மோடியின் ஏழைகள்


மோடிக்கு மக்களிடையே உள்ள அளப்பரிய செல்வாக்கின் காரணம் என்ன? அவர் எம்.ஜி.ஆரைப் போலபொன்மனச்செம்மல்அல்ல. அவர் பணத்தை ஏழைகளுக்கு அள்ளிக்கொடுப்பதை விரும்பாதவர் என்று மட்டுமில்லை, அவர் அத்தகைய செயல்பாடுகளை மக்களை சோம்பேறியாக்கி தேசத்தை அழித்து விடும் என நம்புகிறவர். மோடி வேறு மாதிரிசெம்மல்”. என்ன வகையான மக்கள் தலைவர் அவர்? இந்த எண்ணம்மோடி தன் அரசியல் தொடர்பை அவ்வளவு எளிதில் இழப்பாரா?” எனும் சேகர் குப்தாவின் கட்டுரையைப் படித்ததும் எனக்குள் வலுவாக எழுந்தது.
 இந்த கொரோனா காலத்தில் மோடியின் அரசு எந்த மக்கள் நலத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை, நிவாரணங்களை ஏழைகளுக்குத் தரவில்லை என்பது மட்டுமல்ல அவர் ஏழை வர்க்கத்தை ஆற்றுப்படுத்தும் நோக்கில் தன் உரைகளையும் அமைக்கவில்லை. அவரது கொரோனா உரைகள் அனைத்தும் மேல்மத்திய வர்க்கத்தை ஊக்கப்படுத்தும் வகையிலே அமைந்திருந்தன என சேகர் குப்தா சரியாகவே குறிப்பிடுகிறார். இந்த நாட்டின் குடிமக்களில் எத்தனை சதவீதம் பேர் பால்கனி வைத்த வீடுகளில் வசிக்கிறார்கள்? பசியை மறந்து அகல் விளக்கு கொளுத்தி கொண்டாடும் நிலையில் இருக்கிறார்கள்
ஆனால் இங்கு நம் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும் - சேகர் குப்தா அவதானிப்பதைப் போல இந்திய வாக்காளர்களில் கணிசமானோர் தேர்தலின் போது மோடியை தமது தோழனாகவும் காங்கிரஸ் தலைவர்களை ஜமீந்தார்களாகவும், பரம்பரைப் பணக்காரர்களாகவும், தம்மிடம் இருந்து விலகி வாழும் எலைட்டிஸ்டுகளாகவும் கருதுகிறார்கள். இது இருவிதங்களில் வினோதமானது:
1) மோடி தன்னை ஒரு டீக்கடைக்காரரின் மகன், ஏழைக் குடும்பத்தில் தோன்றியவர் என அடையாளப்படுத்தினாலும் வேறு எந்த இந்திய பிரதமரை விடவும் அதிக படோடாபமாக வாழ்பவர். அவர் பயணிக்கும் வெளிநாட்டுக் கார்கள், அவர் பறப்பதற்காக வாங்கப்பட்ட ஜெட்விமானங்கள், அவரது வெளிநாட்டு இறக்குமதி பல்கேரி கண்ணாடி, அவர் அணியும் மொவாடோ பிராண்ட் கைக்கடிகாரம், அவர் கையெழுத்திட பயன்படுத்தும் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மோண்ட் பிளாங்க் பேனா என மோடி அளவுக்கு செல்வந்த தோற்றம் கொண்ட மற்றொரு தலைவர் இப்போதைக்கு இந்தியாவில் இல்லை. ஆனால் இது இந்தியர்களை உறுத்துவதில்லை. அவர்கள் அப்போதும் அவரை தம்மில் ஒருவராகவே காண்கிறார்கள்; தம்மில் ஒருவராய் பிறந்து இவ்வளவு செழிப்பாய் வாழ்கிறாரே, செல்வத்தில் கொழிக்கிறாரே என அவர்கள் கூடுதலாய் மகிழ்கிறார்கள். சினிமாத் திரையில் ஒரு ஹீரோ தன்னை விட இளமையான அழகான பணக்காரப் பெண்ணைக் காதலித்து டூயட் பாடும் போது ரசிகர்கள் கிளுகிளுப்பு அடைவார்களே, பெருமிதம் கொள்வார்களே ஒழிய பொறாமைப்பட மாட்டார்கள். மோடி விசயத்திலும் இதுவே நடக்கிறது. நாளை இந்த தேசத்தின் மிகப்பெரிய பணக்காரர் மோடிதான் என ஒரு செய்தி வந்தாலும் கூட மக்கள் அவரைஏழைப் பங்காளியாகத்தான் காண்பார்கள்.

2) மோடி தன் ஆட்சிக்காலத்தில் எப்போதுமே ஏழைகளின் நலன்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை முன்னிறுத்தியதில்லை. மாறாக குஜராத் முதல்வராக அவர் இருந்த போது கூட அங்கு ஏழ்மை, குழந்தைகளின் மரணம் ஆகியன தலைவிரித்தாடியதாகவே புள்ளிவிபரங்கள் தெரிவித்தன. இன்னொரு பக்கம் மோடி பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு சல்லிசாக அரசு நிலத்தை அள்ளி வழங்குகிற, அதன் மூலம் பெரும் முதலீடுகளை தன் மாநிலத்துக்கு கொண்டு வருகிற ஒரு வளர்ச்சி நாயகன் எனப் பெயர் எடுத்தார். மோடியின் ஆட்சியின் போது குஜராத் எந்த விதத்திலும் கூடுதலாக வளர்ச்சியடையவில்லை என்று மட்டுமல்ல அடித்தட்டு மக்கள் நிராதரவாக விடப்படுவது அதிகமானது. ஆனாலும் அவர் அங்குள்ள ஏழைகள் முதல் மேல்தட்டினர் வரை கொண்டாடப்பட்ட ஒரு நட்சத்திர நாயகனாக இருந்தார். அவர் பிரதமர் ஆன பிறகும் கூட ஏழைகளை அவர் கையாளும் விதம் மாறவில்லை. ஆனால் ஏழைகள் ஏன் அவரை வெறுக்கவில்லை?

மோடியின் சித்தாந்தம் என்பது கார்ப்பரேட்டுகளை வளர்த்து விடுவது, அவர்களின் வளர்ச்சி ஒரு பொங்கி வழிகிற மாடி தண்ணீர்த் தொட்டியின் நீரைப் போல ஏழைகளின் வயிற்றில் பாலை வார்க்கும் என நம்புவது. அது மட்டுமல்ல ஏழைகளானவர்கள் தாமாகவே உழைத்து நவதாராளவாத பொருளாதாரத்தின் மூலம் முன்னேற வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை என அவர் குரூரமாக நம்புகிறார். அவர் இதை என்றும் மறைத்ததில்லை, மாறாக  இன்னும் அழகான மொழியில் இந்த கொள்கை முடிவை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். கொரோனா நாடடங்கின் போது அமெரிக்கா தன் குடிமக்களின் வங்கிக்கணக்கில் ஊதியத்தில் ஒரு பகுதியை செலுத்த முன்வருகிறது. ஆனால் மோடியின் அரசோ கால்காசைக் கூட நிவாரணமாய் தர விரும்பவில்லை. மாறாக அவர் கார்ப்பரேட் நிர்வாகிகளை தமது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறார். மத்திய வர்க்கத்தினரை ஏழைகளுக்கு சோறிடச் சொல்கிறார். இந்திய பொருளாதாரம் முன்னூறு லட்சம் மதிப்பிலானது, அதில் மூன்று லட்சம் கோடியை செலவழித்தாலே இங்குள்ள ஏழைகளின் வங்கிக்கணக்குக்கு மாதம் 6000 விதம் நிவாரணத் தொகை அளிக்க முடியும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஆனால் மோடி அரசு அதை செய்ய விரும்பாமல் வங்கிக்கடன் வாங்குமாறு மக்களைக் கேட்கிறது. பி.எப்பை சில மாதங்கள் வசூலிக்க மாட்டோம் என்கிறது. மக்களை எந்தவிதத்திலும் வந்தடையாத 20 லட்சம் கோடிகளை நிவாரணமாய் அறிவிக்கிறது. அவை நிவாரணம் அல்ல வெறும் பித்தலாட்டம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். வெளிநாடு வாழ் பணக்கார இந்தியர்களை காப்பாற்றி இந்தியாவுக்குக் கொண்டு வர இலவச விமான சேவை அளிக்க முன்வரும் மோடி அரசு பாமர மக்கள் தம் மாநிலத்துக்கு செல்ல ரயில் சேவையை இலவசமாக அளிக்காமல் அப்பொறுப்பை மாநில அரசுகள் ஏற்குமாறு திமிர்த்தனமாய் சொல்கிறது.

இந்தளவுக்கு ஏழைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத அரசாக இருந்தும் எப்படி ஏழைகளிடத்து பெரும் செல்வாக்கு படைத்த பிரதமராக மோடி இருக்கிறார்? இங்கு ஒரு சூட்சுமம் உள்ளது.

மோடி தனது ஆட்சியில் ஏழைகள் தன்னுடன் நின்றால் தேசம் அமெரிக்கா போல வல்லரசாகும், அப்போது ஏழைகளும் பணக்காரராகலாம் என ஒரு நம்பிக்கையை விதைக்கிறார். இதை அவரால் ஏழைகளை நம்ப வைக்க முடிகிறது. டிமானிடைசேஷனின் போது ஏழைகளின் நிலை மிகவும் பரிதாபமானது. ஆனால் அவர்கள் தமது துன்பம் என்பது பணக்காரர்களின் துன்பத்தை விட குறைவே என தவறுதலாக நம்பி மகிழ்ந்தனர். அடுத்து தமது துன்பத்தால் தேசம் வலுவடைவதாக, முன்னேறுவதாக அவர்கள் பெருமிதம் அடைந்தனர். பட்டினி கிடப்பதோ தெருவுக்கு வருவதோ ஒரு அவலம் அல்ல, அது தேசபக்தியின் வெளிப்பாடு என அவர்கள் நம்பினர். டிமானிடைசேஷனின் போது நடந்த இதே மாயம் இப்போது கொரோனாவின் போதும் நிகழ்வதை நாம் காண்கிறோம். மோடி இந்த தேசத்தின் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் போதெல்லாம் அவர்கள் சிரிக்கிறார்கள், கண்களில் நீர் ஜொலிக்க நெகிழ்கிறார்கள். ஒரு விசித்திரமான வகையில் அவர்கள் மோடியின் ஆட்சியில் பரம ஏழைகளாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் உணர்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது இதே ஏழைகள் தம்மை ஏழைகளாக மட்டுமே உணர்ந்தனர். மோடியின் சக்தி அவரால் இந்த மக்களை தேசத்தின் எழுச்சியில் நேரடியாக பங்காற்றுகிறவர்களாக அதிகாரமிக்கவராக உணர வைக்க முடிகிறது, அவர்கள் சோற்றுக்கு சிங்கி அடித்தாலும் கூட, என்பது.

ஆனால் இதன் பொருள் ஏழைகளின் நலன் சார்ந்த எந்த திட்டங்களையும் அவரது அரசு செயல்படுத்தவில்லை என்பதல்ல. ஏழைகளுக்கான இலவச வீடுகள், சமையல் எரிவாயு இணைப்புகள், கழிவறைகள் என அவர் கொண்டு வந்த பல எளியோருக்கான திட்டங்களே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர் பிரமாண்ட வெற்றி பெற முக்கியக் காரணம் என்கிறார்கள். ஆனால் இந்த திட்டங்களையும் மோடி விளம்பரப்படுத்தியதற்கும் காங்கிரஸ் நிறைவேற்றியதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு - ஏழைகள் சுயமாக உழைத்து மேலெழ தான் அளிக்கிற உதவி இது, நிவாரணம் அல்ல என மோடி பிரச்சாரம் செய்தார். சமையல் எரிவாயு அடுப்பை வழங்கிய போது அவர் சிலிண்டர் வாங்குவதற்கான தொகையை அவர்களது கணக்கில் செலுத்தி அதைப் பற்றி ஒவ்வொரு வீட்டுக்கும் பக்தாளை அனுப்பி புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்தது நினைவிருக்கும். இதில் ஒரு முக்கிய செய்தி இருந்தது - மக்களிடம் இலவச சிலிண்டரைக் கொடுக்காமல் பணத்தைக் கொடுத்து அவர்களாகவே பொறுப்பாக செலவு செய்ய வைக்கும் போது அவர்கள் மனத்தில் அவர் தம்மை ஏழையாக நடத்தவில்லை எனும் ஒரு பெருமித உணர்வு தோன்றும். அவர்கள் தாமாகவே சம்பாதித்து அடுத்தடுத்த சிலிண்டர்களை வாங்க வேண்டுமே ஒழிய அரசிடம் எதிர்பார்க்கக் கூடாது என்பது இச்செய்தியின் நீட்சி. தம்மை இப்படி அவர் நடத்துவதில் எதிர்கால முன்னேற்றம் குறித்த ஒரு கனவையும் அவர் விதைப்பதை மக்கள் உணர்கிறார்கள். இதை அவர்கள் ரசிக்கிறார்கள்.

இந்த தேசத்தின் ஏழைகளை நடத்துவதில் மோடியின் அணுகுமுறை புதுமையானது மட்டுமல்ல வெகுபுத்திசாலித்தானமானது. நாம் என்னதான் பாட்டாளி விரோத அரசு என விமர்சித்தாலும் மக்களின் செண்டிமெண்ட் நேர்மாறாக செயல்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் அவர் இந்நாட்டு ஏழைகளின் உளவியலை தனக்கேற்ப மாற்றியமைத்திருக்கிறார். இவர்கள் இனி இந்திய ஏழைகள் அல்ல, மோடியின் ஏழைகள். தம்மை அப்படி சொல்லிக் கொள்வதை பெருமிதமாக உணரும் அவல ஜென்மங்கள்.

Comments