Skip to main content

உடல் எடை, நீரிழிவு தொன்மங்களும் உலக அழிவு பிரச்சாரமும்



நவம்பர் 14ஆம் உலக நீரிழிவு தினம். நீங்கள் இதைப் படிக்கும் போது உ-நீ-தினத்தை ஒட்டி நிறைய உடல்நலக் கட்டுரைகளை படித்திருப்பீர்கள். மீடியா ஒரு சடங்கைப் போல இந்தியா ஒரு நீரிழிவு நாடாக மாறி வருவதைப் பற்றி கண்ணை உருட்டி மிரட்டியிருக்கும். மருத்துவர்களும் தாம் படித்ததை வைத்து அச்சு பிசகாமல் உடலுழைப்பின்மை, அதிகமாக டி.வி பார்த்தல், துரித உணவு ஆகிய நவீன வாழ்க்கை நோய்க் காரணிகளை பட்டியலிட்டு அனைவரும் அரைமணிநேரம் நடைபழகி, காய்கறிகள் உண்டு எடையை குறைத்தால் நீரிழிவில் இருந்து தப்பலாம் என்றொரு பாராயணத்தை முடித்திருப்பார்கள்.
இந்த மீடியா பிரசங்கத்தில் ஒரு பிரச்சனை எளிமைப்படுத்தலும் நடைமுறையில் இருந்து விலகின தன்மையும். இன்னும் ஒரு முக்கிய விசயம் மெட்டொபொலிக் நோய்கள் எனப்படும் உணவு ஆற்றலாக மாற்றப்படுதலில் உள்ள கோளாறுகளை முன்னிட்டு ஊடகங்களும் மருத்துவத் துறையும் சேர்ந்து எளிய மனிதர்களை தொடர்ந்து குற்றவாளிகாக சித்தரித்தல். இதைக் குறித்தெல்லாம் நாம் விரிவாக பேசலாம்.
 நீரிழிவு, ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, ரத்தக்கொழுப்பு, பருமன் போன்ற மெட்டொபொலிக் நோய்களின் பட்சத்தில் பெரும்பான்மையான ஆரோக்கிய பராமரிப்பு பொறுப்பு நோயாளிகளிடம் தான் இருக்கிறது. பொறுப்பு எப்போதுமே பெரும் தனிமனித நெருக்கடியை ஏற்படுத்தும். அதனாலே இத்தகைய நோயாளிகள் பிறரை போலல்லாது சதா குற்றவுணர்வுடன் நெருக்கடியுடன் திரிகிறார்கள். கூடுதலாக, அவர்களுக்கு நம் சமூகம், பண்பாடு மற்றும் சூழலில் (குடும்பம், அலுவலகம், மற்றும் சுற்றுப்புற) இருந்து எந்த ஆதரவும் கிடைப்பதில்லை. மாறாக விசுவாமித்திரனுக்கு நேர்ந்ததும் போல தொடர்ந்து அவர்களின் நோய் நிலைமை மேலும் சீரழிக்கும் படியே நமது பண்பாடும் சூழலும் செயல்படுகின்றன.
பொதுவாக நீரிழிவாளர்கள் குறைவான கொழுப்பு, மாவுச் சத்துக்கள் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும் என மருத்துவ அறிக்கைகள் திரும்பத் திரும்ப சொல்லுகின்றன. இவை மேற்கத்திய சூழலின் அடிப்படையில் உருவான நம்பிக்கைகள். மேற்கில் கடந்த ஐம்பது வருடங்களாக துரித உணவுக் கலாச்சாரத்துக்கு இணையான வலுவான பத்திய உணவுக் (diet food) கலாச்சாரமும் உள்ளது. அங்கு அதிகமாக காய்கறிகளை பச்சையாக புசித்தல், செயற்கை இனிப்புகளை பயன்படுத்துதல், முடிந்தவரை உணவை பொரிக்காமல் கிரில்லிங் முறையில் சுட்டு தின்பது ஒரு நவீன மோஸ்தராக, உயர்வர்க்க பண்பாட்டு அடையாளமாக உள்ளது. மேலும் பெண்கள் உடலை ஒல்லியாக வைத்திருப்பதற்காக சாப்பிட்டு வேண்டுமென்றே தொண்டைக்குள் விரல்விட்டு வாந்தியெடுக்கும் பழக்கம் ஒரு உளவியல் கோளாறாக தோன்றி சீரழியும் அளவுக்கு உடல் தோற்ற பிரக்ஞை வலுவாக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஆரோக்கியமாக இருப்பதென்றால் பருமனாக இருப்பது என்ற நம்பிக்கை மக்களின் உளவியலில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
எங்களூரில் பெண்கள் வயதுக்கு வந்ததும் அவர்களுக்கு தொடர்ச்சியாக பாலில் முட்டையடித்து கொடுத்து குண்டாக வைப்பார்கள். குண்டான பெண்கள் தான் தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் குறியீடுகளாக இருந்து வருகிறார்கள். கேரளாவில் ஆண்கள் தொப்பை வைத்திருப்பது கலாச்சார மனதின் ஒரு பகுதியாகவே உள்ளது. அவர்களின் பண்பாட்டு உடையான வேட்டி சட்டைக்கு கொஞ்சம் தொப்பை இருந்தால் எடுப்பாகவும் உள்ளது. கேரளப் பெண்கள் பற்றி பொதுவாக தமிழில் உள்ள அந்த கமெண்டை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஆக நாம் பருமனை கொண்டாடும் ஒரு சமூகம். அதற்கு பல்லாயிரம் வருடங்களாக நாம் தொடர்ந்து சந்தித்து வந்துள்ள உணவுப் பஞ்சங்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
 உணவுப்பஞ்சத்தை தொடர்ந்து நேரிடும் ஒரு சமூகத்தில் மக்களின் உடலில் இயல்பாகவே உணவை ஆற்றலாக செரிக்கும் ஆற்றல் குறைகிறது. கொழுப்பை அதன் வழி சேமிப்பது தேவையாகிறது. மேலும் குறைவாக உணவுள்ள சூழலில் மக்கள் ஆற்றல் குறைவால் மயங்கி விழாதிருக்கும் பொருட்டு உடல் இயல்பாகவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகமாக்கி வைக்கிறது. விளைவாக மரபியல் ரீதியாக இந்தியர்கள் உடலில் கொழுப்பும் ரத்த சக்கரையும் அதிகமாகவே உள்ளது. நாம் நமது வரலாற்றின், அதில் உள்ள விபத்துகளின் சந்ததிகள். நம் குருதியில் இன்றும் பசியால் தவித்த ஒரு சமூக மக்களின் அழுகுரல் உள்ளது. நமது மரபணுக்கள் நம்மை மற்றொரு பஞ்சத்தில் இருந்து நம்மை காப்பாற்றும் பொருட்டு கொழுப்பை சேகரித்தபடியும் ரத்தசக்கரையை அதிகப்படுத்தியபடியும் உள்ளது.
இப்படியான வரலாறு மற்றும் பண்பாட்டில் வரும் மக்களிடம் வந்து திடீரென குறைந்த கொழுப்பு சக்கரை உள்ள உணவை உட்கொள்ளுங்கள், உடலை ஒல்லியாக வைத்திருங்கள் என வலியுறுத்துவது அபத்தமானது. நம் மக்களோ பண்பாடோ அதற்கு தயாராக இல்லை.
என் நண்பரின் வீட்டுக்கு தீபாவளிக்கு சென்றிருந்தேன். அவர் பல வருடங்களாக நீரிழிவுக்கு மருந்துண்டு வருகிறார். அவரது மனைவி மிக சாதாரணமாக ஒரு தட்டில் அதிரசங்களை கொண்டு வந்து நீட்டினார். அவரும் அசட்டையாக அவற்றை நொறுக்கி தின்னத் துவக்கினார். அவரது மனைவிக்கு அவருக்கு அதிரசம் ஆகாது எனத் தெரியாதா? தெரியும். ஆனால் தீபாவளிப் பண்டிகைக்கு இனிப்புண்ணுவது நம் பண்பாட்டில் நீண்ட காலமாக உள்ள ஒரு சமாச்சாரம். இதெல்லாம் அதிக சிந்தனை பரிசீலனை இன்றி இயல்பாகவே நிகழும் ஒன்று. பத்திய உணவை உட்கொள்ளும் ஒருவர் நமது அத்தனை பண்பாட்டு சடங்குகளையும் நிராகரிக்க வேண்டும். அவர் ஒரு அலுவகலத்தில் வேலை பார்க்கக் கூடும். மாலையில் நண்பர்களுடன் கேண்டீனில் சாப்பிடும் போது அவர் தன் நண்பர் வட்டத்தில் இயல்பாக இணைந்திருக்க வேண்டும் என்றால் சமோசாவும் பஜ்ஜியும் தான் தின்றாக வேண்டும். ஒன்றும் வேண்டாம் என்று வாயைப் பிளந்து கொண்டிருந்தாலோ ஒரு டப்பாவில் சாலட்டோ பட்டாணியோ கொண்டு வந்து மென்றாலோ அவர் மிக இயல்பாக தன் அலுவலக குழுக்களில் இருந்து தனிமைப்பட்டுப் போவார். மற்றொரு பிரச்சனை நமது உணவுப் பண்பாட்டில் பொரித்த இனிப்பில் ஊறின பண்டங்கள் தாம் அதிகம் என்பது. சீனப் பண்பாட்டில் கூட வேக வைத்த உணவுப் பண்டங்கள் அதிகம் உள்ளன. ஆனால் இங்கே பத்தியம் இருக்கும் ஒரு இந்தியனுக்கு கொழுப்பு மற்றும் மாவுச்சத்து மிக்க உணவுகள் தான் பிரதானமாய் கிடைக்கின்றன. உணவுப்பழக்கத்தை திருத்தும்படி அறிவுறுத்தும் மீடியாவும் மருத்துவ நிபுணர்களும் அது ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே நம் பண்பாட்டில் இருந்து திருப்ப வலியுறுத்தும் செயலாகும் என அறிவதில்லை.
பெரும்பாலான வீடுகளில் ஒருவருக்கு நீரிழிவு என்றால் ஒட்டுமொத்த குடும்பமும் அதற்கான தியாகங்களை பண்ண வேண்டி இருக்கும். பாரம்பரிய உணவுகளில் பலவற்றை சாப்பிட முடியாது. இதனால் ஒன்றில் பிற குடும்ப அங்கத்தினரும் சேர்த்து தம் உணவு பழக்கத்தை மாற்ற நேரிடும்  அல்லது ஒருவர் மட்டும் உணவு மேஜையில் தனிமைப்படுத்த நேரிடலாம். உதாரணமாக குழந்தைகள் பூரியும் கிழங்கும் உண்ண விரும்பலாம். ஆனால் ஒரு சகோதரன் அப்பா அல்லது அம்மாவுக்கு ரத்த சக்கரையோ கொழுப்போ இருந்தால் இப்படியான உணவுகளை பரிமாறுவதில் குடும்பத்துக்கு தயக்கங்கள் ஏற்படும். பல சமயங்களில் நோயாளி அங்கத்தினர் அடுத்தவர்களுக்கு ஏன் சிரமம் என்றோ அல்லது தமது சுயபச்சாதாபம் காரணமாகவோ ஒவ்வாத உணவை உட்கொள்ள முன்வருவர். பல குடும்பங்களில் நீரிழிவு வந்த அப்பா அல்லது அம்மாவால் தமக்கு பல இடையூறுகள் வருவதாக குழந்தைகள் தொடர்ந்து புகார் கூறி குற்றம் சுமத்துவதை கண்டிருக்கிறேன்.
இன்னொரு பக்கம் நீரிழிவு உற்றவர்கள் குறைவாக உண்ண வேண்டியதை அவர்களுக்கு சமைத்து பரிமாறுபவர்கள் எதிர்ப்பதும் நிகழும். பல மனைவிகள் தாம் சுவையாக சமைத்த உணவை ஏன் கணவன் குறைவாக சாப்பிடுகிறான் என கசப்புறுவார்கள். அவர்கள் இரண்டு தோசைக்கு பதில் நான்கு சாப்பிடுங்கள் என்று வலியுறுத்தி ரத்த சக்கரையை எகிற வைப்பார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. அன்புத்தொல்லையும் அல்ல. அவர்களின் ஆழ்மனதில் ஆரோக்கிய உணவருந்தல் என்றால் தட்டு நிறை வைத்து புசிப்பது தான்.
நீரிழிவு போன்ற நோய்கள் மனிதனின் உள்ளுணர்வுக்கு நேர்மாறாக மூளையை மட்டுமே ஆலோசித்து சாப்பிட வேண்டிய நிலையை ஏற்படுத்துகின்றன. மனிதன் அடிப்படையில் இனிப்பான கொழுப்பு மிகுந்த உணவைத் தான் விரும்புகிறான். நார்ச்சத்து மிகுந்த தாவர உணவு அவனுக்கு விருப்பத்தையோ நிறைவையோ தருவதில்லை. இது பழக்கம் சார்ந்த உணர்வல்ல. இது நம் உயிரியல் இயல்பு. ஏனென்றால் இனிப்பான உணவு உடனடியாக நமக்கு அபரிதமான ஆற்றலை வழங்கும். கொழுப்பு நம் அணுக்களின் கட்டுமானத்துக்கு அவசியம். நீரிழிவின் போது மூளைக்கும் உள்ளுணர்வுக்கு இடையே ஒரு தொடர் போராட்டமே நிகழ்கிறது. உடல் தருகின்ற சமிக்ஞைகளை ஒருவன் உதாசீனித்தபடியே இருக்க நேர்கிறது. ஆனால் இது எப்போதும் சாத்தியம் அல்ல. ஒரு உதாரணம் தருகிறேன்.
ஒரு டீக்கடையில் ஒரு முதியவர் வந்து சக்கரை கம்மியாய் டீ கேட்டார். பொதுவாக பாதி சக்கரை கூட நீரிழிவுக்கு நல்லதல்ல. ஆனால் நம் மக்கள் சக்கரை இல்லாமல் சாப்பிடுவதில்லை. அவர் டீ குடித்தபடி தன் நண்பரிடம் தனக்கு அன்று ரத்த சக்கரை அளவு குறைந்து மயக்கம் ஏற்பட்ட அனுபவத்தை விவரித்துக் கொண்டிருந்தார். அவர் மதியம் அன்று உணவருந்தவில்லை. வேலை விசயமாய் சில தெரிந்தவர்கள் வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. அவர்கள் உணவருந்த கேட்டனர். ஆனால் இவர் கௌரவத்துக்காக மறுத்து விட்டார். வெளியே வந்ததும் மயக்கம் அதிகமாக ஒரு பெட்டிக்கடைக்கு சென்று ஒரு பாக்கெட் பிஸ்கட் வாங்கி முழுவதும் தின்று விட்டதாக கூறினார். உண்மையில் அவர் சகஜ நிலைக்கு திரும்ப ரெண்டு ஸ்பூன் சர்க்கரையை முழுங்கினால் போதும். அவர் ஏன் ஒரு பாக்கெட் பிஸ்கட் முழுதையும் தின்கிறார்? ஏன் என்றால் உடல் சர்க்கரை முழுக்க வற்றின நிலையில் பெரும் போதாமை உணர்வை அவருக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும். நான்கு நாள் முழுப்பட்டினியில் கிடந்தது போன்ற உணர்வு அவருக்கு ஏற்படும். இனிப்பான கலோரி மிகுந்த உணவால் வயிற்றை நிரப்ப வேண்டும் எனும் கட்டுப்படுத்த முடியாத ஆவேசம் அவருக்கு ஏற்படும். ஆனால் ஒரு பாக்கெட் பிஸ்கட் 500-800 கலோரியாவது இருக்கும். மேலும் அதிலுள்ள நேரடி சர்க்கரை உடனடியாக அவரது ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். விளைவாக குறை ரத்த சர்க்கரையால் தவித்த நபர் சில நிமிடங்களில் உயர் ரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட துவங்குவார். அவர் இதை நண்பரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரது ரத்தசர்க்கரை அளவு நிச்சயம் 250-3002க்கு மேல் உயர்ந்திருக்கும். ஆனால் இதன் அறிகுறிகளை அவர் எளிதில் அறிய மாட்டார். உயர் ரத்தசர்க்கரை மெதுவான சத்தமில்லாமல் ஏறும் விஷம். அவர் மருத்துவரிடம் போகிறார் என்றால் மருத்துவர் அவருக்கு உணவுக்கட்டுப்பாடு இல்லை என்று கண்டிப்பார். அவருக்கு குற்றவுணர்வு ஏற்படுத்துவார். நீரிழிவாளனின் உணவு வாழ்வில் உள்ள சிக்கல்கள் குழப்பங்களில் பல மருத்துவர்கள் அக்கறை காட்டுவதில்லை. அல்லது அவர்கள் இச்சிக்கல்களை அறிவதில்லை. அநேகமான மருத்துவர்கள் இந்த நோய்களுக்கு வெளியே இருந்து கருத்தியல் பூர்வமாக மட்டும் இவற்றை அணுகுபவர்கள். அவர்கள் எப்போதுமே எளிமைப்படுத்துவார்கள். குறைவான கலோரி உணவு, அரைமணி நடைபயிற்சி இருந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று. ஆனால் இது எளிதில் சாத்தியமா?
நீங்கள் ஒரு அலுவலக ரீதியான கூட்டத்தில் இருக்கிறீர்கள். எல்லோருக்கும் தேநீரும் கொறிப்பதற்கான உணவும் தருகிறார்கள். இந்தியாவில் இன்னும் போதுமான விழிப்புணர்வு இல்லாததால் சர்க்கரை கலந்த தேநீர் மட்டுமே கிடைக்கும். உணவும் இனிப்பும் கொழுப்பும் மிகுந்ததாக இருக்கும். நீங்கள் என்ன செய்வீர்கள்? கையில் சுண்டலும் மோரும் எடுத்துப் போய் கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து சாப்பிடுவீர்களா அல்லது பசிக்கவில்லை என்று பொய்யாக மறுப்பீர்களா? விருந்தினராக ஏதாவது வீட்டுக்கு போனாலும் இதே சிக்கல் தான் எழும். அங்கு உங்களுக்கு என்று தனியாக தயாரிக்கப்பட்ட உணவை கோர முடியாது. இன்னொரு பக்கம் இன்று மட்டும் கொஞ்சம் இனிப்பு சாப்பிட்டால் ஒன்றும் செய்யாது என்று விருந்தோம்பல் பொருட்டு அவர்கள் வலியுறுத்தியபடியே இருப்பார்கள். ஆனால் ஒரு துண்டு இனிப்பை சாப்பிட்டால் உங்கள் ரத்த சக்கரை அளவு ஒரு வாரத்துக்கு அதிகமாகவே இருக்கும் என அவர்கள் அறிவதில்லை. இந்தியாவில் நன்கு படித்த மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு இருப்பதில்லை. அதை விட முக்கியமாக உணவருந்தல் என்பது ஒரு சமூகமாக்கல் நடவடிக்கை. நம் சமூகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்க மனிதர்களும் மிருகங்களும் உணவையும் செக்ஸையும் பகிர்ந்து தான் நட்புவலையை விரிவாக்குகின்றனர். பரஸ்பர அக்கறையை காட்டுகின்றனர். திடீரென்று தனி உணவுப்பழக்கத்துக்கு போகும் நீங்கள் ஒரு சமூகத்தில் இருந்து முழுக்க வெளியேற்றப்படுகிறீர்கள். இதே காரணத்தினால் தான் மருத்துவர்களும் மீடியாவும் என்னதான் வலியுறுத்தினாலும் நம்மூரில் நீரிழிவாளர்கள் தம் உணவில் தொடர்ந்து சமரசம் செய்து கொண்டே வருகிறார்கள். குறிப்பாக 30இல் இருந்து 50 வயதுக்கு உட்பட்டு சமூக வாழ்வில் முழுமையாக ஈடுபட்டு வருபவர்கள். கவனித்தீர்கள் என்றால் நீரிழிவுக்கு ஏற்ற பத்திய உணவை துல்லியமாக பின்பற்றுவர்கள் ஓய்வுற்ற முதியவர்கள் எனக் காணலாம். அவர்களின் பலவீனமான உடல்நிலை சமரசங்களை அனுமதிப்பதில்லை என்பது ஒரு காரணம். அதை விட முக்கியமாக ஓய்வுக்கு பின் அவர்கள் சமூகம் மற்றும் குடும்ப அமைப்பில் இருந்து இயல்பாகவே வெளியேறி தனிமைப்படுகிறார்கள். வீட்டுக்குள் முடங்குபவர்களுக்கு தான் பத்திய உணவை பின்பற்றுவது எளிதாகிறது. பொதுவாக நீரிழிவு ரத்தக்கொழுப்பு எல்லாமே முதுமையின் நோய்கள் தாம். துரதிஷ்டவசமாக கடந்த நூற்றாண்டில் இவை இளைஞர்களின் நோயாகி விட்டதால் மனித குலம் இளமைக்காலத்தில் முதியவர்களின் சமூக வாழ்க்கையை எப்படி வாழ்வது என புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறது.

அடுத்து நாம் இன்னொரு கேள்வியை கேட்க வேண்டும். உணவு, அதனால் ஏற்படும் உடல்பருமன், இதைக் குறைக்க உடற்பயிற்சி எனும் இந்த ஆலோசனை எந்த அளவுக்கு பயன்படும் என்று. முதலில் மனிதர்கள் பருமனாய் இருப்பதற்கும் அவர்களின் உணவுப்பழக்கத்திற்கும் அதிக சம்மந்தம் இல்லை என்பது புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு தொன்மம் மட்டுமே. நடைமுறையிலே நமக்கு ஏகப்பட்ட உதாரணங்கள் கிடைக்கும். குண்டாயிருக்கிற பலர் ”நான் ரொம்ப கம்மியாய் தான் சாப்பிடுகிறேன்” என்று லேசாய் குற்றவுணர்வு தொனிக்க கூறுவதைக் கேட்டு நக்கலாய் அதற்கு புன்னகை புரிந்திருப்போம். நம் சந்தேகம் எளிது. கம்மியாய் சாப்பிட்டால் எப்படி உடம்பு இவ்வளவு பெரிதாகும். ஆக சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள், சோம்பேறிகள், ஒழுக்கம் இல்லதவர்கள் தாம் பருமனாக இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருகிறோம்.

கிராமப்புறங்களுக்கு போய் பாருங்கள். எத்தனையோ பேர் வாழ்நாள் முழுக்க குண்டாக இருப்பதான பிரக்ஞை இல்லாமலே வாழ்ந்து மறைந்திருப்பார்கள். அவர்களிடம் யாரும் போய் ஏன் குண்டாக இருக்கிறாய் என்று விசாரிப்பதில்லை. நேர்மாறாக அங்கு ஒல்லியாய் இருப்பவர்கள் பார்த்தால் தான் “ஏன் சவலையாய் இருக்கிறாய்” என வருத்தத்தோடு விசாரிப்பார்கள். தனிப்பட்ட அனுபவத்தில் நான் கிராமங்களில் பலர் உடம்பை ஏற்ற பெரும் முயற்சிகளை செய்வதைத் தான் அதிகம் பார்த்திருக்கிறேன். ஆக பருமன் குறித்த விசனிப்புகள் ஒரு நகர்மய பண்பாட்டு மனநிலை தான். மேற்கில் இது குறித்த ஆய்வுகள் செய்த சாண்டர் கில்மன் (Fat Boys: A Slim Book இவரது நூல்) இது இன்று ஒரு ஒழுக்கப் போராக மீடியா மற்றும் மேற்தட்டினரால் பிறர் மீது பிரயோகிக்கப்படுவதாக கூறுகிறார். பிற கலாச்சார ஆய்வாளர்கள் ஹிட்லரின் இனதூய்மைவாதம், மத்திய, பின்மத்திய ஐரோப்பாவில் சூனியக்காரிகளை வேட்டையாடும் போர்வையில் மாற்று மதக்காரர்களை கம்பத்தில் கட்டி வைத்து கொளுத்தப்பட்டது, 50 மற்றும் 60களில் அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகள் மீது போலியான பீதி கிளப்பப்பட்டு பல அப்பாவிகள் கொல்லப்பட்டது (மெக்கார்த்தியிசம்) ஆகியவற்றின் ஒரு தொடர்ச்சி இப்போதைய பருமன் தீண்டாமை என்கிறார்கள். நவீன காலத்தில் உணவின் அபரித உற்பத்தி, துரித உணவுகளின் அவேசமான சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் கலாச்சாரம் காரணமாய் நகர்மய சமூகத்துக்கு உணவு சார்ந்த ஒரு குற்றவுணர்வு ஏற்படுகிறது. மனிதனுக்கு என்றுமே தன் உடலை மகிழ்விப்பது, பெருக்குவது சார்ந்த குற்றவுணர்வும் உண்டு. ஊன்வெறுத்தல் என்பது காலங்காலமாக மதங்கள் நம் ஆழ்மனதில் உருவாக்கின ஒரு ஆன்மீக வடு. நாம் இதில் இருந்து என்றுமே மீளப் போவதில்லை. இந்த உளவியல் வடுவினால் தான் நாம் பருமனான உடல் எனும் படிமத்தின் மீது மிகுந்த வெறுப்பு கொள்கிறோம்.

இன்னொரு பக்கம் நவீனமயமாக்கலால் அநேகமான உணவுகளை அடைதல் அனைத்து தரப்பினருக்கும் சாத்தியமாவதால் மேல்தட்டினருக்கு படிநிலையை தக்க வைப்பதில் சிக்கல் வருகிறது. ஒரு எளிய நபர் கூட நாற்பது ரூபாவுக்குள் பிரைட் ரைஸோ, பிட்ஸாவோ புசிக்கலாம். அனைத்து உணவுகளுக்கும் மலிவான வகைகள் இன்று கிடைப்பதால் மேல்தட்டினர் எளிய உணவுகளின் அளவு மற்றும் கொழுப்பு சதவீதத்தை அதிகப்படுத்தி கூடிய விலைகளில் வாங்க விரும்புகின்றனர். ஐந்து நட்சத்திர ஓட்டலில் அமர்ந்து சப்பாத்தி குருமாவை 400 ரூபாய்க்கு வாங்கி புசிக்கிறார்கள்.

என் மேலதிகாரி ஒரு முறை தன் வீட்டு வேலைக்காரியின் உணவுப் பழக்கத்தை கண்டித்து திருத்தியதை பற்றி ஒரு கதை சொன்னார். மேலதிகாரி வீட்டில் அவ்வப்போது மேகி நூடுல்ஸ் செய்து உண்ணுவதை பார்த்து அறிந்த வேலைக்காரியும் அதே போல் தன் குழந்தைக்கும் வாங்கி தினசரி தர துவங்கினார். இதை ஒருநாள் அறிய நேர்ந்த மேலதிகாரி நூடுல்ஸ் உடல்நலத்துக்கு கேடானது, அதை புசிக்கக் கூடாது என தன் வேலைக்காரிக்கு நீண்ட அறிவுரை ஒன்று தந்தாராம். எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. நூடுல்ஸ் அவர் சாப்பிட்டால் மட்டும் பிரச்சனை இல்லை, வேலைக்காரி உண்டால் மட்டும் உடல்நலக்கேடா? பிரச்சனை நூடுல்ஸ் போன்ற உயர்தர உணவுகள் இன்று மலிவாகி விட்டதும் அதை இன்று தன் வேலைக்காரி தனக்கு இணையாக புசிப்பதும் அவருக்கு ஒரு அந்தஸ்து பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது தான்.

இன்னொரு புறம் கீழ்தட்டினர் கடந்து வந்து விட்ட நாட்டுப்புற அரிய உணவுகளை பணக்காரர்கள் அதிக விலைக்கு வாங்கி உண்கின்றனர். இல்லாவிட்டால் முன்னர் கீழ்த்தட்டு மக்கள் வறுமையால் உண்ண நேர்ந்த பத்திய உணவை கூட சமைக்காத காய் கறிகளுடன் சேர்த்து அதிக விலைக்கு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதிதீவிர நிலைக்கு போய் சிலர் பட்டினி கிடக்கிறார்கள், வெறும் காய்கறி மற்றும் பழச்சாறு மட்டும் அருந்துகிறார்கள். இன்று உணவை குறைவாக சுவையின்றி அருந்துவது மேற்கத்திய ஸ்டைலாகி விட அதிக கொழுப்பும் இனிப்பும் மிக்க உணவை கவலையின்றி சாப்பிடுவது மத்திய கீழ்மத்திய பாங்காகி வருகிறது. ஒரு புறம் குற்றவுணர்வு மற்றொரு புறம் அந்தஸ்தை தக்க வைக்கும் விருப்பம் ஆரோக்கிய உணவை நோக்கி மேற்தட்டினரை இட்டு செல்கிறது. இன்று மிக விலையுயர்ந்த உணவு ஆரோக்கிய உணவு தான்.

இந்த உணவு சார்ந்த அந்தஸ்து சிக்கலை “ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தில் ஒரு காட்சியில் கையாண்டிருப்பார்கள். நாயகி ஹன்சிக்கா பருமனானவர். அவரை பெண் பார்க்க வரும் உயர்தட்டை சேர்ந்த இளைஞர் ஒரு உணவகத்தில் வைத்து அவரது BMI ஐ கணக்கிட்டு அதிர்ந்து போய் “ரெண்டு பிளேட் பிரியாணி சாப்பிடுறியா?” என கேலி செய்து நிராகரிப்பார். ஆனால் நாயகன் மத்திய வர்க்கத்தை சேர்ந்தவர். ஆனால் கீழ் வர்க்க “கலீஜ்” பண்பாட்டை சேர்ந்தவர். அதனாலே அவருக்கு ஹன்சிக்காவின் “சின்னத்தம்பி குஷ்பு மாதிரியான தளதளவென்ற” பருமனான உடல் பிடித்துப் போகும். உடல் பருமன் வர்க்க அடிப்படையிலானது என்ற புரிதலை இயக்குநர் பதிவு செய்திருப்பார். அதேவேளை இன்று ஒல்லியான பெண்களுக்கே மவுசு என்பதாலும் சமூக மேல்நிலையாக்கத்துக்கு பருமன் எதிரியாக கருதப்படுவதாலும் ஹன்ஸிகாவின் பருமன் பற்றின மெல்லிய கேலியை படம் முழுக்க ஒலிக்க வைத்து சமரசம் செய்திருப்பார். ஒரு வெகுஜன இயக்குநருக்கு ஒரு எடை அதிகமான பெண்ணை அழகியல் ரீதியாக திரையில் நிறுவ குஷ்புவைத் தொட்டு கோடிழுத்து என்னவெல்லாம் அரசியல் செய்ய வேண்டி வருகிறது பாருங்கள். அந்தளவுக்கு உடல் எடை குறித்த மக்களிடையே மனநோய் பரவியிருக்கிறது.

கில்மன் தனது நூலில் முன்பு ஐரோப்பாவில் குண்டாயிருப்பது எப்படி மேற்தட்டினரின் அடையாளமாக இருந்தது என்று சொல்கிறார். மன்னர் பதிநானாவது லூயிஸ் தன் உடலைச் சுற்றி பஞ்சுப் பொதியை சுற்றி தன்னை குண்டாக காட்டிக் கொண்டார். அது மட்டுமல்ல அன்று குண்டானவர்கள் பாலியல் திறன் மிக்கவர்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஷேக்ஸ்பியரின் பால்ஸ்டாப் கதாபாத்திரம் ஒரு நல்ல உதாரணம். ஷேக்ஸ்பியர் தனது ஜூலியஸ் ஸீஸர் நாடகத்தில் குண்டானவர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொழில்மயமாக்கலும் அதனாலான உணவுப்பெருக்கமும் நிலைமையை தலைகீழாக்கியது. கீழ்த்தட்டினர் அதிக குண்டாக பருமன் ஆற்றலின்மையின் மலடுத்தன்மையின் குறியீடானது.

இன்று தன்னை மேற்தட்டாக காட்ட விரும்பும் பெண்கள் ஒல்லியாக முயற்சிக்கிறார்கள். அமெரிக்காவில் கறுப்பின மற்றும் மெக்ஸிக்க பெண்களை ஒடுக்குவதற்கு மீடியா இந்த உடல் பருமன் என்கிற விழுமியத்தை திணிப்பதாக சொல்கிறார் தனது Revolting Bodies எனும் நூலில் லெ பெஸ்கோ எனும் ஆய்வாளர். இன்று டயட் உணவு உற்பத்தியாளர்கள் அதிகமாக கண்வைப்பது இத்தகைய சிறுபான்மையினரைத் தான். அங்கு தேசிய இதய, நுரையீரல் மற்றும் ரத்த நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி சொன்னது கறுப்பினப் பெண்கள் பருமனாக இருப்பதை நேர்மறையாகப் பார்ப்பதாகவும் இதனாலே அவர்களை ஒல்லியாக்கும் முயற்சிகள் வெற்றி அடைவது மிக சிரமம் என்றும். ஒருவர் தான் அழகானபடி குண்டாக இருப்பதாக நம்பினால் என்ன தவறு? அவரை ஏன் சிரமப்பட்டு “பண்படுத்த” வேண்டும். இதை ஒட்டி இன்னொரு கேள்விக்கு வருவோம்: பருமனாய் இருப்பதனால் நோய் வருமா?

இது வெறும் தொன்மம் என்கிறார்கள் சமகால ஆய்வாளர்கள். உதாரணமாக அமெரிக்காவில் உள்ள டாலாஸில் உள்ள கூப்பர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஒருவர் சரியான BMI வைத்திருப்பதால், ஒல்லியாக இருப்பதால் அவர் ஆரோக்கியமானவர்கள் என்று பொருளில்லை என நிறுவியுள்ளது. சுருக்கமாக உடல் எடையை ஆரோக்கியத்துக்கான அளவுகோலாக கருதுவது ஒரு நவீன தொன்மம் மட்டுமே. ஆனால் ஆண்டாண்டு காலமாய் இதையே பேசி வந்துள்ள மருத்துவர்களும் மரபார்ந்த ஆய்வாளர்களையும் இந்த உண்மையை ஏற்க தயங்குகின்றனர். மேலும் அதை ஏற்றால் இன்று மருத்துவ உலகமும், டயட் உணவு நிறுனங்களும் தாம் இதுவரை செய்த கருத்தியல் முதலீடான நோயாளிகளை பூச்சாண்டி காட்டலை வைத்து அறுவடை செய்ய முடியாது.

டயட் வேதாந்திகள் மற்றும் மீடியாவின் உணவுப்பிரச்சாரம் இன்று நம்மை அந்தளவுக்கு குழப்பி வருகிறது. மது அருந்தினால் இதயத்துக்கு நல்லது என வலியுறுத்தும் ஆய்வுகள் உண்டு. மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு எனும் அரசு பிரச்சாரமும் உண்டு. இதே உள்முரணை நாம் வெண்ணெய்க் கட்டி, காப்பித் தூள், கோதுமை, கொக்கோவா என பல விசயங்களில் நாம் பார்க்கலாம். கொக்கோவாவில் பிளேவனாயிடுகள் உள்ளதால் இது இதய நலத்துக்கும் நீரிழிவை குறைப்பதற்கும் மிக நல்லது என பல ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் கொக்கோவாவை நாம் சாக்லேட்டுகள் வழியாகத் தான் பிரதானமாக உட்கொள்ளுகிறோம். இந்த சாக்லேட் இனிப்புகள் கொழுப்பு மற்றும் இனிப்பு அதிகமானவை. ஆக கொக்கோவாவை தொடர்ந்து உட்கொள்ளும் போது இதய நோய் மற்றும் நீரிழிவை வரவழைக்கும் வேலையைத் தான் அதிகம் செய்கிறோம். எண்ணெய் உடலுக்கு மிகவும் கேடு என்ற தொடர் மருத்துவ பிரச்சாரம் எண்ணெய் நிறுவனங்களை அச்சுறுத்தி உள்ளது. அதனால் இந்நிறுவனங்கள் தினமும் நான்கு ஸ்பூன் எண்ணெய் உடலுக்கு நல்லது என விளம்பரம் செய்ய ஆரம்பித்து உள்ளன. இதன் பொருள் நாம் சுத்தமாக உணவுகளில் தவிர்த்து விட்டு நான்கு ஸ்பூன் எண்ணெயை தினமும் குடிக்க வேண்டும் என்பதா அல்லது சமையலில் அளந்து நான்கே ஸ்பூன்களை பயன்படுத்த வேண்டும் என்பதா? நமக்கு உடலுக்கு தேவையான கொழுப்புச் சத்து முந்திரி, கடலை, பாதாம் ஆகியவற்றில் இருந்து இயல்பாகவே கிடைக்கிறது என்கிறது அறிவியல். ஆக நாம் வெளியே இருந்து தனியாக எண்ணெய் உட்கொள்ளுவதற்கான அவசியங்கள் ஏதும் இல்லை. அதேவேளை பொரித்த உணவுகளால் நாம் ஒரேயடியாய் இறந்து விடப் போவதும் இல்லை.

நம்மை இன்று அச்சுறுத்தக் கூடிய அநேக நோய்கள் பாரம்பரியமானவை. பருமனும் உள்ளிட்டு. உடம்பில் மெட்டொபொலிசம் குறைவாக உள்ளவர்கள் சாதாரணமாக சாப்பிட்டாலே குண்டாவார்கள். இவர்களை ஒல்லியாக்கிறோம் பேர்வழி என்று விரதமிருக்க வைத்து ஏகத்துக்கு உடற்பயிற்சி செய்ய வைத்து அதிரடியாய் 15 கிலோ குறைத்தால் கூட விரைவில் திரும்ப ஏறி விடும். அப்படி இழந்த எடை திரும்ப போடுவது தான் உடலுக்கு அதிக ஆபத்தானது. உண்மையில் ஒருவர் பருமனாயிருப்பதில் ஆபத்தில்லை. அவர் தன்னளவில் தன்னை சுறுசுறுப்பாக வலுவாக வைத்துக் கொண்டால் போதும். இன்னொரு விசயம் தினசரி உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தாக இருக்கும் பல பேருக்கு கூட இதயநோய் வருகிறது என ஆய்வுகள் நிரூபித்து உள்ளன. அதாவது ஒல்லியாக அல்லது கட்டுறுதியாக இருப்பதால் ஒருவருக்கு நீரிழிவோ மாரடைப்போ வராது என எந்த உறுதியும் இல்லை. தொடர்ந்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்பவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என இதுவரை நிரூபிக்கப்பட்டதும் இல்லை. மாறாக உடற்பயிற்சியே செய்யாமல் தினசரி குடித்து கொழுப்பு இனிப்பு மிகுந்த உணவுகளை உண்டும் வாழ்ந்த எத்தனையோ பேர் எண்பது நூறு வயது வரை எந்த மெட்டொபொலிக்கல் பிரச்சனையும் இன்றி வாழ்ந்ததை நாம் அன்றாட வாழ்விலே பார்த்திருக்கிறோம். பிரபல உயிரியல் எழுத்தாளர் டெஸ்மண்ட் மோரிஸ் ஒரு கட்டுரையில் தனது அம்மா எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தன்னிச்சையாக உணவு உண்டு 99 வயது வரை வாழ்ந்ததை குறிப்பிடுகிறார். “நமக்குப் பிடிக்கிற உணவுகளே சரியான உணவுகள்” என்பது அவரது அம்மாவின் தத்துவம். இதனடிப்படையில் மோரிஸ் நமது நவீன வாழ்வின் உணவுக் குழப்பத்தை அலசுகிறார்.

நமது பிரச்சனை நாம் பிரக்ஞைபூர்வமாக உண்ணத் துவங்கி விட்டோம் என்பதே என்கிறார் டெஸ்மண்ட் மோரிஸ். எந்த உணவை எடுத்தாலும் இது நமக்கு நல்லதா என மூளையால் அலசுகிறோம். பதற்றப்படுகிறோம். பதற்றப்படும் போது இயல்பாகவே நமது இதயத்துடிப்பு எகிறுகிறது. பஞ்சம் மற்றும் பிற ஆபத்துக்கள் வருகின்றன என உடல் குழம்புகிறது. அதனால் அது நாம் உண்ணும் பத்திய உணவை கூட முழுமையாக செரித்து உறிஞ்சாமல் அதில் உள்ள கொழுப்பை செலவழிக்காது எதிர்காலத்துக்காக சேகரிக்க தலைப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஏற்றுகிறது. மேலும் இதே காரணத்தினால் விரதம் இருப்பவர்களுக்கு அதிகமாக உண்ணும் தூண்டுதல் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. விளைவாக குறைவாக உண்ண வேண்டுமே என்ற எண்ணமே ஒருவரை அதிகமாக உண்ண வைக்கிறது. இந்த உணவினால் எனக்கு நோய் ஏற்படுமோ என்று கலக்கத்துடன் உண்பவர்களுக்கு எளிதில் உடல் பருக்கிறது. நமது உண்மையான பிரச்சனை உணவில் உள்ள கொழுப்பும் இனிப்பும் அல்ல. அது மருத்துவர்களும் உணவு நிறுவனங்களும் சேர்ந்து உருவாக்கிய போலியான பீதியும் தொன்மங்களும் தான்.

இந்த உடல்நலம் குறித்த தொன்மங்கள் நமக்கு பண்பாட்டு ரீதியான தாக்குதல்களை தனிநபர்கள் மற்றும் குழுக்கள் மீது தொடுக்கவே அநேகமாக பயன்படுகிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வேலையிடங்களிலும் திருமண சந்தர்பங்களிலும் பருமனானவர்கள் கேலி செய்யபட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். ஒருகாலத்தில் குண்டாவது எப்படி என்று அறிவுரை தந்தவர்கள் இன்று இலவசமாக எடைகுறைப்பது பற்றி அறிவுரைகளால் நம்மை உளவியல் வதை செய்கிறார்கள். எடை பற்றின எளிமைப்படுத்தல் நமக்கு தந்திரமான ஒரு தாக்குதல் முறையாகவே பயன்படுகிறது.

சமீபமாக இந்திய சுழலர் அஷ்வின் குறித்து கிரிக்கெட் விமர்சகர் மஞ்சிரேக்கர் ஒரு விமர்சனம் வைத்தார். அவர் மிகத்திறமையானவர். அடுத்த இந்திய நட்சத்திரம் அவர் தான் என்று புகழ்ந்து விட்டு, அதற்கு அவர் தன் எடையை குறைத்து உடலை வலுப்படுத்த வேண்டும் என்று ஒரு மர்ம அடி கொடுக்கிறார். கிரிக்கெட்டில் எத்தனையோ குண்டான வீரர்கள் வெற்றிகரமாக இயங்கி இருக்கிறார்கள். அஷ்வினாக தன்னை கடுமையாக ஜிம்மில் வருத்திக் கொண்டாலும் அவர் உமேஷ் யாதவ் போல் ஆகப் போவதில்லை. ஏனென்றால் அஷ்வினின் உடல்வாகு அப்படி. அவரது மெட்டொபொலிஸம் அளவு குறைவானது. கொஞ்சமாக உண்டாலே அவருக்கு அதிக எடை போடும். இதனால் அவருக்கு ஓரளவு தன் எடையை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். கட்டுறுதியான உடலைப் பெறுவது அவரைப் போன்ற மரபணு கொண்டவர்களுக்கு வெறும் கனவு தான். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு அது தேவையும் இல்லை. தனது உடலின் எல்லை என்ன என்று அவர் அறிந்து கொண்டு போதுமான அளவுக்கு அவர் முயன்றால் போதும். அவரால் பெரும் சாதனைகள் செய்ய முடியும். இதே உடல்பருமன் பிரச்சனை இருந்தும் இன்சமாம் தனது அத்தனை குறைபாடுகளையும் கடந்து பெரும் உயரங்களைத் தொடவில்லையா! ஒருவர் தன் இயல்பை அறிந்து அதன் வழி முன்னேறுவதே சாத்தியம் மற்றும் உசிதம். மஞ்சிரேக்கர் போன்று அஷ்வினின் உடல்குறித்த விமர்சனங்களை வைப்பவர்கள் அவரை இன்னொரு ஆளாக மாற்ற முயல்கிறார்கள். இது ஒரு மனிதனின் தனி-அடையாளத்தை மறுக்கும் வன்முறை. இனவாத தூய்மைப்படுத்துதலுக்கு நிகரானது.

டெஸ்மண்ட் மோரிஸ் ஒரு தீர்வை முன்வைக்கிறார். மனிதன் தன் உடலின் உள்குரலை கேட்க கற்க வேண்டும். உடலுக்கு என்ன தேவை என்பதை நம் வாசனையையும் சுவையும் அறியும் திறன்களே சொல்லும். சராசரி மனிதர்கள் அதன்படி வாழ்ந்தாலே நீண்ட ஆயுள் இருக்கலாம். நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள் தம் உடலுக்கு எந்த வகை உணவு சரியானது என அறிய வேண்டும். இது ஆளாளுக்கு மாறுபடும். மற்றபடி சரியான மருந்துகள் உட்கொள்ள வேண்டும். தன் உடலை வாழ்வை கட்டுப்படுத்தும் மிகையான விழைவை முதலில் கைவிட வேண்டும். உடற்பயிற்சி நமக்கு மிகுதியான ஆற்றலையும் உடலுக்கு வலுவையும் நெகிழ்வுத்தன்மையும் தரும். தேவை என்றால் செய்து கொள்ளலாம். ஆனால் தினமும் நடைபழகி அருகம் புல் ஜூஸ் குடித்தால் நூறு வயது வாழலாம் என நம்புவது Seventh Day Methodist கிறித்துவர்கள் இதோ அதோ உலகம் அழியப்போகிறது, அப்போது நாங்கள் மட்டும் சொர்க்கத்தில் குலாவுவோம் பாவிகள் நீங்கள் அழிவீர்கள் என்று கற்பனை தீர்ப்புகள் எழுதுவதைப் போன்றது.
நீண்ட ஆயுள்மருத்துவ அறிவியல்சொர்க்கம்கடவுள் ஆகியன ஒரு விநோதமான புள்ளியில் இணைகின்றன. அது எதிர்கால நிலைப்பு எனும் கற்பனை பீதி. அறிவியலும் மதமும் ஒன்றை ஒன்று எதிர்ப்பது போல் நடித்து அதே நாடகத்தை தான் இந்நாள் வரை அரங்கேற்றி வருகின்றன.

(டிசம்பர் மாத உயிர்மையில் வெளிவந்த கட்டுரை)


Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...