Skip to main content

இந்தியா-பாக் T20 & டெஸ்டு கிரிக்கெட்: சறுக்கலின் வெவ்வேறு திசைகள்



20-20 உலகக் கோப்பையை வென்ற பின்னர் இந்தியா ஆடிய 20-20 ஆட்டங்களில் அதன் சாதனை அதிருப்திகரமானது. 22 ஆட்டங்களில் 12 வெற்றிகள் இது அனைவரும் அறிந்த சேதி: இந்தியா ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல 20-20 அணி அல்ல. ஒருநாள் ஆட்டத்தில் மட்டையாட்ட வலிமையை நம்பி சமாளிக்கிறோம். ஆனால் அதே பருப்பு 20-20-இல் எளிதில் வேகாது என்பதே உண்மை.
20-20-இல் நம் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு பலவீனத்தை மறைக்க முடியாது. ஆனால் கடந்த சில வருடங்களில் கிரிக்கெட், நிர்வாகம், அரசியல் என பல்வேறு தளங்களில் பெரும் நெருக்கடிகளையும் சறுக்கல்களையும் சந்தித்த பாக்கிஸ்தான் அணியின் T20 சாதனை அபாரமானது. 30 ஆட்டங்களில் 23 வெற்றிகள். இதுவரையில் இரு T20 உலகக் கோப்பைகளில் இறுதியாட்டம் வரை சென்றுள்ளது. ஒருமுறை கோப்பையை கைப்பற்றியது. டெஸ்டு ஆட்டங்களில் வாத்து போல் அடி வாங்கும் பாகிஸ்தானால் T20இல் துடிப்பாக ஆட முடிவது ஏன்?

இந்தியா 20-20 கிரிக்கெட் வகைமைக்கு உகந்தது என்ற கருத்துரு இரு காரணங்களால் உருவாகி நிலைபெற்றுள்ளது: உலகக் கோப்பை வெற்றி மற்றும் ஐ.பி.எல் ஆட்டத்தொடர். ஆனால் நமது மரபார்ந்த ஆட்டமுறையும் அணுகுமுறையும் 20-20க்கு ஏற்றதல்ல. பொதுவாகவே இந்திய உள்ளூர் கிரிக்கெட்டர்கள் மெத்தனமாக ஆடக்கூடியவர்கள். பொறுமையும், கவனமுமே இளமையில் இருந்தே அவர்களுக்குள் திருகி செலுத்தப்பட்டுள்ள பண்புகள். 80-களில் தோன்றிய இளைஞர்கள் சச்சின் மற்றும் திராவிடை முன்மாதிரிகளாக கொண்டு பயின்று வந்தவர்கள். அவர்களே தொண்ணூறுகளின் இறுதிவரை உள்ளூர் அணிகளில் முன்னணி வீரர்களாய் ஆடி வந்தவர்கள். அடுத்த தலைமுறை வீரர்கள் சேவாக் மற்றும் யுவ்ராஜை முன்மாதிரியாக கொண்டு வளர்ந்தவர்கள். இவர்கள் தற்போது சற்று அதிரடியாக உள்ளூர் ரஞ்சி ஆட்டங்களில் கூட ஆடி வருகிறார்கள். மிக சமீபமாகவே இந்த தடமாற்றம் நடந்து வந்துள்ளது. இந்தியாவின் கடந்த ஆஸி சுற்றுப்பயணத்துக்கு முன்னர் பாகிஸ்தான் உள்ளூர் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சேவாக் தலைமையிலான தில்லி அணிக்கு எதிராக ஒரு நான்கு நாள் ஆட்டம் ஆடியது. மட்டையாட்டம் மற்றும் பந்து வீச்சில் பாக் அணி மிக ஆவேசமாக இயங்கியது. விக்கெட்களை தக்க வைப்பதில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அதே அதிரடியில் விக்கெட்டுகள் சாய்ந்தன. ஆனால் வலுவான பந்து வீச்சு மற்றும் ஆவேச அணுகுமுறை காரணமாக அந்த ஆட்டத்தை அவர்கள் வென்றனர். இந்த ஆட்டம் முடிந்த பின் சில தில்லி அணி வீரர்கள் “பாக் மட்டையாளர்களின் தொழில்நுட்பம் பலவீனமானது. தடுப்பாட்டமே அவர்களுக்கு தெரியவில்லை” என்று மிகையான தன்னிறைவுடன் அவதானித்தனர். இதில் ஒரு சுவாரஸ்யமான உண்மை உள்ளது.



பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் நிதானித்து கவனமாக நெடுநேரம் ஆட வேண்டிய ஆட்டங்களில் எல்லாம் அவர்கள் கோட்டை விடுவதே வழமை. தங்குதடையற்ற ஆக்ரோசமே அவர்களின் வலிமை. இந்த பொருளில் பாக் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அதிக வேறுபாடில்லை. இதற்கு ஒரு காரணம் பாகிஸ்தானிய இளைஞர்கள் உள்ளூர் ஆட்டங்களில் பெரும்பாலும் 20-20 வகையான குறுகின ஆட்டங்களே ஆடி வளர்கின்றனர் என்பது. ஐ.பி.எல்லின் முதல் வருடத்தில் சோபித்த பாகிஸ்தானின் சொஹைல் தன்விர் அனாயசமாக யார்க்கர் வீசக்கூடியவர். இது குறித்து விசாரிக்கப்பட்ட போது சொஹைல் இப்படி விளக்கினார்: “ஒழுங்குமுறையான ஆட்டங்கள் ஆடுமுன்னே 20-20 வகையான ஆட்டங்களில் தான் நான் சிறுவயதில் இருந்தே ஆடி வந்தேன். இந்த ஆட்டங்களில் ஆடுதளம் தட்டையாக இருக்கும். லெங்த் பந்துகள் வீசவே முடியாது. இந்த ஆட்டங்களில் தாக்குப்பிடிக்க யார்க்கர் பந்துகள் எறிவதே ஒரே மார்க்கம்.”



இந்திய பந்து வீச்சாளர்கள் இத்தகைய அதிரடி சூழலில் உருவாகி வந்தவர்கள் அல்ல. ஆடும் லெங்தில் பந்து வீசவே அவர்கள் சிறுவயதில் இருந்தே பயிற்சியாளர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். உள்ளூர் மட்டையாளர்களும் அவ்வளவாய் அச்சுறுத்துபவர்கள் அல்ல. நமது வீச்சாளர்களுக்கு யார்க்கர்கள் வீசுவதற்கான அவசியமும் ஏறத்தாழ இல்லை எனலாம். இதனாலே இன்று வரையிலும் எதிரணி மட்டையாளர்கள் அடித்தாடும் போது நமது வேகப்பந்து வீச்சாளர்கள் பதற்றமாகி பனிச்சறுக்கு ஆடுகிறார்கள். ஸ்லோ பந்துகள் பிரபலமாகாத தொண்ணூறுகளில் இருந்தே இவற்றை சிறப்பாகவும் அதிகப்படியாகவும் வீசி வந்துள்ளவர்கள் மேற்கிந்திய தீவு அணியினரும் (பிராவோ, வால்ஷ்) பாகிஸ்தானியருமே (அப்துல் ரசாக், ஷோயப் அக்தர்) என்பது விதிவிலக்கோ எதேச்சையோ அல்ல. தமது முன்னோடிகளுடன் ஒப்பிடுகையில் சற்று அதிக அதிரடியாகவே ஆடிவரும் இந்திய இளந்தலைமுறை மட்டையாளர்களுக்கே உள்ளூர் பாகிஸ்தானியரின் ஆட்டம் வயிற்றை கலக்குகிறதென்றால் நமது இதுவரையிலான மெத்தன மரபை புரிந்து கொள்ளலாம்.

20-20 ஆட்டத்தை கோலாகல விழாவாக்கி சந்தைப்படுத்தியது இந்தியா தான். வெளிப்புற பொழுதுபோக்குகளோ விளையாட்டுகளோ இல்லாத ஒரு கலாச்சாரம் சினிமாவை T20 கிரிக்கெட் போன்ற மற்றொரு கேளிக்கை வடிவத்துடன் இனக்கலப்பு செய்து ஜிகினா ஆடை போர்த்திய அழகிய கோவேறு கழுதை ஒன்றை உருவாக்கியது. உள்ளார்ந்த பெரும் மாற்றம் ஒன்று நிகழாதவரை நாம் மேலும் இனக்கலப்புகளை முயன்று கொண்டே இருப்போம். ஆனால் ஆட்டக்கலாச்சாரத்தை பொறுத்தவரை T20 நமது கோப்பை தேனீரல்ல. ஆட்டநேரம் அதிகமாக ஆக நாம் மேலும் ஈடுபாடு மற்றும் ஆசுவாசத்துடம் ஆடுவோம். இதனாலே 50 ஓவர் ஆட்டமும், அதை விட டெஸ்டு ஆட்டமும் இந்திய அணி வீரர்களுக்கு தோதானதாக இருக்கிறது. ஐ.சி.சி டெஸ்டு அணிகள் பட்டியலில் நாம் முதலிடம் பிடிக்கவும் இதுவே காரணம். பாகிஸ்தானின் சறுக்கலும் முன்னேற்றமும் வேறு திசையிலானது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...