எம்.எஸ்: அஞ்சலி

Image result for எம்.எஸ் மொழிபெயர்ப்பு
ஒரு எழுத்துக் கலைஞன் மேடைக்குப் பின்னால் பதுங்கி இருக்கும் நிழல் மனிதனாகவே வாழ்வது தமிழில் ஒரு அபாயம். இங்கு நீங்கள் உங்கள் எழுத்தளவு, உங்கள் கலைப் பணி அளவு, மூர்க்கமாய் உங்கள் ஆளுமையை பிரதானப்படுத்த வேண்டும்; முன்வைக்க வேண்டும்; முச்சந்தியில் நின்று கைகாலை உதறி சத்தம் எழுப்பி கவனத்தைக் கவர வேண்டும் (உருவகமாகத் தான்). இதையெல்லாம் செய்யாதவர்கள் என்னதான் அபாரமான பங்காற்றியிருந்தாலும் நம் சமூகம் பெரிதாய் கவனிக்காது. அவர்கள் சத்தமின்றி வாழ்ந்து சத்தமின்றி மடிய நேரிடும். எம்.எஸ் அப்படியான ஒருவர். அபாரமான மொழிபெயர்ப்பாளர். இனிமையான சுவாரஸ்யமான மனிதர். அனுபவம் மிக்க மெய்ப்புக் கலைஞர். ஆனால் அவரது மறைவின் பொருட்டு தான் அவரைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. ஏனெனில் தன்னை பேசும்படியான ஆளாக வைக்க அவர் முயலவில்லை; விரும்பவில்லை.

நான் பலரையும் போல் அவரை சு.ராவின் வீட்டில் வைத்து சந்திக்கவில்லை. ஜெயமோகனின் வீட்டில் வைத்தே பார்த்தேன். அவரிடம் அதிகம் உரையாடினதில்லை. ஆனால் பேசக் கிடைத்த ஓரிரு சந்தர்பங்கள் எனக்கு பெரிய தெளிவை நல்கின. எனக்கு அப்போது 17 வயதிருக்கும். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு சில கதைகளை மொழியாக்க முயன்று கொண்டிருந்தேன். எழுதுவதை விட மொழியாக்குவது வெகுசிரமம் என உணர்ந்த காலம் அது. ஒரு பரதநாட்டியக் கலைஞன் சும்மா நடந்து வரும் போதும் சுவடு பிழைக்காமல தாளம் பிசகாமல் நடப்பது போல் மொழியாக்க கலைஞன் மொழிக்குள் இயங்க வேண்டும். மூலப் படைப்பின் பண்பாடு, அரசியல் அர்த்தத்தளங்களை அழிக்காமல், தொனி பிசகாமல் பெயர்க்க வேண்டும். ரொம்ப சிரமமான வேலை.
 நான் அப்போது மொழியாக்கி வந்த சிறுகதை ஒரு புற்றுநோய் சிகிச்சை கேந்திரத்தில் சில பெண்களுக்கு நேரும் துயரத்தை பகடியாய் பேசும் ஒரு கதை. அக்கதை ஒரு பதின்வயதுப் பெண்ணின் பார்வையில் இருந்து நகரும். ஒரு முதிர்ப் பெண் இவளுக்கு அத்தை முறை. எங்கள் ஊரில் அப்போது அத்தை என்ற பிரயோகம் இல்லை. மாமி தான். ஆனால் பொதுத் தமிழில் மாமியின் பொருள் வேறு. நான் ஒரு லாவகத்துக்காக பிரதி முழுக்க மாமி என்றே பயன்படுத்தினேன். பிறகு அது நெருடியது. எம்.எஸ்ஸை சந்திக்க நேர்ந்த போது இது குறித்துக் கேட்டேன். வட்டார வழக்கா பொதுத் தமிழா, எது மொழியாக்கத்துக்கு சிறந்தது? மூலமொழியில் வரும் கொச்சை வழக்கை எப்படி கையாள்வது? நம்மூர் வட்டார வழக்கை பயன்படுத்தலாமா? இரண்டுக்கும் பொதுத் தமிழே சிறந்தது என்றார் எம்.எஸ். பின்னர் ஜெயமோகன் மற்றும் மனுஷ்யபுத்திரனிடம் பல்வேறு சந்தர்பங்களில் உரையாடுகையில் அவர்களுக்கும் இதே நம்பிக்கை இருந்ததை அறிந்து கொண்டேன்.
மொழியாக்கத்தில் மொழிபெயர்ப்பாளனின் சொந்த அடையாளம் முடிந்தவரை மறைந்திருக்க வேண்டும் என எம்.எஸ் நம்பினார். ஆனால் இந்த தரப்பை ஏற்றுக் கொள்ள எனக்கு அன்று சிரமமாக இருந்தது. ஹெமிங்வேயின் A Clean Well-lighted Room கதையை மொழியாக்கும் போது வசனங்களுக்கு குமரிமாவட்ட வழக்கை பயன்படுத்தினேன். நண்பர் மனுஷ்யபுத்திரன் அதன் சிக்கல்களை விளக்கின பின் அதை பொதுத் தமிழுக்கு மாற்றினேன். ஜி.குப்புசாமி ஆர்கன் பாமுக்கின் ”என் பெயர் சிவப்பு” நாவலை மொழியாக்கின போது அதன் வரலாற்றுக் காலத்தை உணர்த்த செவ்வியல் தமிழை பயன்படுத்தி இருந்தார். இது பாமுக்கின் பூர்வ மொழியில் இருந்து வழுவும் காரியம். ஆனால் இதையெல்லாம் முயல ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு மிக ஆர்வமாய் இருக்கும். சு.ரா ”தோட்டியின் மகன்” மொழியாக்கத்தில் இது போன்ற சில சுதந்திரங்களை எடுத்திருந்தார். அதற்காக விமர்சிக்கவும் பட்டார்.
இதை செய்யலாமா கூடாதா? எளிதில் விடை காண இயலாத கேள்வி இது. எம்.எஸ் இவ்விசயத்தில் ஒரு செவ்வியல்வாதி. பொதுமொழியே சரி எனும் தரப்பாளர்.

எம்.எஸ்ஸின் மொழியாக்கங்களை மூலத்துடன் ஒப்பிட்டு விவாதிக்கும் ஒரு கருத்தரங்கை யாராவது ஏற்பாடு செய்ய வேண்டும். மொழிபெயர்ப்பாளர்களை பொருட்படுத்தி நுணுக்கங்களை விவாதிக்கும் வாய்ப்புகளே இங்கு உருவாவதில்லை. அதற்கான ஒரு முன்முயற்சியாய் இதை நாம் அணுகலாம். எம்.எஸ் போன்றவர்களுக்கு சிறந்த அஞ்சலியாய் அதுவே அமையும். அதுவரை எனது இதயபூர்வமான அன்பை அவரது ஆன்மாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments