Skip to main content

Posts

Showing posts from June, 2022

உப்புமாவும் குத்துச்சண்டையும்

"காகித மலர்களில்" எனக்கு மிகவும் பிடித்த இடம் இது. விசுவம் - அனேகமாக எல்லா ஆய்வாளர்கள், எழுத்தாளர்களையும் போல - அறிவுச் செயல்பாடு, சிந்தனை, அரூபமான படைப்பாக்கம் மீது அவநம்பிக்கை கொள்கிறான். ஏனென்றால் அவை புலனுலகில் இடமற்றவை. அறிவைப் பார்க்க, தீண்ட, நுகர, சுவைக்க முடியாது. எழுத்தை, கற்பனையை ஒரு காற்றைப் போல, ஒரு பெண்ணின் வாசனையைப் போல உணர முடியாது. அவனுக்கு அப்போது தான் சமைக்கும் உப்புமாவே தனது ஆய்வுக் கட்டுரையை விட உண்மையானது, நிச்சயமானது எனத் தோன்றுகிறது. நான் இதை உடற்பயிற்சியின் போது, குத்துச்சண்டை பயிற்சியின் போது உணர்ந்திருக்கிறேன். எழுதும் போது நமக்கு இப்படி வியர்ப்பதில்லை. சூழலுடன், எந்திரங்களுடன், சகமனிதர்களுடன் உறவாடுவதில்லை. அவர்களின் உடல் சூட்டை, வியர்வை நெடியை, வியர்வையில் மினுங்கும் சருமத்தைக் காண்பதில்லை. எழுதும் போதும், சிந்திக்கும் போதும் இந்த உலகிடம் இருந்து வெகுவாக விலகி வேறெங்கோ சஞ்சரிக்கிறோம். முகமற்ற, கைகால்கள் அற்ற, எடையோ, ஸ்பரிசமோ இல்லாத உலகம். அந்த உடலற்ற உலகில் தான் 9-5 வேலையிலும், உரையாடல்களிலும் இருக்கிறோம். நேற்று நான் குத்துப...

சாதி இனக்குழுக்களில் இருந்து வந்ததா?

"எனக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. மனிதர்களில் உயர்வு, தாழ்வு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. ஆணவப்படுகொலை தவறானது. ஆரம்பத்தில் நாம் இனக்குழுக்களாக இருந்தோம். அதன் நீட்சிதான் சாதி சங்கங்கள்." - மாலன், ஆனந்த விகடன் பேட்டி # எனக்கு இந்த பார்வையுடன் உடன்பாடில்லை. இனக்குழுக்கள் ஐரோப்பா, அமெரிக்கா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்காவிலும் இருந்தன. ஆனால் அங்கே ஏன் சாதியமைப்பு இல்லை? சாதியமைப்பு ஒரு பிரத்யேகமான கருத்தியல் அமைப்பு. அது மொழியை சார்ந்திருக்கும் ஒரு குறியீட்டு அமைப்பு. அது இயற்கையில் இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக அதைக் குறித்த விதிமுறைகளை நாம் ஸ்கிருதிகளில் காண்கிறோம், தொன்மக் கதைகளை இதிகாசங்களில் காண்கிறோம். அம்பேத்கர் இதன் வேர்களை வேதங்களில் கண்டடைகிறார்.  இங்கு தான் இனக்குழுவுக்கும் சாதிக்கும் சுவாரஸ்யமான வேறுபாடு வருகிறது - ஒரு சூத்திரனும், தலித்தும், பிராமணனும் இருந்ததாக அகழ்வாராய்ச்சியில் கண்டறிய முடியாது, ஆனால் எழுத்தில் ஆதாரங்களைப் பார்க்க முடியும். அதுவும் வைதீக மதம் சார்ந்தே இவ்விதிமுறைகள் தோன்றுகின்றன.  அடுத்து, ஒரு இனக்குழு மற்றொன்றாக மாற முடி...

பதிப்பாள உறவு - எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

ஒரு அமைப்பு எனும் வகையில் உறவு என்பது கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் இயங்குவது . நீங்கள் கொடுத்து வாங்குவது பணமோ , வசதியோ , உணவோ , அங்கீகாரமோ , அன்போ , ஆறுதலோ , பாதுகாப்போ , இது ஒரு வணிக உறவாடலைப் போன்றதே . ஒரு படைப்பாளனுக்கும் பதிப்பாளனுக்குமான உறவும் அப்படியானதே . நீங்கள் அதற்குள் செல்லும் போது அதில் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் எனும் தெளிவு மிக மிக அவசியம் . எப்படி ஒரு உறவுக்குள் எல்லாம் கிடைக்காதோ அப்படியே ஒரு பதிப்பாளரிடம் ஒரு படைப்பாளனுக்கு எல்லா எதிர்பார்ப்புகளும் பூர்த்தியடையாது . எப்படி ஒரு எலக்டிரானிக் கடையில் போய் அரை கிலோ கறி கேட்கக் கூடாதோ அதே போல என்ன கிடைக்கும் என்பது தெரியாமல் நீங்கள் ஒரு பதிப்பாளரிடமும் செல்லக் கூடாது . இந்த தெளிவு என் முந்தைய தலைமுறையில் தொடர்ந்து எழுதும் படைப்பாளிகளிடம் இருந்ததைப் போல என்னுடன் எழுத வந்தவர்களிடம் இல்லை என்று இன்று ஒரு சீனியர் எழுத்தாளரிடம் பேசிய போது தோன்றியது .  தமிழில் ஒரு முறைசாரா தொழிலாகவே பதிப்பும் எழுத்தும் இருப்பதால் இன்றைய...

Midnight

Midnight என்பது அண்மையில் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள கொரியன் த்ரில்லர். நம்முடைய “பூவிழி வாசலிலே” கதை தான். ஊமைக் குழந்தைக்குப் பதிலாக இரண்டு காது கேளாத ஊமைப் பெண்கள்: அம்மாவும் மகளும். இவர்கள் எப்படி ஒரு புத்திசாலித்தனமான சைக்கோ கொலைகாரனிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பதே கதையின் ஒற்றை வரி. ரொம்ப பரபரப்பாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு குழந்தைக் கதை போல, கார்டூன்தனமாகத் தோன்றி விடுகிறது.  இரண்டு சிறப்பம்சங்கள்:  அபாரமான அந்த கடைசித் திருப்பம் - 1) வில்லனின் சூழ்ச்சியில் இருந்து கற்றுக் கொண்டு அவனுடைய உத்தியைக் கொண்டே நாயகி அவனை வீழ்த்துகிறாள்.  2) ஸ்குவிட் கேம்ஸில் நடித்த வி ஹா ஜூனின் அபாரமான நடிப்பு.  இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருந்தால் சிறந்த படமாகி இருக்கும். இதை விட “பூவிழி வாசலிலே” மேலானது!