மோடியை முறியடிக்க ஏன் மற்றொரு மோடியை எதிர்பார்க்கிறோம்?பாஜகவின் அநியாயங்களுக்கு காங்கிரசின் தொய்வை மட்டும் காரணம் காட்டுவதை ராமசந்திர குஹாவைப் போன்ற அறிவுஜீவிகள் நிறுத்த வேண்டும். மோடிக்கு மாற்றாக ஒரு கம்பீரத் தலைவரை காங்கிரஸ் முன்வைக்க வேண்டும் என்பது ஒரு பகற்கனவு. ஏன் காங்கிரசுக்கு மாற்றாக மற்றொரு கட்சி மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கலாமே? மோடிக்கு நிகராக நாம் ஒரு ராகுலை வைக்க உத்தேசிப்பது ஹிட்லரின் இடத்தில் முசோலினி வந்தால் தான் ஜெயிக்க முடியும் எனக் கோருவதாக உள்ளது. சர்வ வல்லமை படைத்த (அமெரிக்க ஜனாதிபதியின் பாணியில்) ஒற்றைத் தலைமை மீதான நமது கவர்ச்சியே நம்மை மோடி எனும் ஆபத்தான திமிங்கலத்திடம் இட்டுச் சென்றது. மீண்டும் மீண்டும் நாம் ஒரு திமிங்கலத்தை முறியடிக்க மற்றொரு திமிங்கலத்தை வளர்க்க நினைக்க வேண்டும்?

மன்மோகன் சிங் போன்று வளைந்து கொடுக்கிற, பிறரது சிந்தனைகளை பரிசீலிக்கிற ஒரு எளிய தலைவர் ஏன் நமது பிரதமராகக் கூடாது? மக்களை அத்தகைய ஒருவரை ஆதரிக்க மாட்டார்கள் என ஏன் நாம் அத்தனை அவசரமாக நம்ப வேண்டும்? ராகுல் காந்தி பலவீனமானவர் என கலாய்க்க கலாய்க்க நாம் பலம்பொருந்திய சர்வாதிகாரிகளை புதிது புதியாக உற்பத்தி பண்ணி நாட்டை மேலும் சீரழிவை நோக்கிக் தள்ளப் போகிறோம் என்பதே உண்மை. மோடிக்கு மாற்று ஒரு இரும்பு மனிதர் அல்ல, நெகிழ்வான எளிமையான ஒரு தலைவரே.

Comments