அவர்
என்றும் போல்
விடிகாலையில்
மொட்டைமாடியை சுற்றி சுற்றி
தளர் ஓட்டம் செல்லும் போது
மல்லாந்து விழுந்து ஓடியது
ஒரு கரப்பான்பூச்சி
வாசல் கூரையில்
தலைகீழாக பிரயாணித்தது
மிகுந்த விழிப்புடன்
மல்லாக்க தூங்கியது பூனை
படிக்கட்டில் நீண்ட கிறுக்கல்களாய்
கலைந்தன எறும்பு சாரைகள்
ஒவ்வொரு காற்றிலும் சுழித்து அலையடித்தது
உயிரற்ற ஈசல்களின் சிவப்பு குவியல்
பிறகொரு நாள்
அதே மாடியில்
அவர் ஒரு பெண்ணை
சன்னமாய் முத்தமிட்ட போது
தான் வேலைக்கு போகும் பாதையை
பார்வையிட்ட போது
காயும் ஆடைகளை
அந்நியமாய் பார்த்து மனைவியை நினைத்த போது
விளிம்பில் நின்று எட்டி நோக்கியபடி
தனது
தற்கொலை புரிந்த மகளை நினைத்த போது
சின்ன வயதில் சொல்லப்பட்ட
குட்டிக்கதைகளில் ஒன்றையாவது
நினைவு கொள்ள முயன்ற போது
நேசிக்க முடியாத போது வெறுப்பும்
வெறுக்க முடியாத போது அன்பும்
போலியாக உள்ளது ஏன்
என்று கேட்டுக் கொண்ட போது
தன்னை போல் மொட்டை மாடியில் நிற்கும்
வேறுபட்ட மனிதர்களை
விநோதமாய் பார்த்த போது
சந்தித்த ஒவ்வொரு மனிதனின்
பைத்தியக்காரத்தனத்தையும்
வகைப்படுத்தி நினைத்த போது
தன்னை சுற்றி உறவுகளும் நட்புகளும்
மறைய மறைய
பெருகிக் கொண்டே இருப்பதை
விளங்க முயன்ற போது
ஒரு கவிதை தோன்ற
அதை நினைவில் வைக்க முயன்று
அது மாறிக் கொண்டே இருந்த போது
தூக்கம் வராமல்
கோபமாய் உலாத்திய போது
உலகம் அதையே செய்தது
கொஞ்சம் தலைகீழாய்
