எழுத்தை எப்படி விடுவது?


கடந்த சில நாட்களாக ஒரு “இருத்தலிய குழப்பத்தில்” இருக்கிறேன்: எழுதுவதை நிறுத்தலாமா வேண்டாமா?
ஏன் அப்பிடி யோசிக்கிறேன். ஒரு முன்கதை சுருக்கம்: போன வாரம் சனிக்கிழமை வீட்டில் தனியே இருந்தேன். எப்போதென நினைவில்லை. ரத்த சர்க்கரை அதல பாதாளத்துக்கு இறங்கி நான் மயங்கி விட்டேன். எட்டு மணிநேரமாவது மயக்கத்தில் இருந்திருப்பேன். அன்று மதியம் நான் வாசக சாலையின் கருத்தரங்கில் ”ஆண் மொழியின் அரசியல்” பற்றி பேச வேண்டும். அன்றைய என் வேலைகளில் ஒன்றாய் அதற்கு தயாரிக்க வேண்டும் என குறிப்பேட்டில் எழுதி அதை படம் எடுத்து என் போனில் வைத்திருந்தேன். ஆனால் தயாரித்தேனா என நினைவில்லை. மதியம் வாசக சாலை நண்பர்கள் அழைத்த போது முழுபோதையில் இருக்கும் குடிகாரன் போல் குழறி இருக்கிறேன். இதை பிற்பாடு நண்பர் வெங்கட்ராமன் என்னிடம் கூறினார். மாலை நான்கு மணிக்கு நான் முழுக்க மயங்கி இருக்க வேண்டும். எட்டு மணிக்கு விழித்துக் கொண்டேன். அப்போது என்னால் சரிவர பேச முடியவில்லை. வலிப்பு வந்து நாக்கை நன்றாய் கடித்திருந்தேன். என் மனைவியை அழைத்து விவரத்தை சொன்னேன். அவள் வந்து பார்த்துக் கொண்டாள். அதன் பிறகு ஆஸ்பத்திரி வாசம். எல்லாம் கனவு போல் இருக்கிறது. நிறைய தூங்கினேன்.

 கடந்த சில மாதங்களில் நடந்ததெல்லாம் மூடுபனி போல் இருக்கிறது. முந்தா நாள் வீட்டுக்கு வந்தேன். இப்போது மெல்ல மெல்ல நினைவுகள் மீள்கின்றன. முக்கியமான மகிழ்ச்சி எனக்கு என் மூன்றாவது நாவலின் கதை நினைவுக்கு வந்து விட்டது. நாவலை திரும்ப எடுத்து படித்தால் புதிதாய் வாசிக்கும் உணர்வு. இந்த மாதம் உயிர்மையில் எழுதியுள்ள “கடவுள் இருக்கிறாரா?” கட்டுரை எதைப் பற்றி? கடந்த மூன்று நாட்களாய் இதையே யோசிக்கிறேன். அதன் தொனி நினைவு வந்து விட்டது. ஆனால் மைய விவாதம் நினைவில் இல்லை. அதுவாகவே நினைவு வர வேண்டும் என காத்திருக்கிறேன். என் மனதுடன் ஒரு சின்ன விளையாட்டு.
ஆஸ்பத்திரியில் பார்க்க வந்த நண்பர்கள், என் பேராசிரியர் ஆகியோர் மீளமீள வலியுறுத்தியது எழுதுவதை குறைத்து விடு என்பது. நண்பர் சரவணன் சந்திரன் போன் செய்து “கொஞ்ச நாள் எழுதாதீர்கள். எழுத்தே ஒரு வாதை. உடம்பு பலவீனமாய் இருக்கும் போது உங்களுக்கு ஏன் அதிக துன்பம்?” என்று அன்பாய் கேட்டுக் கொண்டார். எனக்கும் கடந்த சில தினங்களாய் அப்பிடித் தான் தோன்றுகிறது: எழுதுவதை நிறுத்தி விட்டு சாமான்யர்களைப் போல புறவாழ்க்கையில் ஈடுபடுவோமே! ஆனால் அங்கு தான் சிக்கல்!
 சிம்புவின் ”லவ் பண்லாமா வேணாமா” பாட்டில் வருவது போல லவ் பண்லாமா எனும் கேள்விக்கு யாரென்றாலும் கண்ணை மூடிக் கொண்டு why not என்போம். ஆனால் அதன் அவஸ்தைகள், தலைவலிகள், நெருக்கடிகளை ஆற அமர யோசித்தால் சிலருக்கு வேணாமே எனவும் தோன்றும். ஆனாலும் வாய்ப்பு கிடைத்தால் காதலுக்கு நம்மை ஒப்புக் கொடுக்க தயங்க மாட்டோம். அதோடு துன்பங்களையும் தாங்க முடியாமல் தாங்கவும் செய்வோம். எழுதுவதும் இப்படித் தான். காதலர்கள் காதலை திட்டிக் கொண்டே காதலில் தோய்வார்கள். தொடர்ந்து எழுதுபவர்களால் சட்டென நிறுத்த முடியாது.
ஒன்று, புற வாழ்க்கையின் நிறைய அல்லல்களுக்கு எழுத்து நமக்கு ஒரே stress busterஆக இருக்கும். ஒருநாள் அதை விட்டால் வேறென்ன பண்ணுவது? எனக்கு ஒரு மணிநேரத்தில் பேஸ்புக் அலுத்து விடும். போனில் அடிக்கும் அரட்டை பத்து நிமிடத்தில் மூச்சு முட்ட வைக்கும்.
எழுதாத நேரத்தில் ஓய்வு எடுக்க சொல்கிறார்கள். ஆனால் எப்பிடி ஓய்வெடுக்க? டிவி? தூக்கம்? எல்லாமே என்னும் மேலும் களைப்பாக்குகிறது.
அடுத்து எழுத்து ஒரு போதை. சில வருடங்கள் தொடர்ந்து எழுதினால் அது நம் மூளை அமைப்பை நுணுக்கமாய் மாற்றி விடுகிறது என நினைக்கிறேன். எழுதினால் கிடைக்கும் கிளர்ச்சி, உத்வேகம் வேறு எதிலும் எனக்கு இருப்பதில்லை. எழுதுவதை நிறுத்தினால் நான் தினமும் குடிக்க வேண்டும். ஆனால் குடிக்கும் போது தான் அது எவ்வளவு அலுப்பான காரியம் என புரிகிறது. உண்மையில் தினமும் குடித்து விட்டு சாய்பவர்கள் பரிதாபமானவர்கள். அது நம்மை மெத்தனமாக்கி, நரம்புகளை அவிழ்த்து உலர்த்தப் போடுகிறது. ஆனால் அதில் உண்மையான “கிக்” இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. எழுதும் போது இடம், காலம் என எல்லாவற்றையும் மறக்க முடிகிறது. குடிக்கும் போது ரொம்ப நேரமாய் ஒரே இடத்தில் இருக்கும் உணர்வு. நேரம் கல்லைப் போல் நம் கழுத்தில் தொங்கும் பிரமை. மது என்பது மிக மட்டமான ஒரு கிக்.
கடைசியாக எழுத்துக்கு என்று ஒரு தொடர்ச்சி உள்ளது. இப்போது வரைக்கும் மாதத்திற்கும் ஐந்து பத்திரிகைகளில் எழுதுகிறேன். மூன்று இலக்கிய பத்திரிகைகள் + இரண்டு வெகுஜன பத்திரிகைகள். இரண்டு வெகுஜன பத்திரிகை பத்திகளையும் நிறுத்தி விடலாம் என யோசித்தேன்.
இரண்டு எடிட்டர்களிடமும் பேசினேன். தினமணியில் என்னுடன் தொடர்பில் இருக்கும் துணை ஆசிரியர் புதிய ஜீவா “நீங்க வருத்திக்காதீங்க. உடல் ஆரோக்கியம் தான் எல்லாமே. எழுதாட்டி கூட பரவாயில்ல. பார்த்துக்கலாம்” என்றார். இவ்வாரம் எனக்குப் பதில் அவராகவே ஏதோ ஒரு புத்தகத்தை பார்த்து எழுதி சமாளித்திருக்கிறார். எனக்கு அப்படி சட்டென நிறுத்துவது தப்பென பட்டது. அதனால் அடுத்த சில வாரங்களுக்கு எழுதித் தருகிறேன், அதற்குள் எனக்கு பதிலாக மற்றொருவரை கண்டுபிடித்து விடலாம் என சொல்லி இருக்கிறேன். அவர் என்னிடம் திரும்ப திரும்ப “எனக்கு கேள்விப் பட்டப்போ ரொம்ப கஷ்டமா இருந்ததுங்க. நீங்க உடம்பை பார்த்துக்குங்க” என்கிறார்.
குமுதம் தலைமை ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் ரொம்ப நெகிழ்ச்சியான மனிதர். “உங்க பத்தி ரொம்ப ஹிட். குமுதம் ஸ்டைலுக்கு நல்லா பொருந்தி போயிடுச்சு. ஆனா உடம்பு முக்கியம். உங்களால எப்போ முடியுதோ அப்போ எழுதி அனுப்புங்க. வாரா வாரம் எழுதணுமுன்னு கூட தேவையில்ல” என்றார். எவ்வளவு பெருந்தன்மை! இதை பார்க்கும் போது என் குற்றவுணர்வு அதிகமாகிறது. என் முன்னோடி எழுத்தாளர்கள் எத்தனை வருடங்களாய் பத்தி எழுதி வருகிறார்கள். அவர்கள் யாரும் என்னைப் போல் நிறுத்த முனைந்திருக்க மாட்டார்கள். கடவுள் எனக்கு மட்டும் ஏன் எழுத்துக்கு ஈடு கொடுக்கும் உடலைத் தரவில்லை என தன்னிரக்கம் ஏற்படுகிறது. சுஜாதா ஐ.சி.யுவில் இருந்தபடி பத்தியை தொடர்ந்து எழுதி இருக்கிறார் என்பது நினைவுக்கு வருகிறது.
ஒன்று வேலை. பழையபடி கல்லூரி ஆசிரியர் வேலைக்கு திரும்பி விட வேண்டும். அது எனக்கு எழுத போதுமான கால அவகாசத்தையும் நெருக்கடியற்ற மனதையும் தரும். அடுத்து உடல் நலத்தை சீராக்க வேண்டும்.
அதுவரை எழுத்தை குறைக்க வேண்டும். எப்பிடி எனத் தான் தெரியவில்லை. எழுத்தில் ஒரு தொடர்ச்சி முக்கியம். மனம் அதற்கு பழகினால் அவ்வப்போது எழுத விசயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். அவற்றை எல்லாம் மண்ணில் புதைத்து வைக்க வேண்டுமா? தெரியவில்லை!
சிலர் மனதில் உறைகிற உணர்ச்சிகளை நீண்ட காலமாய் சொட்டுச்சொட்டாய் உருக்கி எழுதுவார்கள். நான் போகிற போக்கில் எழுதுகிற ஆள். அவ்வப்போது என்னை சீண்டுகிற உணர்வுகள், கிளர்த்துகிற சிந்தனைகள் தான் என் எழுத்து. ஒரு உதாரணம் சொல்கிறேன். ஏதோ ஒரு கட்டத்தில் நான் புரூஸ் லீயால் கவரப்பட்டேன். எனக்கும் தற்காப்பு கலைக்கும் சம்மந்தமே இல்லை. நான் லீயை பற்றி படிக்கும் முன் அவரது எல்லா படங்களையும் பார்தத்தில்லை. அதன் பிறகு நான் சில மாதங்கள் தற்காப்புக்கலைகள் கற்றேன். நிறைய நூல்கள் படித்தேன். தகவல்கள் சேகரித்தேன். எட்டு மாதங்கள் லீயிலும் அவரது சிந்தனைகள், கலையிலும் மூழ்கினேன். “புரூஸ் லீ: சண்டையிடாத சண்டை வீரன்” அப்படித் தான் உருவானது. அதன் பிறகு முழுக்க அவற்றில் இருந்து விலகி விட்டேன். சென்னையில் மழை போல அந்த புத்தகம் என் வாழ்க்கையை கடந்து சென்று விட்டது.
 என்னை தூண்டும் ஏதோ ஒரு தருணம், அதற்கு நான் என்னை ஈடுகொடுக்கும் போது தோன்றும் ஆவேசம், அதன் பின்னான சில மாதங்களில் என்னை முழுக்க ஈடுகொடுக்கும் வேகம். என் ஒவ்வொரு புத்தகமும் அப்படித் தான் உருவாகிறது. எந்த அனுபவத்துக்கும், உணர்வுக்கும், தூண்டுதலுக்கும் பட்டுக்கொள்ளாமல் நான் இருப்பதானால் நான் எதையும் எழுதியிருக்க முடியாது. என்னால் ஒரு விசயத்தை விட்டேத்தியாய் யோசித்து வருடக்கணக்காய் திட்டமிட்டு அவகாசம் கிடைக்கும் போது பொறுமையாய் சொல் சொல்லாய் எழுதி சேர்த்து நூலாக்க முடியாது. சிலர் வருடக்கணக்காய் ஒரு இருபது பக்க கட்டுரையை, பத்து பக்க கதையை எழுதுவார்கள். என்னால் சத்தியமாய் முடியாது. அது என் இயல்பு அல்ல.

போதைப் பழக்கத்தை ஒரேயடியாய் நிறுத்தக் கூடாது என்பார்கள். என் எழுத்து போதைக்கும் அது பொருந்தும் என்பதால் மெல்ல மெல்ல எழுத்தை குறைக்கலாம் என இருக்கிறேன். எழுத்து அல்லாத உலகம் நோக்கி மெல்ல மெல்ல என் மனதை பழக்க வேண்டும். நான் எழுதவில்லை என்பதையே நான் மறக்கும் அன்றைக்கு முழுக்க எழுத்தை நிறுத்த வேண்டும். அதுவரை இந்த எழுத்து எனும் பேய்க்கு சொட்டுச் சொட்டாய் என் குருதியை ருசிக்க கொடுக்க வேண்டும்…

Comments

King Viswa said…
அபிலாஷ், Get well soon.

நிறைய ஓய்வெடுங்கள். எழுதுவதைப் பற்றி பிறகு யோசிக்கலாம். உடல்நலம் மிகவும் முக்கியம். May be,ஒரு வாரம், 10 நாட்கள் கழித்து இந்த ஸ்ட்ரெஸ் சரியான பிறகு எழுத ஆரம்பியுங்கள்.

Take Care.
Take care of your health . You need complete test .
If you can dream and not make dreams your master,
If you can think and not make thoughts your aim.

Rudyard Kipling ஆலோசனையின்படி செயல்படுங்கள்.
velmurugan said…
உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள்
உணர்ச்சி வசப்படுவதை விட்டு
இயல்பாக இருங்கள்

நலம் பெற வேண்டுகிறேன்
அன்புடன்
தி.வேல்முருகன்
Unknown said…
Neenga nallave iruppinga Sir
Unknown said…
udambuku eppa rest thevai padutho appa rest kudunka.Night 10pm ku thunka poidunka.pasi vanthu sapidunka.Dont worry.