இந்த வருடம் எப்படி இருந்திருக்கிறது...பிறந்த நாளின் போது நான் எனது அந்த வருடத்து நினைவுகளை, உணர்வுகளை தொகுத்துப் பார்ப்பது வழக்கம். இம்முறை அதை செய்யும் போது ஏற்படும் முதல் உணர்ச்சி ஒருவித மலர்ச்சி என்பதை சொல்லியாக வேண்டும். நேற்றிரவு நிறைய சாப்பிட்டேன், குடித்தேன், கிட்டத்தட்ட நினைவு மயங்கி படுக்கையில் சாய்ந்தேன். அந்தளவுக்கு களைப்பு, நீண்ட நாளொன்றை எப்படியாவது கொண்டாட்டத்துடன் முடிக்க வேண்டும் எனும் பரிதவிப்பு. காலையில் விழித்ததும் இன்று என் பிறந்த நாளாயிற்றே எனும் எண்ணம் ஒரு துள்ளலை மனதில் ஏற்படுத்தியது. அந்த மகிழ்ச்சி ஒரு பூனையைப் போல் என்னில் தாவி ஏறிக் கொண்டது. அது என் மீது சற்று நேரம் படுத்துருண்டது
நான் ஏன் இன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என யோசித்தேன்? இன்று நிறைய பேர் வாழ்த்துவார்கள் என்பது, இன்று எனக்கான தினம் என்பது காரணங்கள். மற்றொரு வருடத்தை நிறைவு செய்து விட்டேன் என்பதும் தான்.


ஆனால் இந்த நாளைப் போல இந்த வருடம் முழுக்க இருக்கவில்லை - இந்த வருடம் முழுக்க நான் கசப்பும் கோபமும் நிரம்பியவாக இருந்திருக்கிறேன்; எதிர்மறை அலைகளின் மீது நீந்தி, மிதந்து எழுதிக் கொண்டே இருக்க முயன்றிருக்கிறேன். இதுவரை இல்லாத ஒரு வெறுமை (நான் ஒரு வெற்று தபால் உறை எனும் உணர்வு) என்னை அலைகழிக்கிறது. அதோடு பெங்களூர் வாழ்க்கையின் பின்நவீனம் என்னை பெரிதும் பாதித்திருக்கிறது; என்னையறியாமலே அது என்னை மாற்றி அமைத்திருக்கிறது; பல்வேறு தீவிர உணர்ச்சிகளால் துண்டுத்துண்டாய் ஆனவனாக மாறிப் போயிருக்கிறேன்; அரைமணிநேரம் மிகுந்த உத்வேகத்துடன் குதூலகத்துடன் சிரித்தபடி அதற்கு அடுத்த அரை மணிநேரம் மிகுந்த கோபத்துடன் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அதை அடுத்த அரை மணிநேரம் நிதமானமாய் எழுதிக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும்... இதனாலே இந்த சிதறல்களில் நான் எது எனும் பதற்றம் வந்து விடுகிறது. முன்பு ஒரு நிதானம் என்னை எப்போதும் ஆட்கொள்ளும்; சற்று விலகி நின்று வாழ்க்கையை கவனிக்க முடிந்தது. எனக்கான மனிதர்கள் வாழ்வின் மையமாக இருந்தார்கள் (அது குடும்பமோ இலக்கியக் குழாமோ). அந்த மையம் ஒரு கனவைப் போல கலைந்ததும் நான் சட்டென விழித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது
யாருடனும் இல்லை, ஆனால் யாருடனாவது இருந்து கொண்டிருக்க வேண்டி இருக்கிறது என்பது ஒரு தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை, இங்கு பெங்களூரில் அது ஒரு கலாச்சார நிலையாகவும் இருக்கிறது; அது ஒரு நவமுதலாளித்துவ வேலை மற்றும் நுகர்வு சூழலாகவும் இருக்கிறது. சென்னையில் இருந்து பெங்களூருக்கு வந்தது வெறுமனே ஒரு இடமாற்றமாக மட்டும் இல்லை; அது என் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போட்டதாக இருக்கிறது; சென்னையை நான் தொடர்ந்து மிஸ் பண்ணுவது அங்கே எனக்குப் பற்றிக் கொள்ள, உறுதியாக கால்பதித்து நிற்க ஓரிடம், ஒரு மையம் இருந்தது என்பது. அது சற்றே பழைய மரபான வாழ்க்கையாக இருந்தது என்பது.

இந்த டிரெட்மில் பெங்களூர் வாழ்க்கை ஒரு நாவலாசிரியனாக என்னுடன் கண்ணாமூச்சி ஆடுகிறது. என்னால் எந்த நாவலையும் ஒழுங்காக தொடர்ச்சியாக எழுதி முடிக்க முடியவில்லை. அண்மையில் மனுஷ்யபுத்திரனை அழைத்து (அவர் உடல் நலிவற்றுப் போகும் முன்பு) கிட்டத்தட்ட அழும் நிலையில்என்னால் நான் விரும்பும் படி எழுத முடியவில்லை; என் நண்பர்கள் சுலபத்தில் நாவல்களை எழுதி முடிக்கும் போது கடந்த நான்கு வருடஙக்ளில் நான் முழுக்க தோற்று விட்டதாகத் தோன்றுகிறது. நான் எப்படி மீண்டு வருவது? என்னால் முடியுமா என்றே தெரியவில்லையே?” என புலம்பினேன். அவர் என்னிடம்  நீண்ட நேரம் உற்சாகப்படுத்திப் பேசினார். அவரது குரல் இன்று வரை இப்போது வரை என்னை நிலைப்படுத்தி ஆற்றுப்படுத்தி வருகிறது. அவர் நான் எழுதுவதை, அவ்வப்போது அவரிடம் சொல்வதை கவனித்து எனக்கு என்ன நடக்கிறது என்பதை கணித்து வருகிறார். நான் கிட்டத்தட்ட உடைந்து நொறுங்கிப் போகும் தருணம் வரும் போது சரியாக அங்கு வந்து என்னை ஏந்திக் கொள்கிறார்; சரியான நேரத்தில் அப்படித் தோன்றி சரியான சொற்களைச் சொல்வது மிகச்சிலருக்கே வாய்க்கும் திறன், குணம். அந்த நிமிடம் எனக்கு நான் எவ்வளவு கொடுத்து வைத்திருக்கிறேன் எனத் தோன்றியது. ஏனென்றால் என் வாசகர்களுக்கு நான் என்ன எழுதுகிறேன் எனத் தெரியும். என் நண்பர்களுக்கு நான் அவர்களோடு இருக்கும் போது என்ன உணர்கிறேன் எனத் தெரியும். எழுத்தாளனாக நான் என்ன உணர்கிறேன் என்பதை என்னை தொகுத்துக் கொள்வது, நுட்பமாய் கவனிக்க மனுஷைப் போல ஒருவர் எனக்கு இருப்பது என் அதிர்ஷ்டம்.

இந்த வருடத்தின் முக்கிய தருணங்கள் எவை

ஹைடெக்கர் நூலை (Plop: Notes on Heidegger) நூலை ஆயுஷுடன் சேர்ந்து எழுதி வெளியிட்டது
தொடர்ந்து நாகார்ஜுனரின் எழுத்தைப் படித்து சூனியவாதம் குறித்து விவாதித்து அடுத்த புத்தகம் எழுத ஆரம்பித்தது.  
தமிழில் நிறைய சமூக அரசியல் பிரச்சனைகள் குறித்து நாணயமாக எழுதியது.
 என் இலக்கிய வழுக்கலை, நழுவலை அரசியலுக்கு / சமூகத்துக்கு கொண்டு வராமல் தீர்மானமாக நின்று பேசினேன். இதை தான் முன்பு பண்ணியதில்லை. இந்த வருடத்தில் நான் குறிப்பாய் செய்த விசயம் இது
மிகச்சில சிறுகதைகளே எழுதினாலும் அவை திருப்தி தந்தன (பஷீர் குறித்த கதை குறிப்பாக).
 சில நாவல்களில் வேலை செய்தேன். முடிக்க முடியவில்லை என்றாலும் விடாமல் முயன்றிருக்கிறேன்.
 திரைக்கதை, நாவலின் கலை, தொழில்நுட்ப சங்கதிகள் பற்றி புத்தகங்கள் வாசித்ததும் நல்ல அனுபவம் - எழுத்து குறித்த என் பார்வையை முழுக்க அவை மாற்றின.

 சென்னையில் இருந்து விலகி இந்த தனித்தீவில் மாட்டிக் கொண்டிருந்தாலும், கூட்டங்களுக்கு செல்ல முடியவில்லை, இலக்கிய நண்பர்களை, சக எழுத்தாளர்களை பார்க்க முடியவில்லை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு பெரிய விசயம். முழுக்க மூழ்கி விடாமல் கைகாலைப் போட்டடித்து மிதந்து கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் எப்படியாவது நீந்தி கரையை நெருங்கி விடுவேன்.

இந்த காலகட்டத்தின் துன்பங்கள், இருண்மை, குழப்பங்கள் நடுவே பல்லவியின் வெகுளியான மகிழ்ச்சியான அண்மை என்னைக் காப்பாற்றியது; ஜீனோவின் துணை என்னை மீண்டும் குழந்தை ஆக்கியது. இருவரையும் சரியான நேரத்தில் கடவுள் என்னிடம் அனுப்பி இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

அடுத்த வருடத்தின் முக்கிய இலக்குகள் மேலும் பல விசயங்களை ஒழுங்காக, புதிதாக, வித்தியாசமாக எழுதுவது, ஒரு நாவலையாவது முடிப்பது, பெங்களூர் எனும் அந்தமான சிறைச்சாலையில் இருந்து தப்பித்து என் மண்ணுக்கு மீள்வது, முன்பு இருந்தது போல எப்போதும் இயல்பாக மகிழ்ச்சியாக இருப்பது, எடையை குறைத்து உடம்பை வடிவாக்குவது ... 

வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்


Comments

Paulraj said…
Happy Birthday Abhilash