பொன்னியின் செல்வன் (1) – மதில் மேல் தலைஅறுபது முதல் எண்பதுகள் வரை தமிழ் தீவிர இலக்கியர்கள் தம்மை சமூக விளிம்புநிலையர்களாய் கருதினர். சதா மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களாய் தம்மை நினைத்துக் கொண்டு பெரும் யானை குதிரை சேனைகளை ஒற்றை வாள் ஏந்தி தனித்து போரிட்டு அழிக்கும் வீரனாய் கசப்புடன் வெறியுடன் செயல்பட்டனர்.
இந்த விசனம், தாம் ஒரு பலிகடா எனும் வேதனை, அதையே ஒரு வலிமையாய் மேன்மையாய் கருதும் லட்சியவாதம் அவர்களை அனைத்து வணிக எழுத்தாளர்களையும் நோக்கி கண்ணை மூடி கத்தி வீசத் தூண்டின. பல தலைகள் உருண்டன (சம்மந்தப்பட்டவர்களுக்கு இது பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாத போதும்); அக்காலத்தில் புகழின் உச்சியில் இருந்த கல்கியும் அப்படி சிறுபத்திரிகையாளர்களால் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஒருவர்.

 நான் கல்கியை பதின்வயதில் மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். ஆனால் அவர் என் மனதில் தங்கவில்லை. எனக்கு அவரை விட அகிலனை கூடுதலாய் பிடித்தது. கல்கிக்கு எதிராய் அகிலனுக்கு ஆதரவாய் பேசுகிறவனாய் மாறினேன். அதன் பிறகு சிறுபத்திரிகைகள் பழக்கமானதும் நான் ரெண்டு பேருமே குப்பை எனும் மனநிலைக்கு அவசரமாய் வந்தேன். ஜெயமோகன் தொண்ணூறுகளில் ஒரு இலக்கிய பத்திரிகை (சொல் புதிது) நடத்தினார். அதில் ”பொன்னியின் செல்வன்” நாவலில் உள்ள தர்க்க பிழை ஒன்றைப் பற்றின குறிப்பு வெளியாகி இருந்தது. என் தரப்பு இன்னும் வலிமை பெற்றது.
 கடந்த பதினைந்து வருடங்களில் நான் “பொன்னியின் செல்வனைப்” பற்றி சிந்தித்ததே இல்லை. ஆனால் சமீபமாய் நாம் நமது வணிக இலக்கியத்தை மொத்தமாய் புறமொதுக்கத் தேவை இல்லை என்ற எண்ணம் எனக்குள் உருப்பெற்றது. ஒரு இலக்கிய வாசகன் நுணுகி ரசிக்க வேண்டிய பல அம்சங்கள் வணிக படைப்பாளிகளிடம் உண்டு; அவர்களிடம் இருந்து இன்றைய இலக்கிய எழுத்தாளன் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் உண்டு; இலக்கியம், வணிகம் எனும் இருமையை கடந்து செல்ல வேண்டிய அவசியம் இன்றைய விமர்சகனுக்கு உண்டு – இதெல்லாம் இப்போது எனக்கு ஏற்பட்டுள்ள உறுதிப்பாடுகள்.
இப்படி நான் பிரபல படைப்பாளிகளை ஆர்வமாய் உன்னிப்பாய் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். “பொன்னியின் செல்வனை” கடந்த இரு வருடங்களில் பலமுறை துண்டுத்துண்டாய் வாசித்திருக்கிறேன். இன்று அதன் துவக்க அத்தியாயங்களை மேயும் போது ஒரு சுவாரஸ்யமான இடம் என் கவனத்திற்கு வந்தது.
முதல் பாகத்தின் ஐந்தாவது அத்தியாயம் – “குரவைக்கூத்து”. சம்புவரையர் எனும் சோழ சாம்ராஜ்யத்துக்கு கட்டுப்பட்ட ஒரு சிற்றரசர். கந்தமாறன் இவரது மகன். இந்நாவலின் இரண்டாம் நாயகன் வந்தியத்தேவனின் உற்ற நண்பனே கந்தமாறன். சம்புவரையர் மாளிகையில் விழா நடக்கிறது. பழவரையர் உள்ளிட்ட சிற்றரசர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள். அன்றிரவு அங்கு குரவைக் கூத்து நடைபெறுகிறது. இதைப் பற்றி வந்தியத்தேவன் வழியில் சந்திக்கும் ஆழ்வார்க்கடியான் முதலில் குறிப்பிடுகிறான். அவன் தனக்கு குரவைக் கூத்து பார்க்க வேண்டும் என்றும் சம்புவரையர் மாளிகைக்கு தன்னை வந்தியத்தேவன் அழைத்துச் செல்ல முடியுமா என வேண்டுகிறான். வெறும் குரவைக் கூத்துக்காகத் தான் ஆழ்வார்க்கடியான் அப்படி வேண்டுகிறானா எனும் சந்தேகம் நமக்கு அப்போதே எழுகிறது. ஏனெனில் ஆழ்வார்க்கடியான் பண்பாட்டு வடிவங்களில் ஆர்வம் கொண்டவனாகவோ கூத்து பார்த்து களிக்கும் வேடிக்கை பேர்வழியாகவோ தோன்றவில்லை. வந்தியத்தேவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது நல்ல அபிப்ராயம் ஏற்படவில்லை என்பதால் அவன் மறுத்து விடுகிறான்.
வந்தியத்தேவன் சம்புவரையார் மாளிகைக்கு தனியாக வந்து தன் நண்பன் கந்தமாறனை (சிறு சாகசம் ஒன்றுக்குப் பிறகு) சந்திக்கிறான். அவன் வந்தியத்தேவனை தன் அப்பாவுக்கும் பெரிய பழவேட்டரையருக்கும் அறிமுகம் செய்கிறான். அப்போது இருவரும் முசுடுகளாய் தெரிகிறார்கள்; அக்கறையின்றி பேசுகிறார்கள். அவர்களின் மனம் எதிலோ உழல்கிறது என நமக்குத் தோன்றுகிறது. கல்கியின் ஒரு சிறப்பு என்னவெனில் அவர் இந்நாவலை படர்க்கையில் எழுதினாலும் பாத்திரங்களின் மனதில் ஓடும் எண்ணங்களை ஒலிபெருக்கியில் கூவுவதில்லை. நிறைய விசயங்களை சொல்லாமல் விட்டு விடுகிறார். இது நாவலுக்கு ஒரு பூடக தொனியை, புதிர்தன்மையை அளிக்கிறது.
ஆனால் அது மட்டுமல்ல நாவலுக்கு ஒருவித ஆழத்தை, வாசகன் கற்பனை செய்வதற்கான அபாரமான சுதந்திரத்தையும் கல்கி அளிக்கிறார். இதனால் தான் நந்தினி யாராலும் மறக்க முடியாத பாத்திரமாக இருக்கிறாள். அவள் மனம் ஏன் அப்படி சிக்கலாய் மாறுகிறது, அவள் ஏன் அவ்வளவு பழிவுணர்வுடன் செயல்படுகிறாள், ஏன் அவள் மனம் சில நேரம் மரத்துப் போகிறது என்பதற்கு நாவலில் தெளிவான பதில்கள் இல்லை. அவள் மகாபாரதத்து கர்ணனைப் போன்றவள். வாழ்வா அழிவா எனும் தேர்வு கிடைக்கும் போது அவள் கண்ணை மூடிக் கொண்டு அழிவை நோக்கி பாய்கிறாள்.
நான் குறிப்பிட்ட இந்த அத்தியாயத்தில் பழவேட்டரையரும் சம்புவரையரும் அரசருக்கு எதிரான சதித்திட்டத்தில் பங்கேற்கிறார்கள். பாண்டிய நாட்டு ஒற்றர்கள் அன்றைய விழாவில் ஊடுருவுகிறார்கள். அன்றிரவு நடக்கப் போகும் குரவைக் கூத்தில் மன்னரை வதம் செய்வதே தம் நோக்கம் என சன்னதம் பெற்று ஆடும் ஒரு பாத்திரம் இறுதியில் சொல்கிறான். இது சம்புவரையர் அறிவுடனே நடந்திருக்க வேண்டும். இதையெல்லாம் நம்மை ஊகிக்கும்படி விட்டு விடுகிறார் கல்கி. இதை விட சுவாரஸ்யம் வந்தியத்தேவனின் எதிர்வினை.
இச்சூழலின் புதிர்மை வந்தியத்தேவனுக்குள் எத்தகைய எண்ணங்களை ஏற்படுத்துகிறது என்பதை கல்கி சொல்வதில்லை. அதுவரையிலும் வந்தியத்தேவனின் மனதில் ஓடுவதை எல்லாம் விலாவரியாக சொல்லி விடும் கல்கி இதை சொல்வதில்லை. ஏனெனில் அவன் குழப்பமாக இருக்கிறான். அவனது ஆழ்மனம் இதைப் பற்றியெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. குரவைக்கூத்தின் முடிவில் சோழகுலத்தின் ரத்தம் வேண்டும் என வசனம் பேசப்பட்ட பின் அவன் திகிலடைகிறானா என்றும் நமக்கு கல்கி சொல்வதில்லை. மாறாக வந்தியத்தேவனின் பார்வை அவ்விடத்து சுற்றுச்சுவர் மீது தாவுகிறது. அங்கு அவன் ஆழ்வார்க்கடியான் எம்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்கிறான். ஆனால் திடீரென ஆழ்வார்க்கடியானை காணவில்லை. அதற்குப் பதில் அவனது தலை வெட்டப்பட்டு சுவர் மீது வைக்கப்பட்டிருப்பதாய் ஒரு பிம்பம் வந்தியத்தேவன் முன் தோன்றுகிறது. அவன் குழம்புகிறான்; திகில் கொள்கிறான். இந்த விசித்திரமான சர்ரியலான காட்சியை நாம் எப்படி புரிந்து கொள்வது?
மன்னருக்கு எதிரான சதி குறித்து கரிகாலச் சோழன் தன் தந்தையிடமும், தமக்கையிடம் ஒரு சேதி தெரிவிக்கும்பட்சம் அனுப்பும் ஒற்றனே வந்தியத்தேவன். அன்று குரவைக்கூத்தை காணும் வரையில் இவ்விசயத்தின் தீவிரத்தை அவன் உணர்வதில்லை. ராஜகுடும்பத்தில் ஒரு படுகொலை விரைவில் நிகழலாம் எனும் செய்தி அப்போதே அவனுக்குள் உறைக்கிறது. ஆனால் ஏன் எப்படி மற்றும் யாரெல்லாம் சம்மந்தப்பட்டிருக்கக் கூடும் எனும் கேள்விகளுக்கு அவனிடம் விடையில்லை. அவன் குழம்புகிறான். அவன் ஒரு எளிய மனிதன் என்பதால் தர்க்கரீதியாய் விலாவரியாய் இதை அவன் அலசி யோசிப்பதில்லை. பதிலுக்கு அவனது ஆழ்மனம் இதை ஒரு கனவு போல புரிந்து கொள்கிறது.
 நம் கனவுகள் சர்ரியலானவை என்பதை அறிவீர்கள். ஆகையால் தான் கூத்தின் முடிவில் அந்த சர்ரியலான சித்திரம் அவன் கண்முன் எழுகிறது. மதில் மீது வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தலை மன்னருடையதே. அவனுக்குள் துண்டிக்கப்பட்ட கோழியுடல் போல் துள்ளிக்கொண்டிருந்த சிந்தனை ஒரு விசித்திர வடிவம் பெற்று அப்போது வெளிவருகிறது. அதற்கு மேல் அவன் இதை அணுகி ஆராயப் போவதில்லை. ஆழ்வார்க்கடியானின் தலை என்பதால் அவன் ஒருவிதத்தில் இப்பிரச்சனையை எளிதாய் கடந்து விடப் போகிறான். அவன் வாழ்க்கை வழக்கமான விளையாட்டுத்தனம், சாகசம், காதல் என தொடரப் போகிறது. ஆனாலும் எல்லாவற்றின் அடியாழத்தில் ஒருவித அச்சமும், பதற்றமும் அவனை சவுக்கால் அடித்து விரட்டப் போகின்றன.
எவ்வளவு விசயங்களை கல்கி சுருக்கமாய் சிக்கனமாய் இக்காட்சியில் சொல்லி விட்டுப் போகிறார் பாருங்கள். அவரது மேதைமை இது!

Comments

SIGARAM CO said…
அருமையான பார்வை. மாறுபட்ட கோணம். நான் பொன்னியின் செல்வனை வாசித்து ரசித்த காலங்கள் நினைவுக்கு வந்து போயின.
நமது தளம்: பிக் பாஸ் தமிழ் - முன்னோட்ட காணொளி - 02 | BIGG BOSS TAMIL PROMO VIDEO - 02
https://newsigaram.blogspot.com/2018/05/bigg-boss-tamil-promo-video-02.html
#பிக்பாஸ்2 #BiggBossTamil2 #BiggBoss2 #BiggBossSeason2 #BiggBoss #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #VivoBiggBoss #BiggBossTamil #KH #Kamal #KamalHaasan #UniversalHero #Eviction #Nomination #பிக்பாஸ்தமிழ்2
Unknown said…
Hi Abilash Chandran, this is kavitha from vellore.. Ippo naan ponniyin selvan padichittu ieuken. . 2nd volume.. so reading your writing about ponniyin selvan is a great experience n i can easily connect... Arumaiyana parvai ... unge ezhuthu nadai nalla irruku. . kudos