ஊனத்தைவிட சுவாரஸ்யம் ( ‘நான் கடவுளை’ என்னால அந்த ஊனக் கொடுமைகளை பார்க்கவே முடியலே’ என்றபடி முழுக்க சின்னக் கலக்கத்துடன் பார்ப்பது) அது பற்றிய விசாரிப்புகள். சுந்தர ராமசாமி ஒரு உரையாடலில் கண்களை நேராக நோக்கியபடி கேட்டார்: "உங்கள் ஊனம் பற்றி மன சங்கடங்கள், துயரங்கள் உண்டா?" நான் அவர் தாடியைப் பார்த்தபடி சொன்னேன், "எனக்கு யார் முன்னாடியும் தடுக்கி விழப் பிடிக்காது, அவ்வளவுதான்". வடக்கு உஸ்மான் சாலை டீக்கடை மலையாளி கல்லாக்காரர் போண்டாவில் கண்வைத்தபடியே "போ...லியோ தானே, வீட்டிலே ஊசி போடல்லியோ?" என்றதற்கு ஆமாம் சொல்ல என் பெற்றோரை சில்லறை உதிர்த்தபடி வைதார். நான் வண்டியில் போகையில் விறுவிறுப்புக்காக எல்லைக் கோடுகள், சிவப்பு விளக்குகளை மீற வழக்கமாய் போக்குவரத்துக் காவல் மாமாக்களின் "ஏற்கனவே ஒரு காலு போச்சு .... " வகை விசாரிப்புகள். என் ஊனம் பற்றின குற்றஉணர்வு என் அம்மாவுக்குள் ஒரு அடைகாக்கும் மிகை கவனிப்பு மனநிலையை 25 வருடங்களாய்த் தக்க வைத்துள்ளது. மனைவிக்கு தீராத புதிர்: " நீ எப்பவாவது ஆரோக்கியமா இருந்தா எப்படி இருக்கும்ணு யோசிச்சதில்லையா, ஊனமாயிட...