அமர்நாத் என்பவர் ஜெயமோகனின் அரசியலை தாக்கி எழுதின கடிதம் (அல்லது வாசகரை எதிர் நோக்கி எழுதப்பட்ட கட்டுரை) சாருஆன்லைனில் பிரசுரமாகியுள்ளது. சுருக்கமாக, இக்கடிதம் ஜெவின் திரைமறை சதிராட்டங்களை அம்பலப்படுத்த விழைகிறது. இதன் ஒரே சுவாரசியம் இரவு விடுதி துகிலுரிப்பு போல் சிறிது சிறிதாக திரைமறைவு சேதிகளை வெளிப்படுத்துவது தான். படித்து முடித்ததும் அட தெரிந்ததுதானே என்று உங்களுக்குத் தோன்றும். இதற்கான பதிலில் சாரு "நான் கடவுள்" ஆர்யா பாணியில் வெற்றிலை மென்றவாறே முத்தாய்ப்பாக இதையெல்லாம் புட்டு வைக்கத்தான் நான் இருக்கிறேனே, 15 வருடங்களாக மல்லுக்கட்டுகிறேனே, நீயெல்லாம் ஏன் காலத்தை வீணடிக்கிறாய், வா உலக இலக்கியம் பேசுவோம்; கஸான்சாகிஸ், அப்துல் ரகுமான் முனீப்பின் படைப்புகள் பற்றி தரமான உரையாடல் நடத்தலாமே என்று அமர்நாத்தை அறிவுறுத்தி முடிக்கிறார். எனது இந்த பதிவின் நோக்கம் வாசகரை அக்கடிதம் நோக்கித் திருப்புவதோ மேலும் செருப்படி வார்த்தை விளையாட்டை நீட்டிப்பதோ அல்ல. வலுவான விமர்சன அளவுகோல்களோ, தர்க்கப் பின்னணியோ இன்றி இலக்கிய ஆளுமைகள் பரபரப்புக்காக தாக்கப்படுவதை, இந்த தாக்குதல் பின்னுள்ள ஒழுக...