தந்துகி: சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் எனும் கட்டுரையில் ஆதவன் தீட்சண்யா தன் கொள்கைக்கு எதிராக சடங்குகளை பின்பற்ற நேரும் சிக்கலை பேசுகிறார். உண்மை தான். ஆனால் இதற்கு எளிய தீர்வு அவர் சொல்லுவது போல மேலும் வலுவான கொள்கைப்பிடிப்பு அல்ல.
உறவினர்களை தேவையில்லாமல் ஒட்டிக் கொண்டிருப்பதை நிறுத்துவது சரியான தீர்வு. நம் உயிரணுக்களை சுமக்கிறார்களே அன்றி அவர்கள் நாம் அல்ல.
நான் ஆரம்பத்தில் இருந்த இம்மாதிரி பிரச்சனைகளை இவ்வாறு தான் தவிர்த்து வருகிறேன். சாதியத்தை கடப்பதற்கு முதலில் உறவினர்களை கடக்க வேண்டும். நாம் ஒரு உயர் அறிவு மற்றும் கலாச்சார சமூகம். உலகு தழுவிய சமூகம். நம்மோடு உரையாடும் பண்பாட்டு தகுதியில்லாத உறவினர்கள் நமக்கு எதற்கு? விட்டொழியுங்கள்.
என் அப்பாவின் நினைவுநாள் சடங்குகளை செய்ய அம்மா வற்புறுத்தினார். மறுத்து விட்டேன். அத்தை இறந்த போது போய் பார்த்து சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அவசியமில்லை. ஆனால் என் எழுத்தோடு சிந்தனைத் தளத்தோடு இதயத்தோடு நெருக்கமுள்ளவர்களின் தேவை என்றும் நான் இருப்பேன். ரத்த சொந்தம் அல்ல புத்தி சொந்தம், இதய அணுக்கம் தான் முக்கியம். அப்படிருந்தால் இப்படியான இரட்டை வாழ்க்கையை வாழ நேராது.
குழந்தைகளுக்கும் சாதியத்தை கற்றுக் கொடுப்பது சொந்தக்காரர்களும் அவர்களின் சடங்குகளும் தான்.சொந்தங்கள் ஒரு நீட்டித்த குடும்பம் போன்று செயல்படுகிறார்கள். இரண்டு முறை எனக்கு நண்பர்கள் சொந்தங்கள் தவிர்க்க முடியாதவை என வலியுறுத்தி இருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் போது கலை இலக்கிய பெருமன்ற கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்வேன். அங்கு பிரேம்குமார் என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் என்னிடம் ஒரு உரையாடலில் சொன்னார்: “நீ என்னதான் சாதி வேண்டாம் என்றாலும் திருமணம் என்றதும் அங்கு சாதி வந்து விடும். உன் உறவினர்களின் கேள்வியை நீ சமாளிக்கவே முடியாது” என்றார். நான் பின்னர் சாதி கடந்து மணம் புரிந்தேன். என் உறவினர்கள் ஆட்சேபித்தார்கள். ஆனால் அவர்களை நான் பொருட்படுத்தவே இல்லை. இன்று வரை அவர்களின் அபிப்ராயங்களை நான் கேட்பதோ கவனிப்பதோ இல்லை. எனது மதிப்பை நான் மதிக்கும் நபர்களிடம் தான் தேடுவேன். நான் மதிக்காதவர்கள் எனக்கு மனிதர்களே அல்ல. இன்னும் சொல்வதானால் மிருகக்காட்சி சாலையில் உள்ளவற்றை பார்க்கும் ஆர்வத்துடன் தான் இவர்களை கவனிக்கிறேன். படிப்பினால் கிடைக்கும் பண்பாட்டு மேம்பாட்டை அடையாதவன் கவனிக்கத்தக்கவன் அல்ல.
அடுத்த இயக்குநர் ராம் ஒரு காலத்தில் பழக்கத்தில் இருந்தார். அப்போது என் மனைவி என்னை மணப்பதற்கு அவளது குடும்பமும் உறவுகளும் கடுமையாக எதிர்த்ததனர். ராம் என் மனைவி தன் குடும்பத்தின் சம்மதத்தை பெற முயலவேண்டும் என்றார். நான் அவர்கள் முக்கியமல்ல என்றேன். அவர் “இல்லை வாழ்வில் பலசமயங்களில் அவர்கள் இன்றியமையாதவர்களாக இருப்பார்கள்” என்றார். பிறகு குடும்பம் உறவை எதிர்த்து மணம் புரிந்து இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு எந்த சொந்தங்களும் தேவைப்படவில்லை. இதை இரக்கத்துடன் சொல்லவில்லை. உண்மையிலே அவர்கள் எங்கள் உலகில் இல்லை. என் வாழ்வில் நான் மரணத்தை மிக நெருக்கமாக சென்று பார்த்து வந்து விட்டேன். அப்போதும் என் நண்பர்களும் வாசகர்களும் தான் முதலில் வந்து ஆதரவு தந்தார்கள். என் எழுத்தின் வாசகியாக மட்டுமே அப்போது அறிமுகம் இருந்த தோழி சம்மங்கி திருவண்ணாமலையில் இருந்து வந்து ஆஸ்பத்திரியில் என் உள்ளங்கையை திறந்து ஐநூறு ரூபாய் வைத்து வாங்கிக் கொள்ள வற்புறுத்தினார். நான் எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். பிறகு என் கண் கலங்கிப் போயிற்று. தமிழ்நதி வந்ததையும் நான் மறக்க முடியாது. இவர்கள் தான் சொந்தங்கள். இவர்கள் சொந்தமாக இருப்பதிலேயே எனக்கு பெருமை.
நாம் எவ்வளவு தான் வாசித்தாலும் தீவிரமாக இயங்கினாலும் சாதியம் நமக்குள் இருந்து கொண்டு தான் இருக்கும். காரணம் சாதியவாதிகளான நம் உறவினர்களுடன் இருந்து தான் நம் சமூகமயமாக்கல் சிறு வயதில் இருந்து துவங்குகிறது. பிறகு ஊர்க்காரரகளிடம் பழகுகிறோம். அவர்களும் அநேகமாக நம் சாதியே. ஆனால் பள்ளிக்கும் கல்லூரிக்கும் சென்று பல்வேறு சாதிகளுடன் இருக்கும் போது அடையாளக் குழப்பம் ஏற்படுகிறது. ஆனால் அந்நேரம் நமது சாதிய அடையாளம் உளவியல் ரீதியாக வலுப்பெற்றிருப்பதால் வெளிசாதிகளை அரைமனதாய் ஏற்று பாசாங்கு பண்ண துவங்குவோம். இந்தியர்களின் பிரச்சனையே இது தான்.
அதற்காக குழந்தைகளை சொந்தங்களின் அணுக்கமே இன்றி வளர்க்க முடியுமா என்ன? முடியாது. நாம் அதற்குப் பதில் விரிவான சிந்தனை கொண்ட ஒரு நட்பு வட்டத்தை வெளியில் தோற்றுவிக்க வேண்டும். இவர்களுடன் இவர்களின் குடும்பங்களுடன் நம் குழந்தைகளை பழக விட வேண்டும். சிறு வயதில் இருந்தே கலவையான சாதி அடையாளங்களுடன் விரிவான அறிவு பண்பாட்டுச் சூழலில் பழக நேரும் குழந்தைகளுக்கு சொந்தங்களை விட உயர்ந்த மனிதர்களே முக்கியம் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு உலக சமூகத்தோடு தம்மை அடையாளப் படுத்தும் குழந்தைகளை நாம் பயிற்றுவித்து மேலெடுக்க முடியும்.
இது ஒரு கருத்தியல் தான். முயன்று பார்ப்போமே.
மேலும் வாசிக்க: http://aadhavanvisai.blogspot.in/2012/06/blog-post_18.html
