மாப்பிள்ளைக்கு மாமன் மனசுமாப்பிள்ளைக்கு மாமன் மனசு
மாமனுக்கோ காமன் மனசுநெற்றிக்கண்படத்தில் சுசீலா பாடிய பாடல் இது. இந்த பாடல் தோன்றும் இடம் பற்றியோ கதாபாத்திரங்கள், திரைக்கதையில் இப்பாடலின் இடம், சுசீலா இப்பாடலை அழகாய் பாடியுள்ள விதம் பற்றியெல்லாம் நான் இப்போது அதிகம் பேசப் போவதில்லை. ரஜினி இரட்டை வேடத்தில் அப்பாவாகவும் மகனாகவும் நடித்திருக்கிறார்; அப்பா ரஜினி காமாந்தகர், பணக்காரத் திமிர் கொண்டவர்; அவர் ஒரு பெண்ணை பலாத்காரம் பண்ணுகிறார். மகன் பின்னர் அப்பாவின் தவறை உணரச் செய்கிறார் என்பது கதைச் சுருக்கம். இதை பலர் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இசை ராஜா என்றும், இந்த பாடலை எழுதியவர் கண்ணதாசன் என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கும். படத்தில் இப்பாடலை ஒரு பெண் பார்க்கும் காட்சியில் சரிதா பாடுகிறார். சரிதா அப்பா ரஜினியின் நிறுவனத்தில் மேலாளர். அவர் தான் அப்பா ரஜினியால் பலாத்காரத்துக்கு ஆளானவர். ஆக, பெண் பார்க்கும் காட்சியில் சரிதாமாப்பிள்ளைக்கு மாமன் மனசு, மாமனுக்கோ காமன் மனசுஎனும் போது அது நகைமுரணான தொனி கொள்கிறது. அதாவது மறைமுகப் பொருள்உனக்கு கணவனாக வரப் போகிறவர் காதல் மிக்கவர், ஆனால் உனக்கு மாமனாராகப் போகிறவரோ ஒரு காமாந்தன்என்பது. ஆனால் இப்பாடலின் நேரடிப் பொருள் கூடுதலான மறைமுகத் தன்மை கொண்டது, அதனாலே வெகு சிலாக்கியமானது.

ஆகையால், நான் குறிப்பிட்டுள்ள வரிகளை நேரடியாக இங்கே அர்த்தம் கொள்ளப் போகிறேன் (மேலே தந்துள்ள முறையில் அல்ல).
 குறிப்பாக மாப்பிள்ளை ஒரு காமாந்தகன் / காமரூபன் என குறிப்பிடும் விதத்தை பற்றிப் பேசப் போகிறேன். “இந்த மாப்பிள்ளை என் மேல் பிரியம் கொண்டவன், ஆனால் அவன் பிரியம் கொண்டவனாகையில் அவன் இச்சை மிக்கவனாகிறான்எனச் சொல்லும் இந்த பாணி வெகுஅழகானது. ஏன் என சொல்கிறேன்.

இந்த பாடலின் பின்னணியை, கதையை மறந்து விட்டு, ஒரு காதலி காதலனை நோக்கி சொல்வதாக மட்டுமே பார்ப்போம். அவள் அவனை மாப்பிள்ளை என்கிறாள். அது ஒரு பிரியத்துக்குரிய பதம். மாமன் என அடுத்து அழைக்கிறாள். அது இன்னும் கூடுதலான விருப்பத்தை, பிடிப்பை, கொஞ்சம் இச்சையை காட்டும் சொல். அடுத்து அவள் தன் மாமனின் மனம் என்பது ஒருவிதத்தில் காமனின் மனமே என்கிறாள். அதாவது என் பிரியத்துக்கு உரியவன் என் இச்சைக்கும் உரியவன்; அடுத்து அதன் நீட்சியாய் அவன் என்னுடனான புணர்ச்சிக்கும் ஏற்றவன் என சொல்கிறாள். ஆனால் அதை நேரடியாய் சொன்னால் ஆபாசம் என்பதால் மறைமுகமாய் சொல்ல வருகிறாள். இந்த வரிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் மாப்பிள்ளைக்கு காமன் மனம் இப்போது இல்லையோ, அவன் அப்படி எதிர்காலத்தில் ஆகப் போகிறானோ எனும் சித்திரத்தை தருகிறது. இதுவே இப்பாடல் வரிகளின் அழகு

காமம் என்பது காதலின் இறுதிக் கட்டம் என்று அறிவோம். காதல் என்பது காமத்துக்கான ஒரு முகப்பூச்சு என்றும் அறிவோம். ஆனால் அது மட்டுமல்ல. காதலோ காமமோ அதன் சுவாரஸ்யம், இன்பம், மற்றும் அழகு அதை தள்ளிப் போடுவதில் உள்ளது. தள்ளிப் போடப்படும் எதுவும் இன்பத்தை மட்டும் நீட்டிப்பதில்லை, காலத்தையும் தான். எந்தளவுக்கு என்றால் இன்பத்தை ஒரு போதும் போய் அடையாத அளவுக்கு, காலத்தை முற்றுப்புள்ளி வைக்காத காலமற்ற கால அளவுக்கு.

இன்னொரு சுவாரஸ்யம் நாயகி ரஜினியை நோக்கி இதை கூறும் போது அவள் தன்னைப் பற்றியும் தான் சொல்கிறாள் என்பது. தன் இச்சையை, விருப்பத்தை, பயத்தைப் பற்றியும் தான் அவள் சொல்கிறாள் என்பது. இப்போது அவள் தன்னைப் பற்றி சொல்லாமல் சொல்லி, நாயகன் ரஜினியின் வழி, தன்னையும்தள்ளிப் போடுகிறாள்”. காலமற்ற காலத்தை அடைகிறாள். அதாவது, இவன் என் மாப்பிள்ளை, அதனால் இவன் இரண்டாகிறான் - இவன் + மாப்பிள்ளை. இவன் என் மாமனும் ஆகிறான். இப்போது இவன் மூன்றாகிறான் - இவன் + மாப்பிள்ளை + மாமன். அடுத்து, இவன் காமனும் ஆகிறான், அத்தோடு நான்காகிறான் - இவன் + மாப்பிள்ளை + மாமன் + காமன். இந்த நான்கில் எது இவன்? இவன் நான்கும் அல்லாமல் இருக்கலாம் அல்லது இதில் ஒன்றாய் அவ்வப்போது இருக்கலாம். இவன் அப்படி இருப்பதாலே, அதாவது ஒன்றாக மட்டும் இருக்காததாலே, அனைத்துமாய், சர்வமாய் மாறுகிறான். இவன் ஒவ்வொன்றாய் இருந்தும் இல்லாமலும் போகும் போது அவன் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் ஒரே சமயம் இருக்கிறான். கடந்த காலம் - இவன், இக்காலம் - மாப்பிள்ளை, எதிர்காலம் - மாமன். இவன் இந்த முக்காலத்துடனும் முடிந்து போகப் போவதில்லை. இவனுடன் இருப்பது காலத்தின் தளையில் இருந்து என்னை விடுவிக்க உதவுகிறது. இவன் வழியாக நான் அடையப் போகும் இன்பம் தொடர்ந்து தள்ளிப் போடப்படுகிறது. அதனாலே அதன் அளவற்றதாகிறது. இவன் இன்பத்தின் ஏமாற்றத்தில் இருந்து என்னை காப்பாற்றப் போகிறவன். கடைசியாக இவன் வழி நான் என்னையும், முடிவற்று அன்பிலும் இச்சையிலும் நீந்தும் என்னையும் நான் காண முடிகிறது. இவன் நான் நீந்தும், மிதக்கும் நீரோடை. அதனாலே இவனை நேசிப்பது அளப்பரிய இன்பத் திளைப்பில் எண்ணைத் தள்ளுகிறது.

இப்படி காதலனின் கட்டற்ற ஆசையைப் பற்றி பாடும் போக்கு, முறை நமது பக்தி மரபை சேர்ந்தது. குறிப்பாய் கிருஷ்ணனைப் பற்றி ராதை ஏங்கி பாடும் பக்திப் பாடல்களை, பக்தியும் காமமும் இணையும் வரிகளை நினைவுபடுத்துகிறது; ஆண்டாளை நினைவுபடுத்துகிறது; மல்லிகார்ஜுனரை (சிவனை) இறைஞ்சும் அக்காமகாதேவியை நினைவுபடுத்துகிறது. இந்த மரபில் கிருஷ்ணன் ஆசையின் வடிவாக இருக்கிறான். அவன் ஒரு பெண்ணை அடைகிறவனாக இருப்பதில்லை. மாறாக, அவன் பெண் எனும் கடலைத் தழுகிற ஒரு அலையாக மாறி அவளுடன் அனாதி காலத்தில், எல்லையற்ற அன்பில், ஒன்று கலக்கிறான். அதாவது, ராதை கடலாக அலைகளை நாடுகிறாள், அப்படி நாடும் போதே அலையும் தன்னையே நாடுகிறது என அறிந்து, அலையும் தானே என அறிந்தவளாய் இருக்கிறாள். அவளுக்கு கண்ணன் ஒரு விளையாட்டுப் பொருளாகவும், தன்னை விளையாட்டுப் பொருளாக மாற்றி வதைக்கிறவனாகவும் ஆகிறான். கிருஷ்ணன் தனக்கு எல்லை வகுத்துக் கொள்வதில்லை; அவன் ஒரே சமயம் விளையாட்டுப் பிள்ளையாக, அழகிய இளைஞனாக, மாடு மேய்க்கும் எளிய மனிதனாக, புல்லாங்குழல் இசைத்து மயக்கும் கலைஞனாக, ஆசை வார்த்தைகளால் மயக்குகிறவனாக, தேசத்தை ஆளும் மன்னனாக, அபலைகளுக்கு அபயம் அளிப்பவனாக, வேலையாளாக, தூதுவனாக, தேரோட்டியாக தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறான். அதனாலே கண்ணனை காதலிப்பது கோடானுகோடி முறைகள், எண்ணற்ற முறைகள் மீள மீள காதலித்தும் முடிவுறாத ஒன்றாக ராதைக்கு இருக்கிறது. அவளால் அவன் வழி தன்னை பல்கி பெருக்கிட, தொடர்ந்து அலைகளை கிளப்பும் ஒரு நீர் நிலையாக இருக்க முடிகிறது. ஒரு வழக்கமான காதலன் ராதையை அடைய முயல்வான், ஆனால் கிருஷ்ணனோ தன்னை அவள் அடைவதற்கு ஒப்புக் கொடுப்பான், சரணடைவான், அதன் பிறகு அவளை மீண்டும் துரத்தி சென்று கூந்தலைக் கலைக்கும் தென்றலைப் போல் ஆவான். மாமனில் இருந்து காமனாவான், அவளை அப்படிக் காணும் மறுநொடியே அவளது கரங்களில் தன்னை ஒரு குழந்தையாக, ஆதரவற்ற மதலையாக ஒப்புக் கொடுப்பான். இந்த முடிவற்ற விளையாட்டை கண்ணதாசன் இங்கு அழகாய் நுணுக்கமாய் தொட்டுக் காட்டி விட்டு செல்கிறார். ஆனால் அதை கவனிக்க நாம் இதன் கதைப்பின்னணியை கைவிட்டுகாட்சியின் நகைமுரணான தொனியை மறக்க வேண்டும்

நமது இந்திய தத்துவ மரபில் ஒருவன் தன்னைச் சுற்றியுள்ள உலகைப் பார்க்கையில் அதை அவன் தன்னால் பார்க்கப்படும் ஒன்றாக மாற்றுகிறான். ஆனால் அப்போது அவன் தான் இந்த உலகால் பார்க்கப்படுவதையும் உணர்கிறான். அப்படி உணர்கையில்பார்ப்பதுஎன்பதே ஒரு கட்டமைப்பு தான் என புரிந்து கொள்கிறான். இது ஒரு மனத்திறப்பு. (இதைப் பற்றி ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் விளக்கங்கள் முக்கியமானவை). காதலில் இருக்கும் ஒருவனோ ஒருத்தியோ தான் மற்றவரை காதலிக்கும் போது தான் காதலிக்கப்படுவதையும் ஒரே சமயம் உணர்கிறார்கள். காதலிப்பதால் காதலிக்கப்படுகிறோமா அல்லது காதலிக்கப்படுவதால் காதலிக்கிறோமா? இக்கேள்விக்கு பதில் அறிவது சுலபம் அல்ல. “கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா?” சில நேரம் ஒருவர் நம்மைப் பற்றி உருவாக்கும் அன்பின், இணக்கத்தின், விருப்பத்தின் கட்டமைப்புக்குள் நாம் மாட்டிக் கொள்கிறோம்; நாமும் அவரை காதலிக்கத் தொடங்குகிறோம். நாம் அப்போது அவரை நேசிக்கிறோமா, கட்டமைப்பை நேசிக்கிறோமா? அக்கட்டமைப்பு என்பது நாமே தானே? என்னை ஒருத்திசெல்லமேஎன கொஞ்சும் போது நான் அந்த செல்லமே என அழைக்கப்படுபவனைத் தானே, அப்படி அவன் அவளால் அழைக்கப்படுவதால் தானே  விரும்புகிறேன். அப்படி அவனை விரும்புவதால் அவளையும் விரும்புகிறேன். இப்போது, நான் என்னையே சுயமாய் காதலிக்கிறேனா? இல்லை, இது சுய ஏமாற்று அல்ல. நார்சிசிசம் அல்ல. இது இப்படித் தான் இருக்க முடியும். இது முக்கியமும் கூட. ஏன்?
நான் என என்னைநான்புரிந்து கொள்வதும் ஒரு கட்டமைப்பே. காதலின் போது இரண்டு கட்டமைப்புகள் ஒன்றுக்கு மற்றொன்று விட்டு கொடுக்கின்றன. அடுத்து, நான் அவளை மிகுதியாய் விரும்பத் தொடங்க அவளது என்னைக் குறித்த கட்டமைப்பு வழி அவளை நெருங்குகிறேன். அவள் அக்கட்டமைப்பை முறியடித்து புதுப்புது கட்டமைப்புகளை வழங்குகிறாள் - நேசிப்பவளாய், குழம்புகிறவளாய், ஏற்பவளாய், ஏற்றபடியே நிராகரிப்பவளாய், மென்னியை நெரிக்கும் அளவுக்கு விருப்பத்தில் திளைப்பவளாய் மாறிக் கொண்டே இருக்கிறாள். அப்போது நான் இரு கட்டமைப்புகளில் இருந்து எண்ணற்ற கட்டமைப்புகளை அடைந்து ஒவ்வொன்றாய் கடந்து, என்னையே கடந்து செல்கிறேன். இது ஒரு விடுதலை. இது காதலில் ஒரு மிதப்புணர்வை, விடுதலை உணர்வை நமக்குத் தருகிறது.

 இவ்வாறு காதலன் என்பவன் காதலிக்கப்படுகிறவன் + காதலிப்பவன் ஆகிறான். அதற்குள்ளாகவே அவன் பல துண்டுகளாய் உடைகிறான். யார் யாருடைய இச்சையை வழிநடத்துகிறார் என்பது புரியாத ஒன்றாகிறது. காதலும் பக்தியும் அடிப்படையில் மனங்களின் புணர்ச்சியே. இரு மனங்கள் தம் இருமையை மறக்கும் தருணமே. “மாப்பிள்ளைக்கு மாமன் மனசுஎன ஆரம்பிக்கும் அவள் தான் அந்த இடத்துக்கே வந்து சேரப் போகிறோம் என உணர்ந்திருக்கிறாள். அதனாலே அவள் எதையும் நேரடியாய் சொல்லாமல் ஒரு விளையாட்டாய், சீண்டலாய், லீலையாய், அலையை கிளப்புவதாய், தன்னை நோக்கி கையை நீட்டி தழுவ வரும் அலையை அழைப்பதாய் ஆரம்பிக்கிறாள்.

பக்தி மரபில் முக்குளித்து பல அற்புதமான திரைப்பாடல்களை நமக்கு இவ்வாறு அளித்துள்ள கண்ணதாசனின் மற்றொரு அழகிய முத்தாக இப்பாடல் என்றும் நிலைக்கும்.

Comments