நரேந்திர மோடி அரசின் பல வினோத செயல்திட்டங்களை , அவற்றின் அடிப்படையிலான பொய்ப் பிரச்சாரங்களைப் புரிந்துகொள்ள நாம் இரண்டாம் உலகப்போருக்கு முன்பான ஹிட்லரின் ஜெர்மனிக்கு செல்ல வேண்டும் . நாஜி கட்சியின் ஒரு மேம்படுத்தப்பட்ட , தந்திரமான , தொழில்நுட்ப திறன் படைத்த அவதாரமாகவே மோடியின் பாஜக உள்ளது . குறிப்பாக லவ் ஜிகாத் . முதலில் சாதி , மதத்துக்கு வெளியிலான காதல் , திருமணங்களைப் புரிந்துகொள்வோம் . நம் நாட்டில் இந்துக்களும் இஸ்லாமியரும் மட்டுமல்ல இந்துக்களும் கிறித்துவர்களும் , கிறித்துவர்களும் இஸ்லாமியரும் மணம் புரியவே கடும் எதிர்ப்பு உள்ளது . சாதிக்கு வெளியே மணம் புரிவோருக்கு எதிராக சாதியமைப்புகள் , கட்டப்பஞ்சாயத்துக்கள் , காவல்துறை ஆகிய வலைப்பின்னலின் ஊடாக மிரட்டல் , ஆணவக் கொலை உள்ளிட்ட கடும் எதிர்ப்பு நிலவும் நிலை பெரியாரின் மண் ஆகிய தமிழ்நாட்டிலேயே உள்ளது எனும் போது மற்ற மாநிலங்களில் எப்படியென சொல்ல வேண்டியதே இல்லை . இம்மாதிரியான உறவுகளை ஆதரிப்பது சமூகத்தின் சாதி , மத பண்பாட்டு அடையாளங்களையும் , அவற்றின்...