Skip to main content

சுஜாதா பட் கவிதைகள்


குஜராத்தில் பிறந்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் நவீன இந்திய கவிதையின் முகமாகத் திகழ்பவர் சுஜாதா பட். பிரியமும், வன்முறையும், இனத்துவேசமும் இவரது நுட்பமான கவிதைகளில் கூர்மையாகவும் அங்கதத்துடனும் எதிர்கொள்ளப் படும் கருக்கள். இவரது மூன்று சிறந்த கவிதைகளை இங்கு தமிழாக்கியுள்ளேன்.

ஷிரோத்கர் தையல் 



ஷிரோத்கர் தையலை கண்டுபிடித்தவரின் 

மகன் நான் பிறப்பதற்கு ஒரு வருடம் முன் 

என் அப்பாவுடன் பணி புரிந்தார் 

திசு வளர்ப்பு முறை கற்றவாறே 


எதோ பயன்படப் போகிறது என்பது போல் 

இந்த சிறு விஷயத்தை நினைத்துக் கொண்டேன் 

-- தகுந்த காலம் வரும்வரை 

உன்னை என்னுள் பத்திரமாய் வைத்திருக்க -- 

ஷிரோத்கர் தையலை 

என் கருவறை வாய்க்குள் தைக்கப் போகும் 

மருத்துவர்களை எதிர்பார்த்து 

ஆஸ்பத்திரி கட்டிலில் கிடக்கையில் 




என் அம்மாவின் அம்மாவுக்கு 


கற்பனை செய்து பாருங்கள் 

காந்தியடிகளுக்கு அது இருந்திருந்தால் -- ஒருவேளை அந்த தவறான் குரோமோசோம் -- 

சர்க்கரையை ஊன்ம ஆக்கச்சிதைவு மாறுபாடு செய்ய இயலாமை -- 

இத்தனை உண்ணாவிரதங்களையும் 

ஒருக்காலும் தாங்கியிருக்க மாட்டார் -- 

உன்னைப் போல் 

மௌனமாய் கோமாவுக்குள் சென்றிருப்பார் 



மராத்தியிலிருந்து ஒரு ஞாபகம் 


இந்த ஞாபகம் 

தண்ணீரின் ஓசையிலிருந்து ஆரம்பிக்கிறது 

விட்டுப் போகாத ஞாபகம் இது 

இஞ்ஞாபகம் மராத்தியிலிருந்து வருகிறது 

நள்ளிரவில் 

மூன்று வயது சிறுமியின் தாகத்திலிருந்து 

ஆரம்பிக்கிறது இஞ்ஞாபகம் 


அங்கு ஓடும் நீரின் ஓசை 

- மென்மையாய் - 'ஸ்...' எனும் சீற்றொலி போல் 


அம்மாவருகில் தம்பிப் பாப்பாவின் ஆர்ப்பாட்ட உறக்கம் -- 

தண்ணீர் வேண்டுகிறாள் சிறுமி 


அப்பா அறைக்கு வெளியே செல்கிறார் 

ஆனால் திரும்பவில்லை -- 

கொட்ட விழித்துக் கிடக்கும் 

மூன்று வயது சிறுமியின் பொறுமையின்மை -- 


அப்பாவைத் தேடி 

வாசல் வரை நடந்தவள் 

பின் அங்கேயே நின்று விட்டேன் 

கையில் கிண்ணம் எந்தியவாறு அவர் 

சமையலறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் 

ஆனால் என்னை பொறுமை கொள்ளவும் 

ஸ்தம்பித்துப் போகவும் செய்தது 

எங்கள் நடுவே 

தரையில் கிடந்த பாம்புதான் -- அது ரொம்பவே இடத்தை ஆக்கிரமித்தது -- 

அது முடிவற்றுத் தோன்றியது -- 

எறத்தாழ மரங்களிடையே தெரியும் நிலவொளி போன்ற 

வெள்ளிய பச்சை -- 

அப்பா அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றிய போது 

அது ரத்தம் சொரிந்து கொண்டே இருந்தது -- அதன் பிளந்த தோலிலிருந்து 

பெருகி ஓடிய செம்மையை ஒருபோதும் மறக்க முடிந்தததில்லை 


பல வருடங்களுக்குப் பிறகு 

அதைப் பற்றி பேசுகிறோம் 

ஒரே சாட்சிகளான நானும் அப்பாவும் 

சமையலறைக்குள் அது எவ்வாறு பாய்ந்தது என்று விவரிக்கிறார் -- 

அதை விரட்ட வேண்டியிருந்தது வருத்தமளிக்கிறது 

ஆனால் சமையலறைக்குள் அது ஒளிந்து விடவும் கூடாதே -- 

'அதைக் கொல்ல முடிந்தது அதிர்ஷ்டம்தான்', அவர் சொல்கிறார் 

இந்த வருடங்களுக்கு எல்லாம் பிறகு 

முதன்முறையாய் 

அதைப் பற்றி பேசுகிறோம் 

விருப்பமின்றியே 

சாகும்வரை அதை ஒரு குச்சியால் 

நெடுநேரம் ஓங்கி அடிக்க நேர்ந்ததை 

பிறகு முடிவாய் அதன் மேல் 

மண்ணெண்ணெய் ஊற்றினார் -- 

பிறகு தரையை சுத்தம் செய்யும் முன் 

அவர் அதை சேகரித்து ஜாடியில் இடுவதைப் பார்த்தேன் 


காலையில் அப்போதும் அம்மா உறங்குகையில் 

அவர் முகமும் செய்கைகளும் நினைவுள்ளது -- 

மேலும், நிதானத்துடன் ஆனால் அவசரமாய் விரைந்து 

பாம்பைக் கொண்ட ஜாடியைத் தூக்கியவாறு 

அவர் வேலைக்காய் ஆராய்ச்சிக் கூடம் சென்றதும் 








Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...