நண்பர்களும் சென்னையும்


நான் சென்னையில் வசித்த நாட்களில் புத்தகக் கண்காட்சிக்கு குறைந்தது நான்கு நாட்களாவது செல்வேன். ஒன்றிரண்டு வரிசைகளில் அலைந்து விட்டு எங்காவது வசதியாக அமர்ந்து படிப்பேன். மெல்ல நடந்து வெளியே வரும் போது நண்பர்களை ஏராளமாய் சந்திப்பேன். சிலரை ஒரு வரிசையில் பார்த்து அடுத்த வரிசையில் பார்க்கையில் அதே ஆர்வம் குன்றாமல் சிரித்துப் பேசுவதும் மூன்றாவது முறை அசட்டு சிரிப்புடன் கடந்து போவதும் தவறாத சுவாரஸ்யங்கள். வேறு பலரை கண்காட்சியில் மட்டுமே மொத்தமாய் காண முடியும். அப்போது அவர்களிடம் இலக்கிய வம்பு, அறிவுரை, புகார் தெரிவித்தல், பகடி பண்ணுதல் என நன்றாகப் பொழுதுபோகும்; அடுத்த வருடம் முழுக்க மனத்தில் தங்கி இருக்கும் விசயங்களை அவர்கள் சொல்வதும் நடக்கும். இந்த முறை பா.ராவிடம் உணவு, திரைக்கதை, நெடுந்தொடரில் எழுதுவது நிறைய பேசினேன். அவரது நாவல் அனுபவம் பற்றி நிறைய கேட்க திட்டமிட்டிருந்தேன். நேரம் அமையவில்லை.


யுவ கிருஷ்ணாவை ஒரு அரங்கில் பார்த்தேன்; அட சிவராமன் பக்கத்திலே இருக்கணுமே எனத் தேடினால் நிழல் விழுமிடத்தில் இருக்கிறார். எத்தனை ஆண்டுகளாக வலுவாக தொடரும் நட்பு என வியந்து போனேன். இப்போதெல்லாம் ஐந்து நிமிடங்களுக்கு ஒருவரை தக்க வைப்பதே அசாத்தியமாக இருக்கிறது. நீங்கள் தேவைப்படாவிட்டால் அல்லது போரடித்தால் பேசிக் கொண்டிருக்கும் போதே கழற்றி விட்டுக் கொண்டு போய் விடுகிறார்கள்.
புத்தகம் வாங்க தமிழினி அரங்குக்கு தான் நான் முதலில் சென்றேன். வசந்தகுமார் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பில் போடும் போது ஆச்சரியமாக நலம் விசாரித்து சிநேகமாய் பேசினார். அவர் சற்று முசுடு என நான் கருதியது தப்பு என புரிந்து கொண்டேன். அதுவும் பேஸ்புக் வழியாக நான் பெங்களூரில் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறார். அதை விட பல்லவியிடம் ஜீனோ பற்றி ரொம்ப ஆர்வமாக விசாரித்தார்
நீலம் பதிப்பக வாசலில் வாசுகி பாஸ்கரையும் ஸ்டாலின் ராஜாங்கத்தையும் சந்தித்து அளவளாவியது ஒரு நல்ல அனுபவம்.
இந்த முறை பல்லவியின் ரசிகர்களும் தோழர் தோழியரும் தான் அதிகமாய் வந்து தழுவிக் கொண்டு ஆரவாரமாய் பேசினார்கள். எந்தளவுக்கு என்றால் ஒரு பெரிய செலிபிரிட்டியுடன் போகிற பொறாமை உணர்வில் நான் வெம்பிப் போனேன். யாரைப் பார்த்தாலும் அவளது ஜீனோ பதிவுகள் அல்லது குக்கீஸ் பற்றி விசாரிக்கிறார்கள். தினமும் உங்களைப் படித்து படித்து ஒரு அணுக்கம் வந்து விட்டது என்கிறார்கள். வரும் ஆண்டில் நானும் அதிகமாய் பேஸ்புக்கில் எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் அந்த கலையை நான் கற்றுக் கொள்வேனா என்று தான் தெரியவில்லை.

பிறந்த நாளுக்கு எனக்கு பரிசு வாங்கி அனுப்பிய முதல் வாசகர் அகவன் சிவாவை அவரது தோழி ஒருவருடன் சந்தித்தேன். புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

அரவிந்தனைக் கண்டு பேசினேன். சில வினாடிகளே என்றாலும் சுருக்கமாக சிக்கனமாக தெளிவுடன் பேசினார். அவரிடம்பெங்களூரின் தனிமை தாங்க முடியவில்லைஎன்றேன். அப்படி தோன்றுகிறதென்றால் இங்கே வந்து விடுங்கள்; தோன்றாத வரையில் பரவாயில்லை; தோன்றத் தொடங்கி விட்டால் அங்கேயே இருப்பது எழுத்துக்கு நல்லதல்ல என்றார். எனக்கு அந்த அறிவுரை பிடித்திருந்தது; நான் அதைத் தான் கேட்க விரும்பினேன் என்பதால் மட்டுமல்ல; நடைமுறைத் தேவைகளை விட மனத்தின் குரலுக்கு செவி சாய்ப்பதே அவசியம் என நம்புகிறேன்.
 உதாரணத்திற்கு இந்த இரண்டு நாட்கள் நான் சென்னையில் இருந்த போது சந்தித்த மனிதர்களை நான் வருடக்கணக்காய் பெங்களூரில் இருந்தாலும் பார்க்க முடியாது. பல்கலைக்கழக வளாகம், அதை விட்டால் வீடு. திரும்பத் திரும்ப அதே ஆட்கள். நான் சென்னையில் இருந்த நாட்களில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது நண்பர்கள் கிடைத்தார்கள். எத்தனை கூட்டங்களில் பேசி இருக்கிறேன்; எத்தனை டிவி ஷோக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். சென்னைக்கு வந்ததுமே இம்முறை எனக்குத் தோன்றியதுஇந்த நகரத்தில் தான் எத்தனை ஜனங்கள், எவ்வளவு சத்தம்என்பது. பெங்களூரில் இந்த மக்கள் கூட்டத்தையும் அரவத்தையும் மிஸ் பண்ணுகிறேன். யாருடனும் பேசாமல் எந்திரம் போல் நடக்கும் பெங்களூர் ஜனங்கள், அவர்களை விட கார்களே அதிகமாகத் தென்படுகிறார்கள் என்பது மற்றொரு கொடுமை. அதுவும் இங்கே அதிகம் பேசுவது மலையாளிகளே. அவர்களையும் அனுப்பி விட்டால் பெங்களூர் இன்னமும் அமைதியாகி விடும். என் இயல்புக்கு பேச்சு சத்தம் தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்க வேண்டும். என் ஆற்றல் இந்த அரவத்தில் இருந்தே பிறக்கிறது. என் உற்சாகம் மக்கள் திரளின் மத்தியில் இருக்கும் போதே தோன்றுகிறது. தான் ஆயிற்று தன் வேலை ஆயிற்று என வாழ்ந்து மாலையானால் குடித்து விட்டு தூங்க நினைக்கிறவர்களுக்கு ஏற்ற ஊர் தான் பெங்களூர்! சென்னையின் அந்த உயிர்த்தன்மை, பலவித சமூகபொருளாதார நிலைகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் வாழும் போது தோன்றும் வண்ணமயமான சூழல் இங்கில்லை. பெஸண்ட நகரை விரித்து ஒரு நகரமாக்கியதைப் போன்ற செயற்கையான எலைட்டிஸ்ட் நகரம் இது

நான் இங்கே அதிகமும் புது நண்பர்களைப் பெற முடியாமல் போவதற்கு மற்றொரு முக்கிய காரணம் எனக்கு கன்னட மொழி தெரியாதது. பெங்களூரில் நான் புத்தகக் கண்காட்சிக்குப் போனால் ஒருவர் கூட என்னிடம் வந்து பேசியிருக்க மாட்டார்கள். நானாகத் தேடிப் போய் யாரிடமாவது ஆங்கிலத்தில் உரையாடி நட்பைப் பெற வேண்டும். அதை தக்க வைக்கவும் முடியாது. அதுவும் எலைட்டிஸ்டுகளைக் கண்டாலே எனக்கு நாய்க்கு வேகமாய் பாயும் காரைப் பார்த்ததைப் போல ஆகும். சிலர் கன்னடம் கற்றுக் கொள்ளலாமே என்கிறார்கள். ஆனால் நான் ஏன் கன்னட மொழி கற்றுக் கொண்டு கன்னட இலக்கியவாதிகளுடன் ஏன் புழங்க வேண்டும்? தமிழ் எழுத்தாளன் அல்லவா நான்!

நண்பர்கள் குறைவாக கிடைக்கும் போது எழுதும் ஊக்கம் குறைகிறது; வாய்ப்புகள் குறைகின்றன; திரைக்கதையில் வேலை செய்ய வேண்டும் எனும் ஆர்வம் அண்மையில் அதிகமாகி உள்ளது. அதற்கும் சென்னை தான் சரியான நகரம். மேலும் புதுப்புது உறவுகள் கிடைக்கும் போது தான் வாழ்க்கை புத்துணர்ச்சி பெறுகிறது. தேங்காமல் புரண்டோடுகிற உணர்வு ஏற்படுகிறது. இங்கே வாழ்க்கை cold storageஇல் வைத்த பிணத்தைப் போல இருக்கிறது


இதுவரை என் புதிய புத்தகம் நான் இல்லாமல் வெளியாவது இது இரண்டாவது முறை. முன்பு ஒருமுறை நான் உடல் சரியில்லாமல் .சி.யுவில் இருந்தேன். இப்போது பெங்களூரில் இருப்பதாலும், மனுஷிடம் நான் அங்கு வருவதைக் குறித்து தெரிவிக்க மறந்து போனதாலும் Bigg Boss புத்தகத்தை வெளியிடவோ அது குறித்து உரையாடல் ஒன்றை ஏற்பாடு பண்ண முடியாமலோ போனது. இதற்கே நான் இவ்வளவு புலம்புகிறேனே வெளிநாட்டில் வசிக்கிற தமிழ் எழுத்தாளர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு இன்னமும் மர்மமாகத் தோன்றுகிறது.

Comments