அர்ஜுன் (அரவிந்த் சாமி) மாவட்ட ஆட்சியாளர். மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்குத் தினம் தினம் தீர்வு காணும் ஒருவர் - மக்களோடு நெருங்கிப் பணி செய்ய வேண்டியவர். அவரை இன்னும் ஹீரோயிக்காக நிறுவியிருக்கலாமே மணிரத்னம், ஏன் இப்படி போர்வெல் போட்டு தண்ணீர் வரவழைக்கும் ஒரு அற்ப விஷயத்தைச் சாதிப்பவராய் காட்டுகிறார் என நான் இளவயதில் இந்தப் படத்தைப் பார்த்தபோது யோசித்திருக்கிறேன் (தண்ணீரைக் கொண்டுவருவது ஒரு சாதாரண விஷயம் என்றில்லை – ஒரு பேரழிவின்போது மக்களைக் காப்பாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு சந்தர்ப்பம் அல்ல இது என்கிற அளவில் சொல்கிறேன்). ஆனால், சமீபத்தில் இக்காட்சியைக் கண்டபோது எவ்வளவு கவித்துவமான நுண்ணிய காட்சி அமைப்பு இது என விளங்கியது. அர்ஜுன் என்ன மாதிரியான மனிதன் என சுலபத்தில் இந்தக் காட்சிகள் நிறுவுகின்றன - அதாவது உருவக ரீதியாய்.