Skip to main content

தமிழில் ஏன் இத்தனை கவிதைகள் எழுதப்படுகின்றன?


 விசிட்டிங் கார்டுகளுக்கு அடுத்தபடியாய் தமிழில் அவசரமாய் பிரசுரம் ஆவது கவிதைத் தொகுப்புகள் என்று நமக்குத் தெரியும். தமிழ்க்கவிதையின் நோய்மை இது என்று தீர்ப்பளித்து பேனாமுனை உடைப்பதும் எளிது. கவிதைக்கான் ஆதார நுட்பமோ சொல்வதற்கு ஏதாவது சங்கதியோ இல்லாதவர்கள் இப்படி மானாவரியாய் எழுதி அழகான அட்டை வடிவமைப்புடன் வழவழ தாள்களில் முன்னணி பதிப்பக முத்திரையுடன் புத்தகமாக்குவதன் உத்தேசம் என்னவாக இருக்கும்? இன்று ஒரு பதிப்பகம் சென்று 2010இல் அவர்கள் வெளியிட்ட எட்டு தொகுப்புகளை புரட்டி படித்தபின் ஒரு குமட்டல் போல் இந்த கேள்வி மீளமீள தோன்றிக் கொண்டிருந்தது. ஏன் கட்டுரைகள் அல்லது கதைத் தொகுப்புகளை விட கவிதைகள் அதிகம் தொகுப்புகளாகின்றன?
வெளிப்படையான காரணங்கள்: தமிழனுக்கு கவிதை எழுதுவது அவன் ரெண்டாயிரமாண்டு மரபின் தொடர்ச்சியாக இருக்கலாம். சில ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் மந்தையை ஒழுங்கி படுத்தின முன்னோடி நினைவில் மனிதர்களின் உள்ளங்காலைக் கடித்து வழிப்படுத்துவது போல். அல்லது வீட்டுப் பூனை பல்லி பிடிப்பது போல். குருதியில் ரெண்டறக் கலந்த ஒன்றாக கவிதை நமக்கு இருக்கிறது. அதைப் போன்றே வாசகர் மற்றும் பொதுமக்கள் இடத்து இன்றும் எழுத்தாளன் என்றால் கவிஞன் தான். கவிதைக்கு அடுத்தபடியாய் இங்கு மதிப்புள்ளது மேடைப் பேச்சுக்கு. உரை அறிவுஜீவுகளின் பரப்பாகவே இன்றும் உள்ளது.
கவிதை எழுதி பழகித் தான் பலரும் உரைக்கு வருகிறோம். இது உலகம் முற்றும் காணப்படுகிற பழக்கம் தான். நீட்சேவும் மார்க்வெஸும் சுராவும் ஜெயகாந்தனும் இந்த நீண்ட பட்டியலில் வருகிறவர்கள் தாம். மொழி விளையாட்டின், அதன் சங்கீதத்தின் மயக்கத்தில் இருந்து தான் வாசிப்பின் பின்னர் எழுத்தின் ஆரம்பம். ஓசையின் கிளர்ச்சி தான் மொழியின் முதல் படி. இப்படி கவிதை எழுதி தனக்கான அசல் திறமையை கண்டறிந்து கிளைபிரிந்து செல்பவர்கள் சமர்த்துகள். சிலர் கவிதைதான் தனது காண்டிப வில் என்று நம்பி ஊக்கத்துடன் நாணைப் பூட்டுகின்றனர். மிகப்பலர் ஹ்ட்லைட் வெளிச்சத்தில் உறைந்து நின்ற முயலைப் போல் ஒரு குழப்பத்தில் கவிதையிலேயே தங்கி விடுகின்றனர். அவர்களுக்கு மொழியுடனும் பண்பாட்டுடனுன் தங்கி நிற்பதற்கு கவிதையை எழுத வேண்டும். ஒருவித காலைக்கடன்.


அடுத்து வளவளவெனும் உணர்ச்சிகர கவிதை எழுதுவது ஆற்றல் சிக்கனமுள்ள செயல். ஒரு உந்துதலில் கொட்டித் தள்ளி இறுதியாய் புள்ளிகளை இணைத்து சீராக்கினால் கவிதை வடிவில் ஒன்று உருவாகி விடும். ஒரு கட்டுரைக்கு அல்லது நாவலுக்கு போல் மணிக்கணக்காய் உழைக்க வேண்டாம். அதிகமான பத்திரிகையில் பரவலாய் பிரசுரிக்கவும் கவிதைகள் எழுதுவது தான் உசிதம்.
கவிதை எழுதுவது நீத்தார் சடங்கு போல் ஒரு புனிதச் செயலாகவும் உள்ளது. மோசமான கட்டுரைகள் மற்றும் அசட்டுத்தனமான கதைகளுக்கு நிச்சயம் எதிர்மறை விமர்சனங்கள் வரும். கவிதையின் வடிவத்துக்குள் அபத்தமாக என்ன உளறி பிரசுரித்தாலும் அது அதிக கண்டனத்துக்கு உள்ளாகாது. தமிழ் சமூகம் கவிஞனை மரித்தவர்கள், முதியோர்கள், குழந்தைகள் என்ற வரிசையில் கடைசியாய் வைத்திருக்கிறது. மிகுந்த அனுசரணை மற்றும் காருண்யத்துடன் கவிஞர்கள் நடத்தப்படுகிறார்கள்.
கடைசியாகவும் முக்கியமாகவும் ஒன்று சொல்லலாம். கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது காதலை சொல்வது போல், பட்டாசு கொளுத்துவது போல், தற்கொலை முயற்சி போல் தள்ளிப் போடக் கூடாதது. என் முதல் கவிதைத் தொகுப்பை பிரசுரிக்க நான் தயங்கிய போது நண்பரும் இதழாசிரியருமான ஹமீம் முஸ்தபா
இப்படி சொன்னார்: “நீ இப்போது இக்கவிதைகளை வெளியிடுவது போல் பின்னெப்போதுமே சாத்தியப்படாது. தொகுப்பின் தரம், எதிர்வினை என்பதை விட வாழ்வின் இந்த ஒரு பருவத்தில் நீ விட்டு போகிற ஒரு அடையாளமாக இது இருக்கும். நாம் வேடிக்கையாய் அசட்டுத்தனமாய் எத்தனையோ செய்கிறோம் இல்லையா அது போல். ஆக கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது ஒரு கொண்டாட்டம். பிறந்த நாள், பூப்படைதல், சாந்திமுகூர்த்தம் போல். எண்ணற்று வெளியாகும் கவிதைத் தொகுப்புகளுக்கு பதில் சொல்லாமல் நாம் வாசகர்களும் விமர்சகர்களும் மௌனம் காப்பதன் கண்ணியம் புரிகிறதில்லையா?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...