நீரிழிவு தீவிரமான வாழ்வு முறை மாற்றங்களை கோருவது என்பது நமக்கு தெரியும். காப்பியில் சர்க்கரையை தவிர்க்கும் அளவுக்கு அது எளிதல்ல. உதாரணமாய், செரிமானத்தின் போது எளிதில் சர்க்கரையாக மாறக் கூடிய மாவுச் சத்து உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும், அது என்ன உணவுப் பொருள் என்று தெரிய வேண்டும்? இனிப்பில்லாத ஆனால் கலோரி எனப்படும் ஆற்றல் கணக்கு அதிகமான உணவை தவிர்க்க அல்லது குறைக்க வேண்டும். இனிப்பில்லாத ஆனால் காரமான பொரித்த தின்பண்டம் சாப்பிடக் கூடியதல்ல என்று தெரிய வேண்டும். ரத்த சர்க்கரையை உயர்த்தக் கூடிய சங்கதிகள் நம் உணவில் மறைமுகமாகவே அதிகம் உள்ளது. சுருக்கமாக ஒரு வாய் அருந்தும் முன் மென்று முழுங்கும் முன் யோசித்து அலச வேண்டும். இது மனிதனின் உணவுக் கலாச்சாரத்துக்கு பொதுவான இயற்கை பண்புக்கே விரோதமானது. இதனாலே உணவு முறை மாற்றங்கள் ஆரம்ப கால நீரிழிவாளனை எரிச்சலூட்டுகின்றன. யோசித்து உண்பது யோசித்து பின் புணர்வது போல். எங்கோ உதைக்கிறது!
இதனாலே நாம் இங்கு இது குறித்து யோசிக்கிறோம். குறிப்பாக குடி பற்றி. மது மற்றும் புகை பழக்கம் நிச்சயம் ரத்த சர்க்கரையை திமிற வைக்கும். ஆனால் நான் சமீபமாக படித்த ஆய்வொன்று மது சர்க்கரையை அளவை குறைக்கும் என்கிறது. குறிப்பாய் இதுவரை நீரிழிவு இல்லாதவர்களுக்கு அதை தவிர்க்க மது உதவும் என்கிறது இவ்வாய்வு. குறிப்பாய் மதுவுக்கு சர்க்கரை அளவை எகிறாமல் பார்க்கும் பண்பு உள்ளது. ஆய்வாளர்களை பொறுத்த மட்டில் ஒரு நாளைக்கு ஒரு பெக் குடித்தால் இருபது சதவீதம் வரை நீரிழிவு வரும் வாய்ப்பை தவிர்க்கலாம். சிக்கல் என்னவென்றால் இது ஐரோப்பிய பண்பாட்டுக்கு பொருந்தும் ஒரு கலாச்சார பழக்கம். அவர்கள் சாதாரணமாக்வே உணவின் போது ஒரு பெக் மது அருந்தக் கூடியவர்கள் தாம். அது பெரும்பாலும் வைனாக இருக்கிறது. ஆனால் வைனும் பீரும் அதிக கலோரிகள் கொண்ட மது வகைகள். விஸ்கி போன்று ஹாட்டானவை ஒப்பீட்டளவில் குறைந்த ஆற்றல் உள்ளவை. அதாவது சர்க்கரையை அதிகமாய் எகிற வைக்காது. ஆனால் ஒரு பெக் விஸ்கி ஒரு கோப்பை சர்க்கரை சேர்க்காத பழரசத்தை போன்றது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். இயற்கையான சர்க்கரை அல்லது கலோரிகள் அதில் உண்டு. நீரிழிவாளர்கள் தினமும் குடிக்கலாம். ஆனால் மூன்று விசயங்களை கணக்கில் கொள்ள வேண்டும்.
முதலில் தொடர்ச்சியாக ரத்த சர்க்கரையை பரிசோதிக்கும் பழக்கம் கொண்டவராக நீங்கள் இருக்க வேண்டும். இதை அக்யு செக் போன்ற ரத்த சர்க்கரை சோதனை எந்திரங்கள் மூலம் எளிதாக ஐந்து நொடிகளில் செய்யலாம். வாரத்துக்கு சில முறையேனும் இவ்வாறு செய்தால் உங்கள் ரத்த சர்க்கரை அளவாக உள்ளதா என்று அறியலாம். கட்டுப்பாடில் உள்ளதென்றால் முதல் பச்சை விளக்கு.
அடுத்து குடிக்கும் முன் அந்த வேளையில் ஒரு முறை சோதித்து பார்ப்பது நல்லது. அப்போதும் கட்டுப்பாட்டில் இருந்தால் மிகவும் நல்லது. ஒரு பெக் மட்டும் சாப்பிடப் போகிறீர்கள் என்றால் உங்கள் வழக்கமான உணவில் கொஞ்சம் குறைத்து கொள்ளலாம். உதாரணமாய் ஒரு தோசை அல்லது சப்பாத்தியை குறைக்கலாம். சைட் டிஷ்ஷாக வெள்ளரிக்காய் தக்காளி, அதிக எண்ணெயில்லாமல் செய்த காலி பிளவர் மசாலா போன்ற சாதுவானவற்றை உட்கொள்ளலாம். முக்கியமாக குடிக்கும் ஆர்வத்தில் அல்லது குடித்த போதையில் வழக்கமாக எடுக்கும் மருந்தை மறக்காதீர்கள். மறந்தால் நீங்கள் அடுத்த நாள் ஒருவேளை ஆஸ்பத்திரி படுக்கையில் விழிக்கலாம். இன்சுலின் எடுப்பவர்கள் பெக்குக்கு ஏற்றபடி இன்சுலின் மற்றும் உணவு கணக்கை கூட்டி குறைக்கலாம். எல்லாம் மிதமாகத் தான்.
மூன்றாவதாக, குடித்து இரண்டு மணிநேரம் கழித்து ரதத சர்க்கரையை பரிசோதிக்கலாம். நானூறை தாண்டி விட்டால் நள்ளிரவு என்றாலும் மருத்துவரை அழையுங்கள். இல்லாவிட்டால் முன்னர் சொன்னது போல் மருத்துவமனை படுக்கையில் வழக்கமான சினிமா வசனத்துடன் விழிப்பீர்கள்.
ஒரு மன திருப்திக்காக கொஞ்சம் குடித்து அதிகமாய் சலம்பலாம். எனக்கு கொஞ்சம் சாப்டாலே ஏறிடும் என்று ஒரு வசனம் சேர்த்துக் கொள்ளலாம். இத்தனையும் கொஞ்ச நாளில் பழகி விடும்.
ஆனால் ... குடிக்க ஆரம்பித்து அன்றைய கலாச்சார மனநிலையில் ஒன்றிய பின் இத்தனையும் நினைவில் வைத்திருப்பது எப்படி என்று தான் தெரியவில்லை!
