மோடியின் சமூக அழுத்த அரசியல்



இன்று பாரதப் பிரதமர் கேட்டுக் கொண்டதைப் போல சரியாக ஒன்பது மணிக்கு தெருவிளக்குகளை அணைத்து விட்டார்கள். தெருவில் எங்கள் வீட்டில் மட்டும் தான் விளக்கு எரிந்தது. சுற்றத்தினர் அனைவரும் கொரோனா எதிர்ப்பு முகமாக போன் ஒளியைக் காட்டுவதை, மெழுகுவர்த்தியை பால்கனியை எரிய வைத்துள்ளதைக் கண்ட போது, என் பக்கத்து வீட்டு சேட்டுநீங்க ஏன் விளக்கை அணைக்கல?’ என கோபமாகக் கேட்ட போது எனக்கு ஒன்று தோன்றியது - இவர்கள் எலலாரும் மோடியுடன் உடன்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் தம் சுற்றத்தினரிடம் இருந்து தனிமைப்பட விரும்பவில்லை.

 எப்படி பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன? மக்களின் விருப்பத்தினாலா? அல்ல சமூக அழுத்ததினால். என் பக்கத்து வீட்டுக்காரன், உறவுக்காரர்கள், நண்பர்கள் தீபாவளிக்கு புதுத்துணி எடுத்து, கறி சமைத்து, இனிப்பு செய்து சாப்பிட்டு, பட்டாசு வெடிக்கும் போது நான் அதையெல்லாம் செய்யாமல் இருந்தால் சமூக வெளியேற்றம் செய்யப்பட்டதாக உணர்வேன். இப்போது நானும் அவர்களுடன் கலந்து கொள்கிறேன். தீபாவளி எவ்வளவு மகிழ்ச்சியான கொண்டாட்டம் என எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நான் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை - அது தீபாவளிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி அல்ல, அதுதீபாவளிக் கொண்டாட்டம் மகிழ்ச்சியானதுஎன நினைப்பதன் சந்தோஷம். அதை என் செயலின் மூலம் ஒரு சமூக மனிதனாக நான் அறிவதன் மகிழ்ச்சி. மகிழ்ச்சியில் கலந்து கொள்கிற மகிழ்ச்சி. மனிதனால் பிறர் செய்வதை தானும் செய்யாதிருக்க முடியாது, அவன் என்னதான் அதற்காக பெருமுயற்சிகள் எடுத்தாலும்.
 தீபாவளிக் கொண்டாட்டத்தைப் போல மோடி இந்த கொரோனா கொண்டாட்டத்தை உண்டு பண்ணி நமக்கு அளிக்கிறார். கொண்டாடுவதோ மறுப்பதோ உங்கள் விருப்பம் என அவர் வாய்ப்பளித்தாலும் உண்மையில் அந்த வாய்ப்பு இச்சூழலில் இருப்பதில்லை என அவர் ஏற்கனவே அறிவார்.
 இந்த ஒன்பது நிமிட விவகாரம் ஒரு பெரிய சமூக அழுத்தத்தை உண்டு பண்ணினதில் பலருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ அதை செய்து விட்டார்கள். குடியுரிமை சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறவர்கள் கூட. சில இஸ்லாமிய நண்பர்கள் முழுகுவர்த்திகளைக் கொளுத்தி படம் எடுத்து முகநூலில் பகிர்வதைக் கண்டேன். அவர்களும் தாம் தனித்து விடப்படுவோமா என அஞ்சுகிறார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிகமாய் எதிர்-முகாமுக்கு தாவிட, கொண்டாட்டத்தில் திளைக்க இது வாய்ப்பு தானே. போனஸாக தேசபக்தியையும் நிரூபிக்கலாம். தீபாவளியின் போது அது முடியுமா சொல்லுங்கள்?

என்னதான் சொன்னாலும் மோடி ஒரு மேதை தான்! போகிற போக்கில் ஒன்பது நிமிட சமூகக்கொண்டாடங்களைக் கண்டுபிடிக்கிற, அதில் இவ்வளவு மகிழ்ச்சியை மக்களுக்கு உறுதிபடுத்துகிற, தேசபக்தி, சமூக ஒத்துழைப்பு ஆகிய அர்த்தங்களை அந்த சடங்கின் மூலம் உணர வைக்கிற மேதை. இந்திய வரலாற்றிலே வேறெவரும் இதைப் போல செய்ததில்லை.

Comments

sivan said…
insightful articles. good. Sivakumar N