நான் கடுமையாக வெறுப்பது ஒரு நாவலில் தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கையில் , தினமும் பல நூறு சொற்களை அனாயசமாக எழுதிக் கொண்டிருக்கையில் , அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத மற்றொரு வேலையை சில நாட்கள் தொடர்ந்து செய்ய நேர்வதே . அதாவது நாவல் எழுத ஒரு சில மணிநேரங்கள் கூட கிடைக்காதபடி வேலை நெருக்கடி அதிகமாவதே . பயணங்களையும் இதில் சேர்க்கலாம் . திரும்ப நாவலில் விட்ட இடத்துக்குத் திரும்பும் போது மீண்டும் மனநிலை கூடி வர நேரமெடுக்கிறது . பனிமூட்டத்தில் வழி மறைந்து விட்டதைப் போலத் தோன்றுகிறது . ஒன்றிரண்டு நாட்கள் போராடி மீண்டும் சரளமாக எழுத ஆரம்பிக்கலாம் என்றாலும் சில நாட்களை இழந்து விட்ட கோபம் உள்ளிருந்து அரித்துத் தின்னுகிறது . அதை விடக் கொடுமை என்னவென்றால் இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல தினந்தோறும் பற்பல வேலைகளை செய்தபடி மனிதர்கள் இருப்பதைக் காண்கிறேன் , அவர்களுக்கு இதைப் போல எந்த கவலையும் இல்லை , அன்றாட நெருக்கடிகளைக் கையாண்டால் போதுமென இருக்கிறார்கள் . எனக்கு தண்ணீரில் இருந்து ஒரு மீனைப்...