இலக்கியமும் வாழ்வும் (1)


அன்புள்ள அபிலாஷ் சாருக்கு,
           விஷ்ணுபுரம் விழாவில் தங்களுடனான சந்திப்பிற்கு பிறகு எழுதும் கடிதம். உங்கள் வலைப்பூவில் வெளியான கட்டுரைகள் மகிழ்ச்சியாக இருப்பது, போன தலைமுறையினர் அதிர்ஷ்டசாலிகள் என்ற இரண்டையும் வாசித்தேன். சமீபத்தில்"Zorba the Greek" வாசித்தேன். அதில் மைய பாத்திரங்களான ஜோர்பாவும்,பேசிலும் இணைந்து மலையிலிருந்து மரங்களை கப்பிகள் வழியே இறக்கி் பெரும் பொருளீட்ட நீண்ட நாட்களாக  திட்டமிட்டு ஒரு இறங்குதளத்தை உருவாக்குவார்கள் மரஙகளை அதன் வழியே இறக்கும் போது சரிந்து விழுந்து எல்லாவற்றையும் சின்னாபின்னமாக்கிவிடும். அப்போது Zorba அந்த துயரத்திலும் தன்னை கரைத்து மகிழ்ச்சியாய் இருப்பான்.
அதுபோன்று துயரத்தின் ஆழங்களுக்கு நம்மை ஒப்பு கொடுத்து மகிழ்வது
  சாத்தியமா?


இதை ஒட்டி மற்றொரு கேள்வி:
°மகிழ்ச்சியின் ஊற்று பெருக்குகள் எளிதில் வற்றிவிடுவதாகவும்,துயரத்தின் ஊற்றுகள் பெருகி வழிவாதகவும் இருக்கிறதா?
-          அன்புடன் ஜானகிராமன்
அன்புள்ள ஜானகிராமன்
நலம் என நம்புகிறேன்.
நீங்கள் எழுப்பிய இரு கேள்விகளும் முக்கியமானவை. செறிவானவை.
Zorba the Greek நாவலில் நீங்கள் குறிப்பிட்ட இடம் எனக்கு விசித்திரமாய் ஆல்பர்ட் காமுவின் “அந்நியனை” நினைவுபடுத்தியது. தன் மரணத்தை ஏற்கும் தருணத்தில் மெர்ஸால்ட் உணரும் புளகாங்கிதத்தை எப்படி புரிந்து கொள்வது? ஹெமிங்வேயின் “கடலும் கிழவனும்” நாவலில் இறுதியில் முழுக்க தோற்றுப் போன பின்னரும் கிழவர் தோற்றுப் போகாத ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சொல்லப் போனால், அவர் அந்த மீனை பத்திரமாய் கரை சேர்த்திருந்தால் அந்நாவல் அப்படி ஒரு காவிய உணர்வை நமக்கு அளித்திருக்காது.
இந்த மாதிரி பெரிய வீழ்ச்சியில், இழப்பில், சிதைவில், தோல்வில் குதூலகமாய், புளகாங்கிதமாய், தடையற்று உணர்வது ஒரு குறிப்பிட்ட மனவெளிப்பாடு என நான் ஏற்கிறேன். அது சாத்தியமே. ஆனால் அது வாழ்க்கை அனுபவம் அல்ல. இரண்டும் வேறுவேறு. எப்படி என விளக்குகிறேன்.
 பஷீரின் “பூவன் பழம்” எனும் பிரசித்தமான கதை உங்களுக்கு நினைவிருக்கும். அதில் கணவன் தன் காதல் மனைவியை ஒரு குச்சியால் அடித்து துன்புறுத்துகிறான்; கத்தியை காட்டி மிரட்டுகிறான். ஆனால் அது உண்மையான வன்முறை அல்ல. ஒருவித விளையாட்டு. அந்த விளையாட்டில் இருவரும் ஒருவித காமக் கிளர்ச்சியை, காதல் மலர்ச்சியை உணர்கிறார்கள். இது எந்த ஆண்-பெண் உறவிலும் சாத்தியமாகும் ஒரு மனத்திளைப்பை சுட்டுகிறது தான்; எதிர்மறை அனுபவத்தில் நேர்மறையான கிளர்ச்சியான எதிர்வினையை பெறும் சாத்தியம் காம உறவில் உள்ளது தான். ஆனால் அது ஒரு மிக மிக நுணுக்கமான உணர்வு மட்டுமே. அது வெளிப்படையாக இராது. இதைக் கொண்டு மனைவியை அடித்து துன்புறுத்தும் ஒரு கணவன் தன் அன்பையும் காமத்தையும் அதில் வெளிப்படுத்துகிறான் என நாம் கூறி விட இயலாது. பஷீரின் கதையில் கணவன் அடிப்பது ஒரு உருவகம் மட்டுமே.
நான் மேலே குறிப்பிட்ட எல்லா படைப்பாளிகளும் மனித மனதின் சில விசித்திர உணர்வு நிலைகளை நாடகீயமாய் சித்தரிக்கிறார்கள். அக்காட்சிகள் குறியீடுகள் அல்லது உருவகங்களாய் வருகின்றன.
 நிஜவாழ்வில் அத்தகைய செயல்பாடுகளோ எதிர்வினைகளோ நிச்சயம் சாத்தியம் இல்லை. ஏனெனில் உணர்வும் அனுபவமும் இரு வேறு விசயங்கள். நாவல் உணர்வை பேசுகிறது. அனுபவத்தை அல்ல.
நாவல்கள் அனுபவத்தை முழுமையாக அல்ல, அதன் சாரமான ஒரு உணர்வை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாய், நாடகீயமாய் சித்தரிக்கின்றன. அதனாலே இலக்கியத்தில் எப்போதும் ஒரு மிகை உள்ளது. அது எப்போதும் இயல்பு வாழ்வில் இருந்து விலகி நிற்கிறது. அப்படி நிற்பதே இலக்கியத்தின் சிறப்பும்.
உங்களது இரண்டாவது கேள்விக்கு ஒரு தனிப்பதிவில் அடுத்து பதிலளிக்கிறேன். நன்றி!

Comments