ஒரே உறுதிப்பாடு அவர்கள் எல்லாவற்றையும் தங்களோடு கொண்டு போயினர் என்பதே: பணம், டிசம்பர், ரொட்டிக் கத்தி, மதியம் மூன்று மணிக்கு முழங்கும் இடி, மல்லிகை வாசம், காதல். மிச்சம் இருந்தது எல்லாம் தூசு படிந்த வாதாம் மரங்கள், அலையதிர்வு கொள்ளும் தெருக்கள் மற்றும் நினைவுகளால் நிலைகுலைந்த, பேச்சில் அமர்த்தலான மக்கள் குடியுருக்கும், துருபிடிக்கும் தகரக்கூரை கொண்ட, மரவீடுகள். தகரக் கூரையில் தெறிக்கும் மழை போன்ற கூர்மையான தடதட ஒசை கேட்டு நான் வியப்புற்ற போது தான் அந்த மதிய வேளையில் டாக்டர் என்னிடம் முதன்முறையாக் கவனம் காட்டினார். “அவை வான்கோழிகள்”, அவர் என்னிடம் சொன்னார்; பிறகு மூடியிருந்த கதவை நோக்கி தன் அயர்வான சுட்டுவிரலால் சுட்டி முடிவாக சொன்னார், “ராத்திரியில் படு மோசம், ஏன் என்றால் தெருக்களில் மேலும் கீழுமாக ஆவிகள் நடமாடுவதை கேட்கலாம்”