நான் முன்பு ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் தொழில்நுட்ப எழுத்து பிரிவில் , ஒரு சின்ன வேலையில் , இருந்தேன் . எந்திர பாகங்கள் , மின்னணு கருவிகள் குறித்த விவரணைகளே புரியாமலே புரிந்த மாதிரி எழுதுவது என் பணி . என் அயலில் மற்றொரு துறை இயங்கியது . முழுக்க மென்பொருள் கோடிங் சார்ந்த ஒரு புரோஜெக்ட் . அதில் சிறு சிறு பிரிவாக ஏகப்பட்ட பேர் இயங்கினர் . அவர்களில் ஒருவர் - ஒரு வங்காளி - எனக்கு கேண்டீனில் வைத்து நட்பானார் . நான் அவரை இறுதியாக சந்தித்ததும் கேண்டீனில் தான் . அன்று எதையோ தொலைத்தது போல தனியாக அமர்ந்திருந்தார் . “ என்ன ஆச்சு ?” என வழக்கம் போல கேட்டேன் . வழக்கம் போல அவர் தன் சின்ன சின்ன பிரச்சனைகளை , தனிமையைப் பற்றி புலம்புவார் . நான் இத்தகைய புலம்பல்களை ரசிப்பேன் . “I am fine” என் சிரித்தபடி தோள் உலுக்குகிறவர்களை விட இத்தகையோர் நேர்மையானவர்கள் என நினைப்பேன் . அவர் அன்று விச்சிராந்தியாக பதில் சொன்னார் , “ எனக்கு வேலை போயிடுச்சு !” ஏன் , எப்படி என்றெல்லாம் நான் விசாரிக்கவில்லை . ஆறுதல் சொல்லவி...