ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதைஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதைஎனும் தலைப்பே சிறுகதைக்கானது போன்றிருக்கிறது; இதில் ஐரோப்பிய மொழியாக்க நூலின் தொனியும் வந்து விடுகிறது அல்லவா! இன்னும் சொல்லப் போனால் உலக சினிமாவொன்றின் தலைப்பைப் போன்றும் இருக்கிறது. ஆனால் அதனளவில் எஸ்.ராமகிருஷ்ணனின் இந்நாவல் ஒரு அசல் இந்திய கதை, அதுவும் எண்பது, தொண்ணூறுகளில் நாம் அதிகம் சந்தித்த நிறைவேறாக் காதல் டெம்பிளேட்டில் அமைந்தது

இதில் இரண்டு பாத்திரங்கள் வருகிறார்கள் - ராமசுப்பிரமணியன் எனும் பதின்வயது பையன்; சில்வியா எனும் அன்றலர்ந்த மலர் போன்ற பருவப்பெண். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படுவதில்லை, ஆனால் இருவரும் துவக்கம் முதலே காதலில் மூழ்கி இருக்கிறார்கள் - வாழ்க்கை மீதான காதல், எதிர்-பாலினத்தின் மீதான காதல், இயற்கை மீதான காதல், எதிர்காலம் மீதான காதல், நிகழ்காலம் மீதான காதல், காதல் மீதான காதல் என. சில்வியா பேரழகி அல்ல. சராசரியான அழகி. தன் தோற்றம் குறித்த ஐயங்கள் கொண்டவள். ஆனால் அவளிடத்து ஒரு வசீகரமான துடுக்குத்தனம், தன்னம்பிக்கை, கவர்ச்சி உள்ளது. அவள் ஒரு சிறிய கிராமத்துக்கு கோடை விடுமுறையை செலவழிக்க வரும் போது எல்லா ஆண்களின் கண்களும் அவளைச் சுற்றி பட்டாம்பூச்சிகளாய் பறக்கின்றன

ராமசுப்பிரமணியனும் சராசரி ஆண். மெல்லிய உருவம். தன்னம்பிக்கையற்ற ஆளுமை. தொட்டால் சுருங்கி. அதட்டினால் பின்வாங்குபவன். தன் விருப்பத்தை உடனடியாய் சொல்ல முடியாதவன், தன் விருப்பப்படி நடக்க வாய்ப்பு அமைந்தாலும் தயங்கி நின்று விடுபவன். இந்த இரண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு:
 சில்வியா, தன் இளமை, தன் வாளிப்பான உடல், தன் அகக்கிளர்ச்சி, தீராத ஆற்றல் காரணமாய், தன்னை மகத்தானவளாய் உணர்கிறாள். ஆனால் தாழ்ந்த சாதியை சேர்ந்த தன் அம்மாவை அக்காரணத்தாலே உறவினர்களும் நண்பர்களும் ஏற்கவில்லை, தன் தாய்க்கு தன் அப்பா விசுவாசமாய் இல்லை, வேறு பெண்ணொருத்தியுடன் உறவில் இருக்கிறார் ஆகிய தகவல்கள் தான் குறைபட்டவள் என அவளைத் தோன்ற வைக்கிறது. இந்த முரணான சுய-மதிப்பீடு அவளை இரண்டு எதிரெதிர் உணர்ச்சிகளின் எல்லைகளுக்கும் தள்ளுகிறது. மிகுந்த உணர்ச்சி வேகத்தின் அலையில் மிதந்து வானைத் தொடுகிறவளாகவும் அதே அலையின் புரட்டலில் கடும் உளைச்சலுக்கும் கசப்புக்கும் ஆளாகிறவர்களாகவும் இருக்கிறாள். தான் குறைபட்ட ஜென்மம் என்பதே தான் மேம்பட்ட பிறவி எனவும் அவளை நம்பத் தூண்டுகிறது எனலாம்.  
ராமசுப்பிரமணியனோ தன் சராசரித்தனம் மீது எந்த சந்தேகமும் இல்லாதவன். அதை இல்லை என நிரூபிக்க அவன் முயல்வதில்லை. பதிலாக அவன் சில்வியா மீதான அப்பழுக்கற்ற காதலைக் கொண்டு தன் சராசரித்தனத்தை கடந்து விடலாம் என நினைக்கிறான். சில்வியா தன்னிடம் உள்ளுக்குள் தேடுவதை ராமசுப்பிரமணியன் அவளிடம் தேடுகிறான். இருவருமே நாடுவது காதலை அல்ல, காதல் மட்டுமே நமக்குத் தரக் கூடிய அந்த கட்டற்ற விடுதலை உணர்வை, ரொமாண்டிசத்தை, தான் என்பது தன்னை மீறியது எனும் கிளர்ச்சியை
காதல் ஒரு தோரண வாயில். அதன் அழகு நாம் அதைக் கடந்து வெளியேறும் போது முடிந்து போகும். தோரண வாயிலிலே நின்றிருக்க ஒரு வழி அதைக் கடக்காமல் அப்படியே பார்த்து நின்று விடுவது. சில்வியாவும் ராமசுப்பிரமணியனும் பரஸ்பரம் தம் காதலை சொல்லிக் கொள்ளாமல், திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சில்வியா இதை முதலிலே சொல்லி விடுகிறாள் - தான் நிறைய படித்து வெளிநாட்டுக்கு செல்லப் போவதாக திருமணம் செய்யப் போவதில்லை என்று. திருமணம் என்பது தோல்வியின் குறியீடாகவே அவளுக்கு இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறை பாதுகாப்பற்று உணரும் போது அவள் திருமணத்தை நாடுகிறாள். ஒருமுறை ராமசுப்பிரமணியன் தன்னை மணக்கும்படி அவசரமாய் கேட்கிறாள். அடுத்து வாழ்க்கை அவளை நிராதவரவாக்கிய பிறகு பீலிக்ஸ் என்பவரை அவசரகதியில் மணந்து கொள்கிறாள். அவளது அப்பா அம்மாவைப் போன்றே கணவரும் அவசரமாய் இறந்து போகிறாள். ஒரு குழந்தையுடன் அவள் இந்த உலகில் தனித்து விடப்படுகிறாள்

ஒரு தேர்ந்த கதைசொல்லியான எஸ்.ரா இருவரும் இணைய முடியாததற்கான நியாயங்களை கதைப்பின்னணியில் உருவாக்கி விடுகிறார் - சாதி, மதம், பொருளாதாரப் பின்னணி சார்ந்த வித்தியாசங்கள். ஆனால் இவற்றையும் கடந்து வாய்ப்புகள் அமைவதையும் அப்போதெல்லாம் அவர்கள் காதலை முழுங்கி தம் உறவை அடையாளமற்றதாகவே வைத்துக் கொள்வதையும் அவர் கலைநேர்த்தியுடன் உணர்த்தி விடுகிறார். அவர்கள் இணையாததற்கான காரணம் எந்தளவுக்கு வாழ்க்கைச்சூழல் சார்ந்ததோ அந்தளவுக்கு அவர்களின் மனத்தில் உள்ள காதலாலும் ஆனது. மிகுதியான காதல் எப்போதும் தன்னைக் கொன்று விடும்.

இந்த 220 பக்க நாவல் சிறியதல்ல, ஆனால் அப்படி தோன்றத்தக்க வகையில் எஸ்.ரா சிறிய வாக்கியங்களை பயன்படுத்துகிறார். சிறிய அத்தியாயங்களைத் தருகிறார். காதல் நிகழும் நாட்களும் எப்போதும் விடுமுறை தினங்கள் என்பதால், விடுமுறை என்பதே ஒரு சிறிய இடைவேளை தான் என்பதால்ஒரு உருவகம் போல இது செயல்படுவதால், இந்த கதை சீக்கிரமாய் நடந்து முடிவதான உணர்வையும் தந்திருக்கிறார்.
இன்னும் சில மொழி நுணுக்கங்களையும் குறிப்பிட வேண்டும் - தனது மற்ற புனைவுகளில் வருவது போன்றே எஸ்.ரா வெயில் குறித்த சிலாக்கியமான விவரணைகளை இந்நாவலிலும் தருகிறார். அதுவும் காதல் பருவம் ஆரம்பித்ததும் ஒரு அத்தியாயம் முழுக்க வெயில் அந்த சிற்றூரில் மக்களிடையே ஏற்படுத்துகிற சலனங்களை, தவிப்புகளை, தம் உடலே வெயிலாக மாறி உருகுவதாய் அவர்கள் உணர்வதை, வெயிற்காலத்தில் மட்டுமே நிலவும் தொழில்களை (ஐஸ் விற்பவர்கள்), பிரத்யேக மனநிலையை எல்லாம் விவரிக்கிறார். கதையின் போக்குக்கு இது இடறலாக உள்ளதே என முதலில் தோன்றலாம். ஆனால் எஸ்.ரா வெயிலை உருவகமாக பயன்படுத்துகிறார் என்பது புரிந்தால் அவரது கலை மேதைமை நமக்கு விளங்கும்.
 எஸ்.ராவின் இதற்கு முந்தைய கதைகளில் வெயில் என்பது காலத்தின் உருவகமாக இருக்கும் - மனிதனை இடைவிடாது ஒடுக்குகிற காலம். ஆனால் இந்த நாவலில் வெயில் காமத்தின், ஆணின் மனத்தவிப்பின், அவன் உடம்பில் இருந்து பெருகி பாயும் ஆவேச ஆற்றலின் உருவகம். ராமசுப்பிரமணியனின் பார்வையில் கதை சொல்லப்படும் போது வெயில் எங்கும் வியாபிக்கிறது. ஆனால் சில்வியா வரும் போது கதைக்குள் ஒரு குளிர்மை பரவுகிறது. அவள் நீர்மையின் மகளாக இருக்கிறாள். அவள் குளித்தபடி ராமசுப்பிரமணினை நினைக்கிற ஒரு இடம் உண்டு - நீர் தன் உடம்பில் எங்கும் பரவி தன்னை தணிப்பதை அவள் சிலாகிப்பாள். அது மிக அழகான ஒரு அத்தியாயம். அடுத்து இதே போல ஒரு இரவில் அவளும் அவனும் மொட்டைமாடியில் சேர்ந்து மழைநனைவார்கள். மழை கொட்டிக் கொண்டே இருக்க அவனால் ஒரு கட்டத்துக்கு மேலே குளிர்மையை தாங்க முடியாது வெடவெடக்கிறான். அவன் எழுந்து ஓட அவள் தொடர்ந்து அங்கேயே அமர்ந்து ஜுரம் வரும் வரை நனைகிறாள். இருவருக்குமான பரஸ்பர ஈர்ப்பே வெப்பத்துக்கும் குளிர்ச்சிக்குமான ஈர்ப்பாக எஸ்.ரா அமைக்கிறார். அடுத்த சில நாட்கள் இருவருமே ஜுரத்தில் விழுகிறார்கள். அவன் தேறி வரும் போதும் அவள் இன்னும் அதிகமாய் ஜுரத்தில் நலிந்து போகிறாள். அது வெறும் ஜுரம் அல்ல, அது காமத்தின் ஜுரம்.

இந்த உலகில் வெப்பத்தை நீர்மை தணிக்கிறது; நீர்மைக்கு வெப்பம் வெதுவெதுப்பைத் தருகிறது. ஆனால் கொஞ்சம் கூடினாலோ குறைந்தாலோ ஒன்று மற்றொன்றை அழித்து விடும். ராமசுப்பிரமணியனும் சில்வியாவும் கிட்டத்தட்ட காதலிக்க ஆரம்பித்து பின்னர் பிரிந்து நண்பர்களாக இறுதி வரை வாழ நினைப்பது இதனால் கூட இருக்கலாம்

மற்றொரு அழகான நுணுக்கம் ராமசுப்பிரமணியன் வரும் போது வெயிலில் தகிக்கும் உலகையும் அதுவே சில்வியா வரும் போது வண்ணங்கள் மின்னும் வசந்தகால மேடையாக இதே உலகையும் எஸ்.ரா காண்பிப்பது

மேலும், சில்வியாவின் பாத்திரம் நமக்குமோகமுள்யமுனாவை பல இடங்களில் நினைவுபடுத்துகிறது. குறிப்பாக வக்கணையாக சாமர்த்தியமாகப் பேசி தன் எதிரில் இருப்பவனை கட்டுப்படுத்தும், திகைக்க வைக்கும் திறன். தன் கண்ணியத்தால் தன்னம்பிக்கையால் தன் வீழ்ச்சியை, அவலங்களை மறைக்கிற அனாயசம். பாபுவைப் போன்றே ராமசுப்பிரமணியனுக்கும் அவளைக் கண்டதுமே இவள் நமக்கு கிடைக்க மாட்டாள் எனத் தோன்றுகிறது; அப்படி கிடைக்காமல் இருப்பதே தன் காதலை மகத்தானதாக்கும் என்பதையும் இருவரும் உணர்கிறார்கள். “மோகமுள்ளில்பாபுவின் காமம் யமுனாவை இழந்த பின்னர் இசையாக மலர்ந்து விகசித்து பின் பல வருடங்களுக்குப் பிறகு அவள் திரும்ப வந்ததும் மீண்டும் முள்ளாக சுருங்குகிறது. அவளுடன் முதல்முறையாக படுத்து எழுந்த பின்இதற்குத் தானா இவ்வளவு ஏக்கமும், தவிப்பும்!” என ஏமாற்றம் கொள்கிறான். ஆனால் எஸ்.ராவின் நாவலில் இதே காமம் பரிவாக கருணையாக பரஸ்பர புரிதலாக மலர்ந்து விடுகிறது. சில்வியாவுடன் தனித்திருக்கும் வாய்ப்பு ராமசுப்பிரமணியனுக்கு நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைக்கிறது. அப்போதும் அவன் மனதளவில் ஒரு பதின்வயதுக்காரனின் பரிசுத்த காதலுடன் அவளுக்காக விடிகாலையில் அவள் வீட்டுக்கு வெளியே காத்திருக்கிறான் - பனி பொழியும் அந்த இளங்காலையில் அவள் நன்றாக உறங்கட்டும் என நினைக்கிறான்


கவித்துவத்துடன் தொழில்நுட்ப கூர்மையுடன் எழுதப்பட்ட ஒரு நல்ல நாவல் இது. ஆனால் இதை எஸ்.ராவின் சிறந்த நாவல் என்று சொல்ல மாட்டேன். இருந்தும் இலக்கிய நாவல்கள் படிக்க விரும்பும் ஒரு இளம் வாசகனுக்கு நான் இதை நிச்சயமாய் பரிந்துரைப்பேன்.

Comments