ஹாமீம் முஸ்தபாவின் “ ஊருநேச்சை ” தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒரு விமர்சன குரலை தொடர்ந்து கேட்கிறோம். சமூக அவலங்கள், பண்பாட்டு கூறுகள் மற்றும் சிக்கல்கள், பெண்ணியம், வரலாற்று நினைவுகள், மதத்தின் நடைமுறை முரண்பாடுகள் ஆகியவற்றை நேரடியான மொழியில் விவாதிக்கும் இக்கவிதைகள் எந்த பாசாங்குமற்றவை. இக்கவிதைகளை தனது விமர்சனங்களை தெரிவிக்கவும் கலாச்சார ஆவணமாக்கவும் பிரதானமாய் ஒரு புறம் உத்தேசிக்கிறார். இக்கவிதைகளுக்கு ஒரு நுட்பமான தளமும் உண்டு. அது குழந்தைகளின் களங்கமற்ற கூர்மையான கேள்விகளாலும், எளிய பாமர மனதின் பேய் சார்ந்த விசித்திர கற்பனைகளாலும் ஆனது. அதாவது முஸ்தபாவற்ற ஒரு இடம் இக்கவிதைகளில் உள்ளது.