சாரு நிவேதிதாவின் சமீப நாவல் “தேகம்” ‘பொதுவாக’ ஒரு வதையை பற்றின நாவல் அல்ல. அதனாலே ஒரு தொழில்முறை வதையாளனின் குறிப்பிட்ட தொழில் அனுபவத்தை சொல்ல தொடங்கி வேறு பல நினைவுகளுக்கும் கேள்விகளுக்கும் செல்கிறார். எதையும் முடிக்காமல் அங்கங்கே தாவி சென்றாலும் நாவலின் உத்தேசத்திற்கு அவர் நியாயம் செய்திருக்கிறார். காமம், நட்பு, மணவாழ்வு உள்ளிட்ட உறவுகளில் அடுத்தவர்களையும் சுயமாக நம்மையும் ஏன் வதைத்து கொள்கிறோம் என்ற தீவிரமான விசாரணை நாவலில் உள்ளது. ஆனால் பொதுவாசகனுக்கு இரண்டு சிறு பொறிகள் உள்ளன. முதலில், சாரு தன் எழுத்தில் ஒரு மேம்போக்குத் தனத்தை அல்லது frivolousness ஐ கொண்டு வர பிரயத்தனிக்கிறார். இதை நம்பி பொழுதுபோக்காக படித்து முடித்து விடலாம். ஒரு காற்றை போல் நாவலும் கடந்து விடும். ஆனால் அதே நபர் வாசிப்பின் முடிவில் இலக்கியம் எங்கே என்று குற்றவுணர்வும் குழப்பமும் ஏற்பட்டு சற்று வியர்க்க நேர்ந்தால் ஒரு குப்பை நாவல் என்று எளிதில் புறமொதுக்குவார். இவ்விபத்து நேர்கிறது, நேர்ந்து கொண்டே இருக்கும். எலிப்பொறியில் கை மாட்டுவது போன்றது இந்த வாசிப்பு. அடுத்து மரபான வடிவ ஒழுங்கமைவு தேடுபவர்களுக்கும் நிறைய வழுக்குமிடங்கள் நூலில் உள்ளன. இந்த இரண்டையும் கோட்பாடாக கருதி ஆதரித்து விமர்சிப்பது நம் மூளை தசைகளுக்கு பயன்படும் என்றாலும் அது வாசிப்பல்ல. இந்நாவலில் அதன் அத்தனை திசைதிருப்பிகளையும் கடந்து சாரு விவாதிகிக்கும் கலாச்சாரத்தை கவனிக்க வேண்டும். அது என்ன?
நாவல் ஆரம்பத்தில் பன்றிகள் கொடூரமாக அடித்து கொல்லப்படுகின்றன. பன்றியை கழுத்தறுக்க முடியாது என்ற நடைமுறை காரணத்துக்காகவே இந்த வதையில் நாவலில் சேரிக்காரர்கள் ஈடுபடுகிறார்கள். சாரு இதை பன்றியின் துரதிர்ஷ்டம் என்கிறார். நாவலின் நாயகர்களில் ஒருவனான தர்மாவின் சாதிக்காரர்கள் இந்த பன்றிகளைப் போன்றே மலத்துடன் வாழும் இழிநிலையில் இருக்கிறார்கள். பின்னர் அவன் இந்த சேரியில் இருந்து பொதுநீரோட்டத்துக்கு வெளியேறுகிறான். அங்கு அவன் பல தொழில்கள் முயன்று பின் மனிதர்களை வதை செய்யும் பணியை ஒரு தாதாவின் கீழே இருந்து செய்கிறான். தர்மா ஒரு இலக்கியவாதி, தத்துவவாதி, காதலன் இப்படி இத்தியாதியாக இருந்தும் ஏன் வதை எனும் அநீதியில் ஈடுபடுகிறான்? அதற்கு காரணம் ஆதிக்க சாதியினர் மீதான சமூக கோபம் அல்ல; அது ஒரு கலாச்சாரம். ஏனென்றால் ஒரு பெண்ணை கற்பழித்ததற்காக ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர் மகனையும் காடை எனும் தாதாவையும் வதைக்கும் அதே தர்மா தான் பின்னொரு இடத்தில் ஒரு நாயை கல்லடித்ததற்காக ஒரு சிறுவனையும் வதைக்கிறான். ஒரு பெண்ணை கற்பழிப்பதும் நாயை கல்லடிப்பதும் ஒரே மாதிரி குற்றங்களா? போலீஸ் இன்ஸ்பெக்டர் பையனை வதைக்கும் போது “ஏன் அந்த பெண்ணை அப்படி செய்தாய்?” என்று திரும்ப திரும்ப தர்மா கேட்கிறான். அவன் வாயில் மலத்தை கரைத்து ஊற்றும் போது “எத்தனை நூற்றாண்டுகளாய் எங்களை வாயில் மலத்தை கரைத்து ஊற்றி இருக்கிறாய்?” என்றும் கேட்கிறான். இந்த உதிரி நியாயங்கள் தர்மாவின் வெறும் போலி மதிப்பீடுகளோ என்ற ஐயம் தொடர்ந்து எழும்படியாக தான் நாவலின் கதையாடல் உள்ளது. அடுத்து நேரடி வதை என்பது ஒரு பகுதி மட்டும் தான். செலின் என்ற காதலியை நிறைவாய் புணராமல் மறைமுகமாய் அவளை வதைக்கிறான். அவனும் வதைக்குள்ளாகிறான். இருவருக்கும் புணர்ச்சி முழுமையடையாததால் அடிவயிறும் உறுப்புகளிலும் வலி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. காமம் வடியாமல் அவர்களின் உடல் வேதனையில் விம்முகிறது. இது அவர்கள் தமக்கே வருவித்து கொண்டது தான். காமமும் வதைக்கான ஒரு கருவியே. அடுத்து நேஹா என்றொரு காதலி. அவளை மேலும் நுட்பமாக தனது விலகலின் மூலம் உளவியல் ரீதியாக வதைக்கிறான். அவள் பைத்தியம் பிடித்து சாகிறாள். கடைசியாக அவன் மீனா என்றொரு “மிடில் கிளாஸ்” பெண்ணை மணந்து கொள்கிறான். நாவலின் ஆக சுவாரஸ்யமான இடம் இது தான். அவள் ஒரு சாத்விகவாதி. தர்மாவை ஒரு எறும்பை நசுக்கி கொல்ல கூட அனுமதிப்பதில்லை. கட்டெறும்பை பார்த்தால் ஒரு காகிதத்தில் அதை ஏற்றி வெளியே கொண்டு போய் விட வேண்டும்; பாம்பிடம் மிக பரிவுடம் ”போய் விடு” என்றால் உடனே போய் விடும்; ஆனால் மாமிசம் உண்பதில் கூட நியாயம் உள்ளது, நாம் எல்லாம் அம்மாவின் ரத்தமாகிய முலைப்பாலை குடித்து தானே வளர்ந்தோம் ஆகிய பல வலுவான தர்க்க வாதங்களை கொண்டே அவள் தர்மாவை வதைக்கிறாள். அவன் அவளை மிகவும் அஞ்சுகிறான். ஏன் என்றால் அவளிடம் எல்லாவற்றுக்குமே தகர்க்க முடியாத தயார்நிலை பதில்கள் உள்ளன. இது தான் அஹிம்சையின் ஹிம்சை. உச்சபட்ச வதை. கபிலா என்றொரு பெண் தனக்காக லட்சக்கணக்கில் செலவு செய்த மூன்று வருடம் காதலித்த ஒருவனை கழற்றி விட்டு ராமசந்திரன் என்ற ஒரு அமெரிக்க வேலையுள்ளவனை மணமுடிக்க முடிவு செய்கிறாள். துரோகம் தாங்க முடியாத அவளது முதல் காதலன் தன் கையை கிழித்து அந்த ரத்தத்தால் அவளுக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறான். தர்மாவின் நண்பனான கிருஷ்ணாவை தனது உடல் வதையை காட்டி அழுது படுத்துகிறான். மறுப்பக்கம் கபிலா அதே கிருஷ்ணாவிடம் சென்று முதல் காதலனிடம் இருந்து தப்பிக்க வழி சொல்லுமாறு நெருக்கடி கொடுக்கிறாள். கடைசியில் அவள் இரண்டாம் காதலனையும் கைவிட்டு விடுகிறாள். தர்மா தர்ம அடி வாங்குவதற்காகவே பேருந்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்கிறான். ஒரு முதிய ஆங்கிலோ இந்திய பெண்ணின் மலம் அலம்பாத குதத்தில் புணர்ந்து பின் நாற்றம் பொறுக்காமல் வாந்தி எடுக்கிறான். ஜேப்படி திருடனாக, ஆண் விபச்சாரியாக தன்னை சமூகத்தின் விளிம்பு நிலையில் இருத்தி அங்கீகாரமின்மையின் அவமானத்தின் வதையை அனுபவிக்கிறான். பட்டினி கிடந்து உடலை வதைக்கிறான். அவன் ஏன் இப்படி எல்லாம் செய்ய வேண்டும்? இதுவரை குறிப்பிட்டவர்கள் ஏன் உறவுநிலைகளில் வதை பயில வேண்டும்? பிறரையும் தன்னையும் தொடர்ந்து வதைத்து நாம் அடைவது என்ன?
இந்த கேள்விகளுக்கு நாவல் நேரடியான விடைகளை தருவதில்லை. நாவல் இவற்றை குறிப்புணர்த்துகிறது: தொடர்ந்து குறைப்பட்டதாக உணரும் ஒரு சமூகத்தின் கலாச்சாரமாக இந்த வதை மனப்பான்மை இருக்கலாம். அச்சமும், வன்மமும், காமமும் நமக்குள் ஊறிப் போயுள்ளன. இவற்றை நாம் வதை மூலம் எளிதில் வெளிப்படுத்துகிறோம். அப்படியெனில் வதைப்பது ஒரு அடிப்படை மனித பண்புமே. வதையை ஒரு கலையாக பல்வேறு வடிவங்களில் வளர்த்தெடுப்பதை “தேகம்” சித்தரிக்கிறது. நாம் மிகுந்த பண்பாட்டு அறிவுடன் நாகரிகத்துடன் ஒரு மறைவான கத்தியை போல் வதையை எப்போதும் கையுடனே வைத்துள்ளோம். அது நம் கலாச்சார இருப்பின் தவிர்க்க முடியாத பகுதி. மேற்சொன்ன ஆழமான சித்தரிப்பே நாவலின் ஆக முக்கியமான சிறப்பு. இந்த வதை பண்பாட்டில் இருந்து நாம் மீண்டு போகலாகாதா? பிரியமும் காதலும் காமத்தின் உன்மத்தமும் வதையின் மறுதரப்பாக சாருவால் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் மிகுந்த அன்பின் விளைவாக நாம் விருப்பமான உறவுகளை வதைக்கவும் செய்கிறோம். இது ஒரு முடிவுறா வட்டம். அன்பின் வழியாக வெளியேறி வதைக்குள் நுழைகிறோம். அதில் இருந்து வெளியேறி அன்பை அடைகிறோம். இதனாலே நாவல் முழுக்க தர்மா தீரா காதலனாகவும் தளராத வதையாளனாகவும் இருக்கிறான். காதலிக்கப்பட்டும் வதைக்கப்பட்டும் இருக்கிறான். அவனால் இரண்டில் இருந்தும் தப்ப முடிவதில்லை.
சமூகத்துடனும், குடும்பத்துடனும், நண்பர்கள் மற்றும் உறவுகளுடனும் உறவாடுவதன் மூலம் அடையும் பிரியத்தின் உன்மத்தமும், வன்மத்தின் வலியும் ஒரு உச்சத்தை அடைந்துள்ள காலவிளிம்பில் இன்று நிற்கிறோம். இதில் மிகை எது உண்மை எவ்வளவு என்று விசாரிப்பதும் சாத்தியமில்லை. இன்றைய கலாச்சாரம் மனிதர்களை ஏனோ கொதிநிலையில் வைத்திருக்கிறது. ஊடகங்களிலும் நேரடியாகமும் நாம் மனிதர்களிடம் காண்பது பரஸ்பர சந்தேகமும் அழித்தலும் தான். தொடர்ந்து விருப்பம் காட்டியும் வெறுத்தும் பிரிந்தும் நாம் இருப்பதற்கு காரணம் பொதுவாக கோரப்படுவது போல் விழுமியங்களின் போதாமையினால் அல்ல என்கிறார் சாரு. நம்மால் வேறெப்படியும் வெளிப்படுத்திக் கொள்ள தெரியவில்லை. நீரில் மூழ்கும் ஒருவனின் வெளியே நீளும் கரம் போல் உள்ளது பிரியத்தினால் நம்மை நோக்கி வரும் ஒவ்வொரு கரமும். உறவுகளின் பண்பாட்டில் உள்ள இந்த மிகுஇயல்பும் அதற்கு நாம் வழங்கும் அங்கீகாரமும் தான் நமது அரசியலையும் போர்களையும் தொடர்ந்த வரலாற்று திரிபுகளையும் பிற சமூக மற்றும் கலாச்சார செயல்பாடுகளையும் கூட வியப்பின்றி ஏற்றுக் கொள்ள வைக்கிறது. பிரியமும் மனிதநேயமும் இன்று எதற்கும் முற்றுப்புள்ளியாக முடியாது. அதற்காக நாம் ஒரு இருத்தலிய முட்டுசந்தில் நிற்பதாகவும் இந்நாவல் கூறவில்லை. “நாம் ஏன் இப்படி இருக்கிறோம்” என்றால் நாம் இப்படியே இருக்க முடியும் நம் சமகால சமூகத்தின் பண்பாட்டு சிடுக்கு ஒன்றை அவிழ்க்க முயல்கிறது “தேகம்”
