ஒரு நாள் வரும்!
என்னுடைய மொழியாக்கத்தில் மார்ச் மாதம் வெளியாகிற Kisses at Daybreak மனுஷ்யபுத்திரனின் 60 காதல் கவிதைகள் தாங்கிய நூல். அவரது முதல் ஆங்கில மொழியாக்க நூல் என நினைக்கிறேன். சுமார் மூன்று பத்தாண்டுகளாக எழுதி வரும், தீவிர வாசகர் மட்டுமன்றி எளிய வாசகர்களுக்கும் பரிச்சயமான ஒரு கவிஞருக்கு இவ்வளவு தாமதமாக ஆங்கில மொழியாக்கம் வருவது குறித்து எனக்கு ஆச்சரியமில்லை. அவர் அதற்கான முயற்சிகளை இவ்வளவு நாளும் எடுக்கவில்லை. அது மட்டுமே காரணம். சில படைப்பாளிகளுக்கு பதிப்பகங்களின் அரிய முயற்சியால் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் நூல்கள் மொழியாக்கப்பட்டு கவனம் பெற்றுள்ளன. காலச்சுவடு, க்ரியா, ஸீரோ டிகிரி போன்ற பதிப்பகங்களை இவ்விசயத்தில் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும். நூல் ஆங்கிலத்தில் வருவதற்கும் ஒரு படைப்பாளியின் பிரபலம் மற்றும் திறமைக்கும் எந்த பெரிய சம்மந்தமும் இல்லை. அதற்கான உள்கட்டமைப்பு, வேற்று மொழித் தொடர்புகள், தொடர்ந்து தொடர்பாக்கம் செய்து முயற்சி எடுப்பதற்கான ஆட்கள் இல்லாத காரணத்தாலே ஜெயமோகன், எஸ்.ரா போன்றோரின் முக்கிய நூல்கள் இன்னும் தமிழுக்கு வெளியே அதிகம் கிடைக்கவில்லை. இது ஒரு அவலம் என்றே சொல்வேன். எழுத்தாளன் நிச்சயம் இதன் பின்னால் அலைய முடியாது.

 மனுஷ்யபுத்திரனின் இந்த நூல் மொழியாக்கம் கூட மிக எதேச்சையாக நடந்ததே. அதைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்.
 ஆனால் எதிர்காலத்தில் இந்த நிலை மாற வேண்டும் என்பது என் ஆசை. இப்போதே பிராந்திய மொழிகளை  கார்ப்பரேட் நிறுவனங்கள் வட்டம் போடத் தொடங்கி விட்டன. ஆங்கிலத்தில் நேரடியாக எழுதப்படும் நூல்களில் இருந்து கவனம் இனி பெருமளவு பிராந்திய மொழியாக்கங்களுக்கு மாறும் என நினைக்கிறேன். இப்போது கூட நம்முடைய எழுத்தாளர்களை ஆங்கிலப் பாடத்திட்டங்களில் பரிந்துரைப்பதற்கு பெரிய தடையாக மொழியாக்கமே உள்ளது. அசோகமித்திரனை பிற மொழியினருக்கு தெரிந்த அளவுக்கு ஏன் புதுமைப்பித்தனையோ நகுலனையோ தி.ஜா, ஜி.நாகராஜன், .சா.ராவையோ தெரியவில்லை என நான் வியந்ததுண்டு. ஈழ இலக்கியம் என ஒன்று இருப்பதே இங்கு கல்விப்புலத்தில் பலரும் அறிய மாட்டார்கள் (ஷோபா சக்தியின் சில நூல்கள் மொழியாக்கப்பட்டதாய் அறிகிறேன்). ஆங்கிலத்தில் இவர்களின் புத்தகங்கள் போய் சேராதது தான் மிகப்பெரிய காரணம். சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சில கதைகளை மொழியாக்கினால் கூட அது பெரிய கவனம் பெறும் என நினைக்கிறேன். ஜெயமோகனின்விஷ்ணுபுரம்தொண்ணூறுகளின் இறுதியில் மொழியாக்கப்பட்டிருந்தால் அது அப்போது பிரசித்தமான பல ஆங்கில இந்திய நாவல்களுக்கு இணையாக பேசப்பட்டிருக்கும் என கணிக்கிறேன் - அதற்கு ஏற்ற ஒரு அகில இந்தியத்தன்மை அந்நாவலுக்கு உண்டு; மேலும் சுதந்திரம் பெற்றதற்கு பின்பான இந்தியா குறித்தான ஒரு நீதிக்கதையாகவும் அந்நாவலைப் படிக்க முடியும்


நான் பெங்களூருக்கு வந்த பிறகு என்னுடையகால்கள்நாவல் ஆங்கிலத்தில் வந்துள்ளதா என அடிக்கடி யாராவது விசாரிப்பார்கள். அப்போது நான் என் முன்னோடிகளை நினைத்துக் கொள்வேன். அவர்களுக்கு நிகழாதது எனக்கு மட்டும் ஏன் நிகழ வேண்டும். ஆனால் ஒருநாள் வரும். அன்று உலகம் முழுக்க நம் எழுத்துக்கள் பேசப்படும்

Comments