எங்களைத் தூங்க விடுங்கடா எனும் இந்திய அணி


நியுசிலாந்தில் தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இந்தியா முதல் டெஸ்டில் அவமானகரமாய் தோற்றது. அதாவது சில தேர்வுகளில் மாணவர்கள் ரெண்டு மணிநேரமும் பெஞ்சில் படுத்து தூங்கி விட்டு வெறுமனே பெயரை மட்டுமே எழுதிக் கொடுத்து விட்டு கிளம்புவார்களே அப்படி ஒரு ஆட்டம். அடுத்த டெஸ்டில் நாம் இதை விட மோசமாகவே தோற்க வாய்ப்பு.

 இந்த போக்கு ஒருநாள் தொடரை 3-0 என இழந்த போதே தொடங்கி விட்டது. ஒரு போட்டியை எதிரணியின் திறமையின் முன் தோற்கலாம். அதில் எந்த பரிதாபமும் இல்லை. ஆனால் இது போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தலையை பலிபீடத்துக்கு கொடுத்து விட்டு கண்ணை மூடிக் கொள்ளும் தோல்வி. ஒருநாள் தொடரில் இருந்தே பாதி பேர் எந்த வித பங்களிப்பும் செய்வதில்லை - ஷா, அகர்வால், கோலி, ஜாதவ், பும்ரா ... என இந்த கும்பர்கர்ணர்களின் வரிசை போகிறது. முன்னெப்போதும் இப்படி ஒரு பாதி அணி தொடர்ந்து பங்கேற்காமல் பட்டும்படாமல் ஆடியதில்லை. டெஸ்ட் தொடர் ஆரம்பித்ததும் புதிதாக வந்தவர்களிடம் ஒரு முனைப்பு தெரிந்தது - ரஹானே, அஷ்வின், இஷாந்த் என. அகர்வாலும் சமாளித்து நன்றாக ஆடினார். ஆனால் அவரிடத்தை புஜாரா எடுத்துக் கொண்டு கடைசி பெஞ்சில் இடம் பிடித்துக் கொண்டார். மிச்ச மட்டையாளர்கள் மற்றும் பவுலர்களிடம் தென்படுவது களைப்பு என்றால் புஜாரா தொடர்ந்து ரன் அடிக்காத தடுமாற்றத்தில் இருக்கிறார்

இதை தேர்வாளர்கள் சற்று சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் - நீங்கள் ஒரே அணியைத் தொடர்ந்து டி-20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் என மாதக்கணக்கில் ஆட வைத்தால் அவர்கள் திடீரென ஒருநாள் வயதானதைப் போல உணர்வார்கள். வெற்றிக்கும் தோல்விக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது; சீக்கிரம் முடித்துக்கொண்டு அதிக பாதிப்பு இல்லாமல் வீடு திரும்பினால் போதும் என நினைப்பார்கள். குறிப்பாக இந்த களைப்பு, ஆற்றல் வடிந்து போன உணர்வு வீரர்களை பயணங்களின் போது தான் அதிகமாய் தாக்கும். சொந்த நாட்டில் எவ்வளவு ஆடினாலும் உத்வேகம் குன்றாது. ஆனால் அயல்நாட்டு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தக்க வைப்பது சுலபம் அல்ல. நியுசிலாந்த் அணி சொந்த நாட்டில் ஆடினாலும் கூட தொடர்ந்து புதிய வீரர்களை ஒவ்வொரு வடிவத்துக்கும் கொண்டு வருகிறது. புதிய வீரர்கள் உடனே சோபிக்காவிட்டாலும் ஆர்வம் குன்றாமல் ஆடுகிறார்கள். இதில் இருந்து இந்திய வாரியம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

 அடுத்த தொடர்களில் வடிவத்துக்கு ஏற்ப மாறுபட்ட அணித்தலைவர்களை நியமிப்பது, ஒவ்வொரு வடிவிற்கும் 6-8 வீரர்களையாவது புதிதாய் கொண்டு வருவதைப் பற்றி யோசிக்க வேண்டும். உலகின் தலைசிறந்த வீரரான பும்ரா கூட சரியான நீளத்தில் பந்தை வீச முடியாமல் திணறும் அளவுக்கு இரவு பகலாய் ஆட வைக்கிறோம், செக்கு மாடுகளைப் போல. கோலி ஏதோ தூக்கத்தில் ஆடுவதைப் போல தெரிகிறார். தொலைநோக்குடன் சிந்தித்து பொறுமையாக ஆடும் ஆற்றலை அவர் தற்காலிகமாக இழந்திருக்கிறார். ஒரே தங்க வாத்தை வைத்து 365 நாட்களும் ஆட முடியாது. அதற்குத் தேவையான நேரமும் இரையும் கொடுத்தால் தான் முட்டையிடும். இப்போது விழித்துக் கொள்ளாவிடில் அடுத்து ஆஸ்திரேலிய பயணத்திலும் முழுக்க பழனிமொட்டை தான்

Comments