Skip to main content

127 Hours: “இந்த பாறை இங்கே எப்படி வந்தது?”




டேனி பாயிலின் புதிய படமான 127 Hours பாதியில் ஆரம்பித்து பாதியிலே முடிகிறது. ஒருநாள் கிரிக்கெட் ஆட்டமொன்றின் மிகச்சிறந்த மத்திய ஓவர் ஆட்டப் பகுதியில் சாத்தியப்படும் அளவுக்கு திகிலும் சாகசமும் சுவாரஸ்யமும் படிப்பினைகளும் கொண்டுள்ளது. ஆழமான அமெரிக்க பள்ளத்தாக்கு ஒன்றில் பாறை இடுக்கில் வெளியேற முடியாத படி மாட்டிக் கொண்ட ஆரன் ரேல்ஸ்டன் எனும் மலை ஏற்ற பயணி ஒருவன் 5 நாட்கள் போராடி வேறு வழியின்றி தன் கையை அறுத்து தப்பிக்கிறான். இந்த மெலிதான கதைச் சரடை ஏற்கனவே அறிந்த நாம் எப்படி இதைக் கொண்டு படம் செய்யப் போகிறார்கள் என்ற ஆர்வத்திலோ, பேராபத்தில் இருந்து மீளும் வழமையான ஹாலிவுட் சாகச காட்சிகள் காணும் கிளுகிளுப்பிலோ 127 மணிநேரங்களை பார்க்க அமர்கிறோம். ஆனால் பாய்ல் இரண்டையும் உத்தேசிப்பதில்லை. ஹாலிவுட்டின் வெற்றிகர சூத்திரப்படி இப்படம் ஒரு சிக்கலை முன்வைத்து அதை படிப்படியாக சிரமங்களுக்கிடையே அவிழ்த்து காண்பிப்பதில்லை. பிரச்சனையும் அதன் முடிவும் மட்டுமே படத்தில் பிரதானப்படுத்தபடும் காட்சிகள். ஸ்லோமோஷனும் உக்கிகரமான பின்னணி இசையும் நாடகீயமும் இக்காட்சிகளில் மட்டுமே குவிக்கப்படுகின்றன. இருந்தும் திரைக்கதை இந்த இரண்டு உச்சப் புள்ளிகளில் அமைக்கப்படவில்லை. 127 மணிநேரங்களில் பாயிலின் சினிமா மொழி இரண்டு கதைகளை சொல்லுகிறது. ஒன்று, உடல் மற்றும் மனரீதியாக கடும் நெருக்கடிக்கும் வலிக்கும் உள்ளாகும் ஒருவனின் மனப்பிராந்தி, கடும் அவநம்பிக்கைக்கும், வெறுப்புக்கும், உற்சாகத்துக்கும், தன்னம்பிக்கைக்குமாய் அலைபாயும் அவன் எண்ணங்கள். இதன் தொடர்ச்சியாக இச்சை மனித மனதின் மிக அடிப்படையான உந்துதல் என்பதை, மனித உய்வை செலுத்தும் ஆற்றல்களில் ஒன்று என்று அவதானிக்கிறார். அடுத்தது, பாறை இடுக்கில் கை மாட்டி ஐந்து நாட்கள் தவிக்கும் தனியனான நாயகனுக்கு உறவுகளும், அவை தரும் ஆதரவும் நிலைப்பும், அன்பும் தனது வாழ்வில் எத்தனை முக்கியம் என்பதை புரியவைக்கும் ஒரு படிப்பினை கதை. இரண்டு கதைகளையும் தீவிரமாக காட்சிப்படுத்துவதில் பாயில் எந்தளவு வெற்றி அடைகிறார் என்பதை நாம் யோசிக்க வேண்டும். மற்றபடி தொலைந்தால் தேடிக் கிடைக்காத ஒரு ஊசிக் கதையை கொண்டு இயக்குநரால் ஈடுபாட்டுடன், தொய்வின்றி படத்தை நகர்த்த முடிந்திருக்கிறது; இது சாதனை அல்ல; பாய்லிடம் நாம் எதிர்பார்க்கக் கூடியதே. அவரால் வேறென்ன செய்ய முடிந்திருக்கிறது என்பதை பார்ப்போம்.
படத்தின் முதல் காட்சி ஒரு ரக்பை ஆட்ட அரங்கில் ஆர்ப்பரிக்கும் பார்வையாளர்களை காண்பிக்கிறது. பின்னர் சோர்வு மயக்கத்திலும் மரண பீதியிலும் இக்காட்சி நாயகனின் நினைவில் மீள்கிறது. அங்கு அந்த பெரும் கொண்டாட்ட சூழலில் தான் அவன் தன் காதலியை பிரிகிறான். பிரியும் போது காதலி சொல்கிறாள் “நீ தனிமையில் துயரப்படப் போகிறாய் என்று. ஒரு சாப வாக்கு போல் அவனுக்கு பின்னால் அது அவன் நினைவில் மோதுகிறது. அந்த ஆர்ப்பரிக்கும் அரங்கு தான் அவனது அதுவரையிலான வாழ்வு எனலாம். அங்கிருந்து வாழ்வின் குரூரமான அமைதியின் பள்ளத்தாக்கில் தவறி விழும் அவன் நிஜம் அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாத எளிய ஒரு சமகோட்டுப் பாதை என்று அறிகிறான். அந்த விபத்து இதை கற்றுக் கொடுக்கும் ஒரு மார்க்கம். விபத்து நிகழும் வரையிலான ஒவ்வொரு காட்சியையும் பாயில் நாயகனின் பிரதானமான ஆளுமைப் பண்பு ஒன்றை நிறுவுவதற்கே செலவழிக்கிறார்: அவசரம், சாகச விழைவு, வேகம் ஆகியவற்றை முடிச்சிட்டால அவனது ஆளுமை உருவாகிறது. வாழ்வை ஒரு தனித்த ஒற்றைபட்டையான சாகசப் பயணம் மட்டுமேயாக அவன் பார்க்கிறான். இதனால் பெற்றோருக்கும், காதலுக்கும் ஆன இடம் அவனது பரப்பில் சுருங்குகிறது. பள்ளத்தாக்கில் இரண்டு வழிதவறின அழகான யுவதிகளை சந்திக்கிறான். ஆனால் அவர்களின் காமம் அவனை தூண்டவே இல்லை. இவ்விசயம் பிற்பாடு அப்பெண்களுக்கும் வியப்பளிக்கிறது. காமம் தொடர்பான மற்றொரு நினைவு காட்சி வருகிறது. படுக்கையில் காதலியோடு இருக்கிறான். அவள் கேட்கிறாள் “உன் இதயத்துக்கான ரகசிய சங்கேத எண் என்ன?
அதற்கு அவன் “அதை சொல்லி விட்டால் நான் உன்னை கொன்று விட வேண்டுமே. அடுத்து அப்பெண் அவனது ஆண்குறியை வருடியபடி “கண்டுபிடித்து விட்டேனே என்கிறாள். இதற்கு அவனிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எதிர்பாராமைகளும் பள்ளத்தாக்கின் ரகசியங்களுமே தனது இதயத்தின் திறவுகோல் என்று நினைத்தவனுக்கு பின்னர் நிகழும் விபத்து உடல் தான் உடலின் சாவி என்று கற்றுக் கொடுக்கிறது. மனது உடலின் ஒரு முகமூடி மட்டும் தான். உடல் ஒரே மொழி தான் பேசுகிறது. மனம் அதை பல்வேறு லிபிகளில் மொழிபெயர்க்கிறது. ஆக மலை இடுக்கில் தொங்கியபடி அவன் தான் புறக்கணித்த காதலியை கற்பனையில் வருவித்து தன் மார்புக் கணுக்களை தானே வருடுகிறான். மற்றொரு காட்சியில் வலுவிழந்து துவண்டு போன தன்னை உயிர்ப்புடன் வைக்க கேம்கார்டரில் பதிவான இளம் யுவதிகளின் மார்பகப் பிளவை பார்த்து சுயமைதுனிக்க முயல்கிறான். இந்த “சுயதரிசனத்தினால் பிறகு தன் மீதே அவனுக்கு கசப்பு ஏற்படுகிறது. விபத்தில் உயிர் சொட்டிக் கொண்டிருக்கும் போது அவன் தனக்கு மிக விருப்பமான அனுபவங்களை அசை போடுகிறான். அம்மா, அப்பா, தங்கை, பள்ளத்தாக்கு குன்று ஒன்றில் பார்த்த முதல் சூரியோதயம், காதலி, சுவையான உணவுகள், பீர், குளிர்பானங்கள், நடன விருந்து, பனிச்சாலை ஒன்றில் காருக்குள் ஆடையில்லாத ஆண் பெண்கள், அவர்களில் ஒருத்தி சொல்லும் ஐ.லவ்.யூ. ஏன் அவனது மலை ஏறும் சாகச அனுபவம் ஒன்று கூட அவனது மனப்பிரமைகளில் தோன்றுவதில்லை?. அவனது மனதுக்கு மிக நெருக்கமான சாகச மயிர்க்கூச்செறிதல்களை அந்த மலை இடுக்கில் அவன் சற்றும் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. ஏன்?
காரணம், மனித மனம் எத்தனை சிக்கலானதோ அத்தனை எளிமையானதும் என்பதே. அந்த பள்ளத்தாக்கு விபத்தின் போது தான் அவன் தன் மனதை உடலின் வழி பார்க்கிறான். பெரும் நோக்கங்களும், அக்கறைகளும் கொண்ட ஒரு வரலாற்றின் நீட்சியாக தோன்றினாலும் மனிதனின் ஆழ்மன குகையில் எதிரொலிக்கும் ஆசைகள் உணவு, காமம் மற்றும் உய்வுக்கான ஊக்கம் தான். உடலின் மனம் இந்த மூன்று சொற்களாலான ஒரு எளிய மொழியைத் தான் பேசுகிறது. கடுமையான வேதனையின் போது அவன் உடல் விழித்து அதை பேசத் தொடங்குகிறது.

அடுத்து ஆரன் வாழ்வை புரிந்து கொள்ள எத்தனிக்கும் ஒரு சரடு படம் முழுக்க ஓடுகிறது. இந்த தேடலின் துவக்கமும் சேருமிடமும் பாறைகள் தாம். ஒரு நினைவுக் காட்சியில் அவன் ஒரு பெரும் பாறை உருளையில் ஏறி நின்று “இப்படி ஒரு பாறை எப்படி இங்கு வந்திருக்கக் கூடும் என்று நண்பனிடம் கேட்கிறான். அடுத்து மலையில் சிறு பாறைகளில் மிதித்து ஏறும் போது வழி தவறிய யுவதிகளில் ஒருத்தி கேட்கிறாள் “இவை நகருமா? நகர்ந்து வழுக்கி விட்டால்?. அதற்கு அவன் “பாறைகள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. இன்று நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவை இருந்த இடத்தில் இருந்து நகராது என்கிறான். பின்னர் அப்படி ஒரு அதிர்ஷ்டம் கெட்ட நொடியில் ஒரு பாறை நகர்ந்து உருண்டு அவன் கை மீது விழுந்து அவனை இடுக்கில் மாட்ட வைக்கிறது. அதைப் பற்றி தனக்குள் அலசும் அவனுக்கு தோன்றுகிறது தான் இந்த பாறையை எதிர்நோக்கித் தான் இதுநாள் வரை ஒவ்வொரு நொடியும் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்று. சாத்தியம் தான். நகராத நகரும் பாறைகள் மேல் நாம் நடந்து கொண்டே தான் இருக்கிறோம். உருளாத போது பாறைகள் வாழ்வை உயர் லட்சியங்கள் கொண்டதாக நம்பிக்கை மிகுந்ததாக காட்டுகிறது. சம்பவங்களின் கோர்வையில் சின்ன பிசிறு நிகழ்ந்தால், பாறைகள் உருளத் தொடங்கினால், பெரும் கசப்பின் பாலையாக வாழ்வு அவநம்பிக்கையை மட்டும் தருகிறது. அவன் தன் காலுக்கு கீழ் தரை ஸ்திரமாக உள்ளதா என்பதை பொறுத்து மாறி மாறி இரு நிலைப்பாடுகளையும் எடுக்கிறான். மலை ஏறக் கிளம்பும் முன் பல்பொருள் அங்காடிக் கடை நண்பன் ஒருவனிடம் “என் வாழ்வில் எல்லாமே சிறப்பாய் தான் நடக்கும் என்று கர்வத்தோடு சொல்கிறான். இந்த வசனம் பின்னர் விபத்தில் மாட்டின பின் வரும் 127 மணி நேரங்களில் அவனுக்கு மீள மீள நினைவில் வருகிறது. ஏனெனில் தன் வாழ்வு இந்த நம்பிக்கைக்கு நேர்மாறான ஒன்றானது என்று அவனுக்கு தோன்றி விடுகிறது. அழிவை நோக்கின ஒரு மாயப் பயணம். இறுதியில் பாறை இடுக்கில் இருந்து தப்பித்து கிளம்பும் போது அவன் நேர்மறை சிந்தனை பற்றி முத்திரை வசனங்கள் ஒன்றும் சொல்லுவதில்லை. நேர்மறை அணுகுமுறையின் அவசியம் பற்றி அழுத்திச் சொல்லும் காட்சிகளையும் கிளைமேக்சில் டேனி பாயில் அமைக்கவில்லை. மேலோட்டமாக பார்க்கும் போது இப்படியான கிளைமேக்ஸ் பார்வையாளனுக்கு தட்டையானதாக தெரியலாம். ஆனால் பாயில் இதை திட்டமிட்டே இப்படி எளிமையானதாக ஆர்ப்பாட்டமற்ற தாக அமைத்திருக்கிறார்.

நேர்மறையோ எதிர்மறையோ இந்த இரண்டு அணுகுமுறைகளும் உண்மை அல்ல. உருளாத, உருண்டோடும் பாறைகள் மீது நாம் நடந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே உண்மை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...