2011 கிரிக்கெட் உலக்கோப்பை யாருக்கானது? முன்னாள் வீரர்களும், பிரலங்களும், நிபுணர்களும், மீடியாவும் கூடவே சற்று குழம்பிப் போய் உள்ளார்கள். அனைத்துக் கைகளும் கோப்பையை சுற்றி பற்றி உள்ளன என்பதே அவர்களின் கண்டுபிடிப்பு. குறிப்பாய் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் விரல்கள் இறுக்கவே பற்றி உள்ளன. விநோதமாக, வழமையாகவும், ஐரோப்பிய நிபுணர்களும் வர்ணனையாளர்களும் வெள்ளை அணிகளை முன்னிறுத்துகிறார்கள். உதாரணமாக ஸ்டீவ் வாஹ் தென்னாப்பிரிக்கா வெல்லும் என்கிறார். அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவை முன்னிறுத்துகிறார். தென்னாப்பிரிக்க வர்ணனையாளர்களோ இங்கிலாந்து தான் வெல்லும் என்று ஊகிக்கிறார்கள். இந்தியா அனைவர் பட்டியலிலும் விடாப்பிடியாய் உள்ளது. இந்தியாவை ஆதரிக்கும் அளவுக்கு அதை முழுக்க நிராகரிக்கவும் அனைவருக்கும் தயக்கம் உள்ளது. ஜராசந்தனை போல் இந்தியா இரு துண்டுகளாக கிடக்கிறது. திறமையும் அழகும் கொண்ட குலுக்கு நடிகைகளை போல இலங்கையும் பாகிஸ்தானும் யாருடைய வெட்டவெளிச்ச பட்டியலிலும் முன்னணியில் இல்லை.
பொதுவான தெ.ஆ-இங்கிலாந்து ஆருடத்தின் மறைமுகப் பொருள் என்ன? இவ்வருட உலகக் கோப்பை ஒரு நீண்ட கொட்டாவியாக இருக்கும் என்பது. தென்னாப்பிரிக்கா ஆட்டங்கள் ஒரு அரிசி மில்லின் அரவை எந்திரத்தை ஈ மொய்க்க தூசு கிளம்ப கவனிப்பதை போன்றது. தெ.ஆரிக்காவுக்கு அடுத்தபடியான அரவை எந்திரம் இங்கிலாந்து. இவ்விரு அணிகளுக்கும் கொஞ்சமாவது வண்ணமூட்டுவது ஆம்லாவும், கெவின் பீட்டர்சனும் தான். சுவாரஸ்யமாக இருவரும் வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள். தோல்வியை தவிர்க்க வேண்டும் என்பதே இவ்விரு அணிகளின் லட்சியம். அதனால் ஜெயித்து விட்டாலும் அப்பாடா நல்ல வேளை தோற்கவில்லை என்று பெருமூச்சு விடுவார்கள். இது போன்ற அரவை எந்திரங்களால் ஆக்கிரமிக்கப் படுவது போன்ற ஒரு பெருந்துயரம் உலகக் கோப்பை பார்வையாளனுக்கு வேறொன்று இருக்க போவதில்லை. ஆகையால் கிரிக்கெட்டின் ஆதிதேவதை காப்பாற்றட்டும்!
முறுக்கு போல் நொறுங்குவதற்காகவே ஒவ்வொரு முறையும் ஆடிக் கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலியாவிடம் இன்னமும் வசீகரம் ஒட்டிக் கொண்டுள்ளது. தரமான, அதிரடி ஆட்டத்தை இன்னமும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம். மத்திய ஓவர்களின் போது மட்டும் ஆஸ்திரேலியா நெடுஞ்சாலையில் வெளிப்பட்ட முயல் போகி ஆகி விடுகிறது. பொந்து தோண்டி தங்களுக்கே குழி பறிக்கிறார்கள். முதல் நான்கு வரிசை ஆட்டக் காரர்கள் நாற்பது ஓவர்கள் வரையில் தங்குவதும், வேக வீச்சாளர்கள் ஒவ்வொரு முறையும் ஆரம்ப விக்கெட்டுகளை தாராளமாய் வீழ்த்த வேண்டும் போன்ற இதற்கான வெளிப்படையான நிவாரண முறைகள் என்பது வரைபடத்துடன் இந்திய மாநகரங்களில் சுற்றுலா பயணிகள் நால்திசையும் பார்த்து திரிவது போல என்பதால் ஆஸி அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ஒரு பார்வையாளன் மீண்டும் பிரார்த்திக்க மட்டுமே முடியும்.
உள்நாட்டு குடுமிப்பிடிகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக பாகிஸ்தானும், போர் மற்றும் மக்கள் தொகை காரணமாக இலங்கையும் நெருக்கடி அணிகளாக என்றுமே பாதுகாப்பின்மையுடன் பொருதியபடியே இருந்து வந்துள்ளன. ஆனால் இந்த இரு அணிகளும் நெருக்கடிக்கு ஆக்ரோசமான நேர்மறையான எதிர்வினையையே செய்து வந்துள்ளன. அதனாலேயே கிரிக்கெட்டின் மிக வசீகரமான புல்லரிப்பு அணிகளின் முன்வரிசையில் உள்ளன. இரண்டு அணிகளும் ஆசிய சூழலுக்கு தோதான மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சை கொண்டுள்ளன. இங்குள்ள சீதோஷ்ண நிலைகுறித்து போதுமான அறிவை கொண்டுள்ளன. இதுவரை உலக கிரிக்கெட் ஆஸ்தான்கள் மற்றும் ஐ.சி.சியால் தொடர்ந்து புறமொதுக்கப்பட்டுள்ள காரணத்தால் இலங்கையும் குண்டு வெடிப்புகளால் கிரிக்கெட் தடை செய்யப்பட்டு மாதத்துக்கொரு அணித்தலைவரை பார்த்து தலை புண்ணாகி நெருக்கடிக்கு உள்ளாகி உள்ள காரணத்தால் பாகிஸ்தானும் தாங்கள் இருக்கும் பிரம்மாண்ட இருளின் பிராந்தியத்தில் இருந்து வெளிவந்து தம்மை நிரூபிக்க இது ஒரு அற்புதமான நாடகீய தருணம் என்பதால் இவர்களின் மறுவரவை பார்வையாளன் ஆர்வமாக எதிர்நோக்கக் கூடும். எந்த ஒரு சிறந்த ஆட்டத்தொடரும் அணிகளின் சற்றும் எதிர்பாராத கீழிருந்து மேலான சாகச பயணங்களை காட்சிப்படுத்த வேண்டும். மேலிருந்து கீழ்நோக்கும் கிரிக்கெட்டின் தேவதையும் கீழிருந்து மேல் நோக்கும் பார்வையாளனும் சமதளங்களை வெறுக்கிறார்கள்.
அடுத்து வாய்ப்பு சதவீதம் என்னவாக உள்ளது?
இந்த உலகக் கோப்பை தொடரின் போது ஆடுதளங்களும் பனிப் பொழிவும் தான் சமாளிக்க முடியாத ஆனால் முடிவுகளை திசை திருப்பும் காரணிகளாக இருக்க போகின்றன. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாட்டு ஆடுதளங்களில் ஆட்டம் சீராகவே 100 ஓவர்களும் இருக்கும். டாஸ் வெல்வதை கடந்து இரு சாராருக்கும் வாய்ப்புகள் சமமாகவே இருக்கும். இதனால் அங்கெல்லாம் ஆட்டம் வெல்ல திறமையும் மனவலிமையும் போதும். ஆனால் இந்தியாவில் நிறைய தந்திரம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆட்டமுறையை மாற்றிக் கொள்ளும் தகவமைவு திறன் வேண்டும். இங்கு ஆடுதளத்தின் சுபாவத்தை கணிப்பது சிக்கலாகவே இருக்கும். பகலிரவு ஆட்டங்களில் பனி எந்தளவுக்கு பெய்யப் போகிறது என்பது குறித்த நுட்பங்களும் முக்கியம். ஆடுதளம் இரண்டாவது இன்னிங்ஸில் தடாலடியாக மாறலாம். அல்லது தொடர்ந்து தட்டையாகவோ மிக மெதுவாகவா இயங்கலாம். எதற்கும் தயாராக உள்ள ஒரு ரப்பர் மனநிலை கொண்ட அணிகள் தாம் இந்த உலகக் கோப்பை தொடரில் தாக்குபிடிக்க முடியும். விவியன் ரிச்சர்ட்ஸ் மிகச் சிறந்த களத்தடுப்பு அணியே வெல்லும் என்கிறார். இர்பான் பதான் மிகச் சிறந்த பந்து வீச்சு அணியை ஆதரிக்கிறார். அதிகமாக ஓட்டங்களை குவிக்க கூடிய அணிக்கே கோப்பை வாய்ப்பு என்பது ஏறத்தாழ அனைத்து அணித்தலைமைகளின் நம்பிக்கையாக இருக்கிறது.
சவுரவ் கங்குலி, அனில் கும்பிளே உள்ளிட பல முன்னாள் வீரரகளும் இம்முறை உலகக் கோப்பை படையெடுப்பு யாரும் பிரதமராகக் கூடிய ஜனநாயக பாணியில் இருக்கும் என்கிறார்கள். நிபுணர்களின் பொதுவான ஒரு வாயுபிடிப்பு கணிப்பு இதுவாகவே உள்ளது. வானில் கோள்களின் இருப்பு நிலை மூட்டமாகவே உள்ளது. உறுதியாக கணிக்க யாரும் தயாராக இல்லை. இது ஏன்? சமீபமாக ஆசியாவில் முக்கிய அணிகள் மொத்தமாக பங்கேற்ற பெரும் ஆட்டத்தொடர்கள் எவையும் நிகழவில்லை என்பதே முக்கிய காரணம். தனித்தொடர்கள் நடந்தன. ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வந்து ஒரு ஒருநாள் தொடரை வென்று மற்றொன்றை இழந்தது. இலங்கையும் தென்னாப்பிரிக்காவும், நியூசிலாந்தும், இங்கிலாந்தும் இந்தியாவில் இழக்க மட்டுமே செய்தது. இலங்கையில் மேற்கிந்திய தீவுகள் தொடரை இழந்தது. பாகிஸ்தானில் கிரிக்கெட் சமீபமாக மறக்கப்பட்டு விட்டது. வங்கதேசத்தில் நடந்த பரீட்சார்த்த ஆட்டங்களை யாரும் பொருட்படுத்த தயாராக இல்லை. அடி வாங்கியும் கொஞ்சம் கொடுத்தும் வங்க தேசம் வீங்கிப் போய் மட்டும் உள்ளது. இத்தொடரில் அந்த மனோதிடம் பயன்படும். ஆசிய பிராந்தியத்தில் ஐரோப்பிய அணிகளின் மீள் சறுக்கல்கள் பொதுவான கிரிக்கெட் தர்க்கத்தை குழப்புகிறது. காரணம் அடிவாங்கியவர்கள் பயில்வான்கள்; மிக வலிமையான அணிகள். அவர்கள் இழந்தது தனித்தொடர்கள் என்பதால் ஒரு பொதுத் தொடருக்கு அவ்விளைவுகள் செல்லுபடியாகாது. அடுத்து வெற்றிபெற்ற ஆசிய நாடுகள் முதிர்ச்சி அடையாதவை. கணிப்புகளை எளிதில் ஏமாற்றி விடும் எதிர்பாரா தன்மை கொண்டவை.
தால்ஸ்தாயின் “போரும் வாழ்வில்” போர் திட்ட விவாதத்தின் போது ரஷ்யாவின் கிழட்டு தலைமை தளபதி ஒருவர் நன்றாக குறட்டை விட்டு தூங்கி விடுவார். அவர் போரை அதன் போக்கில் வளர விட்டு வேடிக்கை பார்ப்பார். பல அணிகள் பங்கேற்கும் நீண்ட தொடர்களில் அணிகள் தங்களுக்கான ஒரு வெற்றிக் கலாச்சாரத்தை மெல்ல மெல்ல உருவாக்கி கொள்கின்றன. பின்னால் எத்தனையோ விளக்கங்கள் உருவாக்கப்பட்டாலும் உண்மையில் இந்த கலாச்சாரம் அணிக்குள் எப்படி ஏற்படுகிறது என்பது அணி வீரர்களுக்கே தெரிவதில்லை. ஒரு பேராற்றல் அவர்களை செலுத்துகிறது அல்லது அவர்கள் அப்பேராற்றலோடு ஒன்று கலக்கிறார்கள். பலமும் பலவீனங்களும், ஆடுதளங்களும், பனிப் பொழிவும், சுண்டி விழும் நாணயத்தின் விதியும் மீடியா விவாதங்களோடு சேர்த்து அமைதியான முதலிரவு அறைக்கு வெளியே இருக்கின்றன.
ஆக கிழட்டு ரஷ்ய படைத்தளபதி புரிந்து கொண்டது போல் விவேகமான பணிவு தான் வெற்றிக்கு பின்னுள்ள ஒரே தந்திரம். அத்தனை இரைச்சல்கள் களேபரங்களுக்கு மத்தியில் யார் அமைதியை உற்றுக் கேட்கிறார்களோ அவர்களுக்கான இக்கோப்பை.
