Skip to main content

Posts

Showing posts from August, 2009

பழையன புகுதலும் புதியன கழிதலும்: இர்பான் பதான் -- திராவிட் விவகாரம் தேர்வா சமரசமா?

ஒவ்வொரு முறை அணி அறிவிக்கும் போதும் தேர்வுக் குழு நம்மை ஆச்சரியப்படுத்த, சில நேரம் சிரிக்க வைக்க, தவறுவதில்லை. இளைஞர்களை ஆதரிக்கிறோம் என இதுவரை சொல்லி வந்த தேர்வுக்குழு இர்பான் பதானை ஊருக்கு அனுப்பி 35 வயதில் டிராவிட்டுக்கு ஒருநாள் கிரிக்கெட் மீண்டும் ஆட டிக்கேட் கொடுத்துள்ளது. இந்நிலையில் தேர்வாளர்களிடம் ஒரு நிலையான தேர்வுத் திட்டம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால் அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதே உண்மை. சென்னை பிரம்மாரிக்களின் சமையல் போல் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி அவசர கால முடிவுகள் மட்டும் எடுக்கிறார்கள் தேர்வாளர்கள். இந்த விதமான தகிடுதித்த நடவடிக்கைகள் ஸ்ரீகாந்துக்கு சரளமாக வரக்கூடியது என்றாலும், அவரை மட்டுமே நாம் குற்றம் சாட்ட முடியாது. நெருக்கடி நிலையில் ஒரு புது அணித்தலைவர் தேர்வாகும் போதான கட்டாயத்தின் போது மட்டுமே இளைஞர்களை கண்டுபிடித்து ஊக்கமளிப்பது, நிலைமை சீரடைந்ததும், ஸ்திரமான வீரர்களை குளிர்பதனத்தில் பாதுகாப்பதும் இந்தியாவின் நெடுங்கால தேர்வுக் கலாச்சாரம். இக்கலாச்சாரத்தின் கண்ணி மட்டுமே தற்போதைய தேர்வுக்குழு. இளைஞர்களை கலவரப்படுத்தும் ராணுவ வாரியம் வத்...

அரவிந்த அடிகாவின் வெள்ளைப் புலி: அத்தியாயம் 2

ஒரு சில சீன சுயதொழில் முனைவோரை உருவாக்க கற்றறியலாம் என எதிர்பார்க்கிறீர்கள், அதனால் தான் நீங்கள் வருவது. இது என்னை திருப்தி செய்கிறது. சர்வதேச மரபொழுங்குப்படி என் தேசத்தின் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உங்களை விமான நிலையத்தில் மலர்செண்டுகள், சிறு கையடக்க சந்தன காந்தி சிலைகள் மற்றும் இந்தியாவின் கடந்த, நிகழ், எதிர்காலங்கள் பற்றின் முழுத்தகவல்களும் அடங்கின சிறுபுத்தகத்துடன் சந்திப்பார்கள் என்பது எனக்கு உறைத்தது. அப்போதுதான் ஆங்கிலத்தில் நான் அதனை சொல்ல வேண்டியிருந்தது, சார். மிக சத்தமாக. அது இரவு 11:37-க்கு. ஐந்து நிமிடங்களுக்கு முன்பு. நான் சும்மா ஏசுவதோ சபிப்பதோ இல்லை. நான் செயல் மற்றும் மாற்றத்தின் ஆள். அப்போதே அங்கேயே உங்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தேன். முதலில் பழமையான சீன தேசத்தின் பாலான என் அபிமானத்தை சொல்ல வேண்டும். வித்தியாச கிழக்கிலிருந்து துடிப்பான கதைகள் எனும், முன்பு பழைய தில்லியின் ஞாயிறு பழைய புத்தக சந்தையில் பொழுது கழித்து சற்று ஞானமைடைய முயன்று கொண்டிருந்த நாட்களில், பாதையோரமாய் நான் கண்டடைந்த, புத்தகத்தில் தான் உங்களது வரலாறு பற்றி படித்தேன். இந்த புத்தகம...

நன்கு வெளிச்சமுள்ள ஒரு சுத்தமான இடம்

நன்கு பிந்தி விட்டிருந்தது. மின்வெளிச்சத்திற்கு குறுக்கே நின்ற மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரைத் தவிர அந்த மதுபானக் கடையிலிருந்து யாவரும் வெளியேறி விட்டிருந்தனர். அத்தெருவில் பகலில் தூசு மண்டியிருக்கும்; ஆனால் இரவில் பொழியும் பனியில் தூசி படிந்து விடும்; அம்முதியவர் நேரங்கடந்து அங்கு அமர்ந்திருக்க விரும்பினார் -- ஏனெனில் அவர் செவிடு; மேலும் அப்போது இரவில் அங்கு அமைதியாயிருந்தது; அவர் அந்த வித்தியாசத்தை உணர்ந்தார். மதுபானக் கடையிலிருந்த இரு மேஜைப் பணியாளர்களுக்கு அவர் சற்று போதையில் இருப்பது புரிந்தது. அவர் ஒரு நல்ல வாடிக்கையாளராய் இருந்த போதும், மப்பு ஏறி விட்டால் காசு தராமலேயே போய் விடுவார்; அதனால் அவரை அவர்கள் கண்காணித்தனர். "போன வாரம் அவர் தற்கொலை செஞ்சுக்கப் பார்த்தார்", ஒரு பணியாளன் சொன்னான். "ஏன்?" "அவர் எல்லா நம்பிக்கையையும் இழந்து நொறுங்கிப் போய் விட்டார்" "எதைப் பற்றி?" "ஒன்றும் இல்லை" "ஒன்றும் இல்லை என்று உனகெப்பிடி தெரியும்" "அவரிடம் பூத்த பணம் இருக்கு" கடைக் கதவின் அருகிலுள்ள சுவருக்...

படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும் (பகுதி 1)

என் நண்பன் சார்லஸோடு பெரியாரியம், திருமா என்று மணிக்கணக்காய் வறுத்து விட்டு, தலைப்பு தாவினேன். ரஜினி வசனத்தை திரித்து "காதலிக்கும் போது உன் ஆளுமைக்கு தோதான பெண்ணென்றால் மடக்குவது எளிதாக இருக்கும்" என்ற போது அவன் மேலும் சூடானான்: " அடப்பாவி ... எனக்கு இதுவரை தெரியாம போச்சேடா". பெரும்பாலான மொழியியல் இலக்கிய விமர்சன சித்தாந்தங்கள் கருவிகள் பொறுத்த வரையிலும் இதுவே நிகழ்கிறது. வாசகர்களை எதிர்நோக்கி பயன்படுத்தப்படும் விமர்சனக் கருவிகள் எழுத்தாளனுக்கு கணிசமாய் பயன்படக் கூடியவை. இவை பரிச்சயமானால் நமது முன்னோடிகளின் வெற்றிகளை வடிவ ரீதியில் புரிந்து கொள்ளலாம்; பாணியை பொதுவாய் போலச்செய்யும் விபத்து நேராமல். இதனால் ஒரு சுமாரான கதை அல்லது கவிதையை சிறப்பான ஒன்றாக எழுதலாம். காதலனுக்கே காம நுட்பங்கள் பிரயோசனமானவை. நான் இக்கட்டுரையை என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை நோக்கி முன்வைக்கிறேன். நாம் காக்னிடிவ் பொயடிக்ஸ் (Cognitive Poetics) எனும் விமர்சன முறையிலிருந்து மைய உருவம் (figure) மற்றும் பின்புலம் (ground) ஆகிய கருவிகள் பற்றி விவாதிக்கப் போகிறோம். காக்னிடிவ் பொயடிக்ஸ் காக்னிடிவ் ...

தமிழக கிரிக்கெட் வீரர்களின் நெடுங்காலப் புறக்கணிப்பும் அவசர தேர்வுகளும்

இந்திய கிரிக்கெட் அணியின் பின்வாசல் எச்சக்கலைகள் தமிழக வீரர்கள். ஜார்க்கண்டிலிருந்து ஒருவர் அணித்தலைவர் ஆகும் போது தமிழக வீரர்களால் இதுவரை தேசிய அணியில் நிலைக்கக் கூட முடியவில்லை. ஸ்ரீகாந்த் இந்திய தேர்வாளர் தலைவர் ஆகிட நிலைமை ஒரு U திருப்பம் எடுத்து மீடியனில் மோதி நிற்கிறது. தமிழக வீரர்களின் உதாசீனப் பட்டியல் பெரிசு. தொண்ணூறுகளில் இருந்து தற்போது வரை மாநில அளவிலான சிறந்த மட்டையாட்ட அணிகளில் தமிழகமும் ஒன்று. ஷரத், ரமேஷ், பதானி, ஸ்ரீராமிலிருந்து பரத்வாஜ், விஜய், தினேஷ் கார்த்திக், முகுந்த் வரை அனைவரும் ரன் எந்திரங்கள். இவர்களில் தேசிய அணியில் ஓரளவு பெயர் பெற்றவர்கள் மூவர். ராபின் சிங். 7 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஆறுதல் பூச்செண்டாக ராபின் சிங் தேசிய ஒருநாள்அணியில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தோதான இடம் எண் 3 தான். அவ்விடத்தில் கிடைத்த குறுகின கால வாய்ப்பில் (இலங்கைத்தொடர்) சதம் அடித்து ஒரு ஆட்டத்தை வென்றார். அந்த தொடரில் இந்தியா அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்தது அந்த ஆட்டத்தில் மட்டுமே. பிறகு எந்த காரணமும் இன்றி அவரிடமிருந்து மூன்றாவதாய் ஆடும் வாய்ப்பு அடுத்த தொடரிலிருந்து பறிக்கப்...

அடிகாவின் "வெள்ளைப் புலி": கண்ணாடியில் தோன்றும் கோமாளி

இந்த வருடத்துக்கான புக்கர் பரிசை வென்றுள்ள அரவிந்த அடிகாவின் "வெள்ளைப் புலி" ஒன்றும் உன்னதமான நாவல் கிடையாதுதான். ஒரு சிக்கலை பல்வேறு கதாபாத்திரங்கள் வழி மேலும் சிடுக்காக்கி பின்னலாக்கி வளர்த்தெடுக்கும் பாணி இதில் இல்லை. ஒரு பிரச்சனை \ அவதானிப்பு \ மையக்கருத்தின் பல்வேறு பரிமாணங்களை அலசும் செவ்விலக்கிய போக்கும் கிடையாது. எந்த ஒரு சித்தாந்தத்தையும் அடிகா அலசிப் பார்ப்பதில்லை. நூலின் ஒவ்வொரு வரிக்கும் பகடி செய்வதும், சமூக பாவனைகளை அம்மணமாக்குவதுமே பணி. அதற்கான சாத்தியங்களைத் தேடி சம்பவங்களை நகர்த்தும் குழந்தைத்தனமான ஆர்வத்தில் அடிகா கதை அமைப்பு அல்லது பாத்திர வார்ப்பு ஆகியவற்றை கோட்டை விடுகிறார். உதாரணமாய், கதைசொல்லியான பல்ராம் ஒரு கொலை செய்து அதிலிருந்து தப்பித்து விட்டான் என்று ஆரம்பப் பக்கங்களிலேயே முடிச்சவிழ்க்கப் படுகிறது. இதற்கு அடுத்து மற்ற சிக்கல்கள், உண்மை வெளிப்பாடுகள் நிகழ்வதில்லை. ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் கூட இத்தொழில் நுட்பத்தை பொறுத்தமட்டில் கவனமாக இருப்பான். ஆனாலும் அங்கதத்துக்கான அடிகாவின் உற்சாகம் வாசகனுக்கு சீக்கிரம் தொற்றிக் கொள்கிறது. இத்தொழிற்நுட...

நடிகனை உருவாக்க முடியுமா?

நடிப்பில் ஒரு பிரதான வகை முறைமை நடிப்பு: கடுமையாய் தயாரித்துக் கொண்டு நடிப்பது. ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ, ராபர்ட் டினிரோ, தமிழில் விக்ரம் உடனடி உதாரணங்கள். அமீர்க்கானின் லகான் பற்றி பேசுகையில் அமிதாப் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்: "அமீர் பட சம்மந்தமான எல்லாவற்றுக்கும் தயாரித்துக் கொண்டு பக்காவாக செயல்படுவார் ... நடிப்பில் தன் தயாரிப்பு தெரியும் அளவிற்கு". சமீபத்தில் "நான் கடவுள்" படப்பிடிப்பில் பூஜாவுக்கு கண் மங்கலாகும்படி லென்ஸ் அணிவித்து நடிக்க விட்டது இவ்வகைதான். மீரா நாயரின் "மை ஓன் கன்டுரீ" (My Own Country) படம் அப்பிரகாம் வர்கீஸ் எனும் எய்ட்ஸ் மருத்துவரின் வாழ்க்கைக் கதை. இதில் வர்கீஸாக நடித்த நவீன் ஆண்டுருவீஸ் நிஜ வர்கீசோடு சில வாரங்கள் தங்கி அவரது உடல் மொழி, பாவனைகள், மருத்துவமனை, செய்கைகளை கவனித்து பின் நடித்தார். சில நடிகர்களுக்கு பெரும் தயாரிப்புகள் தேவைப்படுவதில்லை. ஏற்கனவே மனித இயக்கம் பற்றி ஆழ்மனதில் உள்ள அவதானிப்புகளை ஆகஷன் சொன்னவுடன் மீட்டுக் கொணர்ந்து நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். உதாரணம் மோகன்லால். "தசரதம்" என்னு...

கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...

20-20 கிரிக்கெட் போட்டிகளை மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடத்த வேண்டும் என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் மிக நூதனமான தீர்மானம். ஒருநாள் மற்றும் டெஸ்டு கிரிக்கெட் ஆட்ட வகைகளை 20-20 முழுங்கி விடும் என்ற அச்சம் பல முன்னாள் ஆட்டக்காரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உள்ளதே காரணம். வயசுக்கு வந்த பெண்ணை தாவணி கட்டி, முட்டை அடித்து குடிக்க வைத்து வீட்டு அறைக்குள் பதுக்கி வைப்பது போன்றது இந்த எதிர்மறை தீர்மானம். மிக சமீபமாய் நிகழ்ந்த தென்னாப்பிரிக்கா--ஆஸி தொடரைத் தவிர பிற டெஸ்டு ஆட்டங்கள் குளித்து கரையேறின எருமை மாடுகள் லட்சணமாய் தான் நடந்து முடிந்தன. பொதுவாய் டெஸ்டு ஆட்டம் நடக்கும் அரங்குகள் ஒருவித மென்வதை முகாம்கள். ஏன்: ஏறுவெயில், மோசமான இருக்கைகள், எதிரில் படுசலிப்பான காலந்தள்ளும் ஆட்டம், சுற்றிலும் ஒரு இஸ்லாமிய தொழுகை அரங்கை நினைவுபடுத்தும் படியாய் முழுக்க முழுக்க ஆண்கள். துப்பட்டாவால் தலை மூடின சில காதல் ஜோடிகளும் இருப்பு கொள்ளாமல் உணவுப் பந்தலுக்கும், புது இடங்களுக்குமாய் அலைகழியும் சூழல். இந்த அமானுஷ்ய இயக்கமின்மையை, பாதிகாலியான அரங்கத்தை டி.வி பார்வையாளர்களிடம் இருந்து மறைக்கவ...

ஐ.பி.எல்: நவீன கிரிக்கெட்டின் அசுரக் குழந்தை

" 'உயிர்மையில்' வெளிவந்த IPL 2-க்கு முன்னான கட்டுரை. இணைய வாசகர்களுக்காக மறுபிரசுரிக்கிறேன்." எல்லா வீட்டிலும் தலையணையை குத்தியபடி நகராது கிரிக்கெட் பார்க்கும் ஒரு ஆட்ட வெறியர் இருந்த நிலைமையிலிருந்து போன வருடம் ஐ.பி.எல் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது: குழந்தைகள், குடும்பப் பெண்கள், அத்தைகள், இளைஞிகள் என மொத்த குடும்பமும் பவுன்சருக்கும், புல்டாசுக்கும் வேறுபாடு தெரியாமல் பரபரப்பாக 20-20 பார்த்தனர், விவாதித்தனர். இந்திய அரசுக்கு நேரடி வருமானமாக 90 கோடி வந்தது. கிரிக்கெட்டை இவ்வளவு சாமர்த்தியமாக கலர்ப்பேப்பர் சுற்றி விற்க முடியுமா என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூக்கை சொறிந்தது. ஐ.பி.எல் தலைமை நிர்வாகி லலித் மோடி மீடியாவின் நாயகனானார். ஐ.சி.சி 50 வருடத்திற்கு மேல் கிரிக்கெட் எனும் வணிகப் பொருளை எவ்வாறு வீணடித்து வந்துள்ளது என்று லலித் மோடி உணர்த்தினார். ஒரு நாள் கிரிக்கெட்டின் முப்பது வருட வரலாற்றில் பவர் பிளே மற்றும் நோ பால் இலவச விளாசல் மட்டுமே ஐ.சி.சி அறிமுகப்படுத்திய புதுமைகள். (டெஸ்டுக்கு அது கூட இல்லை). ஆனால் அப்போது ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு நரை கூ...

முத்தமும் கொலையும் தீர்மானமாகும் கணம் எது?

ஊரில் என் வீட்டுப் பின் சந்தில் குள்ளமாய் முன்வழுக்கை காதுவரை சிரிப்புடன் ஒரு ஆர்மோனிய வித்துவான் இருந்தார். பால்யத்தில் ஒரு நாள் நான் அவர் மகனைக் சந்திக்க வீட்டுக்கு சென்ற போது அவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம். மனைவி இவரை விட ஒரு அடி அதிக உயரம். அவள் விடாமல் கரித்துக் கொட்ட இவர் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. கால் பெருவிரலை நிமிண்டிக் கொண்டிருந்தவர் சட்டென்று பக்கத்துத் திண்டில் தாவி ஏறினார். சுழன்றபடி ஒரு அறை விட்டார். அதிர்ச்சியில் சில நிமிடங்கள் யாரும் பேசவில்லை. திண்டில் ஏறி அடிப்பதை அவர் அத்தனை நேரமாய் திட்டமிட்டுக் கொண்டு அமைதி காத்தாரா என்பதை நேரில் கேட்க எனக்கு அப்போது தைரியம் வரவில்லை. (தொழில்முறை தாக்குதல்கள் தவிர்த்து) நமக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்திட கணவன்\மனைவி, நண்பர்கள்\தெரிந்தவர்களை கன்னத்தில் அறைகிறோம்; பூசல் மூள தோள், நெஞ்சில் குத்திக் கொள்கிறோம். லேசாய் தாக்கினாலே கடுமையாய் வலிதரக்கூடிய, செயலிழக்கக் கூடிய கண், விரைப்பை போன்ற போன்ற பகுதிகளை நோக்கி ஏன் கைகால் முதலில் நீள்வதில்லை. "தெரியாம அடிச்சுட்டேம்பா" என்று மன்னிப்பு கேட்கும் நா...