட்டும் கவனிப்போம் என்றே
சிந்திப்பார்கள். இதைத் தான் பண்படாத காட்டுமிராண்டி மனநிலை என்கிறேன்.
உலகில் உள்ள ஒவ்வொரு
இனத்துக்கும் கடவுள் ஒரு உடல் தோற்ற அடையாளத்தை கொடுத்திருக்கிறான். சிலருக்கு சப்பை
மூக்கு, சிலர் அட்டைக்கறுப்பு என. இந்தியர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு வாலைக் கொடுத்திருந்தால்
பொருத்தமாக இருந்திருக்கும். நமக்கு அது மட்டும் தான் இப்போதைக்கு ஒரே குறை.
